Ad

ஞாயிறு, 26 டிசம்பர், 2021

திண்டுக்கல்: பன்றிகளை பிடித்துக் கொடுத்தால் சன்மானம்! - ஊராட்சி தீர்மானத்துக்கு என்ன காரணம்?!

பொதுவாக தெரு நாய்கள், எலிகளால் குடியிருப்புவாசிகள் அவதி என்ற செய்தியைக் கேள்விபட்டிருப்போம். சில மாநகராட்சி, நகராட்சிகளில் எருமை, பசுமாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் சாலைகளில் சுற்றித்திரிவதால் போக்குவரத்து பாதிப்பு என்ற செய்தியையும் அறிந்திருப்போம்.

ஆனால் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே அடியனூத்து ஊராட்சியில் பன்றிகள் அட்டகாசம் செய்கின்றன என்பதையறிந்து வியப்படைந்தோம். மேலும் அந்த ஊராட்சியில் இரு தினங்களுக்கு முன்பு சிறப்புக் கூட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. அதில் வீடுகளில் புகுந்து அட்டகாசம் செய்யும் பன்றிகளை பிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.100 முதல் ரூ.200 வரை வழங்கப்படும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது அடியனூத்தில் பன்றிகள் அட்டகாசத்தின் தீவிரத்தை உணர்த்துகிறது.

சன்மானம்

இதுகுறித்த உண்மைத் தன்மையை அறிவதற்காக அடியனூத்து ஊராட்சி செயலர் ஜான் போஸ்கோ பிரகாசிடம் பேசினோம். ``அடியனூத்தில் பலரும் பன்றி வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் வளர்க்கும் பன்றிகளை குறிப்பிட்ட இடத்தில் செட் போட்டு அடைத்து வளர்க்காமல் வீதியில் விட்டுவிடுகின்றனர். இதனால் சுமார் 500 பன்றிகள் தெருவில் அமைக்கப்பட்ட சாக்கடைகளிலும், சாலையோரங்களில் தேங்கியிருக்கும் கழிவுகளிலும் புரண்டுவிட்டு, குடியிருப்புகளில் புகுந்து அட்டகாசம் செய்யத் தொடங்கிவிட்டன. ஒரு வீட்டின் சமையல் அறை வரைக்கும் கூடச் செல்லும் அளவுக்கு பன்றிகளின் தொந்தரவு இருந்து வந்தது.

இதன்காரணமாக பன்றி வளர்க்கும் தொழிலில் ஈடுபடுவோரை பலமுறை அழைத்து கூட்டம் நடத்தினோம். அவர்களிடம் பன்றிகளை முறையாக வளர்க்கும் படியாகவும் அறிவுறுத்தினோம். இருப்பினும் அவர்கள் அதைப் பின்பற்றுவதாக இல்லை. ஊராட்சியில் சுகாதாரக் கேடு ஏற்படாமல் இருக்க ஒத்துழைப்பு வழங்க மறுக்கும் அவர்களால் ஊராட்சி நிர்வாகத்தின் உத்தரவுகளையும் மதிப்பதில்லை. இதனால் வெளிமாவட்டங்களில் இருந்து தெருக்களில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்க ஆட்களை வரவழைத்திருந்தோம். ஆனால் வந்திருந்தவர்களிடம் உள்ளூரில் பன்றி வளர்ப்போர் சண்டையிட்டு விரட்டினர். கொடைரோடு பகுதியிலும் இதேபோல நடந்துள்ளது.

கூட்டம்

பன்றிகள் தொந்தரவு குறித்து ஜீவாநகர், பொன்னகரம், காவேரிநகர், இந்திராநகர் முத்தமிழ்நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து தொடர்ச்சியாக புகார்கள் வந்தன. இதனால் இருதினங்களுக்கு முன்பு ஊராட்சியின் சிறப்புக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்தோம். ஊராட்சித் தலைவர் ஜீவானந்தம், துணைத்தலைவர் ஜெயராமன் உள்ளிட்டோர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தெருக்களில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து கொடுப்போருக்கு 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை வழங்கப்படும் எனச் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றினோம்.

பன்றி பிடிப்பதற்கு வெளியாட்கள் வந்தால் பிரச்னை எழக்கூடும் என்பதால், உள்ளூரில் உள்ளவர்களே பிடித்துக் கொடுத்தால் பிரச்னை எழாது என்ற நோக்கத்திலேயே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் பன்றி பிடிப்பவர்கள் பன்றிகளை பிடிக்காமலே கணக்கு காட்டி பணம் பெற்றுச் செல்கின்றனர். எனவே பெரிய பன்றி என்றால் 200 ரூபாயும், சிறிய பன்றிகள் என்றால் 100 ரூபாயும் வழங்கப்படும். பிடிபடும் பன்றிகள் அனைத்தும் சிறுமலைப் பகுதிகளில் கொண்டு சென்றுவிட ஏற்பாடு செய்யப்படும் எனவும் தீர்மானத்தில் குறிப்பிட்டிருக்கிறோம். பன்றி பிரச்னை தீர்ப்பதற்காக பன்றி ஒழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு அமைத்துள்ளோம். ஒரு குழுவில் 20 என மொத்தம் 7 குழுக்கள் அமைத்துள்ளோம்” என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/money-for-catching-pig-what-was-happening-in-dindigul

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக