பாம்பன் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த 1,000 கிலோ சமையல் மஞ்சளைக் கடலோர பாதுகாப்பு குழும போலீஸார் கைப்பற்றினர். மஞ்சள் மூட்டைகளை இலங்கைக்குக் கடத்த முயன்ற கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
இலங்கையில் சமையலுக்குப் பயன்படுத்தும் விராலி மஞ்சள் உள்ளிட்ட பணப்பயிர் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக வெளிநாடுகளில் இருந்து மஞ்சள் இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இலங்கையில் மஞ்சள் உபயோகப்படும் அளவிற்கு உற்பத்தி பெருகவில்லை. இதனால் அங்கு மஞ்சளுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. அங்கு கடந்த ஆண்டு இறுதியில் கிலோ 400 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த மஞ்சளின் விலை ,தற்போது 7 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கடத்தல் கும்பல்கள் தமிழகத்திலிருந்து டன் கணக்கில் சமையல் மஞ்சளை இலங்கைக்குக் கடத்தி வருகின்றன. கள்ளத்தனமாக மஞ்சளை வாங்கும் இலங்கையர்கள் அதற்கு மாற்றாக பணம் மட்டுமல்லாது தங்கக் கட்டிகளையும் கொடுக்கின்றனர். இதனால் சமீபகாலமாக மஞ்சள் கடத்தல் அதிக அளவில் நடந்து வருகிறது.
கடந்த சில நாள்களுக்கு முன் மண்டபம் கடல் பகுதியில் ரோந்து சென்ற சுங்கத்துறையினர் 500 கிலோ கடத்தல் மஞ்சளை கைப்பற்றினர். இந்த சம்பவத்தின்போது இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கக் கட்டிகள் சிக்கியதாகவும், ஆனால் சுங்கத்துறையினர் அதனை மறைத்து விட்டனர் எனவும் செய்திகள் உலவின. மேலும், தங்கத்தைக் கடத்தி வந்த வேதாளை கிராமத்தைச் சேர்ந்த கடத்தல் நபருக்கு பதிலாக வேறு சிலர் மீது மஞ்சள் கடத்தியதாக சுங்கத்துறையினர் வழக்கு பதிவு செய்ததாகவும் கூறப்பட்டது.
அதற்குப் பிரதிபலனாக கடத்தல் தங்கத்தை பங்கிட்டு கொண்டதாகவும், இதனை விசாரிக்கச் சென்ற மத்திய, மாநில உளவுத் துறையினரை அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. ஆனால் சுங்க இலாகவினரோ, `மஞ்சள் கடத்தலில் ஈடுபட்ட உண்மையான குற்றவாளிகளைத்தான் பிடித்தோம். இதில் ஒளிவு மறைவு ஏதும் இல்லை’ என தெரிவித்திருந்தனர்.
Also Read: ராமநாதபுரம்: கடற்கரைப் பகுதியில் சிக்கிய 2.3 டன் மஞ்சள்! - இலங்கைக்குக் கடத்த முயன்ற இருவர் கைது
இந்நிலையில் இன்று காலை பாம்பன் கடற்கரை வடக்கு பகுதியில் இருந்து இலங்கைக்கு மஞ்சள் கடத்தப்படுவதாக மண்டபம் கடலோரப் பாதுகாப்பு குழும போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆய்வாளர் கனகராஜ் தலைமையில் சென்ற கடலோர பாதுகாப்பு குழும போலீஸார் நாட்டுப்படகு ஒன்றை சோதனையிட்டனர். தூத்துக்குடியைச் சேர்ந்த பதிவு எண் இல்லாத அந்த நாட்டுப்படகில் இருந்து தலா 25 கிலோ எடையுடன் கூடிய 40 மூடைகளில் இருந்த ஆயிரம் கிலோ மஞ்சள் கைபற்றப்பட்டது.
இலங்கை சந்தையில் சுமார் 70 லட்ச ரூபாய் மதிப்பு கொண்ட இந்த மஞ்சளை கைபற்றிய போலீஸார், நாட்டுப் படகினையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த மண்டபம கடலோர பாதுகாப்பு குழும போலீஸார், மஞ்சள் மூடைகளை கடத்த முயன்ற கும்பலைத் தேடி வருகின்றனர்.
source https://www.vikatan.com/news/crime/pamban-1-ton-smuggling-turmeric-seized-by-police
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக