Ad

செவ்வாய், 21 டிசம்பர், 2021

அப்பாவி மக்களைக் கொன்று புதைத்த ராணுவம்... அதிர்ச்சியளிக்கும் மியான்மர் நிலவரம்!

கடந்த 2019-ம் ஆண்டு, நவம்பர் மாதம் நடைபெற்ற மியான்மர் அதிபர் தேர்தலில் முறைகேடு செய்து வெற்றிபெற்றதாகக் கூறி 2020, பிப்ரவரி மாதம் மியான்மர் ராணுவத்தினர் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கட்சி ஆட்சியைக் கவிழ்த்து அதிகாரத்தைக் கைப்பற்றினர். அதுமுதல் இன்று வரையிலும் ராணுவ ஆட்சியே அங்கு நடைபெற்றுவருகிறது.

ஆங் சான் சூகி - மியான்மர்

ஆட்சிக் கவிழ்ப்பையடுத்து, ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்ளிட்ட முன்னணி ஜனநாயகத் தலைவர்கள் சிறைப்படுத்தப்பட்டனர். சமூக வலைதளங்கள் முடக்கம், பொதுவெளியில் ஐந்து பேருக்கு மேல் கூடக் கூடாது போன்ற அடுத்தடுத்த கட்டுபாடுகளையும் ராணுவத்தினர் விதித்தனர்.

இதனால் கொதித்தெழுந்த மியான்மர் மக்கள், ராணுவ ஆட்சியை எதிர்த்து நாடெங்கும் போராடத் தொடங்கினர். போராடிய மக்களை ஈவிரக்கமின்றி சுட்டுப் படுகொலை செய்தது மியான்மர் ராணுவம். குறிப்பாக, கடந்த மார்ச் மாதம் மியான்மரின் 76-வது ஆயுதப்படை தினம் ராணுவம் சார்பாக கொண்டாடப்பட்டது. அதேசமயம், நாடு முழுவதும் மக்கள் போராட்டமும் மிகத்தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. இதனால், ஆத்திரமடைந்த ராணுவம் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 114 பேரை சுட்டுக்கொன்றது.

மியான்மர்

அதன் பின்னர், போராட்டத்தில் ஈடுபடுபவர்கள்மீதான ராணுவத்தின் தாக்குதல் வேகமாக அதிகரித்தது. கடந்த ஏப்ரல் மாதவாக்கில், ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 600-ஐ தாண்டியது. ஜூலை மாதத்தில் இந்த எண்ணிக்கை 900-ஐ தாண்டியது. இதுவரையில் மொத்தமாக ராணுவத்தால் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 1,500-க்கும் அதிகமாக உள்ளது.

மியான்மர் போராட்டம்

மியான்மர் ராணுவத்தினர் தங்கள் சொந்த மக்கள்மீது நிகழ்த்தும் மனித உரிமை மீறல்களை ஐ.நா சபையும்ம் உலக நாடுகளும் வன்மையாக கண்டித்தன. இருப்பினும், ராணுவத்தினரின் அடக்குமுறை தொடர்ந்த வண்ணமே இருந்தது. மக்கள் ஒருபுறம் ஜனநாயக வழியில் போராடிக்கொண்டிருந்தாலும், ராணுவத்தின் அதிகப்படியான அழுத்தத்தால் பல இளைஞர்கள் போராளிக் குழுக்களாக உருப்பெற்றனர். ராணுவத்தை நோக்கி சிறிய அளவிலான தாக்குதல்களை நிகழ்த்தத் தொடங்கினர்.

இந்த நிலையில், கடந்த டிசம்பர் முதல் வாரத்தில், சகெயிங் (Sagaing) என்ற கிராமத்தில் புகுந்த ராணுவத்தினர், அங்கிருந்த 11 பேரைப் பிடித்து, கை கால்களைக் கட்டிவத்து உயிரோடு எரித்துக் கொன்றனர். இந்தக் கொடூரமான சம்பவம் நிகழ்ந்து இரண்டு வாரங்களே ஆகியிருக்கும் சூழலில், தற்போது வெளியாகியிருக்கும் இன்னொரு செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மியான்மர் ராணுவம்

ராணுவத்தினர் நடத்திய கொடூரப் படுகொலைகள் தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. கிட்டதட்ட 40-க்கும் மேற்பட்ட பொதுமக்களை குறிப்பாக, ஆண்களை மிகக் கொடூரமான முறையில் சித்தரவதைசெய்து, படுகொலை செய்திருக்கிறது மியான்மர் ராணுவம். மேலும், அவர்களின் உடல்களைக் காடுகளில் வீசியும், குழிகளில் போட்டுப் புதைத்தும் வெளி உலகத்துக்குத் தெரியாமல் மறைத்திருக்கிறது. இந்த நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள், நேரடி சாட்சியங்கள் உள்ளிட்ட ஆதாரங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை எற்படுத்தியிருக்கிறது.

மியான்மர் போராட்டம்

குறிப்பாக, யின் (yin) என்ற கிராமத்தில் மட்டும் சுமார் 14 ஆண்கள், ராணுவத்தினரால் பல மணி நேர கடும் சித்ரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கின்றனர். அவர்களின் உடல்களை அடர்ந்த காடுகளிலிருக்கும் பள்ளத்தாக்குகளிலும் ராணுவத்தினர் வீசிச் சென்றிருக்கின்றனர்.

இந்தச் சம்பவங்களை நேரில் கண்ட கிராமப் பெண்கள், ``நாங்கள் எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும் ராணுவத்தினர் அவர்களை விடவில்லை. ஆண்களின் கை கால்களை இறுக்கமாகக் கட்டிவைத்து அடித்தனர். கற்களால் தாக்கினர். அவற்றைப் பார்த்து, எங்களால் எதுவும் செய்ய முடியாத நிலையில் தலைகுனிந்து நின்றோம். ஒருகட்டத்தில் அவர்களை விட்டுவிடுமாறு மன்றாடினோம். ஆனால், ராணுவத்தினரோ, `எதுவும் கூறாதீர்கள். நாங்கள் ஏற்கெனவே களைப்படைந்திருக்கிறோம். தொந்தரவு செய்தால் உங்களையும் கொல்வோம்' என மிரட்டினர்" என்று தெரிவித்திருக்கின்றனர்.

மியான்மர்

ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் என உலக நாடுகள் கண்டித்தும், மியான்மர் ராணுவம் அவற்றையெல்லாம் ஒரு பொருட்டாக மதிக்காமல், மக்கள் மீதான தங்கள் தாக்குதல்களைத் தொடர்ந்து அரங்கேற்றிவருகிறது.



source https://www.vikatan.com/government-and-politics/international/myanmar-army-tortured-and-killed-civilians

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக