Ad

திங்கள், 20 டிசம்பர், 2021

``வேதா நிலையம் விவகாரத்தில் நாங்கள் பயந்தமாதிரியே நடந்துவிட்டது..!" - சொல்கிறார் சி.வி.சண்முகம்

பால்கனியில் மகிழ்ச்சிபொங்க நின்று ஜெ.தீபாவும் அவர் கணவரும் போட்டோவுக்கு போஸ்கொடுத்த அடுத்த சில தினங்களிலேயே, 'வேதா நிலையத்தை, நினைவில்லமாக அறிவிக்கக்கோரி' மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்து அதிர்ச்சி கொடுத்திருக்கிறது அ.தி.மு.க வட்டாரம்!

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு, ஜெ. வாழ்ந்த வேதா நிலையத்தை 'நினைவில்லமாக' மாற்றி அறிவித்தது. அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, அவர் சகோதரர் தீபக் ஆகியோர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அதில், 'எங்கள் பாட்டி சந்தியா பெயரில் வாங்கப்பட்ட வேதா நிலையம் குடும்ப வாரிசு உரிமை அடிப்படையில், எங்களையேச் சேரும். ஆனால், தமிழக அரசு, எங்களை கலந்தாலோசிக்காமலேயே வேதா நிலையத்தை 'நினைவில்லமாக' அறிவித்துவிட்டது. இந்த அறிவிப்பைத் தடை செய்து, எங்கள் குடும்பச் சொத்தை எங்களிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும்' என்று கோரியிருந்தனர்.

எடப்பாடி பழனிசாமி - சசிகலா - ஓ.பன்னீர்செல்வம்

இதற்கிடையே, வேதா நிலையத்தை, 'நினைவில்லமாக' மாற்றியமைத்து, அறிவிப்புப் பலகையும் அமைத்தது அன்றைய தமிழக அரசு. இதன் பின்னணியில், 'ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான சசிகலா, சிறைத் தண்டனை முடிந்து தமிழகம் திரும்பினால், வேதா நிலையத்தைக் கைப்பற்றி தன்னுடைய அரசியல் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொள்வார். அது அ.தி.மு.க தலைமைப் பொறுப்பிலிருந்துவரும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு பலத்த அரசியல் போட்டியை உருவாக்கிவிடும். எனவே, வேதா நிலையத்தை, பொதுமக்களின் பார்வைக்காக நினைவில்லமாக உருமாற்றி பாதுகாத்திட முனைகிறது அ.தி.மு.க அரசு' என்றொரு பேச்சு, அன்றைய அரசியல் அரங்கில் அனலடித்துக்கொண்டிருந்தது.

சசிகலா விடுதலை, 2021 சட்டமன்றத் தேர்தல் என அடுத்தடுத்த அரசியல் திருப்பங்களில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் எதிர்க்கட்சித் தலைவர்களாகிவிட, அ.தி.மு.க-வைக் கைப்பற்றும் முனைப்பில் சசிகலாவும் ஆர்வம் காட்டிவந்தார். இந்த நிலையில்தான், நினைவில்லம் தொடர்பான வழக்கு விசாரணைகள் முடிவுற்று, 'வேதா இல்லம் ஜெயலலிதாவின் குடும்ப வாரிசுகளுக்கே சொந்தம். இதை நினைவில்லமாக மாற்றி அரசு அறிவித்தது செல்லாது' என்ற அதிரடித் தீர்ப்பை வழங்கியது சென்னை உயர் நீதிமன்றம்.

Also Read: சிலந்தி அடைந்த பூஜை அறை; தூசி படிந்த நூலகம்... எப்படி இருக்கிறது ஜெயலலிதாவின் வேதா நிலையம்?

இந்த வழக்கில், தமிழக ஆட்சி அதிகாரத்தை எதிர்த்து நீண்டநாள் சட்டப்போராட்டம் நடத்திவந்த ஜெ.தீபா, தீபக்குக்கு இந்தத் தீர்ப்பு மிகப்பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்தது. தற்போது தமிழக ஆட்சிப் பொறுப்பிலிருந்துவரும் தி.மு.க அரசும்கூட, இந்த வழக்கில், மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்ய விரும்பவில்லை. இதையடுத்து சுதாரித்துக்கொண்ட அ.தி.மு.க தரப்பு, தாங்களாகவே முன்வந்து மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருக்கிறது.

அதாவது, ஜெயலலிதா நினைவில்ல அறக்கட்டளையின் சார்பில், அதன் உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம், மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார். அ.தி.மு.க-வின் இந்த முடிவு, ஜெ.தீபா - தீபக் ஆகியோருக்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கையில் கிடைத்த குடும்பச் சொத்தை, தொடர்ந்து அனுபவிக்க வழி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பும் ஏக்கமும் அவர்களிடையே ஏற்பட்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில், மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருக்கும் சி.வி.சண்முகத்திடம் பேசினேன்...

வேதா இல்லம்

``வேதா இல்லத்தை மீண்டும் நினைவு இல்லமாக மாற்றக்கோரி மேல்முறையீட்டு மனு செய்திருக்கும் 'ஜெயலலிதா நினைவில்ல அறக்கட்டளை'யின் பின்னணி பற்றிச் சொல்லுங்களேன்...?''

``கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது, வேதா இல்லத்தை அரசே கையகப்படுத்தியதோடு அதை நிர்வகிப்பதற்காக ஓர் அறக்கட்டளையையும் ஆரம்பித்தது. இந்த அறக்கட்டளையில் அரசு அலுவலர்கள், அலுவலர் அல்லாத நான், வேலுமணி, காமராஜ், தங்கமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் உறுப்பினர்களாகவும் இருந்துவருகிறோம். அப்போதே வேதா இல்லத்தை 'நினைவு இல்லமாக' மாற்றி திறந்தும் வைத்துவிட்டோம். ஆனாலும் இதுகுறித்து நிலுவையிலிருந்த வழக்கில், 'பார்வையாளர்களை உள்ளே அனுமதிக்கக்கூடாது' என்று நீதிமன்றம் தடை விதித்துவிட்டது.

இந்த நிலையில், 'வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றியது செல்லாது' என்று அண்மையில், சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது. உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய 21 நாள் கால அவகாசம் இருந்தது. எனவே, வேதா இல்ல சாவியை யாரிடமும் கொடுக்கக்கூடாது என்று சொல்லி, கடந்த 8-ம் தேதியே சென்னை ஆட்சியரிடம் நாங்கள் மனு கொடுத்திருந்தோம். ஆனால் நாங்கள் பயந்தமாதிரியே, ஆகிவிட்டது. இந்த வழக்கில், மேல்முறையீட்டுக்குச் செல்லாத தி.மு.க அரசு, அவசரம் அவசரமாக வேதா இல்ல சாவியையும் தீபா, தீபக் வசம் ஒப்படைத்துவிட்டது.''

Also Read: தங்கமணி ஆடிட்டர் அலுவலகம் உட்பட 14 இடங்களில் லஞ்சஒழிப்புத்துறை ரெய்டு!

``மெரினா கடற்கரையில், ஜெயலலிதா நினைவிடம் இருக்கும்போது, தனிப்பட்ட ஒருவரின் குடும்பச் சொத்தை இதுபோன்று அரசுடைமையாக்கி நினைவு இல்லம் அமைப்பதன் நோக்கம்தான் என்ன?''

``எங்களுக்கு எங்கள் கட்சித் தலைவி அம்மாவின் நினைவை உலகுக்கு எடுத்துச்சொல்லும் விதமாக, அவர் வாழ்ந்த இல்லத்தை நினைவில்லமாக்க ஆசைப்படுகிறோம். மற்றபடி இதில் வேறு எந்தவித அரசியல் பற்றியும் பேச நான் தயாராக இல்லை.

தீபக், ஜெ.தீபா

காமராஜர், அண்ணா, நேரு, படேல் என எல்லா தலைவர்களுக்குமே நினைவு இல்லம் அமைக்கப்பட்டிருக்கின்றன. காந்திக்கு நாடு முழுக்கவே அருங்காட்சியகங்கள் இருக்கின்றன. மதுரையில்கூட, காந்தி மியூசியம் இருக்கிறது. இப்போதுகூட சபர்மதி ஆசிரமத்தை புனரமைப்பதாக மத்திய அரசு அறிவித்தவுடன், 'இதை டூரிஸ்ட் ஸ்பாட்டாக மாற்ற அரசு நினைக்கிறது' என்று சொல்லி புனரமைப்புக்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டிருக்கிறது. 'தலைவர்கள் வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக்கக்கூடாது' என்று எந்த சட்டத்திலும் இல்லை.''

Also Read: `முதல்வரிடம் மழை நிவாரணம் குறித்துக் கேட்டவருக்குக் கொலை மிரட்டல் விடுப்பதா?' - நாராயணசாமி காட்டம்!

``அப்படியென்றால், 'ஜெ. வாழ்ந்த கொடநாடு எஸ்டேட், சிறுதாவூர் பங்களா ஆகியவற்றையெல்லாம் அரசு நினைவு இல்லமாக்கிவிட முடியுமா' என்றும் ஜெ. தீபா கேட்கிறாரே?''

``எல்லாவற்றையும் நினைவு இல்லமாக்கிவிட முடியாது. ஒருவருக்கு சொந்தமாக பத்து வீடுகள்கூட இருக்கும். ஆனால், அவர் வாழ்ந்து மறைந்த முக்கியமான வீடு என்று ஒன்றைத்தானே குறிப்பிட முடியும். எனக்குக்கூடத்தான் நான்கைந்து வீடுகள் இருக்கின்றன. ஆனாலும் நான் பாரம்பர்யமாக வாழ்ந்து வருவதென்பது திண்டிவனத்திலிருக்கும் வீடு மட்டும்தானே. அந்தவகையில், ஜெயலலிதா வாழ்ந்தது 'வேதா நிலையம்'தான். எனவேதான் அதை நினைவு இல்லமாக்கினோம்.''

ஜெயலலிதா

``ஏற்கெனவே வேதா இல்லத்துக்கான சாவி, ஜெ.தீபா, தீபக் வசம் கொடுக்கப்பட்டு அவர்களும் வீட்டினுள் சென்றுவிட்ட பிறகு, மேல்முறையீட்டு மனு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?''

``சாவியைக் கொடுத்துவிட்டார்கள்தான். இப்போது மேல்முறையீட்டு மனு வழக்கு நிலுவையில் இருக்கிறது. நாளையே தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வந்தால், நீதிமன்றத் தீர்ப்பின்படி சாவியை எங்களிடம் கொடுத்திவிடப் போகிறார்கள். எனவே அதில் ஒன்றும் பிரச்னை இல்லை.

ஆனால், 'வேதா நிலையத்தை ஏற்கெனவே நினைவு இல்லமாக மாற்றம் செய்துவிட்டோம். எனவே, அந்த மாற்றத்துக்கு எந்தவித இடையூறும் செய்யக்கூடாது. 'அரசுடமையாக்கியது தவறு' என்ற தீர்ப்புக்குத் தடை விதிக்கவேண்டும் என்பதையெல்லாம் மேல்முறையீட்டு மனுவில் நாங்கள் கோரியிருக்கிறோம். வழக்கு விசாரணையில் இதைத் தொடர்ந்தும் வலியுறுத்துவோம்!''



source https://www.vikatan.com/government-and-politics/politics/ex-minister-c-v-shanmugam-interview-about-veda-nilaiyam-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக