Ad

திங்கள், 20 டிசம்பர், 2021

திருச்சி கோயில்கள் - 26: இசையில் தேர்ச்சி பெற வைக்கும் ஏழைப் பிள்ளையார்... 7 ஸ்வரங்களும் தொழுத தலம்!

திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்

சகட சக்கரத் தாமரை நாயகன்

அகட சக்கர விண்மணி யாவுறை

விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்

- கந்த புராணம்

திருச்சி மாநகருக்கும் விநாயகப் பெருமானுக்கும் அநேக தொடர்புகள் உண்டு. அகத்தியர் அடக்கி வைத்திருந்த காவிரியை விடுவித்த காக வடிவப் பிள்ளையார், தனது அருள் வடிவை மீண்டும் எடுத்தது திருச்சி மாநகரில்தான் என்கிறது புராணம். விபீஷணன் கொண்டு சென்ற ஸ்ரீரங்கநாதர் திருவுருவத்தை ஸ்ரீரங்கத்தில் வைத்து அருளச் செய்ததும் விநாயகப் பெருமானே. இப்படி திருச்சியின் புராணங்கள் பலவற்றிலும் நீக்கமற நிறைந்தவர் விநாயகப்பெருமான். அதனால்தான் திருச்சி எங்கும் புகழ்பெற்ற விநாயகர் ஆலயங்கள் பல இருக்கின்றன. அதில் முக்கியமானது ஏழைப் பிள்ளையார் கோயில்.

ஏழாவது பிள்ளையார்

திருச்சிக்கு அடையாளமான மலைக்கோட்டையை கிரிவலம் வரும்போது, உச்சிப் பிள்ளையாரையும் சேர்த்து 12 விநாயகர் கோயில்களை தரிசிக்கலாம். இதில் ஏழாவதாகக் காட்சி தருபவரே ஏழாவது பிள்ளையார். இவரே நாளடைவில் மருவி ஏழைப் பிள்ளையார் என்றானார் என்ற ஒரு கருத்து திருச்சி மக்களிடம் உள்ளது. உண்மையாய் இருக்கலாம், நவநிதியும் அதிர்ஷ்ட ஐஸ்வர்யங்களும் அருளும் விநாயகப் பெருமான் எப்படி ஏழைப் பிள்ளையாராக இருக்க முடியும். ஏழு ஸ்வரங்களை இணைந்து இங்கு விநாயகப் பெருமானை வணங்கி அருள் பெற்றன என்றும் அதனால் ஏழிசை விநாயகர் என்ற திருநாமம் ஏழைப் பிள்ளையார் என்று வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

மலைக்கோட்டையின் சுற்றுப் பாதையில் தேரோடும் வடக்கு வீதியில் உள்ளது வடக்கு ஆண்டார் தெரு. இந்த தெருவில் நான்கு விநாயகர் கோயில்கள் உள்ளன. எல்லாமே தெற்கு நோக்கியுள்ள அதிர்ஷ்ட பிள்ளையார்கள் என்று போற்றப்படுகின்றன. முதலில் வடமேற்கு மூலையில் அரச மரத்தடியில் வீற்றிருக்கும் வரஸித்தி விநாயகர் அடுத்து ஆறாவதாக செல்வ விநாயகர், பிறகு ஏழாவதாக ஏழைப் பிள்ளையார் வீற்றிருக்கிறார். இவர் ஸப்தபுரீஸ்வரர் என்றும் போற்றப்படுகிறார். இந்த வீதியில் எட்டாவதாக வீற்றிருப்பவர் ஸ்ரீ நிர்தானந்த விநாயகர்.

ஏழிசைப் பிள்ளையார்

தாங்களே சிறந்தவர்கள் என்ற ஆணவத்தால் அறிவிழந்து சிவபூஜையில் அபசுரமாக ஒலித்த காரணத்தால் கலைமகளால் சாபம் பெற்றன ஏழு ஸ்வரங்களும். இதனால் ஊமையாகி விட்டன. சாபவிமோசனம் வேண்டி, ஈசனைத் துதிக்க, அவரும் 'பூலோகம் சென்று, தென் கயிலாயம் எனப்படும் திருச்சிராப்பள்ளி மலை மீது அருளும் உச்சிப் பிள்ளையாரை வழிபட்டு, அந்த மலையை வலம் வந்து, அந்த பாதையில் ஏழாவதாக எழுந்தருளி இருக்கும் விநாயகரை வழிபட்டால் உங்கள் சாபம் நீங்கும். மீண்டும் சப்தஸ்வரங்களை ஒலிக்கும் சக்தியைப் பெறுவீர்கள். அந்த ஆலயமும் உங்கள் நினைவாக ஏழிசைப் பிள்ளையார் என்ற பெயர் கொண்டு விளங்கும்' என்று அருளினார்.

உச்சிப் பிள்ளையார் ஆலயம்

அதேபோல் ஏழு ஸ்வரங்களும் இங்கு வந்து ஆதிமூலமான கணபதியை பிரதிஷ்டை செய்து, தொழுது சாப விமோசனம் பெற்றன என்று ஆலய புராணம் கூறுகிறது. இங்கு வேறெந்த சந்நிதியும் இல்லை. நாகர்கள் சிலைகள் மட்டும் சந்நிதிக்கு வெளியே உள்ளன. பிள்ளையார்தான் இங்கு மூலவர், உற்சவர் எல்லாமே. சின்னஞ்சிறு கோயில் தான் என்றாலும் மிக மிக சாந்நித்யம் கொண்ட கோயில் என்கிறார்கள் திருச்சி மாநகர மக்கள். குரல் வளம் சிறப்பாக, பேச்சுத் திறமை உண்டாக, செல்வச் செழிப்பு உண்டாக, குழந்தைகளுக்கு ஏற்படும் பேச்சு சம்பந்தமான குறைகள் தீர, தொண்டை சம்பந்தமான நோய்கள் நீங்க இங்குள்ள விநாயகரைப் பிரார்த்திக்கிறார்கள். அபிஷேகம் செய்து இந்த கணபதியை வேண்டினால், வேண்டியது கிட்டும் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கை. படிப்பில் கவனம் குறைந்த குழந்தைகளும், மூளை வளர்ச்சி குறைந்த குழந்தைகளும் இவரை வணங்கி பெரும் பலனை அடைந்திருக்கிறார்கள் என்கிறார்கள் இப்பகுதி மக்கள்.

Also Read: திருச்சி - ஊறும் வரலாறு - 23: சொல் புதிது - கவிஞர் திருலோக சீதாராம்!

திருச்சி மாநகரில் மாணவர்களின் செல்லப் பிள்ளையாராக விளங்கும் இந்த பெருமான், விபீஷணன் காலத்திலேயே எழுந்தருளியவர் என்றும் இல்லை ஸப்த ஸ்வரங்களும் இணைந்து பிரதிஷ்டை செய்தவர் என்றும் இரண்டு கருத்துக்கள் உள்ளன. ஏழைப் பிள்ளையார் தெற்கு திசை நோக்கி அருள்புரிவதால் இவரை வணங்குபவர்களுக்கு யம பயமோ, யம வாதனையோ இல்லை என்பது ஆன்றோர் கூற்று. திருச்சிராப்பள்ளி மலை மீது எழுந்தருளியிருக்கும் தந்தையான ஈசனையும் தாயான அம்பிகையையும் பார்த்த வண்ணம் இருப்பதால், இந்த கணபதியை வணங்கினால் குடும்ப ஒற்றுமையும் அமைதியும் நிலைத்திருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த கணபதியை தரிசித்தாலே மலை மீது ஏறி உச்சிப் பிள்ளையாரை தரிசித்த பலனும் கிட்டும் என்கிறார்கள்.

திருச்சி உச்சிப் பிள்ளையார்

இங்கு கூட்டமாக அமர்ந்து விநாயகர் துதிப் பாடல்களைப் பாடி வேண்டினால் கூடுதல் சிறப்பு என்கிறார்கள். இசைக்கு அருளிய கணபதி என்பதால் இவரை இசையால் துதிக்க வேண்டியவை நடக்கும் என்கிறார்கள். சங்கடஹர சதுர்த்தி நாள்களில் இவரை வேண்டிக்கொண்டு முழுத் தேங்காய்களின் குடுமிகளை கயிற்றால் கோத்து மாலையாக அணிவிப்பது வழக்கம். இப்படி மாலை அணிவித்தால் வேண்டுதல் பலிக்கும் என்பதும் நம்பிக்கை. ஏழைப் பிள்ளையார் எனும் இந்த ஏழாவது பிள்ளையார் ஆலய வாசலில் இருந்து பார்த்தால், பிரமாண்டமான திருச்சி உச்சிப் பிள்ளையார் ஆலய வடிவம் காட்சி தருகின்றது. ஆஹா, ஏழைப் பிள்ளையார் வாசலில் பணக்கார பிள்ளையார் தரிசனமா என்று வியந்து போகிறார்கள் பக்தர்கள். திருச்சி வரும் அன்பர்கள் கட்டாயம் காண வேண்டிய ஆலயங்களில் இதுவும் ஒன்று என்றே கூறலாம்.

செல்லும் வழி: திருச்சி சிந்தாமணி பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ தூரத்தில் வடக்கு ஆண்டார் வீதியில் உள்ளது ஆலயம்.


source https://www.vikatan.com/spiritual/gods/trichy-temples-26-the-glory-of-yezhai-pillaiyar-temple-in-vadakku-aandaar-street

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக