உலக உயிர்களுக்கு உயிரானானவன் ஈசன், என்றால் அவன் உறையும் எந்த உயிரையும் தனித்து வேறுபடுத்திப் பார்ப்பது கூட தவறுதான். சிவத்தை, சைவத்தை சார்ந்து நிற்கும் எவரும் எந்த பேதமும் பார்த்தால் கூடாது. அதுவே சைவநெறி சொல்லும் பாடம்.
"விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப்பொருளே! உன் தொழும்பு அடியோங்கள்
மண்ணகத்தே வந்து வாழச் செய்தோனே!
வண் திருப்பெருந்துறையாய்! வழியடியோம்
கண்ணகத்தே நின்று களிதரு தேனே!
கடலமுதே! கரும்பே! விரும்பும் அடியார்
எண்ணகத்தாய்! உலகுக்கு உயிரானாய்!
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!"
விண்ணுலக தேவர்களாலும் தானவர்களாலும் நெருங்க முடியாத எம் தலைவனே, வேத வேதாந்தங்களின் முதல் பொருளே! அறியவொண்ணா பரம்பொருளாயினும் எங்களை உய்விக்க என்றே நீ இந்த மண்ணுலம் வந்து பல திருவிளையாடல்கள் செய்து அருள் செய்து வாழ்வித்தாய். மண் வளம், மழை வளம், இயற்கை வளம் நிறைந்த திருப்பெருந்துறை சிவபெருமானே! குலம்தோறும் உமக்கே பணிவிடை செய்யும் அடியவர்களின் கண்களுக்கு எதிரே தோன்றி களிப்பு அருளும் இன்பத் தேனே! கடலில் விளைந்த அமுதமே! இனிப்பை மட்டுமே கொண்டுள்ள இன்கரும்பே! உன்னை மட்டுமே விரும்பும் அடியவர்களின் சிந்தையில் நீக்கமற நிறைந்திருக்கும் பெருமானே! நீயே இந்த உலகின் உயிராக இருக்கிறாய்! நீயே அனைத்துக்கும் ஆதாரமாக இருக்கிறாய்! கருணை கொண்ட எங்கள் பெருமானே! இந்த உலகம் உய்விக்கும் பொருட்டு எங்களுக்காக எழுந்தருள வேண்டும் இறைவனே!
Also Read: இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை எப்போது? வாட்ஸ்அப் செய்தி விளைவித்த குழப்பமும் சாஸ்திரிகள் வழிகாட்டலும்!
கண்ணுக்கு இயற்கையாகவும், காதுக்கு இசையாகவும், நாசிக்கு மணமாகவும், நாவுக்கு இனிப்பாகவும், மெய்க்குக் குளிர் தென்றலாகவும் விளங்குபவன் ஈசன். எதை எல்லாம் நிலைத்து நிற்கும் இன்பமாக உணர்கிறோமோ அவை எல்லாம் சிவவடிவமே. சிவமே அனைத்துக்கும் மூலம். நமசிவய என்ற திருவைந்தெழுத்தே மந்திரங்கள் அனைத்திற்கும் மூலம். திருநீறே அனைத்துச் செல்வத்திலும் உயர்ந்த செல்வம். ருத்ராட்சமே ஆபரணங்களில் உயர்ந்த பூஷணம் என்பது சைவர்களின் நம்பிக்கை. பேதங்கள் அற்ற நிலையே சைவம் வலியுறுத்தும் உயர் கோட்பாடு. எல்லாம் சிவம் என்று கொண்டவருக்கு ஜாதி, மொழி, இன பேதம் ஏது? 'தென்னவன் சேரலன் சோழன் சீர்பதங்கள் வரக்கூவாய்' என்ற குயிற்பத்து பாடலில் அனைத்தும் எம் அரசனான சிவனே என்று கூறுகிறார் மாணிக்கவாசகர். மேலும் இவன் வேண்டியவன், இவன் எங்கள் ஊர்க்காரன், இவனை எனக்குப் பிடிக்காது என்ற பந்த பேதமெல்லாம் கூடாது என்பதை 'பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே!' என்றும் விளக்குகிறார் திருவாசக வேந்தர். எல்லாமும் ஈசன் என்று உணர்ந்தோருக்கு அனைத்தும் இன்பமாகவே மாறும். அதையே இந்தப் பாடல் உணர்த்துகிறது.
"பண்ணையும் ஓசையும் போலப் பழமதுவும்
எண்ணுஞ் சுவையும்போல் எங்குமாம்-- அண்ணல்தாள்
அத்துவிதம் ஆதல் அருமறைகள் ஒன்று என்னாது
அத்துவிதம் என்று அறையும் ஆங்கு.” என்கிறது சிவஞான போதம்.
பக்தி, சரணாகதி என்பதன் அர்த்தமே அடியார்களைப் போற்றுதல் தான். அடியார்களைப் போற்ற வேண்டும் என்றால் அவர்களில் பேதம் காணுதல் கூடாது. உலக உயிர்களுக்கு உயிரானானவன் ஈசன், என்றால் அவன் உறையும் எந்த உயிரையும் தனித்து வேறுபடுத்திப் பார்ப்பது கூட தவறுதான். சிவத்தை, சைவத்தை சார்ந்து நிற்கும் எவரும் எந்த பேதமும் பார்த்தால் கூடாது. அதுவே சைவநெறி சொல்லும் பாடம். இந்த பாடத்தைக் கற்றுக் கொண்ட எல்லோருக்கும் ஈசன் கட்டிக் கரும்பு; கடல் உதித்த அமுதம், களி தரும் தேன், காணும்போதே இன்பம் தரும் மாமலை என்றெல்லாம் வியக்கிறார் மாணிக்கவாசகர்.
உலக உயிர்களுக்கு உயிரானானவன் ஈசன் என்றால், அவன் உறையும் அனைத்தையும் வழிபடுவோம்!
source https://www.vikatan.com/spiritual/gods/margazhi-utsavam-day-29-thiruppalliezhuchi-song-9-by-manickavasagar-about-lord-siva
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக