Ad

வெள்ளி, 14 ஜனவரி, 2022

ஒமைக்ரான் பரவல்... அம்மா மினி கிளினிக் மூடல் - தமிழகத்தின் சுகாதார கட்டமைப்பு எப்படி இருக்கிறது?!

வேகமெடுக்கும் கொரோனா பரவல் :

இந்தியாவில் உச்சத்திலிருந்த கொரோனா இரண்டாம் அலை, மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு தொடர் நடவடிக்கைகளால் கட்டுக்குள் வந்தது. அந்த சமயத்தில், நாடு முழுவதும் நாளொன்றுக்கு 4 லட்சத்துக்கும் அதிகமானோர் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளானார்கள். இந்த தொற்றின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 6,000 வரை குறைந்தது. இந்த நிலையில், இந்தியாவில் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவல் ஆரம்பித்தது. தொற்று பரவ ஆரம்பித்த குறைந்த காலகட்டத்திலேயே 6,000-த்திலிருந்த தொற்று எண்ணிக்கை இரண்டு லட்சத்தை தாண்டியுள்ளது.

கொரோனா சோதனை

தமிழகத்தைப் பொறுத்தவரை, முதல் அலைக்குப் பின்னர் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 300 வரை குறைந்தது. அதுவே, கொரோனா இரண்டாம் அலை உச்சத்திலிருந்த சமயத்தில் நாளொன்றுக்கு 36,000-க்கும் அதிகமானோர் பாதிக்கும் சூழல் உருவாகியது. சென்னை மட்டுமின்றி, கோவை, சேலம், ஈரோடு போன்ற பல்வேறு மாவட்டங்களில் பாதிப்பு அளவு அதிகரித்துக் காணப்பட்டது. இந்த எண்ணிக்கையானது நாளடைவில் படிப்படியாகக் குறைந்து பாதிப்பு எண்ணிக்கை 600 வரை வந்தது. தற்போது அதிவேகமாகப் பரவிவரும் ஒமைக்ரான் பரவல் காரணமாக, 600-லிருந்த பாதிப்பு எண்ணிக்கை 20,000-யை தாண்டியுள்ளது.

தமிழகத்தின் நிலை என்ன?

14.01.2022 அன்றைய நிலவரப்படி, தமிழகத்தில் இதுவரை, 28 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக மொத்தம் 36 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதைய நிலையில், 1,18,017 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதிகபட்சமாகச் சென்னையில் ஒரே நாளில் 8,963 பேரும், செங்கல்பட்டில் 2,504 பேரும், திருவள்ளூரில் 1,393 பேரும் கோவையில் 1,564 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா

தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று பாதிப்பும் அதிகரித்து வருகிறது. எனினும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட அனைவருமே சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசுகையில், ``தற்போதைய நிலையில், தமிழகத்தில் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் 100 பேரில் 85 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்படுகிறது. 85 சதவிகிதம் பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்படுவதால் மரபணு பரிசோதனை கைவிடப்படுகிறது" என்று கூறியுள்ளார்.

மூடப்படும் அம்மா மினி கிளினிக் :

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் மக்களின் மருத்துவ தேவைகளைப் பூர்த்திசெய்ய, தமிழகம் முழுவதும் 2,000 அம்மா மினி கிளினிக்குகளை அன்றைய முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். இந்த கிளினிக்குகளில், ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதாரப் பணியாளர் நியமிக்கப்பட்டனர். மருத்துவத் தேவைகளுக்கான மருத்துவ உபகரணங்களும் இடம்பெற்றிருந்தன. மேலும், இந்த கிளினிக்குகள், சளி, காய்ச்சல், தலைவலி போன்ற நோய்களுக்குச் சிகிச்சை வழங்க, காலை 9 மணி முதல் 11 வரையும், மாலையில் 4 மணி முதல் 7 மணி வரையும் செயல்படும். மொத்தமுள்ள 2,000 கிளினிக்கில் 1,400 கிளினிக்குகள் கிராமப்புறங்களிலும், 200 கிளினிக்குகள் சென்னை மாநகராட்சியிலும், 200 கிளினிக்குகள் மற்ற நகர்ப்புறங்களிலும், 200 நகரும் மினி கிளினிக்குகள் அமைக்கப்படும் என்றும், அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அம்மா மினி கிளினிக்

சுனாமி அலைபோல் கொரோனா தொற்று அதிகரிக்கும் சூழலில், ஆளும் தி.மு.க அரசு, முந்தைய அ.தி.மு.க அரசில் தொடங்கப்பட்ட 2,000 அம்மா மினி கிளினிக்குகளை மூட முடிவு செய்துள்ளது. இது குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ``கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அம்மா மினி கிளினிக் பெயரளவில் மட்டுமே தொடங்கப்பட்டது. கழிவறை கட்டடங்களையும், சுடுகாட்டிலும் அம்மா மினி கிளினிக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை 1,842 மருத்துவர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை. இங்கு பணிபுரிந்த மருத்துவர்களின் பணிக்காலம் மார்ச் மாதம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் திட்டங்களால் பயனடைந்தவர்களின் விவரங்கள் இருக்கின்றன. அம்மா மினி கிளினிக்குகள் மூலம் பயனடைந்தவர்கள் பட்டியலைத் தர முடியுமா? அம்மா மினி கிளினிக் மூலம் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்ட இந்த அம்மா மினி கிளினிக் திட்டம் முடிந்துவிட்டது" என்று பேசினார்.

Also Read: தமிழகத்தில் கட்டுக்கடங்காத கொரோனா பரவல் - பொங்கல் சீஸனை எப்படி எதிர்கொள்ளப்போகிறது அரசு?

தற்போதைய நிலையில், தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு 1.2 லட்சத்துக்கு அதிகமான படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், 50,000 படுக்கை வசதிகள் அதிகப்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. தற்போதுள்ள படுக்கைகளில் 40,000-க்கும் மேற்பட்ட ஆக்ஸிஜன் படுக்கைகளும், 10,000-க்கும் மேற்பட்ட வெண்டிலேட்டர்களும் தயார் நிலையில் இருப்பதாக மருத்துவத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நாளொன்றுக்கு 1.3 லட்சத்துக்கும் அதிகமான ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து விதமான மருத்துவக் கட்டமைப்புகளும் தயார் நிலையில் இருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கொரோனா சிகிச்சை

கொரோனா காலக்கட்டத்தில், அம்மா மினி கிளினிக்குக்காக பணிக்கு எடுக்கப்பட்ட மருத்துவர்களில் பெரும்பாலானவர்கள் கொரோனா பணி பார்த்தவர்கள்தான். தமிழகம் மருத்துவக் கட்டமைப்பில் சிறந்து விளங்கக் காரணம் ஒவ்வொரு ஆட்சிக் காலத்திலும் ஏற்படும் மருத்துவத்துறை வளர்ச்சிதான். இந்த அம்மா மினி கிளினிக் திட்டமும் பெரும்பாலும் கிராமப்புறங்களில் அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்த கிளினிக்குகளை அகற்றாமல் அதில் உள்ள பிரச்னைகளை நீக்கி செயல்படுத்தினால், அது தமிழக மருத்துவக் கட்டமைப்புக்கு மேலும் வலுசேர்க்கும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது. அரசு பரிசீலிக்குமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்!



source https://www.vikatan.com/government-and-politics/healthy/amma-mini-clinics-closed-amid-omicron-spread-is-in-peak-will-tamilnadu-manage-these-situation

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக