Ad

புதன், 29 டிசம்பர், 2021

`இந்திய அளவில், அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்!’ - தேசிய அரசியலில் ஸ்டாலினின் திட்டம் என்ன?

டிசம்பர் 27-ம் தேதி சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியன் படத்திறப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, தேசியச் செயலாளர் டி.ராஜா, மாநிலச் செயலாளர் முத்தரசன், சி.பி.எம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, வி.சி.க தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதில் பேசிய ஸ்டாலின், ``இந்திய அளவில் யாருக்குப் பாடம் புகட்ட வேண்டுமோ அவர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டும்” என்று பா.ஜ.க மறைமுகமாகக் குறிப்பிட்டுப் பேசினார்.

தா.பாண்டியன் படத்திறப்பு விழாவில் தலைவர்கள்

மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி, ஏற்கெனவே 2024 நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து தேசிய அரசியலை முன்னெடுத்து வருகையில், தற்போது ஸ்டாலினையும் தேசிய அரசியல் நீரோடையில் நீந்தவைக்க பெரும் லாபி நடந்துவருகிறதாம். அதனை மேலும் மெய்ப்பிக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலினின் சமீபத்தியப் பேச்சுகள் அமைந்திருக்கிறது.

`ஸ்டாலினின் கணக்கு தான் என்ன?’ என்பது குறித்து தி.மு.க சீனியர் நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம். ``தேர்தல் சமயங்களில் தமிழகத்தை KEY STATE என்றழைப்பார்கள். ‘திருப்புமுனையை ஏற்படுத்தும் மாநிலம்’, ‘முக்கியமான மாநிலம்’ போன்ற பல அர்த்தங்கள் அதற்கு உள்ளன. வரலாற்றில் பல தேர்தல்களில் தமிழகம் முக்கியப் பங்காற்றி இருக்கிறது. தமிழகத் தலைவர்கள் தேசிய அரசியலில் ஜொலிக்கவும் செய்திருக்கிறார்கள். காமராஜர், பேரறிஞர் அண்ணா, காயிதேமில்லத், ஜெயலலிதா, கருணாநிதி என முன் உதாரணமாக தலைவர்கள் பலர் உள்ளனர். அந்த வரிசையில் ஸ்டாலினும் இடம்பெற வேண்டும் என்பது தி.மு.க-வின் அத்தனை உறுப்பினர்களின் விருப்பம்.

நல்லக்கண்ணுவுடன் ஸ்டாலின்

ஜெயலலிதா கூட 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய அளவில் செல்வதற்குத் தயாராக இருந்தார், ஆனால் மூன்றாவது அணி குழப்பத்தில் அது நிறைவேறவில்லை. எனினும், தமிழகத்தில் தனித்துப் போட்டியிட்டு 37 தொகுதிகளைப் பிடிக்கவைத்தார். மூன்றாவது அணி என்பதுதான் தேசிய அரசியலின் குழப்பம். பா.ஜ.க-வை எதிர்க்க காங்கிரஸுடன் கரம்கோர்க்க விருப்பமில்லாதவர்கள் மூன்றாவது அணி என்பதை உருவாக்குகிறார்கள். ஆனால், அதில் யார் பிரதமர் வேட்பாளர் போன்ற பிரச்னைகளால் அவ்வப்போது மூன்றாவது அணி எனும் அலை எழுந்து மீண்டும் அடங்கிவிடும்.

இந்தமுறை மம்தா பானர்ஜி மூன்றாவது அணிக்கான முன்னெடுப்பை எடுத்துள்ளார். பிரசாந்த் கிஷோர் மூலம் தேசிய அளவில் தலைவர்களை ஒருங்கிணைக்க முயற்சித்தார். இடையில் பி.கே-வுக்கும் மம்தாவுக்குமே பிரச்னை மூண்டது. பொதுவாகவே மூன்றாவது அணி என்பது ஆளும் கட்சிகளுக்குத்தான் பயனைத்தரும்.

2016 சட்டமன்றத் தேர்தலில் வைகோ, திருமா, கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து, தி.மு.க - அ.தி.மு.க-வுக்கு எதிராக ’மக்கள் நலக் கூட்டணி’ என்கிற மூன்றாவது அணியை அமைத்துப் போட்டியிட்டதில் அ.தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்தது. அந்த அணியை அமைப்பதில் மறைமுகப் பங்காற்றியதே ஜெயலலிதாதான் என்றுகூடப் பேசப்பட்டது.

மம்தா பானர்ஜி

இதே நிலைதான் மத்தியிலும் ஏற்படும் என்பதாலேயே ஒவ்வொரு தேர்தலின்போதும் மூன்றாவது அணி என்று பேசிவிட்டு, தேர்தல் நெருக்கத்தில் கலைத்துவிடுவார்கள். தற்போது ஒருங்கிணையும் கட்சிகள் கூட ஸ்திரமாக நிற்குமா என்று தெரியவில்லை. நின்றாலும் அது பா.ஜ.க-வுக்கே சாதகமாக அமையும். அதனால், மூன்றாவது அணியில் இணைவது என்பது ஸ்டாலினுக்கு விருப்பமில்லை.

ஸ்டாலினைச் சந்தித்த சந்திரசேகர ராவ்...

எனினும் தேசிய அரசியலில் ஈடுபட ஆசை உள்ளது. தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சென்னையில் ஸ்டாலினைப் பார்க்க வந்தபோதுகூட தேசிய அரசியலில் ஸ்டாலின் களமிறங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Also Read: டென்ஷனில் ஸ்டாலின் முதல் நூல்விட்ட ராஜேந்திர பாலாஜி வரை...

ஒன்று காங்கிரஸின் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தேசிய அளவில் பயணிக்க வேண்டும். இல்லை, கருணாநிதி பாணியில் பா.ஜ.க-வுடன் சேர்ந்து முக்கியப் பங்காற்ற வேண்டும். ஆனால், பா.ஜ.க-வுடன் சேர்ந்தால் தமிழகத்தில் கட்சி காணாமல் போய்விடும். தங்களுடன் கூட்டணி வைக்க வேண்டாம், குறைந்தபட்சம் காங்கிரஸைக் கழற்றிவிடுங்கள் என்றுதான் பா.ஜ.க கூறிவருகிறது. அதனால், மூன்றாவது அணியில் ஸ்டாலின் பங்கேற்பதை பா.ஜ.க வரவேற்கவே செய்யும்.

மம்தா பானர்ஜி, ஸ்டாலின்

மேலும், மூன்றாவது அணியில் மம்தாவுடன் ஒருபோதும் காலத்தைத் தள்ள முடியாது என்பதும் ஸ்டாலினுக்குத் தெரியும். அதனால், மூன்றாவது அணி என்பதில் ஸ்டாலினின் பங்களிப்பு இருக்காது. காங்கிரஸுடன் இருந்துகொண்டு பா.ஜ.க-வை எதிர்ப்பதுதான் சரியான முடிவாக இருக்கும் என்று ஸ்டாலின் நினைக்கிறார். மற்ற கட்சித் தலைவர்களிடமும் பிரதமர் வேட்பாளர் என்பதை தூரவைத்துவிட்டு, காங்கிரஸ் அணியில் ஒவ்வொரு மாநிலக் கட்சிகளும் இணைந்து கூட்டணி அமைத்தால்தான் அசுரபலம் கொண்ட பா.ஜ.க-வை வீழ்த்த முடியும் என்று பேசவும் இருக்கிறார். இதன் வெளிப்பாடுதான் சமீபத்திய ஸ்டாலினின் பேச்சுக்கள். தேர்தல் ரீதியாக மட்டுமே பா.ஜ.க-வை எதிர்க்கும் ஸ்டாலின், அரசியல் ரீதியாக மத்திய பா.ஜ.க அரசுடன் இனக்கமானப் போக்கையே கடைப்பிடித்துவருகிறார் என்பதையும் கவனிக்க வேண்டும்” என்று முடித்தார்.



source https://www.vikatan.com/news/politics/what-was-stalins-plan-in-nation-politics-and-2024-election

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக