Ad

வெள்ளி, 2 அக்டோபர், 2020

இலங்கைக்குக் கடத்த இருந்த 170 கிலோ கஞ்சா! - மாறுவேடத்தில் மடக்கிப்பிடித்த க்யூ பிரிவு போலீஸார்

இலங்கைக்குக் கடத்தப்பட இருந்த 170 கிலோ கஞ்சா பார்சல்களை மாறுவேடத்தில் சென்ற க்யூ பிரிவு போலீஸார், நடுக்கடலில் வைத்து பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 3 பேரை கைது செய்த போலீஸார், தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

போலீஸார் பறிமுதல் செய்த கஞ்சா பார்சல்கள்

தமிழகக் கடலோரப் பகுதிகளில் இருந்து இலங்கைக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள், சமையலுக்குப் பயன்படுத்தும் விரலி மஞ்சள் ஆகியன கடத்தி செல்லும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இவற்றிற்கு மாற்றாக இலங்கையை சேர்ந்த கடத்தல் நபர்கள் தங்கக் கட்டிகளை கொடுப்பதால், இந்த சட்டவிரோத செயலில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கைக்குக் கடத்தி செல்வதற்காக ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கஞ்சாவைக் கடத்தி வருவதும், அவ்வப்போது அவை போலீஸாரிடம் சிக்குவதும் வழக்கமாக இருந்து வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன் மதுரையில் கேரளாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 225 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதேபோல் இலங்க்கைக்குக் கடத்த இருந்த 2.3 டன் விரலி மஞ்சள் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே சிக்கியது.

Also Read: ராமநாதபுரம்: கடற்கரைப் பகுதியில் சிக்கிய 2.3 டன் மஞ்சள்! - இலங்கைக்குக் கடத்த முயன்ற இருவர் கைது

இந்நிலையில், தஞ்சை மாவட்டம் மல்லிபட்டிணம் கடற்கரை வழியாக இலங்கைக்குக் கஞ்சா கடத்த இருப்பதாக ராமநாதபுரம் க்யூ பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து ராமநாதபுரம் க்யூ பிரிவு ஆய்வாளர் மகேஸ்வரி, சார்பு ஆய்வாளர் முஸ்தபா, தலைமைக் காவலர்கள் நாராயணன், சுந்தரமூர்த்தி, சதீஷ் ஆகியோர் தஞ்சாவூர் க்யூ பிரிவு ஆய்வாளர் பிரபாகரனுடன் இணைந்து மல்லிபட்டிணம் அருகே உள்ள வெளிவயல் கடற்கரையில் மாறு வேடங்களில் மறைந்திருந்து கண்காணித்தனர்.

கஞ்சா கடத்தலில் கைதானவர்கள்

அப்போது, கரையில் இருந்து சுமார் 6 கடல் மைல் தொலைவில் பைபர் படகில் கஞ்சா பார்சல்கள் எடுத்து செல்வதை அறிந்தனர். இதையடுத்து, மீனவர்கள் போல் மாற்று உடை அணிந்து படகில் சென்ற க்யூ பிரிவு போலீஸார், இலங்கையில் இருந்து வரும் படகிற்கு கஞ்சா பார்சல்களை மாற்றிவிடக் காத்திருந்த பைபர் படகினை மடக்கினர். அந்த படகினை சோதனையிட்டபோது அதில் 170 கிலோ கஞ்சா சிக்கியது.

இலங்கைக்கு கடத்த இருந்த கஞ்சா பார்சல்கள்.

இதையடுத்து அவற்றைப் பறிமுதல் செய்த க்யூ பிரிவு போலீஸார், பைபர் படகில் இருந்த தஞ்சை கீழத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த குமார், ஜெகதீஸ்வரன் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணம் புதுக்குடியை சேர்ந்த கந்தன் ஆகியோரை கைது செய்தனர். தஞ்சை மாவட்டம் சேதுபாவா சத்திரத்திற்கு அழைத்து வரப்பட்ட கடத்தல்காரர்களை க்யூ பிரிவு போலீஸார் விசாரணைக்கு பின், சேதுபாவா சத்திரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.



source https://www.vikatan.com/news/crime/q-branch-police-seized-170-kgs-of-ganja-near-tanjore

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக