Ad

புதன், 29 டிசம்பர், 2021

"வாழ்தலின் அடிநாதம் அன்பு செய்தலும்... அன்பைப் பெறுதலும்", கவிஞர் அ.வெண்ணிலா பேட்டி!

தமிழ் கவிதைப் பரப்பில் கவிஞர் வெண்ணிலாவிற்கு சிறப்பான இடமுண்டு. பெண்களின் ஆழம் காண முடியாத உணர்வுகளை அவர் தனது கவிதைகளில் எளிதாகக் கொண்டு வந்து சேர்த்தார். ஒட்டுமொத்த முழுமைக்கான தீவிர தளத்தில் இயங்குகிறார். அடுத்து வரலாற்று புதினங்களில் தீவிர கவனம் செலுத்தினார். தொடங்கும் சென்னை புத்தகக் கண்காட்சியில் அவரது 'கண்ணம்மாக்கள் மரிப்பதில்லை' என்ற சிறுகதைத் தொகுப்பு வெளிவருகிறது. அதன் தொடர்பான உரையாடலில் கவிதை போக்கு பற்றியும் எண்ணங்கள் இடம்பெற்றது.

கண்ணம்மாக்கள் மரிப்பதில்லை

கவிதையிலிருந்து உரைநடைக்குச் சென்றுவிட்டீர்கள். கவிதைகளில் சொல்ல நினைத்ததை சொல்ல முடியாத போதாமையினால் உரைநடைக்குச் சென்றீர்களா?

கவிதை எழுதுவது பழச்சாறு பருகுவதுபோல். மனசுக்குள் விழும் அனுபவம், உணர்வெழுச்சிகள் எல்லாம் உள்வாங்கி, அவற்றின் மூலத்தைக் கண்டறிய முடியாமல், சாறு பிழிந்து தருவது. உரைநடையின் களமே வேறு. பழச்சாறின் பழம் விதையாக இருந்த நிலையில் தொடங்கி, விதை முளைவிட்டுச் செடியாகி, கிளைத்து, வளர்ந்து, காய்க்கும் பருவம் வந்து காய்த்துக் கனியும் வரையிலான காலத்தை எழுதிப் பார்ப்பது. குறிப்பாக நாவலுக்குச் சொல்கிறேன். நாவலென்பது விரிந்த களம். அதற்குள் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் எல்லாம் எழுதிப் பார்க்கலாம். மனித மனங்களின் நுட்பங்களையுணர்ந்து விதவிதமான கதை மாந்தர்களைப் படைப்பது புதிய அனுபவம். கவிதை எழுதுவதில் இருந்து உரைநடைக்கு நகர்வதை வளர்ச்சியென்றோ, கட்டாயம் நிகழக்கூடிய மாற்றமென்றோ சொல்ல முடியாது. உரைநடைக்கு நகர்ந்தது எனக்கு நிகழ்ந்தது. நிகழ்ந்ததை ஏற்றுக்கொண்டேன்.

வரலாற்று நாவல் எழுதுவது அதிகம் சவாலானது. ஒரு வரலாற்று நாவலை எப்படிக் கட்டமைத்து எழுதத் தொடங்குகிறீர்கள்?

வரலாற்று நாவலில் கூடுதலான சவால்கள் நிரம்பியிருக்கின்றன. ஒன்று பொருத்தமான தரவுகள் திரட்டுதல். இரண்டாவது எழுதும் காலத்தின் வாழ்வியல் சூழலையும் மொழியையும் சரியாகக் கையாளுதல். தமிழின் தொடக்கக்கால வரலாற்று நாவலாசிரியர்கள் வரலாற்றுத் தகவல்களுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தைவிட கற்பனைக்கும் விரிவான கதைக் களனுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். இன்று நிறையத் தரவுகள் கிடைக்கக்கூடிய சூழல் உருவாகியிருக்கிறது. தரவுகளோடு நவீன கதை சொல்லல் முறையும் இணைந்து வரலாற்று நாவல்களில் புதுப்போக்கு உருவாகியிருக்கிறது.

என்னுடைய நாவல்கள் சுவாரசியமான ஒரே ஒரு கேள்வியில் இருந்து உருவாகி, பின் கிளைக்கின்றன. பேராற்றின் ஜன்மஸ்தலம் ஆடு தாண்டும் சிறு ஊற்றாக இருப்பதைப்போல். ‘கங்கை கொண்ட சோழபுரம் ஏன் உருவானது?’ என்ற ஒற்றைக் கேள்விதான் கங்காபுரம். ‘ஏற்றுக்கொண்ட அரசியல் சித்தாந்தத்தை, தனிப்பட்ட வாழ்விலும், தன் குடும்பத்திலும் பின்பற்றுவது எத்தனை தூரம் சாத்தியம்?’ என்ற கேள்வியில் இருந்துதான் ‘சாலாம்புரி’ நாவலை எழுதினேன். ‘உரிமைகளைப் பறித்த ஐரோப்பிய ஆட்சியாளர்களுக்கு மத்தியில், மக்களின் நல்வாழ்வை பிரதானமாகக் கொண்ட நன்மனிதர்கள் இருந்திருப்பார்கள்தானே?’ என்ற கேள்வியில்தான் இப்போது ‘நீரதிகாரம்’ எழுதிக் கொண்டிருக்கிறேன்.

கவிஞர் அ.வெண்ணிலா

‘கண்ணம்மாக்கள் மரிப்பதில்லை’ என்ற சிறுகதை தொகுப்பின் சாராம்சம், செறிவைச் சொல்லுங்கள்.?

என்னுடைய நான்காவது சிறுகதைத் தொகுப்பிது. சிறுகதைக்குப் பொது சாராம்சம் இருக்க வேண்டியதில்லை. இந்தத் தொகுப்பில் வடமாவட்டங்களின் பிரதான தொழிலான நெசவைப் பின்புலமாகக் கொண்ட கதைகள் உள்ளன. நெசவில் பெண்களின் பாடுதான் பிரதானம். அவர்கள்தான் குடும்பத்தையும் தொழிலையும் தாங்கிப் பிடிக்கிறவர்கள். ஓய்வென்பதே அறியாத உழைப்பாளிகள். அவர்களின் வாழ்க்கையைப் பற்றிய கதைகள் மிகக் குறைவாகவே தமிழில் வெளிவந்துள்ளன.

வாழ்தலின் அடிநாதம் அன்பு. அன்பு செய்தலும் அன்பைப் பெறுதலும். இரண்டிலும் சிக்கல்கள் எழுந்தால் தனிநபர்கள் மீள்தல் கடினம். அன்பின் ரூபங்கள் மாயம் நிரம்பியவை. நண்பர்கள், தோழிகளுக்கிடையிலான அன்பில் வண்ணமும் மணமும் அடர்த்தியானவை. தந்தைக்கும் மகளுக்குமான அன்பு குறிஞ்சி மலர்போல் அபூர்வ நிறமும் தனித்தன்மையும் கொண்டவை. காதலன் காதலிக்கிடையிலான அன்பு, பெயர் சூட்டப்படாத புதுமையும் ஈர்ப்பும் கொண்டவை. நெருஞ்சியில் பூக்கும் மலர்களைப் போன்றது கணவன் மனைவிக்கு இடையிலான அன்பு. உறவுகளின்மேல் படிந்துள்ள புராதன அழுக்கின் சாயல்தான் நம் மனச்சாயலாக இருக்கிறது. யுகாந்திரமாகப் படிந்துள்ள அச்சாயலை மீறுவது ஒவ்வொருவருக்குமே பெரும் சவால்தான். இந்தச் சவாலை எதிர்கொள்ளும் பல தருணங்களைச் சிறுகதைகளாக்கி இருக்கிறேன். அன்பு தோற்பதும் இல்லை; வெல்வதும் இல்லை; சுவாசம்போல் உள்ளிருந்து க்ரியா சக்தியாக இருக்கிறது.

நீங்கள் கவிஞராக உருவானதன் பின்புலம், சிறுவயது அனுபவம் இருக்கிறதா?

வாசிப்பு என் குடும்பத்தின் இயல்பான சூழலாக இருந்தது. அப்பா திராவிட இயக்கத்தவராக இருந்ததில் வீட்டில் செய்தித்தாள்கள், வார இதழ்கள், படிக்கக்கூடிய வாய்ப்பு அமைந்தது. ஆறாம் வகுப்பில் இருந்து கிளை நூலகத்தில் உறுப்பினராகி, அப்பாவுடன் போட்டிப் போட்டுக்கொண்டு நூல்கள் படிக்கும் வழக்கம் நல்வாய்ப்பாக என் வாழ்வில் இருந்தது. வீட்டின் ஒரே பெண் என்ற தனிமையைப் புத்தகங்கள்தான் இடம் மாற்றின.

தீவிர வாசிப்பின் அடுத்த நிலைதான் எழுத நினைத்தல். அரசியல் பேசி வளர்ந்த சூழல் என்பதால் முதலில் அரசியல் கட்டுரைகள்தான் எழுதினேன். அரசியலைக் கவனித்தலும் அப்பாவுடன் சரிக்குச் சரியாக விவாதித்தலும் என்னை மற்றவர்களிடம் இருந்து மேலானவளாக நினைத்துக்கொள்ளும் மேதாவித்தனத்தைக் கொடுத்தது. தனித்துக் காட்டிக்கொள்ள வேண்டுமென்றால் அறிவுசார்ந்து இயங்க வேண்டுமென்ற புரிதல் பதின்பருவத்திற்குள்ளேயே கிடைத்தது பெரும் வரம்தான். சமூக முரண்பாடுகளைக் கடப்பதற்கும், வழக்கங்களை மீறுவதற்கும் அறிவுசார்ந்து இயங்குபவள் என்ற பிம்பம் தேவைப்பட்டதைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டேன். பெண்கள் கூட்டத்துடன் இருப்பதைவிட, ஊர் விஷயங்கள் பேசிக்கொண்டிருக்கும் ஆண்களால் நிறைந்த திண்ணை சபைகளே எனக்குப் பிடித்தமானவை.

கவிஞர் அ.வெண்ணிலா

அரசியல் கட்டுரைகளின் நீட்சியாகத்தான் எனக்குள் கவிதை எழுந்தது. அதுவரை புறத்தைப் பற்றிப் பேசியும் விவாதித்தும் வந்த எனக்கு, கவிதை அகவயமான பார்வையைக் கொடுத்தது. ‘நான்’ என்ற அகம் எவ்வாறு இயங்குகிறது, என்னவாக இருக்கிறது, பெண் என்பவளாகச் சமூகத்தின்முன்பு, குடும்பத்தின்முன்பு என்னென்ன முரண்பட்ட நெறிகளோடு இருக்கிறேன் என்ற புரிதல்களை நான் கவிதைகளின் வழி அடைந்தேன். கவிதை எழுதுதலை இலக்கியம் படைத்தல் என்பதைவிட, என் அகத்தேடலாக, என் அகத்தைப் புரிந்துகொள்ளும் முயற்சியாகப் பயிற்சியாக அமைத்துக்கொண்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். என் ஆன்மிகத் தேடல்தான் என் கவிதைகள். மொழி வழியாக என்னைப் பண்படுத்தும் தேடல்.

கவிதைகளின் எளிமைக்கு எப்படிக் காரியமாற்றுகிறீர்கள்?

எளிமையாக இருப்பதுதான் வலிமையானது. பாரதியின் வசன கவிதைகள் எனக்கு எப்போதுமே முன்னுதாரண கவிதைகள்.

‘இவ்வுலகம் ஒன்று

ஆண், பெண், மனிதர், தேவர், பாம்பு,

பறவை, காற்று, கடல், உயிர், இறப்பு – இவையனைத்தும் ஒன்றே’

ஒரு நிரலில் வரிசைப்படுத்திக்கொண்டு வரும் பாரதியின் இக்கவிதையை விரித்துப் பாருங்கள். தத்துவமும் இக்கவிதைக்குள் இருந்து விரிவதை உணரலாம்.

’நீ ஒளி, நீ சுடர், நீ விளக்கம், நீ காட்சி,

மின்னல், ரத்தினம், கனல், தீக்கொழுந்து. இவையெல்லாம் நினது நிகழ்ச்சி.

கண் நினது வீடு...’

பாரதியின் எளிமைக்குள் அலைபுரளும் ஆழத்தையே என் கவிதைகளுக்குமான முன்னுதாரணமாகக் கொள்கிறேன்.

‘இந்தத் தண்டவாளங்கள்

ஏன் இவ்வளவு அழகாக இருக்கின்றன

ரயில்முன் பாய்ந்துகொள்ளும் போது கூட?’ என கல்யாண்ஜியின் வியப்பு வாழ்வின் நிதர்சனத்தை நமக்குச் சொல்கிறதே?

’கவிதைகள்

சத்தம்

போடக்கூடாது’ என்று சொல்லும் விக்ரமாதித்தனின் வரிகள் எவ்வளவு பெரிய இலக்கியக் கோட்பாட்டை சில வார்த்தைகளில் சொல்லிப் போகின்றன?

‘தொட்டிச் செடியிலிருந்து

சொட்டிக் கொண்டிருக்கும்

நீர் சொல்கிறது

பரவ முடியாமல்

முடங்கியே கிடக்கும்

வேரின் சோகத்தை’ என்ற மு.முருகேஷின் கவிதை காலமாற்றத்தை எவ்வளவு இயல்பாகச் சொல்கிறது?

கவிஞர் அ.வெண்ணிலா

வெளியான உங்கள் படைப்புகள் சார்ந்து மறக்க முடியாத அனுபவம்?

ஆனந்த விகடனில் ‘ஒரு வகுப்பறையும் சில இளவரசிகளும்’ என்றொரு கவிதை வெளியானது. பள்ளிகளில் போதுமான கழிப்பறை வசதி இல்லாததால் பெண் குழந்தைகள் அனுபவிக்கும் துயரங்களைப் பேசும் நீள்கவிதை அது. அக்கவிதை விகடனில் வெளியான அடுத்த நாளே அக்கவிதையைப் படித்த அன்றைய திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் டாக்டர் மு.ராஜேந்திரன்,இஆப அவர்கள் எங்கள் பள்ளிக்கு எட்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் செலவில் பனிரெண்டு கழிப்பறைகள் கட்ட நிதி உதவி செய்தார்கள்.

விகடனில் வெளியான ‘வெளிய’ என்ற சிறுகதையும் கிராமங்களில் கழிப்பறை வசதியில்லாததால் பெண்கள் படும் பாட்டை பேசிய கதை. அந்தக் கதையைப் படித்த மென்பொறி பொறியாளர்கள் சேர்ந்து இரண்டு லட்சம் ரூபாய் செலவில், எங்கள் ஊருக்கு அருகிலேயே இருக்கும் இன்னொரு பள்ளிக்கு இரண்டு கழிப்பறைகள் கட்டித்தந்தார்கள். இந்தப் பணியைப் பத்திரிகையாளர் பாரதி செல்வா முன்னெடுத்துச் செய்தார்.

‘கங்காபுரம்’ நாவலைப் படித்துவிட்டு, நாவலில் வரும் கங்கை கொண்ட சோழபுரம் உள்ளிட்ட கோயில்களுக்குச் சென்று வரும் வாசகர்கள் இருக்கிறார்கள். அறியப்படாத, ஆனால் வரலாற்றுச் செழுமைமிக்க ஊர்களான தாதாபுரம், திருமுக்கூடல் போன்ற இடங்களையும் வார விடுமுறையில் சென்று பார்த்துவிட்டு வந்து, புகைப்படங்கள் அனுப்பும் வாசகர்கள் ஆச்சரியப்படுத்துகிறார்கள்.

எழுத்து இப்படியான ஆச்சரியங்களையும் சந்தோசங்களையும் தந்துகொண்டே இருக்கிறது.



source https://www.vikatan.com/arts/literature/poet-vennila-interview-about-her-new-book

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக