Ad

வியாழன், 30 டிசம்பர், 2021

திருவெம்பாவை - 16: முத்தனை முதற்சோதியை முக்கண் அப்பனை முதல் வித்தினைச் சித்தனை நித்தமும் பணிவோம்!

"முன்னிக்கடலை சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள்
மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
பொன்னம் சிலம்பின் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னில் பிரிவிலா எம்கோமான் அன்பர்க்கு
முன்னியவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்"

ஈசன்

சூரியனால் கடல் நீர் முழுவதும் குடிக்கப்பட்டு உருவான இந்த திரண்ட மேகங்கள் எங்கள் சிவனாரின் தேவியான பார்வதி அம்மையைப் போல் கருத்திருக்கின்றன. எங்களோடு எப்போதும் இருந்து வரும் ஈசனாரின் இணைவியான அந்த அம்பிகையின் சிற்றிடை போல் வானத்து மின்னல் பொலிவாக வெட்டுகிறது. எம்பிராட்டியான சக்தி தேவியின் திருவடிப் பொற்சிலம்புகள் எழுப்பும் ஒலியைப் போல அங்கே வானத்தில் இடி முழங்குகிறது. சக்தி தேவியின் வளைந்த புருவம் போல் வானவில் தெரிகின்றது. நம்மை ஆட்கொண்ட எங்கள் தலைவனாம் ஈசனை விட்டு இமைப் பொழுதும் நீங்காத அந்த தேவி, தன் கணவரை வணங்கும் பக்தர்களுக்கு விடாது அருள் மழையைப் பொழிவாள். அதைப்போல கருணை கொண்ட மழையே நீ விடாமல் பொழிந்து நாட்டில் வளமும் நலமும் உண்டாக்குவாயாக!

ஒரு மழை நாளின் வானத்து ஜாலங்களை அருமையாக வர்ணிக்கிறது இந்த பாடல். மேகம் உருவாவது சூரியன் கடல் நீரைக் குடிப்பதால் தான், அதனால்தான் மழையும் உருவாகிறது என்பதை பல நூறு ஆண்டுகளுக்கு முன்னாலேயே அறிவித்தவர் மாணிக்கவாசகர் என்பது இந்த பாடலின் சிறப்பு. ஈசனோடு இணைந்தே காணப்படும் தேவியின் அருள் மழையைப் போல வான மகளும் தனது மழை வழியாகக் கருணை பொழிய வேண்டும் என்று தோழி வேண்டுகிறாள். அதையும் ஈசன் வழியாகவே அவள் வேண்டுகிறாள். சிவத்தின் விருப்பம் இல்லாமல் இங்கு மழை மட்டுமல்ல, எதுவுமே நடக்காது என்பதே இந்தப் பெண்களின் நம்பிக்கை.

ஈசன்

'முத்த னைமுதற் சோதியைமுக்கண் அப்பனை முதல் வித்தினைச்
சித்த னைச்சிவ லோகனைத்திரு நாமம் பாடித் திரிதரும்
பத்தர் காள்இங்கே வம்மின்நீர் உங்கள் பாசந்தீரப் பணிமினோ
சித்த மார்தருஞ் சேவடிக்கண்நம் சென்னி மன்னித் திகழுமே.'

எல்லாவற்றுக்கும் வித்தாக விளங்கும் நம் ஈசனை வணங்குவதே இல்லாமல் எந்த நன்மையையும் எப்போதும் நடந்து விடாது என்பதே உண்மை. காண்பவை யாவிலும் சிவம் உறைந்திருக்கிறது. சிவமின்றி இங்கு எதுவுமே இல்லை என்று உணரும் நிலையை அடையும்போது ஒரு ஆன்மா பக்குவம் அடைந்து சிவநிலையை எட்டுகிறது என்கிறது சைவ உலகம். மழைக்காலத்தின் ஒவ்வொரு நிலையும் காட்சியும் சிவனையும் சக்தியையும் நினைவூட்டுவதாக இந்த பாடல் தெரிவிக்கிறது. நிஜத்தில் தான் கண்ட சகலத்திலும் சிவத்தை அறிந்தவர் ஒருவர் உண்டு. அதிலும் திருநீறு அணிந்த அடியார்களை சிவமாகவே எண்ணி வாழ்ந்து, மறைந்தவர் அவர். அவரே புகழ்ச் சோழ நாயனார். சிவமே சதமென்று வாழ்ந்த மகாபுருஷர் அவர். அவர் திருக்கதை சைவ உலகத்தில் ஒரு தியாகக் காவியம் என்றே போற்றப்படுகிறது.

சோழ மன்னர் புகழ்ச்சோழர், சைவத்தின் வழியே நன்னெறி கொண்டு செங்கோல் புரிந்து வந்தார். சைவத்துக்குத் தொண்டு செய்வதே தமது வாழ்நாள் கடமை என்று வாழ்ந்து வந்தார். சிவாலயப்பணிகளை சிரமேற்கொண்டு செய்து வந்தவர் இவர். சிவனடியார்களை பராவு சிவமென்றே இவர் தொழுதும் வந்தார். இந்நிலையில் ஒருமுறை வரி வசூல் செய்ய கருவூரை அடைந்தார். அப்போது கருவூர் ஆனிலைக் கோயிலில் வழிபட வந்தார். அதேவேளையில் சிவகாமி ஆண்டார் என்னும் அடியார் சிவபூஜைக்கு என்று கொண்டு வந்த பூவைப் பறித்துச் சிந்திய பட்டத்து யானையையும், அந்த யானையின் பாகரையும் வெட்டி எறிந்தார் எறிபத்தர். சிவனடியாருக்கு தொல்லை தந்த யானையின் உரிமையாளன் நானே என்றும் அதனால் சிவ அபராதத்திற்குத் தீர்வாகத் தம்மையே கொல்லவேண்டும் என்று எறிபத்தரிடம் தம் உடைவாளினை நீட்டி தலை குனிந்து நின்றவர் இந்த மன்னர்.

சிவன்

பிறகு தமக்கு வரி செலுத்தாத கொடுங்கோல் சிற்றரசனை வெல்ல இவர் படையெடுத்துச் சென்றார். பெரும்போர் நடைபெற்றது. இறுதியில் புகழ்ச் சோழரின் படை வெற்றி பெற்றது. எதிரி ஓடிவிட்டான். போர்ச் சின்னமாகத் கொல்லப்பட்ட தலைக் குவியல்களை அரசன் பார்வையிட்டுக் கொண்டே வந்தான். அதில் ஒரு தலையில் வரித்துக் கட்டிய சடாமுடியும் நீறு துலங்கிய நெற்றியும் கண்டார். உடல் எல்லாம் நடுங்க நிலத்தில் விழுந்து அழுதார். 'இது என்ன சோதனை! சிவத்தின் கழுத்தை யாம் அறுப்பதா, இது அழகா, எம்மை சுட்டாலும் இந்த பழி நீங்குமா! எம் சிவமே சிவமே' என்று கதறினார். உடனே எல்லோரையும் கூட்டி தம் குமரனுக்கு முடிசூட்டச் செய்தார். சிவ அபராதகமாகிய பழிக்குத் தீர்வு தாமே பெரும் நெருப்பை மூட்டி, அதில் அந்த சிவனடியாரின் தலையை தம் சிரசில் தாங்கி தீக்குள் புகுந்தார். ஐந்தெழுத்து ஓதியவாறு தீக்குள் நின்ற புகழ்ச் சோழரை தீ சுடவில்லை. நெருப்பில் புகுந்த பொன்னாய் சோழர் மின்னினார். வானுலகம் பூத்தூவி அவரை வரவேற்க, ஈசன் பதம் சேர்ந்தார் புகழ்ச் சோழர்.

ஈசன்

காணும் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஈசனைக் கண்டு உருகிய புகழ்ச் சோழரைப்போல நாமும் இருப்போம். ஈசனே எல்லாம் உணர்ந்து கொண்டால் எந்த வருத்தமும் நம்மை அணுகாது. எனவே உடனே எழுந்து வா தோழி. கருணை கொண்ட நம் ஈசனைத் தொழப்போவோம்!

'சித்தமே புகுந் தெம்மையாட் கொண்டு தீவினை
கெடுத் துய்யலாம் பத்தி தந்துதன் பொற்கழற்கணே பன்மலர்
கொய்து சேர்த்தலும் முத்தி தந்திந்த மூவுலகுக்கும் அப்பு
றத்தெமை வைத்திடும் அத்தன் மாமலர்ச் சேவடி பணிவோம்!'



source https://www.vikatan.com/spiritual/gods/margazhi-utsavam-day-16-thiruvempavai-song-16-to-lord-siva-by-manickavasagar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக