Ad

வெள்ளி, 24 டிசம்பர், 2021

`நான் வளர்ந்தா மட்டும் போதுமா; என் சமூகம்?' - நாடோடி பழங்குடியினப் பெண் சுனிதாவின் ஆதங்கம்

சென்னையை அடுத்த ஆவடி பேருந்து நிலையம் பரபரப்பாகக் காட்சியளிக்க, அதற்கு நேர்மாறாக எந்த ஆரவாரமும் இன்றி தனித்தீவுபோல இருக்கிறது, அந்தப் பேருந்து நிலையத்தின் பின்புறமிருக்கும் நாடோடிப் பழங்குடியின மக்களின் குடியிருப்பு. பல தலைமுறைகளாகக் கல்வியின் வாசம் இல்லாததே, இந்தச் சமூக மக்களின் முன்னேற்றத்துக்குப் பெரும் தடையாக இருக்கிறது. போதாக்குறைக்கு, மூட நம்பிக்கைகள், அதிகார வர்க்கத்தின் தொந்தரவுகள், ஆதிக்க சாதியினரின் புறக்கணிப்புகளெல்லாம் இன்னும் இன்னும் பழைமைவாதத்துக்குள்ளாகவே இந்த மக்களைச் சுழலச் செய்கின்றன. `ஜெய் பீம்' படத்தின் கதை மாந்தர்களுக்கும், இந்தச் சமூக மக்களுக்கும் பெரிதாக வேறுபாடுகள் கிடையாது.

சுனிதா

குடியிருப்பு முழுக்கத் தேங்கி நிற்கும் மழைநீர், அண்மையில் சென்னையை முடக்கிப்போட்ட மழை பாதிப்பின் சுவடாகக் காட்சியளிக்க, அந்தச் சகதியில் விளையாடி மகிழ்கின்றனர் குழந்தைகள். அந்தக் குடியிருப்பிலுள்ள சுனிதாவின் குடும்பம் மட்டும், நாடோடிப் பழங்குடியின மக்களின் அடையாளங்களிலிருந்து முற்றிலுமாக மாறுபட்டிருக்கிறது. நடை, உடை, பாவனை என எல்லாவற்றிலும் சுனிதாவிடம் நாகரிக மாற்றத்தை விதைத்திருக்கிறது கல்வியும் அரசு வேலையும். நாடோடிப் பழங்குடியின சமூகத்திலிருந்து அரசுப் பணிக்குச் சென்ற இரண்டாவது நபர் என்ற பெருமையைப் பெற்றிருக்கும் சுனிதாவுக்கு, கல்வியால் தனக்கு கிடைத்த முன்னேற்றம், தன் ஒட்டுமொத்த சமூக மக்களிடமும் பரவ வேண்டும் என்பது பெருங்கனவு.

``படிப்பு நம் வாழ்க்கைக்கான அடிப்படை அனுபவங்களைக் கத்துக்கொடுத்தாலும், நல்ல வேலைதான் எல்லா வகையிலும் நம்ம லைஃப்ஸ்டைலை முழுமையா மாத்தும். என்னை மாதிரியே எங்க மக்களுக்கும் நல்ல டிரஸ் உடுத்தணும்னு ஆசை இருக்காதா? ஆனா, அவங்க செய்யுற ஊசி, பாசி விற்குற வேலைக்கு நாகரிகமான டிரஸ் உடுத்துறது சரிவராதுனு நினைக்கிறாங்க. இப்போ எல்லோருக்கும் படிப்பு இலவசமா கிடைக்குது. எங்க சமூகத்துல காலேஜ் படிக்குறவங்களோட எண்ணிக்கை அதிகரிச்சாலும், அவங்கள்ல யாருக்குமே நல்ல வேலை கிடைக்கிறதேயில்ல. அதனால, வேண்டா வெறுப்பா மறுபடியும் ஊசி, பாசி விற்கவே போறாங்க. 50 வருஷமா கல்விக்காகப் போராடின எங்க சமூகம், இனி நல்ல வேலைவாய்ப்புக்குப் போராடித்தான் ஆகணும்போல..." - பட்டுப்புடவையும் கணீர் பேச்சுமாக சுனிதாவின் தோற்றம் பிரகாசமும் ஆச்சர்யமும் கூட்டினாலும், நியாயமான ஆதங்கத்துடன் அவரின் உள்ளம் ஆற்றாமையில் குமுறுகிறது.

சுனிதா

தன் குடும்பத்தில் பள்ளிப் படிப்பை முடித்த முதல் நபரான சுனிதாதான், இந்தக் குடியிருப்பிலேயே முதல் ஆளாகக் கல்லூரிப் படிப்பையும் முடித்திருக்கிறார். அது அவ்வளவு எளிதில் சாத்தியமானதா என்று கேட்டால், கலங்கிய கண்களுடன் தனது பால்ய காலத்தை ரீவைண்டு செய்கிறார்.

``என் பெற்றோர் ஊசி, பாசி விக்கிற தொழில் செஞ்சதால, நாங்க நாடோடி வாழ்க்கைதான் வாழ்ந்தோம். நிரந்தர வீடு கிடையாது. மரத்தடியில குடில் அமைச்சுதான் வசிச்சோம். மழைக்காலங்கள்ல நாங்க பட்ட அவஸ்தையெல்லாம் கொஞ்ச நஞ்சமல்ல. ஒருகட்டத்துல ஆவடியிலிருக்குற இந்தப் பகுதியில நிரந்தரமா குடியேறினோம்.

சமூக மக்களை ஆதிக்க சாதியினர்ல பலரும் ரொம்பவே மட்டம் தட்டியும் கிண்டல் பண்ணியும் பேசுவாங்க. அதனால, சின்ன வயசுல வெளியுலகத்துடன் அதிகம் கலக்காமலேயே இருப்பேன். ஸ்கூல் முடிச்சுட்டு வந்ததும் அம்மாவுக்கு உதவியா ஊசி, பாசி வியாபாரம் செய்வேன். அப்பாவுக்கு நாங்க மொத்தம் எட்டு பிள்ளைகள். நான் கடைக்குட்டி. மத்த ஏழு பேரும் சரியா படிக்கல. நானாச்சும் படிச்சு கவர்ன்மென்ட் வேலைக்குப் போகணும்னு அவர் ஆசைப்பட்டார். பாகுபாடு வரக்கூடாதுனுதான் ஸ்கூல்ல யூனிஃபார்ம் கொடுக்கிறாங்க. ஆனா, சக மாணவர்கள் சிலர் என்னை அடிக்கடி `குருவிக்காரிச்சி'ன்னு கிண்டல் பண்ணுவாங்க. அதனால, இனம் புரியாத அந்தப் பருவத்தத்துல அடிக்கடி அழுது புலம்புவேன். ஒருகட்டத்துல படிப்புதான் நம்ம சமூகத்தை மேம்படுத்தும்னு அனுபவத்துல உணர்ந்தேன்.

Sunitha

நார்மல் காலேஜ் படிக்க முடியாததால, பத்தாவது முடிச்சதும் டிப்ளோமா காலேஜ் போனேன். அங்க கேலிகிண்டல் இன்னும் அதிகமாகவே, பொறுமையை இழந்து காலேஜ் போறதை நிறுத்திட்டேன். நான் நல்லா படிப்பேன். அதனால, எங்க காலேஜ் சேர்மன் ஐயா, `நீ காலேஜ் வராட்டியும் பரவால்ல. எக்ஸாம் எழுத மட்டுமாச்சும் வா'ன்னு சொல்லி ஊக்கம் கொடுத்தார். டிப்ளோமா முடிச்சதும் ரொம்பவே முயற்சி பண்ணி மின்சார வாரியத்துல அப்ரென்ட்டிஸ் வேலை வாங்கினேன். வேலை செஞ்சுகிட்டே, இன்ஜினீயரிங் படிச்சேன். எங்க சமூகத்துல பெண்கள் இரவு நேரத்துல வெளியிடங்களுக்கு அதிகம் போக மாட்டோம். எனக்குத் தெரிஞ்சு எங்க சமூகத்துலயே ஈவினிங் காலேஜ்ல படிச்ச முதல் நபர் நான்தான்னு நினைக்கிறேன். இன்ஜினீயரிங் படிப்பு முடிச்சதும் உதவிப் பொறியாளரா புரொமோஷன் கிடைச்சது" என்பவருக்கு, போராடி இந்த நிலைக்கு உயர்ந்த பிறகும்கூட புறக்கணிப்புகள் நின்றபாடில்லை.

``மூட நம்பிக்கைகள்தான் எங்க சமூக மக்களின் முன்னேற்றத் துக்குப் பெரும் தடையா இருக்கு. ஆரம்பகாலத்துல எங்க சமூகப் பெண்கள் செருப்பு போடக்கூடாதுங்கிற நிலை இன்னைக்கு மாறியிருக்கு. ஆனா, பெண்கள் மொட்டைமாடியில நடக்கக் கூடாதுனு கான்கிரீட் வீட்டைக் கட்ட மாட்டாங்க. பெண்களின் துணியை வீட்டுக்கு முன்னாடி காயப் போடக்கூடாது. பெண்கள் பூஜை செய்யக் கூடாது. இருட்டு கட்டுறத்துக்குள்ள பெண்கள் வீடு திரும்பிடணும். காலனிக்குள்ள பெண்கள் வண்டி ஓட்டக் கூடாதுனு எங்க சமூகப் பெண்களுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். கவர்ன்மென்ட் வேலைக்குப் போனாலும் இந்தக் கட்டுப்பாடுகள் எனக்கும் பொருந்தும். அதனாலதான், என் டூ-வீலரைத் தள்ளிட்டுப்போய் காலனிக்கு வெளியே போன பிறகுதான் ஓட்டுவேன்.

சுனிதா

பழைமையில ஊறிப்போன சமூக மக்களை அவ்வளவு சீக்கிரம் மாத்த முடியாட்டியும், தினமும் எங்க வீட்டுல என்னை பூஜை செய்ய அனுமதிப்பார் என் கணவர். மின்சார வாரியத்துல வேலை செய்யுறதால, மின் விநியோகத்துல ஏதாச்சும் சிக்கல்னா இரவுல, நடுராத்திரியிலகூட நான் ஆபீஸ் போக வேண்டியது இருக்கும். நம்ம கட்டுப்பாடுகளை மதிக்காம, `படிச்ச திமிர்ல நடந்துக்கிறா...'ன்னு என் காலனி மக்கள் என்னை திட்டுவாங்க. என் கணவர் வெளிவேலைக்குப் போறார். ஆபீஸ்லேருந்து நான் வீட்டுக்கு வர தாமதமானா, சமையல், குழந்தைகளைக் கவனிச்சுக்கிறதுனு எல்லா வேலைகளையும் அவரும் செய்வார். `பொண்டாட்டி தாசன்'ன்னு அவரையும் சேர்த்தே எங்க சமூக மக்கள் திட்டுவாங்க.

இப்போ நான் நல்லா சம்பாதிக்கிறேன். எக்காரணம் கொண்டும் என் ரெண்டு பிள்ளைகளும் ஊசி, பாசி விற்கிற தொழில் பக்கம் வந்திடக் கூடாதுனு அவங்க படிப்புக்கும் வளர்ச்சிக்கும் அதிக கவனம் கொடுக்கிறேன். இந்தக் காலனியைவிட்டு நாங்க பொதுச் சமூகத்தோடு இணைஞ்சு வாழலாம்தான். ஆனா, நாங்க வளர்ந்தா மட்டும் போதுமா? என்னைப் பார்த்தாச்சும் பலரும் நல்லா படிச்சு நல்ல வேலைக்குப் போகணும்னுதான், இங்கேயே குடியிருக்கோம். முடிஞ்சவரைக்கும் கல்வியின் அவசியத்தை எங்க மக்கள்கிட்ட வலியுறுத்திச் சொல்றேன். அதுக்கெல்லாம் ஓரளவுக்குப் பலன் கிடைச்சு, நிறைய இளைஞர்கள் காலேஜ் படிக்கிறாங்க. ஒரு தலைமுறையினர் முழுக்க படிச்சு முற்போக்கா யோசிக்க ஆரம்பிச்சுட்டா, எங்க நிலைமை மாற ஆரம்பிச்சுடும். அதனாலதான், எல்லாப் புறக்கணிப்புகளையும் சகிச்சுகிட்டு இந்தக் காலனியிலேயே வாழுறோம்" என்று கண்கள் கசிய கூறுபவர், தங்களின் நிஜ வாழ்க்கையைப் பிரதிபலித்த `ஜெய் பீம்' படம் ஏற்படுத்திய தாக்கத்தை விவரித்தார்.

குடும்பத்தினருடன் சுனிதா

``வெளியிடங்கள்ல ஏதாச்சும் குற்ற சம்பவங்கள் நடந்தா, அந்த இடத்திலிருக்கிற எங்க மக்களைக் குற்றவாளிகளா கணக்குக் காட்ட போலீஸார் பிடிச்சுட்டுப்போயிடுவாங்க. இந்த நிலைமை இப்போ ஓரளவுக்கு மாறியிருந்தாலும், முழுமையா மாறிடல. பஸ் ஸ்டாண்டு, ரயில்வே ஸ்டேஷன், தியேட்டர், கோயில், பொது இடங்கள்னு எங்க போனாலும் பெரும்பாலும் எங்களுக்கு அவமதிப்பே கிடைக்கும். அதனால, `ஜெய் பீம்' படத்தைப் பார்த்தப்போ எங்க வீட்டுல எல்லோரும் அழுதுட்டோம். பொதுச் சமூகத்தோடு பல காலமா கலக்காம, பலராலும் அதட்டி, மிரட்டி வஞ்சிக்கப்பட்ட சமூகம் எங்களோடது. அதனால, அதிகாரமா யாராச்சும் பேசினாலே எங்க சனங்க பயப்பட ஆரம்பிச்சுடுவோம்.

ஓரளவுக்கு விவரங்கள் புரிஞ்சும்கூட என்னாலயும் பயமில்லாம இயல்பா எல்லா நேரமும் இயங்க முடியாது. ஆபீஸ்ல எனக்குக் கீழ் நிலையில வேலை செய்றவங்களைக்கூட `சார்'னு சொல்லி நான் கூப்பிட்டாலும், சாதி காரணங்களால என்னை `மேடம்'னு சொல்ல பலரும் தயங்குவாங்க. அதையும் நான் கண்டும் காணாமதான் கடந்துபோறேன். என் பிள்ளைங்க படிக்கிற ஸ்கூல்ல பேரன்ட்ஸ் மீட்டிங்க்குப் போனா, என்னைப் பார்த்ததும் பலரும் சில அடி தூரம் பின்னாடி தள்ளிப்போவாங்க. எனக்கே இப்படின்னா, இன்னும் விழிப்புணர்வு கிடைக்காத எங்க சமூக மக்களோட நிலைமையை நினைச்சுப் பாருங்க... எங்க சமூக மக்களின் பய உணர்வை `ஜெய் பீம்' படத்துல அழுத்தமா காட்சிப்படுத்தியிருந்தாங்க.

சுனிதா

எங்களுக்கு வாய்ப்புகள் ரொம்ப அரிதாகவே கிடைக்கும். கவர்ன்மென்ட், தனியார் வேலையில பெரிய பொறுப்புகளுக்கு எங்க சமூக மக்களும் வரணும். எம்.பி.சி பிரிவுல இருக்கிற எங்க சமூகத்தை எஸ்.டி பிரிவுக்கு மறுபடியும் கவர்ன்மென்ட் மாத்திட்டா, கல்வி, வேலைவாய்ப்புல எங்களுக்குச் சிறப்பு இட ஒதுக்கீடு கிடைக்கும்.

இதனால, எங்க மக்கள்லயும் நிறைய பேர் பெரிய படிப்புகளைப் படிச்சு, நல்ல வேலைக்குப் போவாங்க. எங்க சமூகமும் படிப்படியா முன்னேறும்" என்று ஆதங்கத்துடன் கூறிய சுனிதா, தன் இருசக்கர வாகனத்தைத் தள்ளிக்கொண்டே இரவு நேரப் பணிக்காகக் காலனியிலிருந்து கிளம்பினார்.

சுனிதா மாறிவிட்டார்... இவரின் சமூகம் எப்போது மாறுமோ?



source https://www.vikatan.com/social-affairs/women/inspiring-narikurava-community-woman-sunitha-speaks-about-her-life-journey

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக