Ad

வியாழன், 16 டிசம்பர், 2021

கொளத்தூர்: மேம்பாலப் பணிக்காக இடித்துத் தள்ளப்பட்ட வீடுகள்; போராட்டத்தில் பகுதி மக்கள்!

சென்னை கொளத்தூர், அவ்வை நகர்ப் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. தினக்கூலிகள், அரசு ஊழியர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் இந்தப் பகுதியில் வசித்துவருகின்றனர். இவர்கள் அரசுக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்துவருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 10-ம் தேதி அவ்வை நகர்ப் பகுதி வந்த அரசு அதிகாரிகள் அவர்களிடம், ``இந்தப் பகுதியில் மேம்பாலம் வரவிருக்கிறது. நீங்கள் அரசுக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து வசித்துக்கொண்டிருக்கிறீர்கள்.

சுமார் 14 அடி அளவுக்கு அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள், கடைகள் எனக் கட்டியிருக்கிறீர்கள். அதனால், நீங்கள் இன்னும் ஏழு நாள்களில் இங்கிருந்து வெளியேறியே ஆக வேண்டும்" என்றதாகக் கூறப்படுகிறது.

அவ்வை நகர்

அரசு அதிகாரிகளின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அவ்வை நகர்ப் பகுதி மக்கள் மாற்று வசிப்பிடங்களுக்குச் செல்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவந்திருக்கின்றனர். இந்த நிலையில், ஏழு நாள்கள் கால அவகாசம் அளித்த அரசு அதிகாரிகள், 12-ம் தேதி அன்று திடீரெனத் தங்களை அங்கிருந்து வெளியேற்றி ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட சுமார் 10-க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகளை பொக்லைன் இயந்திரங்களைக்கொண்டு இடித்துத் தள்ளியதாக அந்தப் பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும், முன்னதாக கூறப்பட்ட 14 அடியைத் தாண்டி அரசு அதிகாரிகள் தங்கள் வசிப்பிடங்களை இடித்துச் சேதப்படுத்திவிட்டதால், குழந்தைகளை வைத்துக்கொண்டு எங்கே செல்வது எனத் தெரியாமல் தாங்கள் தவித்துக்கொண்டிருப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய நகர்ப்புற குடியிருப்பு நில உரிமை கூட்டமைப்பைச் சேர்ந்த செபஸ்டியன், `` இந்த சுற்றுவட்டாரத்தில் அவ்வை நகர்தான் முதலில் தோன்றிய குடியிருப்புப் பகுதி. அதன் பின்னரே அதைச் சுற்றியிருக்கும் கே.கே.நகர், குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகள் உருவாகின. இந்தப் பகுதியில் சுமார் 60 ஆண்டுகளாக வசித்துவரும் இந்த மக்களை அரசு திடீரென ஆக்கிரமிப்பாளர்கள் எனக் கூறி புறந்தள்ளி, அவர்களைத் தவிப்புக்குள்ளாக்குவது வேதனை அளிக்கிறது. முதலில், மேம்பாலம் கட்டுவதற்காகத்தான் இடிக்கிறோம் என்று கூறிய அதிகாரிகள், தற்போது அந்தக் குறிப்பிட்ட பகுதி நீர்நிலை என்பதால் ஆக்கிரமிப்புகளை அகற்றினோம் என்கிறார்கள். மேலும், அந்தப் பகுதியில் முழுமையாக மக்களை வெளியேற்றிக் கைப்பற்றப் பார்க்கிறார்கள். ஆனால், அந்தப் பகுதியில் நீர்நிலை இருந்ததற்கான அடையாளமே இல்லை" என்றார்.

அவ்வை நகர்

டிசம்பர் 12-ம் தேதி முதல் அவ்வை நகரில் தங்கள் வசிப்பிடங்கள் இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தப் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். நேற்று முன்தினம் போலீஸார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றும் முடியவில்லை.

இது குறித்து அந்தப் பகுதியின் மண்டல செயற் பொறியாளரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, ``அவ்வை நகரில் அந்த மக்கள் நீர்நிலைப் புறம்போக்கை ஆக்கிரமித்து வசித்துவந்தனர். அந்தப் பகுதியில் மேம்பாலம் வரவிருப்பதால், ஆக்கிரமிப்புகளை அகற்றினோம். பட்டா நிலம் கிடையாது என்பதால் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எங்களால் மாற்று இடம்கூட வழங்க முடியாது. தற்காலிக உதவிகளைச் செய்வதற்கு முயல்கிறோம்" என்றார்.

தொடர்ந்து அவரிடம், ஏழு நாள்கள் கால அவகாசம் வழங்கப்பட்டு, பின்னர் இரண்டு நாள்களிலேயே இடிக்கப்பட்டது குறித்துக் கேட்டபோது, மழுப்பலாகப் பேசிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டார்.

அவ்வை நகர்

சுமார் 15-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் வீடுகளை இழந்துவிட்டுப் பரிதவித்துக் கொண்டிருக்கின்றன. சில வீடுகளில் கழிப்பறைகள் மட்டும் ஆக்கிரமிப்பு என்று கூறி இடிக்கப்பட்டுவிட்டதால், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் பெரும் சிரமத்துக்கு ஆளாகியிருக்கின்றனர்.



source https://www.vikatan.com/news/tamilnadu/govt-officials-clears-encroachment-in-kolathur-area-people-are-in-continues-protest

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக