அ.தி.மு.க ஆட்சியிலிருந்த போது, அப்போது அமைச்சர்களாக வலம் வந்தவர்கள் மீதெல்லாம் தி.மு.க ஊழல் குற்றச்சாட்டை சுமத்தியது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட எட்டு அமைச்சர்கள் மீது ஊழல் புகார் பட்டியலை ஆளுநரிடமும் அளித்தனர். இந்தப் புகார்களெல்லாம் நிர்வாக நடைமுறையாக மத்திய உள்துறைக்கு அனுப்பப்பட்டு, வருவாய் புலனாய்வுப் பிரிவில் விசாரணையும் தொடங்கப்பட்டது. இந்த விசாரணை ஒருபக்கம் நடக்கும் நிலையில், முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் ஒருவரின் மேகாலயா முதலீடு விவரங்களையெல்லாம் தோண்டியிருக்கிறதாம் வருவாய் புலனாய்வுப் பிரிவு.
இதுகுறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். ``மேகாலயாவில் நிலக்கரிச் சுரங்கங்கள் அதிகமிருக்கின்றன. அங்கு நிலக்கரியின் தன்மை இலகுவாக இருப்பதால் பெரிய பள்ளம் தோண்டியெல்லாம் கனிமத்தை வெட்டி எடுக்க முடியாது. அதனால், எலி வலைப் போல துளைப் போட்டு, அதில் ஆள்களை இறக்கிதான் நிலக்கரியை வெட்டி எடுப்பார்கள். துளைக்குள் சிறுவர்கள் எளிதாக நுழைந்துவிட முடியுமென்பதால், நிலக்கரி எடுப்பதற்கு அவர்களைப் பயன்படுத்துவது அதிகமாக இருந்தது. இதைக் கண்டித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், எலி துளை அமைத்து நிலக்கரி எடுப்பதற்கு 2014-ம் ஆண்டு தடை விதித்தது. கடந்த ஏழு ஆண்டுகளாக மேகாலயாவில் நிலக்கரிச் சுரங்கங்கள் செயல்படவில்லை. இதனால், சில சுரங்கங்களை விற்றுவிடவும் அந்த மாநில தொழிலதிபர்கள் தயாராகினர். இதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் அந்த முன்னாள் அமைச்சர்.
Also Read: அ.தி.மு.க சதுரங்கம்... முடிவுக்கு வந்ததா ஆட்டம்?
ஒடிசாவைச் சேர்ந்த ஒரு கனிம நிறுவனம் அந்த மாஜிக்கு மிக நெருக்கம். அந்த நிறுவனத்தின் மூலமாக பல்வேறு நாடுகளில் முன்னாள் அமைச்சரின் வருமானம் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. மேகாலயாவில் சில கனிம நிறுவனங்கள் விலைக்கு வருவதை ஒடிசா பார்ட்டிகள்தான் அந்த முன்னாள் அமைச்சரிடம் சொல்லியிருக்கிறார்கள். இதற்காக, தன் உறவினர் ஒருவரை நேரில் அனுப்பியவர், மேகாலயா நிலவரத்தைப் பார்த்து வரச் செய்திருக்கிறார். ஹாங்காங்கைச் சேர்ந்த ஒரு வங்கியின் மூலமாக பணப்பரிவர்த்தனை நடைபெற்று, சுரங்கத்திற்கான உரிமை முன்னாள் அமைச்சர் கைகாட்டிய பினாமி பெயருக்குச் சென்றிருக்கிறது. இதில் மட்டுமே சுமார் 400 ஸ்வீட் பாக்ஸ்கள் கைமாறியிருப்பதாகச் சந்தேகிக்கிறோம். 2014-ல் விதிக்கப்பட்ட மேகாலயா சுரங்கத் தடையை ஜூலை 2019-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் விலக்கியது. இதைத் தொடர்ந்து, நிர்வாக சிக்கல்கள் தீர்க்கப்பட்டு சமீபத்தில் சுரங்கம் தோண்டுவதற்கான அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இப்படி அனுமதி வழங்கப்படுகிறபோதுதான், முன்னாள் அமைச்சர் இந்தத் தொழிலில் முதலீடு செய்திருக்கும் விவரங்கள் தெரியவந்தன.
ஏற்கெனவே மத்திய உள்துறை மூலமாக கிடைத்திருந்த தரவுகளோடு, மேகாலயாவிலிருந்து கிடைத்த தரவுகளையும் ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறோம். ஆவணங்களை சேகரிக்கும் வேலைகள் துரிதமாகியிருக்கின்றன. வெளிநாட்டு பணம் மூலமாக இந்த கனிமச் சுரங்கங்கள் வாங்கப்பட்டிருப்பதால், அமலாக்கத்துறையும் தன் பங்கிற்கு விசாரணையை தொடங்கியிருக்கிறது. தேவைப்பட்டால், அந்த முன்னாள் அமைச்சர் மீது நடவடிக்கையும் பாயலாம். ஆனால், அரசியல் பிரமுகர்கள் மீது இதுபோன்ற புகார்கள் எழுப்பப்படும் பொழுதெல்லாம், அவை தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்ளும் அரசியல் ஆயுதங்களாகவே மாறியிருக்கின்றன. இந்த முன்னாள் அமைச்சரின் மேகாலயா முதலீடும் அதுபோல மாறுவதற்கான வாய்ப்புகளே அதிகம்" என்றனர்.
டெல்லியின் அரசியல் முடிவைப் பற்றிக் கவலைப்படாமல், தங்கள் வேலையை துரிதமாக முடித்துக் கொடுக்க தீவிரமாகியிருக்கிறதாம் வருவாய் புலனாய்வுப்பிரிவு. இதை மோப்பம் பிடித்திருக்கும் தி.மு.க., டெல்லியிலுள்ள தங்கள் தொடர்புகள் மூலமாக இந்த மேகாலயா முதலீடு விவரங்களை துருவ ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த விவகாரத்தில், அரசியல் விளையாடுவதற்கான வாய்ப்புகளே அதிகம்.
Also Read: திமுக ஆட்சியில் மூடப்படுகின்றனவா அதிமுக திட்டங்கள்?! - குற்றச்சாட்டும் பதிலும்!
source https://www.vikatan.com/news/politics/directorate-of-revenue-intelligence-investigate-former-ministers-investments-on-meghalaya
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக