Ad

வெள்ளி, 31 டிசம்பர், 2021

திருவெம்பாவை - 17: அன்பைத் தவிர வேறெதையும் எதிர்பார்க்காத நம் ஆதிசிவனைப் போற்றி வணங்குவோம்!

"செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்

எங்கும் இலாதோர் இன்பம் நம்பாலதாக்

கொங்கு உண் கருங்குழலி நந்தம்மை கோதாட்டி

இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்

செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை

அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை

நங்கள் பெருமானைப் பாடி நலம் திகழ்ந்

பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய்!"

ஈசன்

தேன் சிதறும் பூக்களைச் சூடிய கருங்கூந்தலைக் கொண்ட பெண்ணே, செந்தாமரைக் கண் கொண்ட திருமால், நான்முகன், மற்றும் தேவர்கள் எல்லாம் இணைந்தும் தர முடியாத பரவசத்தை; இன்பத்தை வழங்க இதோ நம் தேவாதிதேவனான ஈசன் தர வந்து கொண்டிருக்கிறான். வீதி உலா வந்து வீடுகள் தோறும் எழுந்தருள வந்து கொண்டிருக்கிறான். சிவந்த தாமரை போன்ற குஞ்சித பாதமாம் அவன் திருவடிகளால் நம்மை ஆட்கொள்ள சப்பரம் ஏறி வருகிறான். அழகியக் கண்களை கொண்டவனும், அடியார்களுக்கு விருப்பமான அமுதமானவனுமான நம் ஈசனை வணங்கி நலன்கள் பெற விரைந்து வா பெண்ணே. ஈசனை தரிசிக்க வரும் பெண்ணே, தாமரை மலர்கள் மலர்ந்து கிடக்கும் இந்த தடாகத்தில் நீராடி ஐந்தெழுத்தை ஓதியபடி அவனுக்குக்காகக் காத்திருப்போம். அன்புக்கு மயங்கும் அவன் நமக்கு சேவகம் செய்யவும் கூடியவன். அன்பைத் தவிர வேறெதையும் எதிர்பார்க்காத நம் தலைவனைக் கூடி வழிபடுவோம் வா தோழி.

அருமையான மார்கழி அதிகாலைப் பொழுது. இது தேவர்களுக்கு ஈசனை ஆராதிக்கும் வேளை கூட! இந்த நேரத்தில் இப்படி சோம்பல் கொண்டு உறங்குகிறாயே, நமக்காக நம் ஈசன் கிளம்பி வீதி உலா வந்து கொண்டிருக்கிறான் பார். நமக்கு சேவகம் செய்யவே விரைந்து வரும் நம் தலைவனை எதிர்கொண்டு வரவேற்பது தானே முறை. அதை விடுத்து தூக்கம் எனும் வலையில் சிக்கிக் கொண்டிருக்கலாமா! எத்தனை தேவர்கள் இணைந்தாலும் தரமுடியாத அற்புத பேரானந்தத்தைத் தரக் கூடியவன் நம் ஈசன். அவனை தரிசிக்க எழுந்து வா தோழி என்கிறது பாடல்.

மதுரையம்பதி சொக்கநாதன்

ஒரு பிரம்மனின் ஆயுளுக்குள் ஐந்து லட்சத்து நாற்பதினாயிரம் இந்திரர்கள் பிறந்து மறைந்து போகிறார்கள். திருமாலின் ஆயுளுக்குள் பல லட்சம் பிரம்மன் வாழ்ந்து மறைகிறார்கள். அதேபோல் ருத்ரனின் ஆயுளுக்கும் பல லட்சம் திருமால் மறைந்து போகிறார்கள். ருத்ரர்களும் வந்தும் மறைந்தும் போக சிவம் நிலைத்து சகலத்தையும் கவனித்து வருகிறது. என்றுமே அழிவில்லாத நம் தலைவன் தொண்டர்களின் சேவகனாக விளங்கி வருபவன். அவனுக்கு கால அளவுகள் இல்லவே இல்லை. இதையே அப்பர் சுவாமிகள்...

"நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்; ஆறு கோடி நாராயணர் அங்கனே; ஏறு கங்கை மணல் எண்ணில் இந்திரர்; ஈறிலாதவன் ஈசன் ஒருவனே!' என்று வியக்கிறார்.

என்றும் எங்கும் நிறைந்திருக்கும் சிவம் அன்புக்கு ஏங்கும் தன்மை கொண்டது. காலகாலமாய் தவம் இயற்றிய ஞானிகளுக்கு வராத சிவம், பல யாகங்கள், பூசைகள் செய்த ரிஷிகளுக்கு வராத தெய்வம், தமது அடியார்களுக்குத் தொண்டு செய்த எளிய மக்களை நோக்கி ஓடிவந்துள்ளது. 'உம்மால் ஆகக் கூடிய காரியம் ஒன்று உண்டு' என்று நாயன்மார்கள் பலரின் வீடு தேடி ஓடி வந்துள்ளது. அதுதான் சிவம்! எளிய வழி வந்த நம் ஆதிசிவம் எப்போதும் அன்பு கொண்டவர்களை ஆட்கொண்டு வந்தே உள்ளது. அதற்கு நல்ல உதாரணம் வந்தியம்மை எனும் பிட்டு விற்ற மூதாட்டியைச் சொல்லலாம்.

ஈசன்

மாணிக்கவாசகரை சுடுமணலில் மண்டியிடச் செய்து தலையில் கல்லைச் சுமக்கச் செய்த அரிமர்த்தன பாண்டியனின் அடாத செயலுக்கு ஈசன் கோபம் கொண்டான். வைகையைக் கரைபுரண்டோடச் செய்தான். மதுரை வெள்ளத்தில் மூழ்க, வீட்டுக்கு ஒருவர் வைகை வெள்ளத்தை அடைக்க வேண்டும் என பாண்டியன் அறிவித்தான். மாணிக்க வாசகரின் பெருமையை உலகறியச் செய்யவும், அரிமர்த்தனின் அறியாமையை உணர்த்தவும் மதுரைக்கு இறங்கி வந்த தெய்வம், நேராகச் சென்றது வந்தியம்மை வீட்டுக்குத்தான். ஏன் தெரியுமா! பிள்ளைப் பேறு இல்லாத அந்த பெருமாட்டி மதுரையம்பதி சொக்கநாதனையேப் பிள்ளையாகக் கருதி வழிபட்டு வந்தாள். அவளுக்கான கடனைத் தீர்க்கவும், அவளுக்கு சேவகம் செய்ய கருணை தெய்வம் ஓடிவந்தது.

அழகான இளைஞனாக வந்தியின் வாசலுக்கு வந்த சிவம், 'கூலி கொடுத்து ஆள் கொள்வாருண்டோ!' என்று கூவியது. எத்தனையோ செல்வர்கள் இருக்க, இந்த ஏழையைத் தேடி வந்திருக்கிறாயே அப்பா, மன்னனின் ஆணைப்படி வைகையை அடைக்க எனக்கு ஆள் வேண்டும்தான். ஆனால் கூலி தர என்னிடம் பொருள் ஏதும் இல்லையே' என்றாள் வந்தியம்மை. 'சரி வேறு என்னதான் தருவாய்!' என்றது சிவம். 'நான் இன்று விற்க இருக்கும் பிட்டில் கொஞ்சம் தருவேன் சம்மதமா!' என்றாள் கிழவி. 'ஆஹா நீ வேறு ஏதேனும் பொருள் கொடுத்து அதை நான் கொண்டு போய் உணவைச் சம்பாதிப்பதை விடவும் இது எளிது. நீ அதையேக் கொடு! என்றார் ஈசன்.

வந்தியம்மை

'அதிலும் ஒரு சிக்கல், முழு பிட்டை நான் விற்றுக் கொள்ள எடுத்துக் கொள்வேன், உதிர்ந்தவைகளையே உனக்குக் கொடுப்பேன்' என்றாள் கிழவி. 'பிட்டை உதிர்க்க வேண்டிய சிரமமும் எனக்கில்லை' அப்படியே கொடு என்றது சிவம். விளையாடல்களின் தலைவனான சிவம் அந்த கிழவியிடமும் தனது லீலையைத் தொடர்ந்தது. அன்று அவித்த அத்தனை பிட்டுக்களும் உடைந்தே வந்தது. 'இன்று ஈசன் விதித்தது பட்டினி தான் போலும் என்று எண்ணிய வந்தி, அத்தனை பிட்டுக்களையும் ஈசனிடம் அளித்து விட்டாள். அந்த அன்புக்கு உருகிய ஈசன், அவளையும் தன்னுள் இணைத்துக் கொண்டார். காலம்தோறும் அவளை மறவாதிருக்க மதுரையம்பதியில் 'பிட்டுக்கு மண் சுமந்த லீலை' என்ற விழாவை ஆவணி மூலத்திருவிழாவில் உருவாக்கினார். அவள் வாழ்ந்த வீடு இன்றும் 'வந்தியம்மை ஆலயமாகவும்' உள்ளது.

பிட்டுக்கு மண் சுமந்த லீலை

ஒரு வாய் பிட்டுக்கு முக்தியும் ஆராதனையும் அளித்த ஈசன் நம் எல்லோருக்கும் இனியவன், அவன் புகழைப் பாட தாமதிக்கலாமா! எல்லோரும் விரைந்து வாருங்கள்!

'வேத நாயகன் வேதியர் நாயகன்

மாதின் நாயகன் மாதவர் நாயகன்

ஆதி நாயக னாதிரை நாயகன்

பூத நாயகன் புண்ணியத் திருவடி பணிவோம்!



source https://www.vikatan.com/spiritual/gods/margazhi-utsavam-day-17-thiruvempavai-song-17-to-lord-siva-by-manickavasagar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக