Ad

சனி, 18 டிசம்பர், 2021

மஞ்சள் - இஞ்சி டீ | முடக்கத்தான் கீரை - காய்கறி பணியாரம் | மூலிகை பூரி - வீக் எண்ட் ரெசிப்பீஸ்!

தொற்றுக் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். வைரஸ் இன்னும் நம்மை விட்டபாடாக இல்லை. உருமாறி தன் அச்சுறுத்தலைத் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. தொற்றிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள நோய் எதிர்ப்பாற்றலை அதிகரித்துக்கொள்ள வேண்டியது மிக அவசியமானதாக மாறியிருக்கிறது. நோய் எதிர்ப்பாற்றலைத் தரும் மருந்து சமையலை இந்த வார வீக் எண்டில் உங்கள் குடும்பத்துக்கு அறிமுகப்படுத்துங்களேன்...

தேவையானவை:

• பால் - கால் கப்
• கேரட் - ஒன்று

• பீன்ஸ் - 10
• பச்சைப் பட்டாணி - ஒரு கைப்பிடி
• சின்ன வெங்காயம் - 10
• இஞ்சி - சிறிய துண்டு
• பூண்டு - 2 பல்
• மிளகுத்தூள், சீரகத்தூள் -
• தலா கால் டீஸ்பூன்
• பட்டை - சிறிய துண்டு
• கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி
• எலுமிச்சைப்பழம் - ஒன்று
(சாறு எடுக்கவும்)
• உப்பு - தேவைக்கேற்ப
• வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

எலுமிச்சை - கொத்தமல்லித்தழை - காய்கறி சூப்

செய்முறை:

குக்கரில் வெண்ணெயை சூடாக்கி பட்டை, நறுக்கிய இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், காய்கறிகள், கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கவும். தேவைக்கேற்ப நீர் சேர்த்து வேகவிடவும். காய்கறிகள் வெந்ததும் நீரை வடிகட்டி ஆறவிடவும். பிறகு, வெந்த காய்கறிகளை தேவையான அளவு நீர் விட்டு மையாக அரைத்து, வடிகட்டிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் காய்கறிகள் வெந்த நீரையும், வேகவைத்து அரைத்து வடிகட்டிய நீரையும் ஒன்றாகச் சேர்த்துக் கலக்கி மீண்டும் அடுப்பில் வைத்துக் கொதிக்கவிடவும். ஒரு கொதி வந்ததும் பால் சேர்க்கவும். சூப் பதம் வந்ததும் உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கலக்கி இறக்கி, எலுமிச்சைச் சாறு சேர்த்து சூடாகப் பரிமாறவும். விருப்பப்பட்டால் க்ரீம் சேர்க்கவும். குளிர்காலத்தில் நோய் அண்டாமல் தடுக்கும், வைட்டமின்-சி நிறைந்த சூப் இது.

தேவையானவை:

• இஞ்சி - ஒரு விரல் நீளத்துண்டு
• மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
• பட்டை - சிறிய துண்டு (பொடியாக்கிக்கொள்ளவும்)
• பனங்கற்கண்டு - 2 டீஸ்பூன்

மஞ்சள் - இஞ்சி டீ

செய்முறை:

இஞ்சியை தோல் நீக்கி, கழுவி துருவிக்கொள்ளவும். பட்டையை பொடித்துக்கொள்ளவும். பாத்திரத்தில் 2 டம்ளர் நீர் விட்டு இஞ்சித் துருவல், பட்டைப்பொடி, மஞ்சள்தூள், பனங்கற்கண்டு சேர்த்துக் கொதிக்கவிடவும். கலவை பாதியாக வற்றியதும், வடிகட்டி சூடாக அருந்தவும். குளிர்காலத்தில் எந்த நேரத்திலும் அருந்தலாம். தொண்டைக்கட்டு, இருமலைப் போக்கும்.

தேவையானவை:

• தூதுவளை - ஒரு கைப்பிடி
• முள் முருங்கை - ஒரு கைப்பிடி
• ஆடோதோடா இலை - ஒரு கைப்பிடி
• முருங்கைக்கீரை - ஒரு கைப்பிடி
• வரகரிசி மாவு - ஒரு கப்
• பச்சரிசி மாவு - ஒரு கப்
• சுக்குப்பொடி - ஒரு டீஸ்பூன்
• மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
• உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

மூலிகை பூரி

செய்முறை:

கீரை வகைகளை தனித்தனி இலைகளாக எடுத்து நன்கு கழுவி மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைக்கவும். அரைத்ததை ஒரு பவுலில் சேர்த்து, இத்துடன் வரகரிசி மாவு மற்றும் பச்சரிசி மாவைச் சேர்த்துக் கலக்கவும். பிறகு, தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள், சுக்குப்பொடி சேர்த்து கெட்டியாகப் பிசையவும். பிசைந்ததை, சிறு சிறு பூரிகளாகத் திரட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். மூலிகை பூரி தயார். அப்படியே சாப்பிடலாம். இந்தக்கீரை வகைகள் சளி, இருமலை கட்டுப்படுத்தும்.

தேவையானவை:

• மணத்தக்காளி வற்றல் - கால் கப்
• தோல் உரித்த
சின்ன வெங்காயம் - ஒரு கப்
• பூண்டு - 20 பல்
• புளி - எலுமிச்சை அளவு
• சுக்கு - ஒரு அங்குலத்துண்டு
• மிளகு, சீரகம் - தலா 2 டீஸ்பூன்
• திப்பிலி - 10 குச்சிகள்
• மல்லி (தனியா) - 2 டீஸ்பூன்
• மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
• வெந்தயம் - கால் டீஸ்பூன்
• கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்
• கறிவேப்பிலை - சிறிதளவு
• வெல்லம் - சிறிய துண்டு
• கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்
• பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
• நல்லெண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்
• உப்பு - தேவையான அளவு

மருந்துக்குழம்பு

செய்முறை:

சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், மல்லி (தனியா), வெந்தயம், பாதி மணத்தக்காளி வற்றல், கடலைப்பருப்பு ஆகியவற்றை எண்ணெய் விடாமல் தனித்தனியாக வெறும் வாணலியில் வறுத்து ஆறவிட்டு பிறகு ஒன்று சேர்த்துப் பொடித்துக்கொள்ளவும். புளியை கெட்டியாகக் கரைத்துக்கொள்ளவும். வாணலியில் நல்லெண்ணெய் விட்டு சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், மீதமுள்ள மணத்தக்காளி வற்றல் ஆகியவற்றைச் சேர்த்து தாளிக்கவும். இத்துடன் சின்ன வெங்காயம், பூண்டு, சேர்த்து வதக்கி, புளிக்கரைசல், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். ஒரு கொதி வந்ததும் வறுத்து அரைத்த பொடியை, சிறிது நீரில் கலக்கி கொதிக்கும் கலவையில் சேர்க்கவும். எண்ணெய் பிரிந்து மேலே வரும் வரை, ‘சிம்’மில் வைத்து கொதிக்கவிட்டு பிறகு இறக்கிப் பரிமாறவும். இந்தக் குழம்பை 4 நாள்கள் வரை வைத்திருக்கலாம். குளிர்காலத்தில் ஏற்படும் பசியின்மை, அஜீரணம் மற்றும் உடல்சோர்வு ஆகியவற்றுக்கு அருமருந்து. மணத்தக்காளி வற்றலுக்கு பதிலாக சுண்டைக்காய் வற்றலும் உபயோகிக்கலாம்.

தேவையானவை:

• இட்லி மாவு - 4 கப்
• பெரிய வெங்காயம் - ஒன்று
• கேரட் - ஒன்று
• முடக்கத்தான் கீரை - ஒரு கப்
• மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
• உப்பு - சிறிதளவு
• கடுகு, உளுத்தம்பருப்பு,
• கடலைப் பருப்பு - தலா கால் டீஸ்பூன்
• பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
• எண்ணெய் - தேவைக்கேற்ப

முடக்கத்தான் கீரை - காய்கறி பணியாரம்

செய்முறை:

முடக்கத்தான் கீரையை சுத்தம் செய்து, விழுதாக அரைத்து, இட்லி மாவில் சேர்க்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், துருவிய கேரட், சிறிது உப்பு, மிளகுத்தூள் சேர்த்து வதக்கி மாவுடன் சேர்க்கவும். பிறகு, நன்கு கலக்கி குழிப்பணியாரக் கல்லைச் சூடாக்கி குழிகளில் எண்ணெய் விட்டு, மாவை ஊற்றி இருபுறமும் வேக விட்டு எடுக்கவும். சட்னியுடன் பரிமாறவும்.

குளிர்காலத்தில் ஏற்படும் மூட்டுவலி, முடக்குவாதம் போன்றவற்றின் தாக்கத்தைக் குறைக்கும் முடக்கத்தான் கீரை உணவுகள்.



source https://www.vikatan.com/food/recipes/turmeric-ginger-tea-herbal-poori-lemon-coriander-veg-soup-weekend-recipies

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக