Ad

ஞாயிறு, 26 டிசம்பர், 2021

வேலூர்: பொன்னையாற்றுப் பாலம் விரிசல் சீரமைப்பு! - மீண்டும் தொடங்கிய ரயில் சேவை

வேலூர் மாவட்டம், காட்பாடி அருகேயுள்ள திருவலம் - முகுந்தராயபுரம் ரயில் நிறுத்தங்களுக்கு இடைப்பட்ட பகுதியின் வழியாகப் பொன்னையாறுப் பாய்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே 1865-ம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலம் இருக்கிறது. 156 ஆண்டுகளைக் கடந்த நிலையிலும் பாலம் மிக உறுதியாக நிற்கிறது.

இந்த நிலையில், கடந்த மாதம் பெய்த கனமழையின் காரணமாக, பொன்னையாற்றில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. நவம்பர் 19-ம் தேதி 65 ஆயிரம் கன அடி தண்ணீர் புரண்டோடியது. இதன் காரணமாக, ரயில் பாலத்தின் 38, 39-வது தூண்களுக்கு இடைப்பட்ட வளைவுப் பகுதியில் விரிசல் ஏற்பட்டது. இந்த விரிசல், கடந்த 23-ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டு உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேம்பாலம் சீரமைப்புப் பணி

அதனைத் தொடர்ந்து, அன்று மாலை முதல்... ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால், அரக்கோணம், காட்பாடி மார்க்கமாக செல்லும் சில ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. ஒரு சில ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டுவருகின்றன. இதனால், பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். விரிசல் ஏற்பட்ட ரயில்வே மேம்பாலத்தை தொழில்நுட்ப வல்லுனர் குழுவினர் ஆய்வு செய்தனர். இதனையடுத்து, மூன்று நாள்கள் கடும் சிரமத்துக்கு இடையே சீரமைப்புப் பணிகள் இரவு, பகலாக முழுவீச்சில் நடந்தன.

பாலத்தின் தூண்கள் கீழே மண் அரிப்பைத் தடுக்கும் வகையில் கான்கிரீட் கலவைப் போட்டு பலப்படுத்தப்பட்டுள்ளன. 38, 39 தூண்களுக்கு கீழே இரும்பு காரிடார்களைக் கொண்டும் பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பணி நேற்று இரவு வரை நடைபெற்றது. அதன்பின் ரயில்வே பாலம் போக்குவரத்துக்குத் தயாரானது. சீரமைக்கப்பட்ட பகுதியில் பூஜைப் போடப்பட்ட பின், காட்பாடியிலிருந்து ரயில் என்ஜின் ஒன்று கொண்டு வரப்பட்டு, சோதனை ஓட்டம் நடத்தப்பட்டன.

சோதனை ஓட்டம்

இதில், எந்தவித அதிர்வும் ஏற்படாததால் பயணிகள் ரயில் விட முடிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சென்னையிலிருந்து திருவனந்தபுரம் நோக்கிச்சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு பொன்னையாற்று மேம்பாலம் வழியாக, மிகக் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டன. இன்று முதல், மேலும் சில ரயில்களும் இந்த பாதை வழியாக இயக்கப்படவிருக்கின்றன. அவ்வாறு இயக்கினாலும், பாலத்தின்மீது 10 கிலோ மீட்டர் வேகத்திலேயே ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



source https://www.vikatan.com/news/tamilnadu/vellore-reconstruction-of-ponnayaru-bridge-train-service-resumed

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக