Ad

வியாழன், 22 அக்டோபர், 2020

சைலன்ட் ரம்யாவின் வயலன்ட் ஐடியா... `காஞ்சனா' சிக்ஸர் அடித்த சுரேஷ்! பிக்பாஸ்- நாள் 18

பிக்பாஸ் வீட்டில் கூட்டணிகள் மாறத் தொடங்கியிருக்கின்றன. காட்சிகளும் மாறுகின்றன. ரியோ சொல்வதற்கெல்லாம் சுரேஷ் இப்போது ‘ஆமா சாமி’ போடுகிறார். எதிரிகளைக் குறைத்துக் கொள்ள நினைக்கிறார் போல. அத்தனை சண்டை போட்டாலும் பாலாவின் மீதான பாசம் சனத்திற்கு போகவில்லை. பாம்பும் கீரியுமாக இருந்த பாலாவும் பதிலுக்கு சனத்தைப் பார்த்து காதல் வசனம் பேச வேண்டிய சூழ்நிலை இன்று.

என்னவே... நடக்குது இங்க?

‘டண்டணக்கா’ பாட்டு திடீரென ஒலித்ததும் கார்டன் ஏரியாவில் இருந்த ஷிவானி குழந்தை பயந்து போய் திடுக்கிட்டது. அம்மணி இப்போதெல்லாம் தனியாக பர்ஃபாமன்ஸ் செய்யாமல் கூட்டத்தின் இடையே ஆடுவது நல்ல விஷயம்.

பிக்பாஸ் - நாள் 18

பாலாவும் சுரேஷூம் ‘ஊடல் பருவத்தில்’ இருக்கிறார்கள் போல. கிச்சன் ஏரியாவில் இருந்த சுரேஷை நோக்கி ‘தாத்தா...’ என்று ஆரம்பித்து எதையோ பாலா சொல்ல முற்பட சுரேஷ் கண்டுகொள்ளவில்லை. அதிரடி நாட்டாமையான அர்ச்சனா, நேற்று மன்னிப்பு கேட்கச் சொன்ன அதே கண்டிப்பான குரலில் “போய் கட்டிப் பிடிங்க” என்று இப்போதும் அதட்ட, “இருங்க டீச்சர்.. எதிரி கிட்ட மன்னிப்பு கேட்கணும்னா தயங்க மாட்டான் இந்த மன்னாரு. நண்பன் கிட்டனா கோபம் போறதுக்கு நேரமாகும்" என்பது போல் சுரேஷ் சொன்னது அற்புதமான விஷயம். உண்மையும் கூட. நாம் நெருக்கமாக உணர்கிறவர்களிடம் மட்டும்தான் அதிக உரிமை எடுத்துக் கொள்வோம்.

“மூளை மழுங்கிப் போச்சா...” என்றெல்லாம் பாலா நேற்று கத்தியது குறித்து சுரேஷிற்கு உள்ளூற வருத்தம் இருக்கிறது போல. “நீங்க தப்பு செஞ்சு மாட்டிக்க் கூடாதுன்னு பாலா நெனக்கறார்” என்று சரியான பாயின்டைப் பிடித்தார் சம்யுக்தா. "அது சரிம்மா... அதை மெல்லமா சொல்லியிருக்கலாம்ல. நான் ஏற்கெனவே பிரச்னைல இருக்கேன். அந்த சமயத்துல கத்தி ஊரைக்கூட்டினா எப்படி?" என்று சுரேஷ் சொன்னதும் சரியானதுதான்.

அடுத்தது பிக்பாஸ் பட்டிமன்றமாம். தீபாவளி, பொங்கல்னு வந்தா டிவிலதான் இவங்க இம்சை தாங்கலைன்னு பார்த்தா, பிக்பாஸ்லயும் அதே மேட்டர். ‘பிக்பாஸ் வீடு – ஒரு ஆனந்தக் குடும்பம்’ என்கிற தலைப்பை கேட்டவுடன் நம்மைப் போலவே போட்டியாளர்களுக்கும் சிரிப்பு தாங்கவில்லை. இன்னொரு அணியின் தலைப்பு ‘போட்டிக்களம்’. ‘நீங்களாகவே அணி பிரித்துக் கொள்ளுங்கள்’ என்று பிக்பாஸ் சொன்னவுடன் ஆனந்தக் குடும்பமாக அமர்ந்திருந்த வீடு ‘இந்த அணில நான்தான் பேசுவேன்' என்று போட்டிக்களமாக மாறியது.

அர்ச்சனா இதற்கு நடுவராம். இவர் வந்த பிறகு ரியோவின் முக்கியத்துவம் கீழே இறங்கிக் கொண்டிருக்கிறது. ‘ஆனந்தக் குடும்பம்’, ‘போட்டிக்களம்’ என்கிற தலைப்புகளில் மாறி மாறி பேசினார்கள் ‘போட்டியாளர்கள்’. (எனவே பின் வரும் கருத்துக்களை அந்த வரிசையில் வாசிக்கவும்.)
பிக்பாஸ் - நாள் 18

முதலில் பேச வந்த சோம், ஹிப்ஹாப் தமிழன் சொன்னதையெல்லாம் மேற்கோள் காட்டினார். “ஆஜித் பய ஃப்ரீ பாஸை வெச்சுக்கிட்டு தினமும் நிம்மதியா தூங்கறான்னா.. அதுக்கு நாம ‘குடும்பமா’ இருக்கறதுதான் காரணம்” என்று சொல்லி விட்டு இறங்கினார். (பிறகு பேச வந்த பெரும்பாலோனோர், ஆஜித்தின் பாஸ் விஷயத்தை ஊறுகாய் போட்டு தொட்டுக் கொண்டேயிருக்க சங்கடம் அடைந்தார் ஆஜித்.)

பின்பென்ச் ஸ்டூடண்ட் மாதிரி அமர்த்தலாக எழுந்து வந்தாலும் பாலா சொன்ன பாயின்ட்டுகள் அத்தனையும் பட்டாசு ரகம். “நல்லதொரு குடும்பம், பல்கலைக்கழகம்ன்றீங்க. சரி... நாம அப்படியா நடந்துக்கறோம்? தவறு நடந்திருந்தாலும் ஒரு வயதான முதியவரை ஏக வசனத்தில் திட்டுவதுதான் பல்கலைக்கழகத்தின் லட்சணமா? இதைப் பார்க்கும் இளையதலைமுறை வீட்டில் அவர்களின் தாத்தாவை அது போல திட்ட மாட்டார்களா? ஆஜித் பாஸை ஏன் விட்டு வெச்சிருக்கீங்கன்னா... சுத்திலும் கேமரா இருக்கு. எடுத்தா உங்க மானம் போயிடும்... ஒவ்வொருத்தரையும் உறவா நெனச்சா... கன்ஃபெஷன் ரூம்ல போய் ஏன் நாமினேஷன் குத்தறீங்க.. தாத்தா போக வேண்டாம். நான் போறேன்னு சொல்ல வேண்டியதானே...” என்றெல்லாம் சரவெடியாக பாலா பொங்கித் தள்ள 'ஹே... சூப்பருப்பா... இந்த மாதிரி நீ பேசி நான் பார்த்ததில்ல’ என்று சொல்லத் தோன்றியது.

'“குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், பலவீனமான மனதுடையோர், முதியவர்கள்’’- இந்த நிகழ்ச்சியைப் பார்க்காதீங்க’ என்பது போலவே பாலா பேசிக் கொண்டிருந்ததை பிக்பாஸ் எடிட்டிங் டீம் சரியாக கவனிக்கவில்லை போல.

அடுத்த வந்த சம்யுக்தா, “டாஸ்க்தான் என்றாலும் தாத்தா பேத்தியை தன் தோளில் சுமந்த காட்சியைப் பார்த்து நாம் கண்கலங்கவில்லையா? ரம்யா, தன் செல்லத்தம்பி ஆஜித்திற்காக ஃப்ரீ பாஸை விட்டுத்தரவில்லையா? ரேகா... வெளியே போன போது கோரஸா ஒப்பாரி வெச்ச மூதேவிங்கதானே நீங்க?’ என்றெல்லாம் சுருக்கமாக பாயின்ட்டுகளைத் தெறிக்க விட்டு சென்றார்.

‘ஃப்ரீ பாஸ் விட்டுத்தந்தார்’ என்கிற கமென்ட்டில் ரம்யாவிற்கு உடன்பாடில்லை. “அது என்னோட கேம்,.. என்னோட ஸ்ட்ராட்டர்ஜி... போட்டின்னு இருந்தாலும் அதுல ஒரு எதிக்ஸ் இருக்கணும்னு நெனச்சேன். ஆனந்தம் இருந்தாலும் இது போட்டிக்களம்தான்" என்று முடித்து தனது ‘டிரேட்மார்க்’ புன்னகையுடன் இறங்கிச் சென்றார்.
பிக்பாஸ் - நாள் 18
அடுத்த வந்த ரியோ, பாக்யராஜ் படங்களில் வருவது போல ‘கடுகு டப்பா... இருபது ரூவா. குடும்பத்துல தேவை இருந்தாதான் திருடுவேன்’ என்று உள்ளூர் உதாரணங்களுடன் பேசியதெல்லாம் சரியாகப் பொருந்தவில்லை. பிக்பாஸ் வீட்டை ‘விக்ரமன்’ படமாகக் காட்ட ரியோவும் தலைகீழாக நிற்கிறார்... பாவம்!

“தன் வாழ்க்கையில் அன்பு கிடைக்கவில்லை என்று ஏங்கியவர் பாலாஜி. இங்கு வந்தவுடன் யாரும் அவரைக் கேட்காமலேயே ‘தம்பி... தாத்தா...’ என்று அவர் உறவு கொண்டாடுவதற்கு என்ன காரணம்? திட்டினதைப் பத்தி சொன்னாரு. நீயும்தானே தாத்தாவை திட்டினே? அப்புறமா போய் சமாதானமா பேசலையா?” என்றெல்லாம் பேசிய ரமேஷ், “நாளைக்கே பாலாஜி வெளியே போற சூழல் வந்தா, தம்பி ஆஜித் அவன் பாஸை வெச்சு காப்பாத்துவான். நிச்சயமா செய்வான்” என்று போகிற போக்கில் ஒரு பிட்டைப் போட “ஒரு வடைக்கு பதினைஞ்சு காக்கா அடிச்சுக்கற மாதிரி, ஏண்டா... என் பாஸ் கிட்டயே வந்து வந்து விளையாடறீங்க?” என்பது ஆஜித்தின் மைண்ட் வாய்ஸாக இருக்கும்.

போட்டி இடைவேளையில் ரியோவிடம் இதை வாய் விட்டே சொல்லி கதறி விட்டார் ஆஜித்.

“எங்கும் போட்டி. எதிலும் போட்டி. வாழ்க்கையே ஒரு போட்டிதான். பிக்பாஸூம் போட்டிதான்... ஏன்... இந்த பட்டிமன்றம் கூட ஒரு போட்டிதான்’ என்று சுருக்கமாக பேசி விட்டுச் சென்றார் சுரேஷ்.

அடுத்து பேச வந்தவர்கள் வேல்முருகன், அனிதா, மற்றும் நிஷா. மூவருக்கும் பொதுமேடைகளில் பேசி நிறையப் பழக்கம் இருப்பதால் சரளமாக பேசினார்கள். அடுக்குத்தமிழை அள்ளி விட்டால் கைத்தட்டல் கிடைக்கும் என்கிற ஆதிகால உத்தியை சிறப்பாக பயன்படுத்தினார் வேல்முருகன். கூட்டமும் பலமாக கைத்தட்டி மகிழ்ந்தது

நிஷாவிடமிருந்து ஹைஹீல்ஸ் இரவல் வாங்கி வந்த அனிதா “பெயர் சொல்ல விரும்பல. சில பேர் கேமரால தெரியறதுக்காக கன்னெட் கொடுத்துட்டே இருப்பாங்க” என்று சுரேஷை மறைமுகமாக குறிப்பிட்டு வாரினார்.

பிக்பாஸ் - நாள் 18

“இப்ப பாரேன்... செருப்பு கொடுத்த விஷயத்தை நிஷாக்கா பேச்சுல சேர்த்துடுவாங்க” என்று யாரோ சொன்ன கமென்ட்டைப் பிறகு உண்மையாக்கினர் நிஷா. அவர் பேசும் போது வழக்கமான நிஷாவின் கொனஷ்டைகள் மாறி ஒரு பட்டிமன்ற பேச்சாளரின் தோரணை வந்து விட்டது. ஆனாலும் "நாங்களும் போட்டி போடத்தான் வந்திருக்கோம்... பின்னே பொடிமாஸ் பண்ணவா வந்திருக்கோம்” என்றபோது பழைய நிஷா வெளியே வந்தார்.

மாற்றுத்திறனாளிகள்… ஓட்டப்போட்டி... என்கிற பழைய சென்டிமென்ட் கதையை இணைத்து பேச்சை நிறைவு செய்து இறங்கினார் நிஷா. நகைச்சுவையை விடவும் சென்ட்டிமென்ட் ஒரு வலுவான ஆயுதம் என்பது தொழிற்முறை பேச்சாளர்களுக்கு நன்கு தெரியும்.

பட்டிமன்ற தலைப்பு என்பது எப்போதுமே நேர்மறை மற்றும் எதிர்மறையான விஷயங்கள் முட்டிக் கொள்வது போல்தான் அமையும். அதுதான் பார்வையாளர்களுக்கும் சுவாரஸ்யம். ஆனால் எதிர்மறையின் சார்பில் என்னதான் பேச்சாளர்கள் திறமையாகப் பேசினாலும் நடுவர்களால் அதற்கு ஆதரவாக தீர்ப்பளித்து விட முடியாது. நேர்மறையைத் தூக்கிப் பிடிப்பதுதான் மரபு. எனவே, நடுவர்கள் பெரும்பாலும் செய்வது போலவே ‘வழவழனெ்று’ பேசி, “பிக்பாஸ் ஒரு ஆனந்தக் குடும்பம்... அதனுள் ஒரு போட்டி இருக்கிறது. இந்த சீஸன்தான் பெஸ்ட்டுன்னு நாம பேர் வாங்கணும்” என்று தீர்ப்பு சொல்லி முடித்தார் அர்ச்சனா. ‘பிடிவாதக் குழந்தை’ என்று இவர் பாலாஜியை வர்ணித்ததை பாலா ரசிக்கவில்லை.

இந்தப் பட்டிமன்றத்தில் ஷிவானி பேசுவதைக் கேட்பதற்காக ஆவலுடன் காத்திருந்தேன். எடிட்டிங் டீமைச் சேர்ந்தவர்கள் என் கனவைக் கலைத்து விட்டார்கள்.

பிக்பாஸ் - நாள் 18

‘இந்த வீட்டில் குரூப்பிஸம் இல்லை’ என்று தொடர்ந்து மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் ரியோ, நடைமுறையில் அது சாத்தியமில்லை என்பதை எப்போது உணர்வாரோ என்று தெரியவில்லை. ‘மதியம் ஒருவேளையாவது அனைவரும் ஒன்றாக அமர்ந்து ‘விக்ரமன்’ படம் மாதிரி உணவருந்த வேண்டும்’ என்பது அவரது ஆசையாம். அது நிறைவேறாத கோபத்தை ஷிவானி, ரம்யா போன்ற குழந்தைகளிடம் காட்டிக் கொண்டிருந்தார். ஆனால், ‘பிடிவாத முரட்டுக் குழந்தையான’ பாலாஜியிடம் அதைக் காட்ட முடியாது. ரியோவின் கருத்திற்கு ஆதரவாக இந்த இடத்தில் சுரேஷ் பேசியது ஆச்சர்யம்.

அன்பும் கண்டிப்பும் நிறைந்த ‘அம்மா’ பாத்திரத்தை அர்ச்சனா திறமையாக கையாள்கிறார். ‘பசங்களா... நாளைல இருந்து ஒண்ணா உக்காந்து மம்மு சாப்பிடலாமா?” என்று அவர் கேட்டவுடன் "ஓகே மிஸ்” என்று கோரஸ் பாடின குழந்தைகள்.

லக்ஷுரி பட்ஜெட் 3200 புள்ளிகள் கிடைத்தன. “நீங்க என்னவெல்லாம் பிக்காளித்தனம் பண்ணியிருக்கீங்களோ.. அதுக்கெல்லாம் நீங்களே கணக்குப் போட்டு பாயின்ட்ஸைகளை குறைச்சுக்கங்க" என்று அறிவித்து விட்டார் பிக்பாஸ். "பாட்டில் எவ்வளவு பிழையிருக்கிறதோ... அதற்கேற்ப தொகையை குறைத்துக் கொள்ளுங்களேன் மன்னா...” என்கிற திருவிளையாடல் ‘தருமி’ போல ஆகிப் போனது.

'நான் ஒரு மொள்ளமாறி...', ‘நான் ஒரு முடிச்சவிக்கி’ என்று ஒரு நகைச்சுவைக் காட்சியில் கவுண்டமணியும் செந்திலும் மாறி மாறி தங்களிடமுள்ள குறைகளை ஒப்புக் கொள்வது போல சிலர் தாங்கள் செய்த தவறுகளை பொதுவில் ஒப்புக் கொண்டு பாவமன்னிப்பு கேட்டார்கள். அனிதா அதிக நேரம் தூங்குகிறாராம். நாய் குலைத்தும் எழ வில்லையாம் (நாய் சத்தத்தை இதுவரை நாம் கேட்கவேயில்லையே?!)

‘யப்பா.. அந்தப் பொண்ணு எழுந்தா... லொடலொடன்னு அரைமணி நேரத்திற்கு கேப் விடாம செய்தி வாசிக்கும். அப்படியே தூங்க விட்டுருங்கப்பா... அதுதான் நமக்கு நல்லது’ என்று விட்டு விட்டார்களோ என்னவோ.

பிக்பாஸ் - நாள் 18

‘அரக்கர் டீமிற்கு கன்வெர்ட் ஆகியும் என் பணியை ஒழுங்காகச் செய்யவில்லை’ என்று ஒப்புக் கொண்டார் ஆரி. (நீதிடா.. நேர்மைடா!) ஆக, அவர்களாக எழுபது புள்ளிகளை குறைத்துக் கொண்டார்கள்.

பொருட்களைத் தேர்ந்தெடுப்பதற்கான மணி அடித்தது. என்னதான் திட்டமிட்டாலும் வழக்கம் போல் எழுதுவதிலும் கூட்டல் கணக்கு போடுவதிலும் குழப்பம் நிகழ்ந்தது. "எவ்ளோ டிரெய்னிங் கொடுத்திருப்பேன்... இப்படி சொதப்புதுங்களே” என்று சுரேஷ் டென்ஷன் ஆகிக் கொண்டேயிருந்தார். எப்படியோ நிறைவு செய்தார்கள். அவர்கள் போட்ட கணக்கு சரியா, தவறா என்பது பொருட்கள் வந்த பிறகுதான் தெரியும்.

அடுத்த ‘டாஸ்க்’ பற்றிய விவரங்களை சபையில் வாசித்தார் ஷிவானி. (அய்... மேடம் பேசிட்டாங்க... இன்னிக்கும் குரலைக் கேட்டாச்சு). ஆனால் டாஸ்க்கின் தலைப்புதான் சற்று விவகாரமாக இருந்தது. ‘மாத்து கை மாத்து’.

‘மியூசிக்கல் சேர்’ மாதிரியான விளையாட்டுதான் இது. இசை நிறுத்தப்படும் போது யார் கையில் பெட்டி இருக்கிறதோ. அவர் போட்டியிலிருந்து வெளியேற வேண்டும். வெளியே செல்பவர் சும்மா செல்லாமல் யாரையாவது தேர்ந்தெடுத்து ‘வேடிக்கையான தண்டனை’ தர வேண்டுமாம்.

போட்டியில் தோற்றவருக்குத்தானே தண்டனை தரப்பட வேண்டும்? ஆனால் பிக்பாஸ் வீட்டின் ‘கோக்குமாக்கு’ விதிகளை நாம் கேள்வி கேட்க முடியாது.

அத்தனை பெரிய வீட்டில் ஒரு டேப்ரிகார்டர் இல்லையா... அல்லது வேல்முருகனை பெரிய சைஸ் டேப்ரிகார்டராக நினைத்து விட்டார்களா என்று தெரியவில்லை. அவர்தான் பாட வேண்டுமாம். எனில் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவில்லை.

பிக்பாஸ் - நாள் 18

வேல்முருகன் பாட ஆரம்பிக்க, கையில் வெடிகுண்டு இருப்பது போன்ற பதற்றத்துடன் பெட்டி மாற்ற ஆரம்பித்தார்கள். வேல்முருகன் பாட்டை திட்டமிட்டு நிறுத்தினாரோ அல்லது மூச்சு வாங்குவதற்காக நிறுத்தினாரோ தெரியவில்லை. அவர் நிறுத்தியபோது பெட்டி சனத்தின் கையில் இருந்தது. இப்போது அவர் எவரையாவது தேர்ந்தெடுத்து வேடிக்கையான தண்டனை கொடுக்க வேண்டும்.

பாம்பு – கீரி உறவை பாலாவுடன் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சனம் ஆச்சர்யகரமாக பாலாவைத் தேர்ந்தெடுத்து “என்னை ரொம்ப பிடிக்கும்ன்னு பத்து டயலாக் பேசணும்" என்கிற ‘ரொமான்டிக்கான’ தண்டனையைத் தேர்ந்தெடுத்தார். (இந்த பொண்ணு மனசுலயும் ஏதோ இருக்கு போலயே!) ‘வண்ண நிலவே வா... வசந்த முல்லையே வா’ என்று அடுக்கு வசனம் பேசிய பாலா, “நீ அழகா இருக்கேன்னு நெனக்கல... ஆனா இதெல்லாம் நடந்துருமோன்னு தோணுது" என்றபடி விலகிச் சென்றார். பாலா வர்ணணை செய்த அழகைப் பார்த்து ‘வாரே... வா’ என்று கண் மயங்கினார் கேப்ரியல்லா.

அடுத்து மாட்டிய நிஷா, தன் நண்பரான ரமேஷின் முகத்தில் ஷேவிங் க்ரீம் பூச வேண்டும் என்கிற தண்டனையை தேர்ந்தெடுத்து விட்டு ‘அய்யோ... பயபுள்ள கோச்சுப்பானே...' என்கிற பயத்துடன் பட்டும் படாமல் பூசிச் சென்றார். அடுத்து வெளியேறிய ஆஜித், சம்யுக்தாவிற்கு பாலாவின் மூலம் மீசை வரைந்து அழகு பார்த்தார்.

‘அட்வைஸ் ஆரி’க்கு விசித்திரமான தண்டனையைக் கொடுத்து குறும்பு செய்தார் ரம்யா. ஆரி நைட்டி அணிந்து ‘மல.. மல’ பாட்டுக்கு ஆட வேண்டுமாம். (ஒரு வருங்காலத் தலைவனைப் போய்!) அடுத்து 'பாட்டு முடிந்த போது பெட்டி யார் கையில் நின்றது’ என்பது தொடர்பாக ஆரிக்கும் சம்யுக்தாவிற்கும் குழப்பம் ஏற்பட ‘பெட்டி கையில் பட்டுடுச்சுல்ல’ என்று சாட்சி சொன்னார் சுரேஷ். ‘சரி.. இதுல என்ன இருக்கு?’ என்று தியாகம் செய்வது போல் அழாதகுறையாக வெளியேறினார் ஆரி.

பிக்பாஸ் - நாள் 18

ஆரிக்கு வந்த அதே குழப்பம், சுரேஷ் மற்றும் சோமிற்கு இடையில் வந்தது. பாட்டு முடியும் சமயத்தில் பெட்டியின் மீது சுரேஷின் கைபட்டு விட்டாலும், ‘பாட்டு முடியும்போது பெட்டி சோம் கையிலதான் இருந்தது’ என்று ரூல்ஸை திருப்பிப் போட்டு சுரேஷ் பேச, ஆரிக்கு கோபம் வந்து வாக்குவாதம் செய்தார். ஆனால் போட்டி என்று வந்து விட்டால் ஈட்டியாக மாறி விடும் சுரேஷ் பிடிவாதமாக பதிலுக்கு மல்லுக்கட்டினார். பாலாவும் தாத்தாவிற்கு ஆதரவாக சாட்சி சொன்னார்.

‘தாத்தாவிற்கு மேக்கப் போட்டு அழகு பார்க்கலாம்’ என்கிற ஐடியாவை பாலா முன்மொழிய ‘பொண்ணு மாதிரி அலங்காரம் செஞ்சு பரதநாட்டியம் ஆட வெச்சா சூப்பரா இருக்கும்’ என்று அதில் கூடுதல் ஐடியாவை இணைத்தார் ரம்யா. (சைலன்ட்டாக சிரித்துக் கொண்டு, குழந்தை போல் முகத்தை வைத்துக் கொண்டு இப்படி கொடூரமான யோசனைகளை அள்ளி விடுவதில் ஒரு அட்சயப்பாத்திரமாக இருக்கிறார் ரம்யா).

Also Read: "என்னை வெளியேத்திடுங்க பிக்பாஸ்!"- விஸ்வரூபம் எடுத்த சனம் vs சுரேஷ் சண்டை... பிக்பாஸ் – நாள் 17

சுரேஷை அமர வைத்து ஒருமணி நேரத்திற்கு அலங்காரம் செய்தார்கள். அப்படியும் பரதநாட்டிய ‘லுக்’ வரவில்லை. காஞ்சனா லுக்தான் வந்தது. எனவே அது போல் நடந்து பேசிக்காட்டி மற்றவர்களை மிரட்டி பாராட்டுக்களைப் பெற்றார் தாத்தா.

பேட்டரி சார்ஜ் தீராமல் டேப்ரிகார்டர் இன்னமும் தொடர்ந்து பாடிக் கொண்டிருக்க, இறுதிப் போட்டி சம்யுக்தாவிற்கும் சுரேஷிற்கும் இடையில் நிகழ்ந்தது. கடைசியில் சுரேஷ் வெற்றி. தாத்தாவிற்கு கால் கிலோ அல்வாவை பரிசாக அளித்து மனம் மகிழ்ந்தார் பிக்பாஸ்.

பிக்பாஸ் - நாள் 18

இந்தப் போட்டி முடிந்து ஒரு மணி நேரம் ஆகி, வீட்டு விளக்குகள் அணைக்கப்பட்டும் டேப்ரிகார்டர் மட்டும் ஓயவேயில்லை. ‘வெள்ளச்சாமி பாட ஆரம்பிச்சிட்டான்’ என்பது போல் பழக்கத் தோஷத்தில் தொடர்ந்து பாடிக் கொண்டேயிருந்தார் வேல்முருகன்.

ஒரு பக்கம் போட்டி நடந்து முடிந்தாலும் இன்னொரு பக்கம் அது முடிந்த பிறகு பாட்டும் ஸ்வீட்டுமாக 'ஆனந்தக் குடும்பமாக’ மகிழ்ந்தது பிக்பாஸ் வீடு என்று கூறினால் அது மிகையாகாது. மீண்டும் நாளை அது போட்டிக் களமாக மாறும். நம் வாழ்க்கையும் இது போலத்தான். (மெசேஜ் சொல்றாராம்!).


source https://cinema.vikatan.com/bigg-boss-tamil/new-tasks-and-sentiments-bigg-boss-tamil-season-4-day-18-highlights

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக