இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாம் அலையின் தாக்கம் யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு மிக மோசமாக இருந்தது. தொற்று பாதிப்பு அதிகமாக இருந்ததற்கு டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவல் தான் காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். டெல்டா வகை கொரோனா வைரஸ் இந்தியா மட்டுமின்றி உலகின் 130 நாடுகளுக்கும் அதிகமாக பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இன்றளவும் ஒரு சில நாடுகளில் டெல்டா வைரஸ் பரவலால் பாதிப்பு இருந்துகொண்டு தான் இருக்கின்றது.
இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்னும் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு இந்தியா உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கின்றது. இந்தியாவைப் பொறுத்தவரை டெல்லி, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் 30-க்கும் அதிகமானோர் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் டெல்டா வகை கொரோனா வைரஸை விட மிக வேகமாகப் பரவக்கூடியது என்று உலக சுகாதார நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், ``இந்த வகை வைரஸ் கொரோனா தடுப்பூசியின் செயல்திறனைக் குறைக்கக் கூடியது” என்றும் கூறியிருக்கின்றது. மேலும், ``இந்த வகை வைரஸ் மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்தவில்லை என்றாலும், பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். தென் ஆப்பிரிக்காவில் கிடைக்கப்பட்டுள்ள தகவல்கள் அடிப்படையில் இந்த வைரஸ் ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு மீண்டும் ஏற்பட வாய்ப்புள்ளது. இது இறுதி முடிவு கிடையாது. இந்த வைரஸின் தன்மை குறித்துத் தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வருகிறது'' என்று கூறியுள்ளது.
ஒமைக்ரான் வகை வைரஸ் பரவல் காரணமாக நான்காம் அலை ஏற்பட்டுள்ளதாகத் தென் ஆப்பிரிக்கா அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இந்த வகை வைரஸ் பாதிப்பு குறித்து அந்த நாட்டில் உள்ள நெட்கேர் மருத்துவமனை, ``ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பாதிப்பில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களில் 90 சதவிகிதம் பேருக்கு ஆக்சிஜன் தெரபி சிகிச்சை தேவைப்படவில்லை. ஒமைக்ரான் பாதிப்பில் உள்ள சிலருக்கு மட்டுமே ஆக்சிஜன் செலுத்தப்படுகிறது" என்று தெரிவித்திருக்கிறது.
மேலும் ``சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களில் 75 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் தடுப்பூசி செலுத்தாதவர்கள் தான். உயிரிழந்தவர்களும் இணை நோய் உடையவர்களும், வயதானவர்களும் தான். ஒமைக்ரான் தொற்றின் பாதிப்பு குறைவாகவே உள்ளது. இருந்தாலும், இது ஆரம்ப நிலையே, பாதிப்பின் வீரியத்தைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்" என்று அந்த மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்திருக்கின்றது.
தற்போதைய நிலையில் இந்தியாவைப் பொறுத்தவரை நாளொன்றுக்குப் புதிதாகக் கிட்டத்தட்ட 7,500 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. மேலும், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் 30-க்கும் அதிகமானோருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் ஒமைக்ரான் வகை வைரஸ் பரவலைத் தடுக்க அம்மாநில அரசு புதிய கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் இவ்வகை வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் அண்டை மாநிலங்களில் உருமாறிய ஒமைக்ரான் வகை வைரஸ் தொற்று பரவும் சூழலில், தமிழக அரசு மேற்கொண்டுள்ள தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். ``மத்திய அரசின் வழிகாட்டுதல் படி மாநிலம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டுத் தொற்று இல்லாதது உறுதிசெய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள். மாநில எல்லைகளிலும் சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றார்.
மேலும், ``தமிழகத்தில் அனைத்து வகை மருத்துவ கட்டமைப்புகளும் தயார் நிலையில் உள்ளன. ஒருவேளை ஒமைக்ரான் வைரஸ் பரவல் ஏற்பட்டாலும் அதற்காகச் சிகிச்சை வழங்கச் சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறன. மாணவர்களின் நலனை உறுதிசெய்யப் பள்ளி, கல்லூரிகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு வருவதையடுத்து கடைகளிலும், பொது இடங்களிலும் பொதுமக்கள் கூட்டம் கூடாமல் இருப்பதைக் கண்காணிக்கவும், மக்கள் முகக்கவசங்களை அணிவதை உறுதிப்படுத்தவும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நோய்த்தடுப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது" எனக் கூறினார்.
Also Read: அச்சுறுத்தும் `ஒமைக்ரான்' - எதிர்கொள்ளத் தயாரா இந்தியாவும் தமிழகமும்..?
தொடர்ந்து பேசியவர், `` மாநிலம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளத் தமிழக முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக வெளியில் வரும்போது முகக்கவசங்களை அணியவேண்டும். சரியான தனிமனித இடைவெளிகளைப் பின்பற்ற வேண்டும். 18 வயது பூர்த்தியான அனைவருமே கண்டிப்பாக இரண்டு தவணை தடுப்பூசிகளையும் தவறாது செலுத்திக்கொள்ள வேண்டும். மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முடியும்" என்று பேசினார்.
உருமாறிய புதிய வகை ஒமைக்ரான் வைரஸைப் பொறுத்தவரை டெல்டா வகை வைரஸை விட அதிக வேகத்தில் பரவும் தன்மை கொண்டது என்று கூறப்படுகிறது. மேலும், இந்த வகை வைரஸால் சமூகப் பரவல் ஏற்படுமேயானால் பாதிப்பு அளவு டெல்டா வகை பாதிப்பை விட மிக அதிகமா இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இந்த புதிய வகை வைரஸ் கடந்த சில வாரங்களிலேயே 60-க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒமைக்ரான் வைரஸின் பரவும் தன்மை, தொற்று பாதிப்பு குறித்து பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தி வருகிறார்கள். தற்போதைய நிலையின் நம் கண்முன்னே இருக்கும் ஒரே தீர்வு முக கவசம் அணிவதும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பதும், தடுப்பூசி செலுத்திக்கொள்வது மட்டும் தான்.
நேற்று தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தும், ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்பாகவும் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுப்பட்டார் முதல்வர் ஸ்டாலின். அதன் பின்னர் வெளியிடப்பட்ட புதிய அறிவிப்பில், `` தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள கொரோனா நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகள் டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சமுதாய, அரசியல், கலா சார கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையில் உள்ள தடை தொடரும்.
கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் டிசம்பர் 31, ஜனவரி 1 ஆகிய நாள்களில் அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
source https://www.vikatan.com/government-and-politics/healthy/omicron-variant-in-karnataka-andhra-pradesh-kerala-what-is-tn-government-plan-to-face-it
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக