Ad

சனி, 18 டிசம்பர், 2021

பேராசிரியர் அன்பழகன்: நூற்றாண்டு காணும் ஆளுமை... கொண்ட கொள்கைக்கும் நட்புக்குமான நேசமிகு அடையாளம்!

இன்று பேராசிரியர் அன்பழகனுக்கு நூற்றாண்டு தொடங்குகிறது. பகுத்தறிவு, சுயமரியாதை, மொழிப்பற்று, இனவுணர்வு ஆகிய கருத்தியல் விழுமியங்களுடன் லட்சியவாதக் கனவுடன் உருவான, சென்ற தலைமுறையின் அடையாளம் பேராசிரியர் அன்பழகன். அவர் தி.மு.க.வின் பொதுச்செயலாளர் என்பதைத் தாண்டியும் தன் கொள்கை அடையாளத்துடனே இறுதிவரை வாழ்ந்தார்.

சாதியம், மதம் ஆகியவற்றை எதிர்த்த தி.மு.க., சமூகத்தைத் தமிழ்மயப்படுத்துவதன் மூலம் அதை எதிர்கொள்ள முயன்றது. கம்பராமயாணம், பெரியபுராணம் போன்ற பக்தி இலக்கியங்களின் இடத்தில் திருக்குறளையும் சங்க இலக்கியங்களையும் சிலப்பதிகாரத்தையும் முன்வைத்தது. சமஸ்கிருதத்தின் ஆதிக்கம் நிறைந்த காலகட்டத்தில் அதற்கு மாற்றான, இணையான தமிழ்மயச் செயற்பாட்டை மொழிச்செயற்பாடாக மட்டுமல்லாது அரசியல் செயற்பாடாகவும் பண்பாட்டுச் செயற்பாடாகவும் மாற்றியது. அப்படித்தான் 'நமஸ்காரம்' - வணக்கம் ஆனது. 'அக்கிராசனார்', 'அபேட்சகர்' போன்ற வார்த்தைகள் 'தலைவர்', 'வேட்பாளர்' ஆகின.

அன்பழகன்

இவற்றின் தொடர்ச்சியாகப் பெற்றோர்களால் தங்களுக்கு இடப்பட்ட பெயரைத் தூயத் தமிழ்ப்பெயர்களாக மாற்றிக்கொள்ளும் செயற்பாட்டையும் திராவிட இயக்கம் முன்வைத்தது. அதற்கு முன்பே மறைமலை அடிகள், பரிதிமாற்கலைஞர் ஆகியோர் இதைச் செய்துள்ளனர் என்றாலும் வடமொழியைத் தமிழாக மாற்றுதல் என்றளவிலேயே அது நின்றுபோனது. ஆனால் தி.மு.க-வோ இந்து அடையாளங்களுக்கு மாற்றாகத் தமிழ் அடையாளத்தை முன்வைப்பது என்னும் செயல்பாடாகவே திருக்குறள், சிலப்பதிகாரம், சங்க இலக்கியங்கள் ஆகியவற்றை முன்வைத்தது. அதன் நீட்சியாகத்தான் மதத்தின் அடிப்படையிலான பெயர்களைத் தூய தமிழ்ப்பெயர்களாக மாற்றிக்கொள்ளும் நடவடிக்கை அமைந்தது. நாராயணசாமி 'நெடுஞ்செழியன்' ஆனதைப்போல 'ராமையா' - அன்பழகன் ஆனார். இன்று மீண்டும் குழந்தைகளுக்கு அர்த்தமற்ற வடமொழிப் பெயர்கள் சூட்டப்படும் காலத்தில் ஒரு பண்பாட்டுப் போராட்டத்தின் அடையாளமாக நிற்கிறது 'அன்பழகன்' என்ற பெயர்.

சிறுவயதில் இருந்தே பெரியாரின் சுயமரியாதைக் கொள்கையால் ஈர்க்கப்பட்ட அன்பழகன் இறுதிவரை சுயமரியாதைக்காரராகவே வாழ்ந்தார். 1942ல் இஸ்லாமிய இளைஞர்கள் இணைந்து நடத்திய சிக்கந்தர் விழாவில்தான் முதன்முறையாக அன்பழகனும் கருணாநிதியும் சந்தித்துக்கொண்டார்கள். திருவாரூரில் தான் தொடங்கிய மாணவர் மன்ற விழாவுக்கு கருணாநிதி முதன்முதலில் அழைத்த பேச்சாளர் அன்பழகன்தான். அப்போது தொடங்கிய கருணாநிதி - அன்பழகன் நட்பு இறுதிவரை நீடித்தது.

பச்சையப்பன் கல்லூரியில் துணைப்பேராசிரியராகப் பணிபுரிந்த அன்பழகன், 'பேராசிரியர்' என்ற அடையாளத்தை இறுதிவரை சுமந்தார். திராவிட முன்னேற்றக்கழகம் உதயமானபோது பெரியாரிடமிருந்து பிரிந்துவந்த அண்ணாவின் தம்பிகளில் அன்பழகனும் ஒருவர். பிறகு கடவுள் மறுப்பு, பார்ப்பனர் ஆதிக்க எதிர்ப்பு உள்ளிட்ட பல கொள்கைகளில் இருந்து பல தி.மு.க.வினர் மாறிப்போனாலும் இறுதிவரை பெரியாரின் கொள்கைகளில் தடம் மாறாமல் வாழ்ந்த தி.மு.க.காரர்களில் ஒருவராக அன்பழகன் வாழ்ந்தார்.

அன்பழகன் - கருணாநிதி
அண்ணாவின் மறைவுக்குப் பிறகு நெடுஞ்செழியனா, கருணாநிதியா என்னும் கேள்வி தி.மு.க.வில் எழுந்தபோது கருணாநிதியின் பக்கம் உறுதியாக நின்றவர் அன்பழகன். இத்தனைக்கும் அன்பழகனுக்கும் நெடுஞ்செழியனுக்குமான ஒற்றுமைகள்தான் அதிகம்.

இருவரும் தமிழில் தன் பெயரை மாற்றிக்கொண்டவர்கள். இருவரும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கல்லூரித்தோழர்கள். இருவரும் மெத்தப்படித்தவர்கள். அதிகம் படித்து பண்டிதர்களையும் ஈர்த்த தரப்பு, நாடகங்கள், சினிமாக்களில் நடித்து, வசனம் எழுதி பாமரர்களையும் ஈர்த்த தரப்பு என்பதில் அன்பழகனும் நெடுஞ்செழியனும் முதல் தரப்பினர். இப்படி எல்லாவகையிலும் நெடுஞ்செழியன் பக்கம் நிற்கவே அன்பழகனுக்குக் காரணங்களும் நியாயங்களும் இருந்தன.

ஆனால், 'அண்ணாவுக்குப் பிறகு திராவிட முன்னேற்றக்கழகத்துக்குத் தலைமை தாங்குவதற்குக் கலைஞர் கருணாநிதிதான் பொருத்தமாக இருப்பார்' என்பதில் உறுதியாக இருந்தார் அன்பழகன். இத்தனைக்கும் கலைஞரை விடவும் அன்பழகன் மூத்தவர். அப்போது அவர் ஏற்ற கலைஞர் தலைமை என்பதைக் கடைசிவரை விடாப்படியாகப் பின்பற்றினார் பேராசிரியர்.

அண்ணாவை விடவும் அதிகம் சோதனைகளைச் சந்தித்தவர் கலைஞர்தான். இருமுறை கட்சி பெரும்பிளவைச் சந்தித்தது. எம்.ஜி.ஆர் தி.மு.க.வை விட்டுப் பிரிந்தது பெரும் பாதிப்பு. எம்.ஜி.ஆர் தி.மு.க.வை விட்டு வெளியேறக் காரணமாக இருந்த நெடுஞ்செழியனே பிறகு எம்.ஜி.ஆர் கட்சிக்குச் சென்றார். அதேபோல் வைகோ தி.மு.க.வை விட்டு விலகியபோதும் மூன்றில் ஒருபங்கு மாவட்டச் செயலாளர்கள் வைகோவுடன் சென்றார்கள்.

அன்பழகன்

எம்.ஜி.ஆருக்கும் கலைஞருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு கட்சி உடையும் சூழல். "தி.மு.க.வுக்குக் கள்ளச்சாவி போடும் வேலை நடக்கிறது" என்று எச்சரித்த பெரியார், "தி.மு.க.வினர் வலியுறுத்தும் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றில் முன் இரண்டைவிட கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டியதுதான் இப்போது மிக முக்கியம்" என்று அறிவுறுத்தினார். பெரியாரின் வார்த்தைகளை யார் கேட்டார்களோ இல்லையோ, அவற்றை இறுதிவரை இறுகப்பற்றி வாழ்ந்தவர் பேராசிரியர் அன்பழகன். கலைஞரைவிட்டு எவ்வளவு பெரிய ஆட்கள் விலகினாலும், எத்தனையோ பேர் சென்றாலும் 'கொண்டது தி.மு.க, கண்டது தலைவர் கலைஞர்' என்பதில் அவர் கொஞ்சமும் மாறவில்லை.

இந்த இடைப்பட்ட காலங்களில்தான் தி.மு.க மிசாவைச் சந்தித்தது. மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, சிட்டிபாபு என்று பலரும் சிறையில் வதைபட்டார்கள். நெருக்கடியின் காரணமாகத் தி.மு.க.வை விட்டுப் பலர் விலகிப்போனார்கள். கலைஞருக்கு கார் ஓட்டக்கூட டிரைவர் வரவில்லை. தன்னந்தனி ஆளாக சென்னையில் துண்டறிக்கைகளை விநியோகித்தார், சில நாள்களுக்கு முன் தமிழகத்தின் முதல்வராக இருந்த கலைஞர். இத்தனை சோதனைகளுக்கு மத்தியிலும் அவருடன் நிழலாக இருந்தவர் அன்பழகன்.

அன்பழகன் அண்ணாவுடன்...

13 ஆண்டுகள் முதல்வர் பதவியில் அமர முடியாமல் அரசியல் வனவாசத்தில் இருந்தார் கலைஞர். 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த இரண்டே ஆண்டுகளில் ஆட்சி கலைக்கப்பட்டது. ராஜீவ்காந்தி படுகொலையையொட்டி தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் தாக்கப்பட்டனர். அப்போது நடந்த சட்டமன்றத் தேர்தலில் இரண்டே இரண்டு தொகுதிகளில்தான் தி.மு.க. வென்றது. ஜெயின் கமிஷன் அறிக்கை, ராஜீவ் கொலையில் தி.மு.க.வையும் குற்றம் சாட்டியது. இவற்றில் இருந்து மீண்டபிறகு 2ஜி வழக்கு என்று தி.மு.க.வுக்குப் பல சோதனைகள். எல்லா சோதனைக்காலகட்டங்களிலும் புயலில் வீழாத பெருமரமாக இருந்தார் அன்பழகன்.

அவர் தனக்குக் கிடைத்த பொதுச்செயலாளர் என்ற பதவியைத் தவிர வேறு எந்தப் பதவிக்கும் பெரிதாக ஆசைப்படவில்லை. திராவிட இயக்கத்தின் மீதான நம்பிக்கையே கலைஞருடன் இறுதிவரை அவரைப் பயணிக்கவைத்தது. நண்பனாய், தோழனாய், ஆசானாய், தலைவனாய் கலைஞரை அவர் வரித்துக்கொண்டார்.

கலைஞரின் உடல் புதைக்கப்பட்ட நாள். ஸ்டாலின், கனிமொழி என்று அனைவரும் உணர்ச்சி ததும்பியிருந்த தருணம். அதிலும் 'அண்ணா நினைவிடத்துக்கு அருகிலேயே கலைஞருக்கு நினைவிடம் அமைக்கலாம்' என்று நீதிமன்றம் வழங்கியிருந்த அனுமதியும் உணர்ச்சிக்கொந்தளிப்பை அதிகப்படுத்தியிருந்தது. கலைஞரின் உயிரற்ற உடலுக்கு முன் வெறித்த பார்வையோடு நின்றுகொண்டிருந்தார் பேராசிரியர் அன்பழகன். அங்கிருந்து நகர்வதற்கு மனமில்லை. ஸ்டாலின் கொஞ்சம் அசைத்துத்தான் அவரை அங்கிருந்து அழைத்துச் செல்ல முடிந்தது. 75 ஆண்டுக்கால தன் நண்பருக்கு, அரைநூற்றாண்டுக்காலம் தான் ஏற்றுக்கொண்ட தலைவருக்கு அன்பழகன் இறுதிவிடை கொடுத்த தருணம், ஒரு காவியத் தருணம்.

அன்பழகன் கருணாநிதியுடன்
அது ஒரு காவிய நட்புதான். கலைஞருக்கு எப்போதுமே சோழ மரபில் ஈர்ப்புண்டு. அந்தக் கோப்பெருஞ்சோழனுக்குப் பிசிராந்தையாராய் வாழ்ந்தவர் பேராசிரியர்.

தி.மு.க. முதன்முதலில் போட்டியிட்ட 1957 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற 15 பேரில் அன்பழகனும் ஒருவர். 1983ல் ஈழத்தமிழர் பிரச்னைக்காக கலைஞருடன் இணைந்து தன் எம்.எல்.ஏ பதவியைத் துறந்தவர் அவர். இந்தித் திணிப்பை எதிர்த்து சட்ட நகலைக் கொளுத்தியதால் எம்.எல்.ஏ பதவி பறிக்கப்பட்டவர். சட்டமன்ற உறுப்பினர், சட்ட மேலவை உறுப்பினர், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர், கல்வியமைச்சர், நிதியமைச்சர் என பல பதவிகளை வகித்தவர் அன்பழகன். ஆனாலும் அவர்மீது எந்தக் குற்றச்சாட்டுகளும் இல்லை.

ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவர் வீட்டில் சோதனை போட்டு, எந்த ஆவணங்களையும் எடுக்காமல் வெறுங்கையுடன் திரும்பினார்கள். "நீண்ட நாள்களாகப் புத்தக அலமாரியைத் தூசு தட்ட வேண்டும் என்று நினைத்திருந்தேன். அதைச் செய்து தந்தமைக்கு நன்றி" என்று கேலிப்புன்னகையுடன் அவர்களை வழியனுப்பி வைத்தார் பேராசிரியர்.

அண்ணாவின் அழகுத்தமிழும் பெரியாரின் அறச்சீற்றமும் கலந்தது பேராசிரியரின் பேச்சு. 'பகுத்தறிவும் சுயமரியாதையும் இல்லாமல் தமிழர்கள் இருக்கிறார்களே' என்ற ஆதங்கத்தைப் பெரியாரைப் போலவே தன் உரைகளில் சூடாகப் பதிவு செய்பவர் அன்பழகன். தமிழகத்தில் நல்ல பேச்சாளர்கள் பலர் இருந்தாலும் பேச்சுக்கலை பற்றி எழுதியவர்கள் குறைவு. அந்தவகையில் அன்பழகனின் 'நீங்களும் பேச்சாளர் ஆகலாம்' புத்தகம், பேச்சாளர்களுக்கு முக்கியமான கையேடு.

வாழ்க திராவிடம், வகுப்புரிமைப் போராட்டம், தமிழர் திருமணமும் இனமானமும் என்று அவர் எழுதிய நூல்கள் அனைத்தும் திராவிட இயக்கக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டவை.

பேரறிஞர் அண்ணா - பேராசிரியர் அன்பழகன் - நாவலர் நெடுஞ்செழியன்

திராவிட இயக்கத்தில் பெரியார் என்றால், அறிஞர் என்றால், கலைஞர் என்றால், நாவலர் என்றால் எப்படி ஒரே ஒருவரைத்தான் குறிக்குமோ அதேபோல் பேராசிரியர் என்றால் அது பேராசிரியர் அன்பழகனை மட்டும்தான் குறிக்கும்.

நீங்கா நிழலாய் வாழ்ந்த நட்புக்கு, கடைசிவரை கடைப்பிடித்த கட்டுப்பாட்டுக்கு, தூய பொதுவாழ்வுக்கு, கொள்கைகள் மீது கொண்ட நேசத்துக்குப் பாடமாய் விளங்குகிறார் அந்தப் பேராசிரியர்.


source https://www.vikatan.com/government-and-politics/politics/the-moving-life-story-of-professor-k-anbazhagan-and-his-friendship-with-karunanidhi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக