Ad

ஞாயிறு, 19 டிசம்பர், 2021

இவ்வளவு செய்தும் பொதுத்துறை வங்கிகளை அரசு தனியார் மயமாக்குவது ஏன்?

பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து, வங்கி ஊழியர்களின் ஸ்டிரைக் இரண்டு நாட்கள் நடந்தது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் நாடு முழுவதும் ஒரே நாளில் ரூ.37,200 கோடி அளவுக்கான காசோலை பரிவர்த்தனை முடங்கியதாக வங்கி வட்டாரங்கள் சொல்கின்றன.

இந்த ஸ்டிரைக்கால் நாடு முழுவதும் வங்கிச் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. அந்த இரண்டு நாள்களுக்கு பணம் டெபாசிட், பணம் எடுத்தல், செக் பரிமாற்றம் உள்ளிட்ட எந்தப் பணிகளும் நடைபெறவில்லை.

ஏன் இந்த வேலை நிறுத்தம்?

Indian Overseas bank ATM

வங்கி ஊழியர்கள் சங்கம், மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து இப்படி அடிக்கடி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது வழக்கம்தான். ஆனால், இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை வழக்கமான போராட்டமாக நினைத்து நம்மால் கடந்து சென்றுவிட முடியாது.

ஏனெனில், பொதுத்துறை வங்கிகளை தனியார்மயம் ஆக்குவதற்கான வங்கிகள் சட்டத் திருத்த மசோதா, நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், வங்கிகளைத் தனியார்மயம் ஆக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்துதான், வங்கி ஊழியர்கள் சங்கம் டிசம்பர் 16, 17-ம் தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தினார்கள்.

நாடு முழுவதும் உள்ள 12 பொதுத்துறை வங்கிகளை ஐந்து வங்கிகளாக குறைக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதன் முதற்கட்ட நடவடிக்கையாக சில வங்கிகளில் இருக்கும் அரசு பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் வங்கி ஊழியர் சங்கம் தரப்பில் இருந்து குற்றம் சாட்டப்படுகிறது.

தாமஸ் ஃப்ராங்கோ

வங்கி தனியார்மயத்தை ஏன் அரசு கையிலெடுக்கிறது, பொதுத் துறை வங்கிகளைத் தனியார்மயம் ஆக்குவதில் உள்ள பிரச்னைகள் என்னென்ன, தனியார்மயமாக்கம் காரணமாக மேற்படி வங்கிகளின் லாபம் அதிகரிக்கப் போகிறதா?, மக்கள் சேமிக்கும் வைப்புத் தொகை தனியார் வங்கிகளில் பத்திரமாக இருக்குமா, அரசு கட்டுப்பாட்டில் உள்ள வங்கிகளைவிட, தனியார் வங்கிகள் சிறப்பாக இயங்குகின்றன என்பதற்கு ஆதாரங்கள் உள்ளதா என்பது போன்ற பல்வேறு கேள்விகளை அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் தாமஸ் ஃபிராங்கோவிடம் கேட்டோம்.

36 முறை போராட்டம்!

"1992-ம் ஆண்டுக்குப்பிறகு, வங்கிகளில் அமல்படுத்தும் கொள்கைகளை எதிர்த்து, வங்கிகளை இணைப்பது மற்றும் தனியார்மயமாக்கல் நடவடிக்கைகளை எதிர்த்து 36 முறை போராட்டங்களை இந்திய வங்கி ஊழியர்கள் சங்கங்கள் முன்னெடுத்திருக்கின்றன. ஏனெனில், வங்கிகளைத் தனியார்மயம் ஆக்குவதில் ஏகப்பட்ட பிரச்னைகள் இருக்கின்றன. சொல்லப் போனால், தனியார் வங்கிகள் திவால் ஆகும் போது, பொதுத் துறை வங்கிகளே தூணாக இருந்து தாங்கிப் பிடித்திருக்கின்றன. சமீபத்தில் யெஸ் பேங்க் திவால் ஆனபோது கூட, எஸ்.பி.ஐ வங்கிதான் அதைக் காப்பாற்றியது.

வங்கி

இப்படி, 1969-க்குப்பிறகு திவாலான 36 தனியார் வங்கிகளில் 33 வங்கிகளில் பொதுத்துறை வங்கிகளே கைகொடுத்து காப்பாற்றியிருக்கின்றன. இப்படி இருக்கும்போது, இந்திய அரசாங்கம் பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயம் ஆக்குவதால், அதன் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும், சேவைகள் நன்றாக இருக்கும் என சொல்லிக் கொண்டிருப்பது நியாயமில்லை.

நாடு முழுவதும் உள்ள 12 பொதுத்துறை வங்கிகளை ஐந்து வங்கிகளாக குறைக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதன் முதற்கட்ட நடவடிக்கையாக சில வங்கிகளில் இருக்கும் அரசு பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் வங்கி ஊழியர் சங்கம் தரப்பில் இருந்து குற்றம் சாட்டப்படுகிறது.

தற்போது சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருப்பதாக சொல்லப்படும் தனியார் வங்கிகளான ஆக்சிஸ், ஹெச்.டி.எஃப்.சி, ஐ.சி.ஐ.சி.ஐ பேங்குகள் அனைத்துமே பொதுத்துறையாக இருந்து தனியார்மயமாக மாற்றப்பட்ட வங்கிகள்தான். அதில் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் வீடியோகான் கடன் முறைகேடு வழக்கில், வீடியோகான் நிறுவனத்துக்கு 3,250 கோடி ரூபாய் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி கடன் வழங்கியதில் அந்த வங்கியின் சி.இ.ஓ சாந்தா கோச்சார் மீது மோசடிக் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.

பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயம் ஆக்கிவிட்டால் வங்கி செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும் என்று சொல்லும் மத்திய அரசாங்கம், இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறது? மேலும் பி.எம்.சி வங்கி மோசடியின் காரணமாக, அந்த வங்கி திவால் ஆன போது அந்த வங்கியில் பணம் போட்டு வைத்திருந்த வாடிக்கையாளர்களின் பணத்துக்கு உத்தரவாதம் இல்லாமல் போயிருக்கிறது. தனியார் வங்கிகளில் பணம் போட்டு வைப்பதில் இருக்கும் பாதுகாப்பற்ற தன்மையைப் போல, பொதுத்துறை வங்கிகளில் இல்லை.

அமெரிக்காவை உதாரணம் காட்டும் அரசு!

இன்ஷூரன்ஸ்

வங்கிகளைத் தனியார்மயம் ஆக்குவதில், அமெரிக்காவை உதாரணமாக காட்டுகிறார்கள். ஆனால், அங்குள்ள வங்கிகள் தங்களின் வாடிக்கையாளர்களின் பணத்திற்கு முறையான இன்ஷூரன்ஸ்களை எடுத்து வைத்திருக்கிறார்கள். இதற்கான பிரீமியத்தை வங்கிகள் பாதி, வாடிக்கையாளர்கள் பாதி என தொடர்ந்து கட்டிக் கொண்டே வருகிறார்கள். அதனால் அங்கு வங்கிகள் திவால் ஆனாலும், வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பாக இருக்கிறது.

Also Read: தகிக்கவைக்கும் தனியார்மயம்!

2008-2020-ம் ஆண்டு வரை அமெரிக்காவில் 512 தனியார் வங்கிகள் திவால் ஆகியிருக்கின்றன. ஆனால், இன்ஷூரன்ஸ் திட்டங்கள் மூலம் அனைத்து வாடிக்கையாளர்களின் பணமும் காப்பாற்றப்பட்டிருக்கிறது. இந்தியாவில் அப்படியான நிலையா இருக்கிறது? இங்கு ஒரு வங்கி திவால் ஆனால், அதிகபட்சமாக வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் இன்ஷூரன்ஸ் தொகை ரூ.5 லட்சம். இதையெல்லாம் அரசாங்கம் முதலில் முறைப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

கடன் வழங்குவதில் முன்னிலை!

தொழில் கடன், சுயதொழில் குழுக்களுக்கான கடன், கல்விக்கடன், விவசாயக்கடன் என மக்களுக்கான பெரும்பாலான கடன்களை வழங்குவது பொதுத்துறை வங்கிகள்தான். 2020-ம் ஆண்டின் மார்ச் மாத நிலவரப்படி, பொதுத்துறை நிறுவனங்கள் வழங்கியிருக்கும் மொத்த கடன் அளவு ரூ.63.71 லட்சம் கோடி. அதே காலகட்டத்தில், தனியார் வங்கிகள் வழங்கியிருக்கும் மொத்த கடன் தொகை ரூ.37.07 லட்சம் கோடி. அதே போல, பொதுத்துறை வங்கிகளில்தான் மக்கள் தங்களின் பணத்தை அதிகமாக இருப்பு வைக்கிறார்கள்.

Loan (Representational Image)

மார்ச் 2020-ம் ஆண்டின் மார்ச் மாத நிலவரப்படி, மக்கள் பொதுத்துறை வங்கிகளில் இருப்பு வைத்திருக்கும் தொகையின் மொத்த மதிப்பு ரூ.93.43 லட்சம் கோடி. அதே காலகட்டத்தில் தனியார் வங்கிகளில் மக்கள் இருப்பு வைத்துள்ள தொகையின் மொத்த மதிப்பு ரூ.40.40 லட்சம் கோடி. மேற்கண்ட அம்சங்களைப் பரிசீலிக்கும் போது, மக்களுக்கு சிறப்பான சேவையை வழங்குவதில் தனியார் வங்கிகளை விட, பொதுத்துறை வங்கிகளே சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

42கோடி ஜன்தன் கணக்குகள்!

சமூக நலனைக் கருத்தில் கொண்டு செயல்படுவதிலும் தனியார் வங்கிகளைவிட பொதுத்துறை வங்கிகளே சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஏனெனில் எளிய மக்களுக்கு உதவியாக ஜீரோ பேலன்ஸில் ஆரம்பிக்கப்பட்ட சுமார் 42 கோடி ஜன்தன் கணக்குகளில் 98% கணக்குகள் பொதுத்துறை வங்கிகளிலேயே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வெறும் 2% கணக்குகள் மட்டும்தான் தனியார் வங்கியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தனியார் வங்கிகள் அவர்களின் வளர்ச்சியை மட்டுமே அதிகம் யோசிக்கிறார்கள். அதனால்தான் ஜீரோ பேலன்ஸில் வங்கிக் கணக்குகளை ஆரம்பிப்பதில் அவர்கள் அதிகம் ஆர்வம் காட்டவில்லை" என்றார் தெளிவாக.

Bank (Representational Image)

Also Read: வங்கி சேமிப்புக் கணக்கில் அதிக தொகையை வைக்க வேண்டாம்..!

வங்கிக்கணக்கு அனைவருக்கும் இருக்க வேண்டியது அவசியமான இந்தக் காலகட்டத்தில், வங்கிச் சேவைகள் எளிதாக மக்களுக்கு போய் சேர வேண்டிய இந்தக் காலகட்டத்தில், இந்த இரண்டுக்கும் உத்தரவாதம் இல்லாத வங்கி தனியார்மயமாக்கல் திட்டத்தை அரசு கையிலெடுத்திருப்பது, சாதாரண மக்களுக்கு பின்னடைவைத்தான் ஏற்படுத்தும். ஆகையால், பொதுத்துறை வங்கிகளைப் பலப்படுத்துவதுதான் தற்போதிருக்கும் பிரச்னைகளுக்கு தீர்வாக இருக்குமே தவிர, தனியார்மயமாக்கல் தீர்வாகாது!.



source https://www.vikatan.com/business/finance/why-psu-banks-are-important-to-our-country-why-employees-opposing-its-privatisation

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக