Ad

திங்கள், 13 டிசம்பர், 2021

விகடனும் நானும் #MyVikatan

விகடனின் பவழ விழாவை முன்னி்ட்டு 'ஆனந்த விகடனில்' நானும் விகடனும என்ற தலைப்பில் பல பிரபலங்கள் விகனுடனான தங்களுடைய அனுபவங்களை எழுதினார்கள். கலைஞர் கருணாநிதி, வை.கோ, ப.சிதம்பரம் என பலரும் விகடனுடனான அனுபவங்களை வாரந்தோறும் எழுதி வந்தார்கள்.பவழ விழா கொண்டாட்ட முடிவில் வெளியிடப்பட்ட விகடன் பவழ விழா மலர் 1926-2002 புத்தகத்தில் சில வாசகர்களின் கடிதங்களை "விகடனும் நானும் " என்ற தலைப்பிலான கட்டுரைகளாக தொகுத்து வெளியிட்டு இருந்தனர். இதோ எனக்கும் விகடனுக்குமான உறவை விளக்கும் சிறு முயற்சியாக இந்த 'விகடனும் நானும் '...

இப்போதுள்ள தேனி மாவட்டம் அப்போதைய மதுரை மாவட்டமாக ஒருங்கிணைந்து இருந்தது. எளிய விவசாய குடும்பத்தில் பிறந்த நான், ஒரு கிராமாங்களுக்கான இலக்கணம் மாறாமல் வைகை நதி கரை, ஆற்றங்கரையோர ஒரு அரச மரம், அரசமரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகர் என அத்தனையும் உண்டு. அவ்வப்போது தேனி நகருக்கு சென்று வரும் எனது அப்பா அவரகள் வரும் போது தவறாது வாங்கிவரும் புத்தகங்களுக்காக ஆவலோடு காத்திருப்பேன். எங்களுக்காக பூந்தளிர்,துளிர் ஆகிய புத்தகங்களுடன் அரசியல் ஆர்வலரான அப்பாவுக்கு பிடித்தமான ஆனந்த விகடனின் ஜூனியராக வந்த ஜூனியர் விகடனும் இருக்கும்.பூந்தளிர், துளிர் புத்தகங்களை படித்து முடித்த நான் ஆவலோடு அப்பாவின் ஜூனியர் விகடனை எடுத்து படிப்பேன். வடவீர பொன்னையா எழுதிய வருசநாட்டு ஜமீன், மதன் எழுதிய வந்தார்கள்... வென்றார்கள்... , செளபா எழுதிய சீவலப்பேரி பாண்டி, சுஜாதா அவர்களின் ஏன்?எதற்கு?எப்படி? ஆகிய தொடர்களை முழுமையாக படித்து முடித்த பின்புதான் வைப்பேன். 1997-ல் மதுரை மாவட்டத்தில் இருந்து தேனி, தனி மாவட்டமாக பிரிக்கப் பட்டது. 1999ல் +2 முடித்த நான் கல்லூரி படிப்பிற்காக புதுச்சேரி பல்கலைக்கழக கல்லூரியில் சேர அங்குள்ள கல்லூரி நூலகத்தில் எனக்கு அறிமுகமானது ஆனந்த விகடன். ஆனந்தமான காலமது. நூலகத்தில் நுழைந்தவுடன் ஆனந்த விகடன எங்கே என ஆவலுடன் கண்கள் தேடும். ஆனந்த விகடன் கையில் கிடைத்ததும் அட்டை டூ அட்டை பரபரவென புரட்டுவேன், அதன் பின்பு அற அமர அமர்ந்து முழுமையாக படித்து முடிப்பேன். சிறு வயதில் ஜூனியர் விகடனை அறிமுகப்படுத்திய அப்பா ஆனந்த விகடனை அறிமுகப்படுத்தாமல் விட்டு விட்டாரே என்ற ஆதங்கமாக இருக்கும்.

Ananda vikatan Wrapper in 1948

வாரம் தவறாமல் ஆனந்த விகடனோடு தொடர்ந்தது என்னுடைய ஆனந்த விகடனுனான பயணம், இதோ இந்த நொடி வரை தொடர்கிறது "எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றியன் பராபரமே" எனும் ஆனந்த விகடனுடன். அப்போதுதான் ஆரம்பம் ஆனந்த விகடனின் பவழ விழா கொண்டாட்டம். அற்புதமான அறிவிப்புகளுடன் ஆரம்பமான ஆனந்த விகடனின் பவழ விழா கொண்டாட்டம் 75 முத்திரை நகைச்சுவைகள், 75 முத்திரை கவிதைகள், 75 முத்திரை ஓவியங்கள், 75 முத்திரை ஒரு பக்க கதைகள், 75 முத்திரை சிறுகதைகள் ஆகியவற்றுடன் 75 முத்திரை சிந்தனைகள் என ஆரம்பமானது ஆனந்த விகடனின் பவழ விழா கொண்டாட்டம். எப்படியாவது நாமும் விகடனாரின் முத்திரையால் ஷொட்டு வாங்க வேண்டுமென ஆவலோடு எழுத ஆரம்பித்தேன். கவிதைகள்,நகைச்சுவை துணுக்குகள் என எழுதி அனுப்ப ஆரம்பித்த நான், முன்பை விட மிக ஆவலோடு ஆனந்த விகடனுக்குமான பந்தத்தை ஆரம்பித்தேன். அப்போதைய காலக்கட்டத்தில் வைரமுத்து அவர்கள் எழுதிய "கள்ளிக் காட்டு இதிகாசம்" தொடராக வர,எங்களுடைய ஊர் அருகேயுள்ள வைகை அனை, தேனி மாவட்ட வட்டார மொழி என என்னை கட்டிப் போட்ட தொடர் அது. வாரம் தவறாமல் கலைஞர் அவர்களும் கள்ளிக் காட்டு இதிகாசத்தை வாசித்து வைரமுத்து அவர்களுடன் சிலாகித்து பகிர்ந்து கொள்வாராம். இந்த செய்தியையும் பின்னாட்களில் ஆனந்த விகடனில் வைரமுத்து அவர்களுடைய பேட்டியின் மூலமாக படித்தறிந்து, மகிழ்ந்தேன்.

நாட்கள் நகர இடைவிடாது எனக்கும் விகடனுக்கு எழுதிஅனுப்பும் எறது பயணம் தொடர்ந்தது கொண்டே இருந்தது. அப்போதைய விகடனில் ஒவ்வார வாரமும் அடுத்த அரசியல் நம்பிக்கைகள் என்ற தொடர வந்து கொண்டிருந்தது. அன்புமணி, ஜி.கே.வாசன்,திருமாவளவ‌ன என தொடர்ந்த ஆனந்த விகடன அந்த வார விகடனில் இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்த கட்டுரை வந்து இருந்தது. வழக்கமாக விடனை வாங்கியதும் அட்டை டூ அட்டை பரபரவென புரட்டிப் பார்க்கும் நான் அன்றைய தினத்தில் ஆனந்த விகடனை ஆரம்பத்தில் இருந்தே நிதானமாக நிறுத்தி முழுமையாக படிக்க ஆரம்பித்தேன். விகடனுடைய கடைசி அட்டைக்கு முந்தைய பக்கம் பிரசுரமாகி இருந்த விகடனுடைய முத்திரை பதித்த 54 வது நகைச்சுவையை வாசிக்கிறேன். அடடே, இது நாம் எழுதிய நகைச்சுவையாயிற்றே என்ற மகிழ்வுடன், நகைச்சுவையின் கீழே உள்ள பெயரை படிக்கிறேன், வீ வைகை சுரேஷ், தேனி. என்ற எனது

பெயரை வாசித்தவுடன் அளவற்ற ஆனந்தம். சத்தமாக எனது பெயர் பொறித்த நகைச்சுவை இதோ இந்த வார விகடனில் என்று நூலகத்தில் கூற வேண்டும் போன்ற நிமிடங்கள். பல முறை விகடனின் முத்திரையுடன் வெளியான எனது பெயரை தடவி, தடவி பார்த்துக் கொள்கிறேன். ஆனந்த விகடன் உலகமெங்கும உள்ள தமிழர்களுடைய கையில் இந்த ஆனந்த விகடன் இருக்கும், உலக தமிழர்கள் அனைவரும எனது பெயரை, ஊரை வாசிப்பார்கள் என்ற பெருமிதத்தில் கண்களில் ஆனந்த கண்ணீர் பெருகிய நிமிடக்களை தந்தது ஆனந்த விகடன்.

மிகுந்த உற்சாகமான நான் முத்திரை சிந்தனைக்குரிய பரிசாக ஆனந்த விகடன் அறிவித்து வழங்கிய கணினியை வாங்கி விட வேண்டுமென்ற ஆவலில் ஒரே நாளில் கங்கை- காவிரியை இணைப்பது என்ற கட்டுரையை எழுதி அனுப்பினேன். அப்போது வாரா வாரம் வரும் 'ஹாய் மதன் ' கேள்வி - பதில் பகுதிக்கு 'ஹைஹீல்ஸ் கண்டுபிடிக்கப்பட்டது ஆண்களுக்கானத்தானாமே?

'எகிப்தின் ஸ்பிங்ஸ் சிலையின் முகத்தை உடைத்தது யார்?' என்ற எனது கேள்வி - பதில் பிரசுரமான ஆனந்த விகடனை எனது கல்லூரி நண்பர்களிடம் காட்டி ஆனந்தமாக பகிர்ந்த நாட்கள் மறக்க இயலாதவை. பின்னாளில் கையடக்க வடிவிலான விகடன் படர்ந்த வடிவிலான விகடன் ஆனது வரை இதோ இந்த நொடி வரை விகடனுக்கும் எனக்குமான பந்தம் தொடர்கிறது.

சுட்டி விகடன், விகடம் தடம், அவள் விகடன், பசுமை விகடன், மோட்டார் விகடன், நாணயம் விகடன் என விகடனுடைய அவதாரங்களை நேசித்து வசித்த எனக்கு விகடன் தடம், சுட்டி விகடன் ஒரு சேர நின்றது தீராத மன வருத்தம். சுட்டி விகடன எனது குழந்தைகளுக்கு வாங்கி தந்து வாசிக்க கொடுத்த எனக்கு மட்டுமல்ல தமிழ் சமுதாயத்திற்கே பேரிழப்பு சுட்டி விகடன் நின்றது.

பத்து நொடி கதைகள், நானே கேள்வி நானே பதில், வாசகர் மேடை, போட்டோ தாக்கு, என ஆனந்த விகடனின் அடடே அப்டேட் என்ற பயணத்தில் தொடரும் நான் இதோ இப்போதைய மை விகடனில் , விகடனும் நானும் என்பதில் "எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றியேன் பராபரமே" என்று தொடர்கிறேன்.



source https://www.vikatan.com/best-of-vikatan/vikatan-and-reader

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக