Ad

வியாழன், 16 டிசம்பர், 2021

விழுப்புரம்: திருட்டு வாகனம்; போலீஸைக் கண்டதும் ஓட்டம்! - வழிப்பறித் திருடர்கள் சிக்கியது எப்படி?

விழுப்புரம் மாவட்டம், அவலூர்பேட்டை அருகேயுள்ள கொரட்டுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சம்பத் என்பவரும், தாயனூர்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த கார்த்தி, ஞானசேகர், சிவா ஆகியோரும் ஒன்றாக இணைந்து கட்டட வேலை செய்வதற்காக, கடந்த 3-ம் தேதி அதிகாலையில் இரண்டு இருசக்கர வாகனங்களில் சென்னை நோக்கிப் பயணப்பட்டுள்ளனர். திண்டிவனம் அருகேயுள்ள ஐய்யந்தோப்பு, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகே இந்த நான்கு இளைஞர்களும் சென்றுகொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் எதிரில் வந்த இரு மர்ம நபர்கள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் இவர்களை வழிமறித்து மிரட்டியுள்ளனர். இந்த இளைஞர்களிடமிருந்து பல்சர் பைக், செல்போன்கள், பணம் ஆகியவற்றைப் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதனால் அதிர்ந்துபோன அந்த நான்கு இளைஞர்களும் ரோஷணை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். ஆயுதங்களைப் பயன்படுத்தி வழிப்பறி நடைபெற்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்து குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடிவந்தனர் காவல்துறையினர்.

Also Read: நாமக்கல்: பெண் காவலரிடமே 3 பவுன் நகை பறிப்பு; தொடரும் வழிப்பறி! - அச்சத்தில் பொதுமக்கள்

காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், விழுப்புரம்

இந்நிலையில், நேற்று முன்தினம் (14.12.2021) அதே கல்லூரி சாலையில் ரோஷணை காவல் நிலைய காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள், போலீஸார் நிற்பதைக் கண்டவுடன் வாகனத்தை வேகமாகத் திருப்பியுள்ளனர். அந்த அவசரத்தில் இருவரும் கீழே தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில் ஒருவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இரு இளைஞர்களும் தப்பிச் செல்ல முயன்ற வாகனம், வழிப்பறி செய்யப்பட்டதாகப் புகார் அளிக்கப்பட்ட அதே வாகனமாக இருந்ததால் சந்தேகமடைந்த காவல்துறையினர் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது, ஐய்யந்தோப்பு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகே கடந்த 3-ம் தேதி வழிப்பறிச் சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர்.

பிடிபட்ட இருவரில், ஒருவர் சி.ஏ.மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த புகழ்வாணன் (23) என்பதும், மற்றொருவர் ஒரகடத்தை அடுத்துள்ள நாவலூர் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் (21) என்பதும் தெரியவந்துள்ளது. இவர்களிடம் மேலும் விசாரித்ததில்... திண்டிவனத்தை ஒட்டியுள்ள சந்தைமேடு, ஐய்யந்தோப்பு ஆகிய பகுதிகளில் பெண்களிடம் தாலிச் சரடுகளைப் பறித்துச் சென்றதை ஒப்புக்கொண்டனர். அந்த இரு இளைஞர்களிடமிருந்தும் 10 பவுன் தாலிச் சரடு, செல்போன், பைக் மற்றும் கத்தி ஆகியவற்றைக் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Also Read: சேலம் முதல் திண்டிவனம் வரை பின்தொடர்ந்து 30 லட்சம் வழிப்பறி; 6 பேரைக் கைதுசெய்த போலீஸ்!

இது தொடர்பாக காவல்துறையினரிடம் பேசியபோது, "புகழ்வாணன், பார்த்திபன் இருவரும் ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில், வெவ்வேறு துறையில் பயின்றுள்ளனர். அப்போது இருவரும் நண்பர்களாகப் பழகியுள்ளனர். புகழ்வாணன் ஏ.சி மெக்கானிக்காகவும், பார்த்திபன் பெயின்ட்டராகவும் வேலை செய்துவந்துள்ளனர். இருவருக்கும் கஞ்சா போன்ற போதை பழக்கங்கள் ஏற்பட்டுள்ளது.

நகை வழிப்பறி

இருவரிடமும் விசாரித்தபோது, ஏற்கெனவே இரண்டு வழக்குகளில் இவர்கள் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. கூடுவாஞ்சேரியில், 2020-ல் நடைபெற்ற கொலை வழக்கு ஒன்றும் இவர்களின் மீது இருக்கிறது. தனியாகச் செல்கிற நபர்களை நோட்டமிட்டு, அவர்களைப் பின்தொடர்ந்து சென்று, வழிப்பறி செய்துவந்துள்ளனர். இவர்களிடமிருந்து 10 பவுன் தாலிச் சரடு, செல்போன், பைக், கத்தி ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளோம். இருவர்மீதும் வழிப்பறி வழக்கு (பிரிவு 392) பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, விழுப்புரம் மாவட்ட சிறையில் அடைத்துள்ளோம்" என்றனர்.



source https://www.vikatan.com/news/crime/how-did-the-police-catch-two-thieves-who-were-involved-in-a-robbery-in-villupuram-district

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக