Ad

வியாழன், 16 டிசம்பர், 2021

திருவெம்பாவை - 2: வைராக்கிய பக்தி கொண்டு ஈசனுக்கே நேசம் ஆவோம், எழுந்து வா தோழி!

வைராக்கிய பக்திக்கு இவளுக்கு நிகரான பெண்ணொருத்தி இனியும் பிறக்கப் போவதில்லை என்று அறுதியிட்டு சைவ உலகம் சொல்லும். விளையாட்டாகக் கேட்டாலும் கூட, இவள் கேட்டதை இறைவன் மறுத்ததே இல்லை. இவள் மாங்கனி கேட்டாலும் கிடைத்தது! பேயுரு கேட்டாலும் கிடைத்தது!

"பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல் நாம்

பேசும்போது எப்போதும் இப்போதார் அமளிக்கே

நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்

சீசி இவையுஞ் சிலவோ விளையாடி

ஏசுமிடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்

கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்

தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்

ஈசனார்க்கு அன்பார் யாம் ஆரேலோர் எம்பாவாய்."

"உன் அழகுக்கு அழகு சேர்க்கும் அற்புத அணிகலன்களை அணிந்த பெண்ணே! இரவும் பகலும் பேசும்போதெல்லாம் 'ஜோதியே வடிவான நம் ஈசன் மீது நான் கொண்ட பாசம் சொல்ல முடியாத அளவுக்கு உள்ளது என்பாய். ஆனால் மகேசனை வணங்க வேண்டிய இந்த அற்புத வைகறையில் நீராட அழைத்தால் சோம்பிக் கிடக்கிறாய். நீ இந்த மலர் பஞ்சணை மீது வைத்த பாசத்தில் கொஞ்சமேனும் நியாயம் உண்டா!' என்று தோழியர் கேலி பேசினர். 'சீச்சி! இது என்ன பேச்சு! கொஞ்சம் கண்ணயர்ந்து போனதுக்கு இப்படியா கேலி பேசுவது? என்றாள் கண் விழித்த அந்த பெண். அவளுக்கு மறுவார்த்தையாக தோழியரும், 'மலரினும் மெல்லியத் திருவடிகளைக் காண தேவாதி தேவர்களும் முயற்சிக்கிறார்கள். இன்னமும் கிட்டவில்லை. ஆனால், ஈசனுக்கு நேசமான நம் மீது கருணை கொண்டு நம் வீதிக்கே வந்து தரிசனம் தர வந்து கொண்டிருக்கிறான் அந்த தில்லை நாயகன். சிவலோகத்தில் வாழ்ந்து, தில்லையில் நடனம் புரியும் நம் ஈசன் எத்தனை கருணையானவன். அவன் பாசத்தைப் புரிந்து கொண்டால், இப்படி நீ உறங்குவாயா பெண்ணே! வா, நேரத்தைக் கடத்தாமல் ஈசனைப் பாட எழுந்து வா பெண்ணே!"

புனிதவதி

சப்தரிஷிகள், தேவர்கள், அரம்பையர்கள், அசுரர்கள், தானவர்கள், தைத்தியர்கள், நாகர்கள், கருடர்கள், கின்னரர்கள், கிம்புருடர்கள், யட்சர்கள், வித்யாதரர்கள், விஞ்சையர், கந்தர்வர்கள், சித்தர்கள் சாரணர்கள், பூத கணங்கள், பிசாசர்கள் என 18 கணத்தவரும் வாழும் 18 லோகங்கள் உண்டு. இவர்கள் யாவரும் ஈசனை அடைவது என்பது அரிதானச் செயலாக உள்ளது. கடுமையான தவத்தையும், இடைவிடாத வேள்விகளையும் செய்தே இவர்கள் ஈசனைக் காண முடியும் என்பதே உண்மை.

ஆனால் ஆன்மாக்கள் மீது நேசம் கொண்ட நம் சிவனார், மனிதர்கள் மேல் பெரும் கருணை கொண்டு அவரே வீதி உலா வருவது பூலோகத்தில் மட்டுமே. அதிலும் மார்கழி அதிகாலையில் தம்மை வருத்திக்கொண்டு நமக்காக வீதி உலா வரும் தேவர்தேவனை நாம் எதிர்கொண்டு அழைத்து வணங்க வேண்டாமா! கண்டபோதே மோட்சத்தை அளிக்கும் அந்த குஞ்சித பாதத்தை நாம் பற்றிக்கொள்ள வேண்டாமா! அதிகாலை உறக்கம் மகிழ்வைத் தரலாம். எனினும் அது மாயை அல்லவா! எத்தனை உறங்கினாலும் உறக்கம் தொலைகிறதா என்றால் அதுவும் இல்லை. மீண்டும் மீண்டும் எழும் ஆசைகள் யாவும் ஞானத்துக்கு எதிரி என்பதை அறியாயோ!

ஈசன்

அர்த்தமற்ற ஆசைகளை அறுத்துக் கொள்வது என்பதே ஈசனை அடையும் வழிக்கு முதல் படி! அப்படி க்ஷணத்தில் அறுத்துக் கொண்டு ஈசனை நோக்கி ஓடியவள் காரைப் பேயார். செல்வச் சீமாட்டியாய் பிறந்து, வளர்ந்து, புக்ககம் புகுந்து சிறப்படைந்தவள் புனிதவதி. ஈசனின் பக்திக்கு இவளுக்கு நிகரான பெண்ணொருத்தி இனியும் பிறக்கப் போவதில்லை என்று அறுதியிட்டு சைவ உலகம் சொல்லும். விளையாட்டாகக் கேட்டாலும் கூட, இவள் கேட்டதை இறைவன் மறுத்ததே இல்லை. இவள் மாங்கனி கேட்டாலும் கிடைத்தது! பேயுரு கேட்டாலும் கிடைத்தது! வைராக்கிய பக்திக்கு இந்த பெருமாட்டியை விட வேறொருவரும் உண்டா.

கொண்ட கணவனே, தாயே என்று வணங்கினான். திலகவதிக்கு சகலமும் அறுந்துவிட்டதாகப் புரிய வந்தது. அழவில்லை, ஓலமிடவில்லை. தெளிவானாள், என்ன வேண்டும் என்று உணர்ந்து கொண்டாள். 'வேறு ஒருவரை தொல்லைக்கு உள்ளாக்கும் விதமான தனது இளமையும் அழகும் மறைந்து போகட்டும்! காண்பவர் விலகிச் செல்லும் விதமாக தசை அழிந்து எலும்பு துருத்தி பேயுரு கொள்ளட்டும்!' என்று வேண்டினாள், கிடைத்தது. இனி எவரோடும் எனக்கு பேச்சில்லை. எவரும் என்னிடமும் பேச வேண்டியதில்லை என்று சகலமும் அறுத்தாள். பாரத தேசம் எங்கும் தனியவளாகச் சுற்றினாள். கயிலை வரை தலையால் நடந்து சென்று ஈசனை நேசத்தால் கலங்கடித்தாள். 'வரும் இவள் நம்மைப் பேணும் அம்மை காண்; உமையே! மற்று இப்பெருமை சேர் வடிவம் வேண்டிப் பெற்றனள்' என்று சக்தியிடம் உற்சாகம் பொங்கக் கூறினான் ஈசன். பிறப்பிலா பெருமானான நம் ஈசன் 'அம்மையே' என்று என்பு உருக அழைத்ததன் காரணம், சைவப் பெருமாட்டி காரைப் பேயாரின் வைராக்கிய பக்தி அன்றோ!

திருவெம்பாவை

பேயாரைப் போல சகலமும் துறக்க வேண்டாம். ஒரு நாளில் சில நிமிடமாவது ஈசனுக்காக ஒதுக்குவது நல்லது. அது நம்மை நாமே உணர்ந்து கொள்ளும் தருணம். அதிலும் உடலுக்கும் உள்ளத்துக்கும் மகிழ்ச்சி தரும் இந்த மார்கழி அதிகாலையில் நீராடி, சிவாலயத்துக்குச் சென்று ஈசனை வழிபடுவதால் ஈசனுக்கு நேசமானவராக நாம் மாறுவோம் என்பது உறுதி. அன்பிலும் கருணையிலும் ஈசனுக்கு நிகரான வேறு ஒரு தெய்வமும் இல்லை. எதைக்கொடுக்க வேண்டும்; எப்போது கொடுக்க வேண்டும் என்ற தெளிவைக் கொண்ட நம் சிவம், நமக்காக எப்போதும் காத்திருக்கிறது. இந்த மார்கழி நாளில் சிவத்தைப் பற்றிக் கொள்வோம்.

மரணம் பிறப்பென் றிவையிரண்டின் மயக்கறுத்த கருணைக் கடலாம் கண்ணுதல் பெருமானைத் தொழுது ஏத்த துயர் யாவும் நீங்கும்! இது நிச்சயம்! சத்தியம்!


source https://www.vikatan.com/spiritual/gods/margazhi-utsavam-thiruvempavai-day-2-worship-lord-siva-for-a-peaceful-life

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக