Ad

திங்கள், 27 டிசம்பர், 2021

`கையூட்டு கொடுத்தால் மட்டுமே அனுமதிக்கிறார்கள்!’ - திண்டுக்கல் சிறை முன்பு கைதியின் மனைவி தர்ணா

மதுரையைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரிவன் மனைவி கவிதா. இவர், தனது கணவர் மீது பொய்வழக்கு பதிவு செய்து திண்டுக்கல் சிறையில் அடைத்துவிட்டதாகவும், அவரைப் பார்க்க சிறைக்கு வரும்போது சிறை ஜெயிலர் ராஜேந்திரன் பணம் கேட்பதாகவும் புகார் தெரிவித்து சிறையின் நுழைவுவாயிலில் அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டார்.

அப்போது அவர், ``திண்டுக்கல் ஜெயிலர் ராஜேந்திரன், கைதிகளை மனு போட்டு பார்க்கவரும் உறவினர்கள் கையூட்டு கொடுத்தால் மட்டுமே உள்ளே சென்று கைதிகளைப் பார்க்க அனுமதிக்கிறார். இன்று(நேற்று) சிறைக்குள் சென்று எனது கணவரைச் சந்தித்தப்போது, கைதிகளை ஜெயிலர், பணியில் உள்ள காவலர்கள் துன்புறுத்துவதாகவும் அதற்காக சிறையில் அனைத்து கைதிகளும் சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருப்பதாகவும் தெரிவித்தார்” என்றார்.

மேலும் கைதிகளுக்கு உறவினர்கள் கொடுக்கும் பொருள்கள் அனைத்தும் சரியாகச் சென்று சேர்வது இல்லை எனவும் குற்றஞ்சாட்டினார்.

திண்டுக்கல் சிறை

தொடர்ந்து, ஜெயிலர் ராஜேந்திரன் தனது வங்கிக் கணக்கு எண்ணைக் கொடுத்து (பாரத ஸ்டேட் வங்கி, சமயநல்லூர்) பணத்தைப் போடச் சொல்லும் ஆடியோவையும் போட்டுக் காட்டினார். அந்த எண்ணை வங்கி ஏடிஎம் மூலம் பார்த்தபோது ஜெயிலர் ராஜேந்திரன் வங்கிக் கணக்கு தான் என்பதும் உறுதி செய்யப்பட்டது. தனது கணவர் உள்ளிட்ட சிறைக் கைதிகள் கொடுமைப்படுத்தப்படுவதாகவும், மருத்துவக் குழுவினர் பரிசோதனை நடத்த வேண்டும் என்றும் அதுவரை தர்ணா போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தார்.

அப்போது திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய போலீஸார் கவிதாவை சமாதானம் செய்து போராட்டத்தைக் கைவிடச் செய்தனர். இதனைத் தொடர்ந்து சிறைத்துறை டிஐஜி பழனி உத்தரவின்பேரில், மதுரை மத்திய சிறைத்துறை கண்காணிப்பாளர் தமிழ்செல்வம் திண்டுக்கல் சிறைக்கு சென்று விசாரணை நடத்தினார். இதுகுறித்து அவரிடம் கேட்டோம். ``கைதி ரவிக்குமார் மனைவியின் புகார் தொடர்பாக விசாரணை செய்து வருகிறோம். தவறு இருக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.



source https://www.vikatan.com/news/protest/prisoners-wife-protests-at-dindigul-jail

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக