Ad

செவ்வாய், 28 டிசம்பர், 2021

தேனி திருக்குணக்கிரி: அழிவின் விளிம்பில் சமணர் குகை - நடவடிக்கை எடுக்குமா தொல்லியல்துறை?

சமண மதம் கிமு 3-ம் நூற்றாண்டில் இருந்து நிலைத்து விளங்குகிறது என்பார்கள். ஆனால், 24-வது தீர்த்தங்கரரான மகாவீரர் காலத்தில்தான் இச்சமயம் மிகவும் புகழ்பெற்று நாடெங்கும் பரவத் தொடங்கியது. தமிழகத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சமணர்கள் தங்கள் மதத்தைப் பரப்பியதோடு கல்வி, மருத்துவம், கலை ஆகியவற்றுக்கும் பெரும் தொண்டு செய்தனர்.

தமிழகத்தில் பாண்டியர்கள் ஆட்சிக்காலத்தில் சமணர்கள் செல்வாக்கோடு விளங்கினர்.

அப்போது அவர்கள் பல்வேறு கலைப் பொக்கிஷங்களை உருவாக்கினர். மலைப் படுகைகளில் தங்கி கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டனர். இவர்கள் தங்கிய இடங்களில் எல்லாம் புடைப்புச் சிற்பங்களையும், வட்டெழுத்தில் பல்வேறு தகவல்களையும் கல்வெட்டுகளாகப் பொறித்து வைத்துள்ளனர்.

கி.பி. 7-ம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தர் பாண்டிய மன்னன் கூன்பாண்டியனுக்கு ஏற்பட்ட நோயை நீக்கி, சமண மதத்தில் இருந்து சைவ மதத்துக்கு மாற்றினார். இதனைத் தொடர்ந்து சமண சமயம் புகழ் மங்கி சைவ சமயம் புகழ்பெற்றது.

திருக்குணக்கிரி
தமிழகத்தில் சமணர்கள் தங்கிப் பணி செய்த தலங்கள் அநேகம். அவற்றுள் கழுகுமலை, மதுரை சமணர் மலை, யானை மலை, கீழவளவு, சித்தன்ன வாசல், எண்ணாயிரம், கும்பகோணம், திருவண்ணாமலை - சீயமங்கலம் ஆகியவை மிக முக்கியமானவை.

இவ்விடங்களில் சமணர் படுகைகளும், கல்வெட்டுகளும் அதிகம் காணப்படுகின்றன. அந்த வகையில் தேனி மாவட்டம், உத்தம பாளையம் - கோம்பை சாலை திருக்குணக்கிரி மலையில் சமணர் சின்னங்கள் அதிகம் காணப்படுகின்றன. மேலும் இங்கு சிவலிங்கத்தைப் பார்வதிதேவி பூஜை செய்வது போலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. உத்தமபாளையம் திருக்குணக்கிரி மலை அக்காலத்தில் வெளிநாட்டு வணிகர்கள் தங்கும் இடமாக இருந்துள்ளது.

இந்த மலையின் பல இடங்களிலும் மூலிகை அரைக்கப் பயன்படுத்தப்பட்ட குழிகள், புடைப்புச் சிற்பங்கள், அணையா விளக்குத் தூண், வட்டெழுத்து கல்வெட்டுகள், சிற்ப வேலைப் பாடுகளுடன் கூடிய தூண்கள், வற்றாத சுனை எனப் பல்வேறு பொக்கிஷங்ளும் நிறைந்துள்ளன. உத்தம பாளையம் பகுதியில் உள்ள முனீஸ்வரன் கோயில் என்றால்தான் இப்பகுதி மக்களே அடையாளம் காட்டுகின்றனர்.

திருக்குணக்கிரி

இத்தனை சிறப்பினை உடைய இந்தப் பகுதியின் தற்போதைய நிலைமை மிகவும் பரிதாபமாக உள்ளது. இது தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட பகுதி என அறிவிக்கப்பட்டாலும் இப்பகுதியை பலர் மது அருந்தும் கூடமாகப் பயன்படுத்தப்படுகின்றனர். இதனால் இந்த இடத்தில் இருக்கும் சிலை உள்ளிட்ட பொக்கிஷங்கள் சேதப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தச் செயலால் நம் மண்ணின் வரலாறு கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைவுற்று வருகிறது. இது குறித்து அங்குள்ள பொதுமக்களிடம் பேசினோம்.

"இது தேனி மாவட்டத்தோட பொக்கிஷம்னு சொல்ற அளவுக்கு வரலாற்றுத் தரவுகள் நிறைந்த இடம். ஆனால், இந்த இடம் இப்போ சமூக விரோதிகளின் கூடாரமா மாறியிருக்கு. குப்பைகள் நிறைந்து காணப்படுது. சில சிலைகளும் சேதமாகியிருக்கு. இப்படியே போனா நம் வரும் தலைமுறைக்கு இந்த வரலாற்று ஆவணம் போய்ச் சேராது. அதனால் அரசாங்கமோ தொல்லியல் துறையோ உடனடியா நடவடிக்கை எடுத்து இந்த இடத்துக்கு வேலி போடணும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வந்து பார்வையிடும் அளவுக்கு மேம்படுத்தணும். அப்போதுதான் இந்த இடம் பாதுகாக்கப்படும்" என்று தெரிவிக்கிறார்கள்.

திருக்குணக்கிரி
தன் வரலாறு குறித்த தரவுகளை இழக்கும் சமூகம் தன் பண்பாடுகளை இழந்து அடிமைப்படும் என்பது மானுடவியல் ஆய்வாளர்களின் கருத்து. தமிழ் மண்ணில் நிலைத்து நிற்கும் கலாசாரங்களைப் பாதுகாக்க வேண்டிய கடைமை பொதுப்பணித்துறைக்கு உள்ளது.


source https://www.vikatan.com/spiritual/news/historical-jain-monuments-destroyed-in-tirukkunagiri

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக