Ad

வெள்ளி, 24 டிசம்பர், 2021

83 - இது திரைப்படம் மட்டுமல்ல. நம் வாழ்க்கையின் ரீப்ளே பட்டன்!

இது மூவி ரிவ்யூ இல்லை.

எல்லோருக்கும் தெரிந்த கதையில் புதிதாய் என்ன சொல்லிவிட முடியும்? நிஜ உலகில் நடந்தவற்றை கேமராவின் நிழலுக்குள் அடைக்கும்போது கற்பனைக்கு எவ்வளவு இடம் தந்திட முடியும்? எதுவுமே சாத்தியமில்லை. ஆனாலும், பயோபிக் படங்கள் வெற்றி பெறுகின்றனவே! ரிச்சர்ட்ஸ் அடித்த கேட்சை கபில் தேவ் பிடிப்பதைப் பார்க்கையில்… இல்லை, ரன்வீர் சிங் பிடிப்பதைப் பார்க்கையில் கத்திக் கூச்சலிடத் தோன்றுகிறதே! லார்ட்ஸ் பால்கனியில் அவர் கோப்பை ஏந்தும் காட்சியைப் பார்க்கையில் ரோமங்கள் சிலிர்க்கிறதே, ரன்வீர் சிங்கைப் பார்க்கும்போதெல்லாம், அவரைக் கபில் தேவாகப் உருவகப்படுத்தும்போதெல்லாம் கண்ணிலிருந்து விடுபடும் கண்ணீர், உதடுகளிடம் சிறைபடுகிறதே!

83 - கபில் தேவ், ரன்வீர் சிங்
83 - வெறும் திரைப்படமோ பயோபிக்கோ இல்லை. அது வரலாற்றின் பதிவு மட்டும் இல்லை. அது வாழ்க்கை. நானோ நீங்களோ வாழ்ந்திடாத… ஆனால், கேட்டு, கொண்டாடி வளர்ந்த வாழ்க்கை!

இந்தப் படத்தின் இயக்குநர் கபீர் கானை நினைத்துப் பொறாமையாக இருக்கிறது. ஒரு அதி அற்புதமான கதையை, நூறு கோடிக்கும் மேற்பட்டவர்களுக்குச் சொல்லிடும் வாய்ப்பு எத்தனை பேருக்குக் கிடைத்துவிடும்! தனக்குக் கிடைத்த அந்த வாய்ப்பை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கிறார் அவர். அந்த உலகக் கோப்பைக் கதையை எப்படிச் சொல்லவேண்டுமோ, எப்படிச் சொன்னால் பார்வையாளர்களின் புருவங்களை உயர்த்த முடியுமோ அப்படிச் சொல்லியிருக்கிறார்.

83

கதை சொல்பவர்களைக் கவனித்திருக்கிறீர்களா? அவர்களின் கண்களைக் கவனித்திருக்கிறீர்களா? அந்த விழிகள், கேட்பவர்களின் கண்களையே பார்த்துக்கொண்டிருக்கும். ஒரு காட்சியை அவர்கள் விளக்கும்போது, நம் கண்களும் புருவங்களும் சுருங்கும் வரை காத்திருப்பார்கள். அப்போது நம் நெற்றியில் தெரியும் சுருக்கங்கள் அவர்களுக்கான சிக்னல். அவர்களின் குரல் பன்மடங்கு உயரும். கையும் காலும் காற்றில் நாட்டியமாடும். சட்டென மிரட்சியான ஒரு சம்பவம் அந்தக் கதையில் நிகழும். சுருங்கியிருந்த நம் கண்களும் புருவங்களும் ஒருசேர விரியும். உடலின் ரோமங்கள் அப்போது 90 டிகிரியை அடைந்திருக்கும்!

கதை சொல்லுதல் ஓர் அற்புத கலை. வருடங்கள் கடந்தாலும், அந்தக் கதையையும், கதை சொன்னவரையும் மறக்க மாட்டோம்.

பாகுபலியில் ராஜமௌலியும், KGF-ல் பிரஷாந்த் நீலும் கையாண்டது இந்த யுக்தியைத்தான். இரண்டு படங்களுக்கும் இருக்கும் ஒரு ஒற்றுமை, அதில் ஒரு கதை சொல்லி (Narrator) இருப்பார். அந்தக் கதாபாத்திரங்களை மிகச் சிறப்பாகக் கையாண்டு, கதாநாயகர்கள் மீதான ஆச்சர்யத்தை சரியான இடைவெளியில் நமக்குக் கடத்திக்கொண்டே இருந்திருப்பார்கள் இரண்டு இயக்குநர்களும். அமரேந்திர பாகுபலிக்கு கட்டப்பா, ராக்கி பாய்க்கு ஆனந்த் இளவழகன். தேவசேனை பற்றவைத்த நெருப்பு ஆடையைப் பஸ்பமாக்கிக்கொண்டிருக்கும்போது, புஜங்கள் புடைத்து உரத்த குரலில் அமரேந்திர பாகுபலியைப் பற்றி கட்டப்பா சொல்லும் காட்சியை நம்மால் மறந்துவிட முடியுமா! இல்லை, ஆனந்தன் கதாப்பாத்திரத்துக்கு டப் செய்த நிழல்கள் ரவியின் குரலைத்தான் மறந்துவிட முடியுமா! கதைகளை, அவற்றைச் சொன்னவர்களை மறந்துவிட முடியாது.

Kapil Dev

83 திரைப்படத்தில் கபீர் கான் அப்படி யாரையும் பயன்படுத்தவில்லையே. யாரும் அந்தக் கதையைச் சொல்லவில்லை. அவரே நேரே தானே அதைக் காட்சிப்படுத்தியிருக்கிறார். அப்படியிருக்கையில், எதற்காக இதைப் பற்றியெல்லாம் பேசவேண்டும்?

83

இந்தப் படத்தில் கதை சொல்லிகள் இல்லை. ஆனால், நம் எல்லோர் வாழ்க்கையிலும் கதை சொல்லிகள் இருந்திருக்கிறார்கள். இந்தக் கதையை நமக்குச் சொல்லியிருக்கிறார்கள். சொல்லிப் பூரிப்படைந்திருக்கிறார்கள். பேருவகை கண்டிருக்கிறார்கள். தங்கள் ஆச்சர்யத்தை நம் மீது கடத்தியிருக்கிறார்கள். கபீர் கான் - அந்த கதை சொல்லிகளின் பாணியில் இக்கதையைப் படைத்ததில்தான் என்னைப் பல இடங்களில் அழவைத்தார்.

என்னுடைய கதை சொல்லி, அப்பா! ராஜாக்களும், போர்வீரர்களும் இருந்த கதைகள் அவர் சொன்னதில்லை. காளைகளும் சிங்கங்களும் இருந்த கதைகள் சொன்னதில்லை. அவர் சொன்னதெல்லாம் ஒரேயொரு கதைதான். எத்தனை ஆயிரம் முறை அதைச் சொல்லியிருப்பார் தெரியாது. ஆனால், ஒவ்வொரு முறையும் அந்த ஆச்சர்யத்தை எனக்குள் கட்டவிழ்த்திருக்கிறார்.

Ranveer Singh in 83

அவர் சொன்ன கதை, ஒரு ராஜா எப்படி ராஜ்ஜியத்தை வென்றான் என்பதல்ல; ஒரு போர்வீரன் எப்படி ராஜா ஆனான் என்பது! ஒரு சிங்கம் எப்படி 4 காளைகளைக் கொன்றது என்பதல்ல; ஒரு காளை எப்படி 5 சிங்கங்களை வீழ்த்தியது என்பது! அவர் கதையில் ராஜா, காளை, சிங்கம் எல்லாமே ஒருவர்தான் - கபில்தேவ்!

அப்பாவைப் பொறுத்தவரை பழைய போட்டிகளைப் பார்க்கவோ, அவற்றைப் பற்றிப் படிக்கவோ தேவையில்லை. எந்தப் போட்டியைப் பார்த்தாலும், அவர் மனம் வெஸ்ட் இண்டீஸ் பக்கம் போய்விடும்.

83 - ரன்வீர் சிங், தீபிகா படுகோன்

அந்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் அருமை உணர்ந்தவர் அவர். அதனால்தான் அவர்களை வென்ற கதையை பல்லாயிரம் முறை என்னிடம் சொல்லி மகிழ்ந்திருக்கிறார். அசுர வேகத்தால் அச்சுறுத்திய அந்த 4 வேகப்பந்து அரக்கர்களை, எப்பேர்ப்பட்ட பௌலரையும் நிலைகுலையவைக்கும் அசுரன் ரிச்சர்ட்ஸை, இந்தியா எப்படி வீழ்த்தியது என்பதை, கபில் எப்படி வீழ்த்தினார் என்பதை என் கண்கள் மூடியிருக்கும்போது கூட சொல்லியிருக்கிறார்.

இறுதிப் போட்டியில் கபில் பிடித்த அந்த கேட்சை வர்ணிக்காத நாளில்லை. ’50 மீட்டர் பின்னாடியே ஓடிப் பிடிச்சாரு’ என்பார். பின்னாளில் அது 20 யார்டு என்று பேப்பரில் படித்து தெரிந்துகொள்ளும் வரை, அப்பா சொன்ன அந்த ஐ….ம்பது மீட்டர் தூரத்தை நம்பிக்கொண்டுதான் இருந்தேன். கதை சொல்லிகளின் ஆயுதமே, அளவற்ற ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் அந்த அதீத கற்பனை தானே!

Kapil Dev with the 1983 World Cup

இந்திய அணி இருந்த நிலையை, அவர்களின் ஆட்டிட்யூடை, அதை கபில் எப்படி மாற்றினார் என்பதை சொல்லிக்கொண்டே இருப்பார். ஒவ்வொரு முறையும் அந்த உலகக் கோப்பை பற்றி அவர் பேசப் பேச, வெஸ்ட் இண்டீஸ் அணியின் மீது நான் உருவாக்கி வைத்திருந்த மகத்தான பிம்பத்துக்கு பின், பன்மடங்கு பெரிதாக உருவெடுத்தது கபில்தேவின் பிம்பம். பல்வால்தேவன் சிலைக்கு மேலே எழுந்த பாகுபலியின் சிலைபோல்!

இப்போது கபீரின் கதைக்கு வருவோம். இந்தியா தவிர்த்து 7 அணிகள் இருந்தாலும், நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் இருந்தாலும், அந்தக் கதையில் இருந்தது 5 சிங்கங்கள்தான் - விவியன் ரிச்சர்ட்ஸ், மால்கம் மார்ஷல், ஆண்டி ராபர்ட்ஸ், மைக்கேல் ஹோல்டிங், ஜோயல் கார்னர். வேறு யாரைப் பற்றியும் பேசியிருக்கமாட்டார். இயான் போத்தம், ரிச்சர்ட் ஹாட்லி, டேவிட் கோவர், இம்ரான் கான் என பல்வேறு ஜாம்பவான்கள் இருப்பார்கள். யாரைப் பற்றியும் எந்தக் கதாப்பாத்திரமும் பேசாது. ஆனால், அந்த ஐவரைப் பற்றி படம் முழுக்க பேசிக்கொண்டேதான் இருப்பார்கள்.

83 Movie

வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் திரையில் காட்டப்படும் முதல் காட்சியில், அணியின் கேப்டன் கிளைவ் லாயிட் ஓரமாக நடந்து வருவார். சீவிங் கம் மென்றபடி ரிச்சர்ட்ஸ் தான் நடுவே நடந்துவருவார். அதுபோக, ஶ்ரீகாந்த் கதாப்பாத்திரம் தொடங்கி, பல்விந்தர் சாந்து வரை ஒவ்வொருவரும், ‘அது ரிச்சர்ட்ஸ்’ என்ற தொணியில்தான் பில்டப் கொடுத்துக்கொண்டிருப்பார்கள். கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். இந்தக் கதாப்பாத்திரங்கள் சொன்னதெல்லாம், என் அப்பா சொன்ன அதே வார்த்தைகள். ரோஜர் பின்னியின் வாயிலாக, அந்த 4 பௌலர்களுக்கும் ஒரு அறிமுகம் வைத்திருக்கும் காட்சியும் அப்படித்தான். எனக்கு ஒலித்ததெல்லாம் என் அப்பாவின் குரல். என் கதை சொல்லியின் குரல். அந்த நால்வர் மீது முன்பு எழுந்த ஆச்சர்யம் இப்போதும் எழுந்தது.

கபில் பற்றிய பில்ட் அப்களும் அப்படியே. ஆங்கில பத்திரிகையாளருக்கு ஶ்ரீகாந்த் கொடுக்கும் பதிலில் தெரிந்தது யார்? “மொத்தப் பேரும் ஜாலியா இருக்கலாம்னு வந்தோம், இந்தப் பைத்தியக்கார கேப்டன் மட்டும் நாங்க ஜெயிக்கணும்னு சொன்னான்” என்று ஜீவா சொல்லும்போது, உங்களுக்கு யார் குரல் ஒலித்தது? கபிலின் கதை சொன்ன உங்கள் அப்பாவின், மாமாவின், தாத்தாவின் குரல்கள்தானே?! இங்குதான், ஒரு சொட்டுக் கண்ணீரைக் கூடுதலாக சிந்த வைத்திருக்கிறது 83.

சரி, நாம் ஏன் நம் கதை சொல்லிகளை இன்னும் விரும்புகிறோம்? மனித உளவியல் அப்படித்தான்.

83 படத்தில் லார்ட்ஸ் பால்கனி

‘கடந்த காலத்தைக் கடந்து எதிர்காலத்தை நோக்கி நடக்கவேண்டும்’ என்பதுதான் உலகம் கூறும் பொதுவான அறிவுரை. பலரும் நம்மிடம் அதைச் சொல்லியிருப்பார்கள். நாமும் சிலரிடம் கூறியிருப்போம். ஆனால், மனிதர்களாகிய நம்மால் அப்படி இருந்துவிட முடிகிறதா! சிந்தனை சீராக இல்லாத போதெல்லாம் டைம் மெஷின் எடுத்துக்கொண்டு பின்னால் பயணிக்கிறோம். கடந்த காலம் கொடுத்த ஏதோவொரு அழகிய நினைவை அசைபோட்டு மனதைத் தேற்றிக்கொள்கிறோம். அங்கேயே இருந்துவிட நினைக்கிறோம். தாயின் மடியில், தந்தையின் மார்பில், காதலனின்/காதலியின் தோளில் சாய்ந்து இளைப்பாரத் துடிக்கிறோம். எதிர்காலம் கொடுக்கும் பயத்தைவிட, கடந்த காலம் தந்த ஆசுவாசத்தையே மனம் அதிகம் விரும்புகிறது. நினைவுகள் - எளிதில் உடைந்துபோகும் இலகிய இதயங்களுக்கான இன்குபேட்டர்.

83

இந்தக் கதை சொல்லிகள் நம்மை எடுத்துச் செல்வது அந்த நாள்களுக்குள்தான். கபிலின் கதை என்னை எடுத்துச் சென்றது, 1983-ம் ஆண்டுக்கு மட்டுமல்ல. அந்தக் கதையை அப்பா எனக்கு முதன் முதலாகச் சொன்ன 2002-ம் ஆண்டுக்கு. 2003, 2004, 2005 என ஒவ்வொரு நிறுத்தத்திலும், எங்கள் ஒவ்வொரு உரையாடலிலும் என்ன நிற்க வைத்து, ஆசுவாசப்படுத்தி, அழைத்து வந்தன அந்த நினைவுகள். மீண்டும் அந்த நாள்கள் திரும்பாதா என அழவும் வைத்தன. நான் வளர்ந்த வாழ்க்கையின் சில தருணங்களை நிழலாடவைத்தது 83!

இந்திய கிரிக்கெட்டின் தொடக்கம் அந்த உலகக் கோப்பை வெற்றி என்றால், என் கிரிக்கெட்டின் தொடக்கம் அப்பாதான். 83 - அந்த இரண்டுடையும் நினைத்து அழவைத்திருக்கிறது.

தேங்க்யூ கபில். தேங்க்யூ கபீர்.



source https://sports.vikatan.com/cricket/83-isnt-just-a-sports-movie-its-a-replay-button-for-our-life

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக