Ad

வியாழன், 16 டிசம்பர், 2021

புதுச்சேரி வைரல் ஆடியோ: `நான் ராஜா கிடையாது’ - நிவாரணம் குறித்த கேள்விக்கு முதல்வர் ரங்கசாமி பதில்?!

புதுச்சேரியில் பல்வேறு முயற்சிகளுக்கும் பேச்சுவார்த்தைகளுக்கும் பிறகு என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் தொற்றிக்கொண்ட பா.ஜ.க., 2021 சட்டப்பேரவை பொதுத்தேர்தலைச் சந்தித்தது. அதுவரை புதுச்சேரி தேர்தலில் வெற்றியைப் பார்த்திராத பா.ஜ.க., ரங்கசாமியிடமிருந்து 10 சீட்டுகளைப் பெற்று அவற்றில் ஆறு தொகுதிகளில் வெற்றிபெற்றது. அத்துடன் இரண்டு அமைச்சர்கள், சபாநாயகர் பதவியையும் பெற்றுக்கொண்டு ஆட்சியில் பங்கெடுத்துவருகிறது பா.ஜ.க. கூட்டணிக் கட்சியான பா.ஜ.க., மத்தியில் ஆட்சியில் இருப்பதால் இந்த ஆட்சியில் அனைத்தையும் எளிதாகச் செய்துவிடலாம் என்று கணக்கு போட்டிருந்தார் முதல்வர் ரங்கசாமி.

ஆடியோ

ஆனால் அவர் அறிவித்த பல திட்டங்களை புதுச்சேரியில் செயல்படுத்த முடியாத நிலை தொடர்கிறது. தலைமைச் செயலகத்திலிருந்து அனைத்துக் கோப்புகளும் திருப்பி அனுப்பப்படுகின்றன. தீபாவளிக்காக அறிவிக்கப்பட்ட 10 கிலோ அரிசி, இரண்டு கிலோ சர்க்கரையை தீபாவளி முடிந்த பிறகும் முழுமையாகக் கொடுக்க முடியவில்லை. இந்த நிலையைக் கண்டித்து பாஜக எம்.எல்.ஏ-க்களே போராட்டம் நடத்தும் நிலை ஏற்பட்டிருக்கிறது. பொதுப்பணித்துறை வவுச்சர், ஊழியர்களுக்கு சம்பள உயர்வு உள்ளிட்ட எதையும் இன்னும் நடைமுறைப்படுத்த முடியவில்லை. இதற்கிடையே சமீபத்தில் பெய்த கனமழையைத் தொடர்ந்து அனைத்துக் குடும்பங்களுக்கும் ரூ.5,000 மழை நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்தார் முதல்வர் ரங்கசாமி. ஆனால், அதைத் தற்போதுவரை நடைமுறைப்படுத்த முடியவில்லை.

இந்த நிலையில்தான் மழை நிவாரணம் குறித்த கேள்விக்கு முதல்வர் ரங்கசாமி பதிலளிப்பதாக ஆடியோ ஒன்று வைரலாகிவருகிறது. மிகச் சரியாக 31 விநாடிகள் ஓடும் அந்த ஆடியோவில், ``ஐயா… நான் காரைக்காலிலிருந்து பேசறேன். நல்லா இருக்கீங்களா ஐயா?’’ என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு “நான் நல்லா இருக்கேன் சொல்லுங்க” என்று பதிலளிக்கும் முதல்வர் ரங்கசாமியிடம், “நீங்கள் அறிவித்த மழை நிவாரணம் எப்போது கிடைக்கும் ஐயா?’’ என அவர் கேட்கிறார்.

Also Read: புதுச்சேரி: `2 கிலோ சர்க்கரை, 10 கிலோ அரிசி’ - தீபாவளிப் பரிசை அறிவித்தார் முதல்வர் ரங்கசாமி!

அதற்கு பதில் அளித்த முதல்வர் ரங்கசாமி, ``நான் மட்டும் ராஜாவா இருந்தால் பரவால்லப்பா. ஆனால் நான் ராஜா கிடையாது. மந்திரிகள்லாம் இருக்காங்க. எனக்கு மேலேயும், கீழேயும் நிறைய பேர் இருக்காங்க. இது பாண்டிச்சேரி. அப்படித்தான் இருக்கும்” என்று பதிலளித்தார். முதல்வரின் இந்த விரக்திப் பேச்சுதான் தற்போது வைரலாகிவருகிறது. இந்த ஆடியோ தொடர்பாக விளக்கம் கேட்க முதல்வர் ரங்கசாமியைத் தொடர்புகொண்டோம். ஆனால், நம் அழைப்பை அவர் ஏற்கவில்லை. இது தொடர்பாக முதல்வர் அலுவலகமோ அல்லது முதல்வரோ விளக்கமளிக்கும் நிலையில் அதைப் பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/an-audi-went-viral-in-the-name-of-puducherry-cm-rangasamy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக