Ad

ஞாயிறு, 26 டிசம்பர், 2021

கொளத்தூர்: அவ்வை நகர் ஆக்கிரமிப்பு அகற்ற விவகாரம்: மக்கள் கொதிப்பும்... அரசு தரப்பு விளக்கமும்!

``ஸ்டாலின் நல்லது பண்ணுவாருனு நம்பி ஓட்டுபோட்டோம்! ஆனால் இப்படி பண்ணிட்டாரு!"

``தேர்தல் பிரசாரத்துக்கு வரும்போது, நாங்க ஜெயிச்சா கண்டிப்பா உங்களுக்கெல்லாம் பட்டா வழங்குவோம்னு வாக்குறுதி கொடுத்தாரு முதலமைச்சர் ஸ்டாலின்! அதை நம்பி, நாங்க எல்லாருமே அவருக்குதான் ஓட்டுபோட்டோம்; ஆனா, இப்ப எங்கள மொத்தமாக கைவிட்டுட்டாரு! நல்லது நடக்கும்னு நம்பியிருந்தோம், இப்ப குடியிருந்த வீட்டையும் பறிகொடுத்துட்டு நடுத்தெருவுல நிக்கிறோம்!" எனக் கதறுகிறார்கள் பாதிக்கப்பட்ட அவ்வைநகர் மக்கள்.

கொளத்தூர் தொகுதி மக்கள்

சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி, அவ்வை நகர். இங்கு சுமார் 60-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில், சுமார் 150 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. கடந்த 60 ஆண்டுகளாக வசித்துவரும் தங்களுக்கு பட்டா வழங்கவேண்டும் என பலஆண்டுகளாக கோரிக்கைவைத்து வந்திருக்கின்றனர். இந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம், மேம்பாலப் பணிகளுக்காக அவ்வைநகரில் உள்ள சில வீடுகள், கடைகள் அகற்றப்படவிருக்கிறது எனக்கூறி மாநகராட்சி அதிகாரிகள், மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றனர். பேச்சுவார்த்தையின் முடிவில் பாலத்தின் அகலம் சுமார் 28 அடி என்றும், சர்வீஸ் ரோட்டுக்கான இடம் 15 முதல் 20 அடி தேவை என்ற கணக்கீட்டின்படி சாலையின் மையத்திலிருந்து இருபுறமும் ‘அளவுக் குறியீடு (Marking)’ செய்துவிட்டு சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த டிசம்பர் 10-ம் தேதியன்று சென்னை மாநகராட்சியினர், ’நீர்வழிப்பாதையினை ஆக்கிரமித்து தங்கள் வீடு கட்டப்பட்டிருக்கிறது. மேலும், ஜி.கே.எம். காலனி மற்றும் வில்லிவாக்கம் பகுதிகளை இணைக்கும் மேம்பால கட்டுமானப் பணியும் நடைபெற்றுவருகின்றது. ஆகவே, இந்தக் கடிதம் கிடைக்கப்பெற்ற 7 நாள்களுக்குள் தங்களால் கட்டப்பட்டிருக்கும் வீட்டை உடனடியாக அகற்றவேண்டும். தவறும்பட்சத்தில், தங்களது வீடு உடனடியாக இடித்து அகற்றப்படும்!" என்ற இறுதி அறிவிப்பை அனைவர் வீட்டிலும் ஒட்டிச்சென்றிருக்கின்றனர்.

ஆனால், அவகாசம் முடிவதற்கு முன்பாகவே மறுநாள் 11-ம் தேதி, காவல்துறையினர் பாதுகாப்புடன், 10-க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகளை பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு இடித்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பகுதி பொதுமக்கள் இரவும் பகலுமாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேம்பாலம் வரும் பகுதியில் இடிக்கப்படும் வீடுகள்

கடந்த 18-ம் தேதியுடன் சென்னை மாநகராட்சியின் 7-நாள் கெடு முடிவடைந்த நிலையில், தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வந்தமக்களை காவல்துறையினர் கைதுசெய்தனர். வீட்டுக்குள் இருக்கும்பொருள்களை வெளியில் எடுத்துவைப்பதற்காக மட்டும் சிலரை விடுவித்துவிட்டு, அவர்களின் கண்முன்னரே எஞ்சியிருந்த அத்தனை வீடுகளையும் இடித்து அப்புறப்படுத்தியிருக்கின்றனர் சென்னை மாநகராட்சியினர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துப் பேசினோம். ``எங்க அப்பா காலத்துலருந்து இங்கதான் வாழ்ந்துவர்றோம். இந்த கொரோனா காலத்துல வருமானமில்லாம கஷ்டப்பட்டுட்டு இருந்தோம். இந்தநிலைமையில, வயித்து பிழைப்புக்கு இருந்த எங்க கடையையும், வாழறதுக்கு இருந்த வீட்டையும் சேர்த்து இடிச்சிட்டாங்க! இனிமே நாங்க எங்கபோவோம்? பச்ச குழந்தைலாம் இருக்கு! அவர (ஸ்டாலின்) நம்பித்தான நாங்க ஓட்டுபோட்டோம். கடைசில இப்படி பண்ணுவாருனு நாங்க நினைச்சிகூட பாக்கல!" என்று கண்கலங்கினார் 50 வயதான ஜேசுமேரி.

பாதிக்கப்பட்ட ஜேசுமேரி

அதேபோல, தனது வீட்டை இழந்த அனிதா ``நான்கு தலைமுறையா குருவி சேர்க்குற மாதிரி, காசுசேர்த்து வீடு கட்டியிருந்தோம். அதுக்கு, ரொம்ப வருசமா அரசாங்கத்துகிட்ட பட்டா கேட்டு போராடிட்டு இருந்தோம். ஆனா, இந்த இடத்துல மேம்பாலம் வரப்போகுதுனு சொன்னாங்க. நாங்களும் அதை வரவேற்கத்தான் செஞ்சோம். பாலத்துக்கு இடம்விட்டுட்டு மீதி இருக்குற இடத்துல இருந்துக்கலாம்னு நினைச்சோம். ஆரம்பத்துல சரினு சொன்னவங்க, இப்ப ஒதுக்குப்புறமா இருந்த வீடுகளையும் மொத்தமா இடிச்சி தள்ளிட்டு, மேம்பாலத்தோட இரண்டுபக்கமும் பூங்கா கட்டப்போறதா சொல்றாங்க.

வீட்டை இழந்த அனிதா

நாங்க குடியிருந்த வீட்டை இடிச்சி வெளியேத்திட்டு, யாருக்காக அந்த பூங்கா? நீர்நிலைனு சொல்ற இடத்துல அரசாங்கம் மட்டும் மேம்பாலம் கட்டலாமா? அது ஆக்கிரமிப்புல வராதா?" என விரக்தியில் கொந்தளித்தார்.

``வீட்ட இடிக்கக்கூடாதுனு இங்க இருக்குற ஒரு அமைச்சர்கிட்டபோய் எங்க பசங்க பேசுனாங்க. ஆனா அவரு, இத்தனைநாள் உங்கள அரசாங்கம் இருக்கவிட்டதே பெரிய விஷயம். இடத்தை காலி பண்ணிடுங்கனு சொல்லிட்டாராம். இடிச்ச வீடுகளுக்கு, மாற்று இடமும் கொடுக்கல, மானியமும் கொடுக்கல! எந்த அதிகாரியும், தலைவரும், எங்களவந்து பாக்கல" என்றார் 54 வயதான எலிசபெத் ராணி.

எலிசபெத் ராணி

மக்களிடம் பேசியபின்பு நோட்டீஸ் அனுப்பிய மண்டல அலுவலரின் எண்ணுக்குத் தொடர்புகொண்டோம். பலமுறை முயன்றும் அவர் அழைப்பை எடுக்காததால். மண்டல செயற்பொறியாளரிடம் தொடர்புகொண்டோம். ``அவ்வைநகர் மக்கள், நீர்நிலைப் புறம்போக்கை ஆக்கிரமித்து வசித்துவந்தனர். அந்தப் பகுதியில் மேம்பாலம் வரவிருப்பதால், ஆக்கிரமிப்புகளை அகற்றினோம். பட்டா நிலம் கிடையாது என்பதால் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எங்களால் மாற்று இடம்கூட வழங்கமுடியாது. தற்காலிக உதவிகளைச்செய்ய முயன்றுவருகிறோம்" எனக்கூறியதுடன் நிறுத்திக்கொண்டார்.

சென்னை மாநகராட்சி

நீர்நிலையை ஆக்கிரமித்து நீங்கள் வீடுகள் கட்டியிருப்பதாக அதிகாரிகள் கூறுகிறார்களே என பாதிக்கப்பட்ட மக்களிடம் கேட்டோம். ``மாநகராட்சி அனுப்பியிருக்குற நோட்டீஸ்ல, நாங்க பெருமாள் தாங்கல் நீர்நிலைய ஆக்கிரமிச்சு வீடு கட்டியிருக்கிறதா சொல்லியிருக்காங்க. அப்புறம் ஏன் 2006-ல புரசைவாக்கம்-பெரம்பூர் தாசில்தார் வெளியிட்டிருக்குற, நகர நில அளவைப் பதிவேட்டில் (Town Survey Land Register-TSLR), கொளத்தூர் அவ்வை நகர்ப்பகுதி `புஞ்சை, நஞ்சை, நீர்வை படாதது புறம்போக்கு மனை'னு குறிப்பிட்டிருக்காங்க? எங்ககிட்ட பட்டா இல்லானாலும், வீட்டுவரி, கரண்ட் பில் எல்லாமே கட்டிட்டுதான் வந்தோம். இப்ப திடீர்னு, வட்டிக்கு பணம்வாங்கி கஷ்டப்பட்டு கட்டுன வீட்டையெல்லாம் இடிச்சிட்டு, ஒரே நாள்ல எங்கள இப்படி நிறுத்திட்டாங்களே !" எனக் கண்ணீருடன் தெரிவித்தார் ஈஸ்வரி.

Also Read: கொளத்தூர்: மேம்பாலப் பணிக்காக இடித்துத் தள்ளப்பட்ட வீடுகள்; போராட்டத்தில் பகுதி மக்கள்!

அரசாங்கத்தால் ஆக்கிரமிப்பு வீடுகள் என்று குறிக்கப்பட்ட அவ்வைநகரின் அத்தனை வீடுகளும் இடிக்கப்பட்டுவிட்டன. மாற்று இடம் இல்லாத பாதிக்கப்பட்ட மக்கள், முடிந்தவரை தங்கள் உடமைகளை எடுத்துக்கொண்டு உறவினர் வீடுகளிலும், சிலர் வாடகைக்கும், சிலர் தேவாலயங்களிலும் தஞ்சமடைந்திருப்பதாக தெரிவிக்கின்றனர். ஜி.கே.எம். காலனி தேவாலயத்தில் தங்கியிருக்கும் தொழிலாளி தாமஸ், ``வீட்டை இழந்த மக்கள் நாலா பக்கமும் சிதறிட்டாங்க. நாங்க ஒரு 8 குடும்பங்கள் போல இங்க தேவாலயத்தில தங்கியிருக்கோம். சாப்பாட்டுக்கே சிரமப்படுறோம். சில நல்லவங்களின் உதவியால் உணவு கிடைக்குது. வாடகைக்கு வீடு எடுக்கவோ, அட்வான்ஸ் கொடுக்கவோ எங்ககிட்ட அவ்ளோ பணம் இல்லை! இங்கேயும் தொடர்ந்து இருக்கமுடியாது. கொஞ்சநாள்ல எங்கயாவது மாறிப்போகனும்!" என வருத்தமாகத் தெரிவித்தார்.

தாமஸ்

மேலும் அரசின் இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகப் போராடிவருபவர்களை சந்தித்தோம்.

``உயர் நீதிமன்றம் தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் மற்றும் அவற்றின் மீதான ஆக்கிரமிப்புகள் பற்றிய விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு அரசுக்கு பணித்திருக்கும் நிலையில், 07.12.21 அன்று தமிழக அரசு சமர்ப்பித்த அறிக்கையில் தமிழகம் தழுவி 4,800 அரசு கட்டடங்கள், 8,700 வணிக கட்டிடங்கள் மற்றும் 3.2 லட்சம் குடியிருப்புகள் உள்ளன என்று தெரிவித்துள்ளது.

கர்ப்புற குடியிருப்பு - நிலவுரிமைக் கூட்டமைப்பின் தலைவர் செபஸ்டின்

அரசு கட்டடங்கள் ஒன்று கூட இதுவரை இடிக்கப்படாத நிலையில் குடியிருப்புகளை மட்டும் இடித்து மக்களை வீதியில் நிறுத்துவது எந்த வகைப்பட்ட சமூக நீதி ? முதல்வர் தொகுதியில் உள்ள மக்களுக்கே இந்த நிலைமை என்றால் பிற பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்களின் நிலை என்னவாகும்?" என நகர்ப்புற குடியிருப்பு - நிலவுரிமைக் கூட்டமைப்பின் தலைவர் செபஸ்டின் கேள்வி எழுப்பினார்.

கொளத்தூர் பகுதி சி.பி.எம் செயலாளர் ஹேமாவதி பேசுகையில், ``அவ்வைநகர் ஆக்கிரமிப்பு என்றால் ஏன் கடந்த 60 ஆண்டுகளாக அந்த மக்களை வீடுகட்ட மாநகராட்சி அனுமதித்தது. வீட்டு வரி, தண்ணீர்வரி வசூல்செய்தது, மின் இணைப்பு தந்தது ஏன்? இப்படி எல்லா தவறு அரசும், அரசு அதிகாரிகளும் செய்துவிட்டு அப்பாவி மக்களை பலி ஆடாக்குது நியாயமா?

கொளத்தூர் பகுதி சி.பி.எம் செயலாளர் ஹேமாவதி

`ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்’ என்று கலைஞர் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டிதரும் திட்டத்தை குடிசைமாற்று வாரியம் மூலம் கொண்டு வந்தார். அந்த திட்டத்தை தொடர்ந்து அமல்படுத்தியிருந்தால், ஏன் வீடில்லா மக்கள் ஆக்கிரமிப்பாளராக மாறப்போகின்றார்கள். வளர்ச்சி திட்டத்துக்கு நிலம் தேவை என்றால் இழப்பீடு மற்றும் மாற்று இடம் தந்து முறையாக அரசு வீடுகளை அகற்றியிருக்கலாம்.

இடிக்கப்பட்ட வீட்டின் ஒரு கதவு

ஆனால், அரசு அதை செய்யாமல், மக்களின் வாழ்விடத்தை மனிதநேயமற்ற முறையில் சிதைத்திருக்கிறது. அதுவும் முதல்வரின் தொகுதியிலே இப்படியென்றால்..? மற்ற இடங்களில் கேட்க வேண்டுமா..?" என கேள்வி எழுப்பினார்.

இதுகுறித்து விளக்கம்கேட்டு அமைச்சர் சேகர் பாபுவை தொடர்புகொண்டோம். ``நீர்நிலையை ஆக்கிரமித்து வீடுகட்டியிருப்பவர்களுக்கு எப்படி நிவாரணம் வழங்க முடியும்? அது தவறான முன்னுதாரணமாக ஆகிவிடாதா? ஒரு பக்கம் நீதிமன்றம் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என உத்தரவிடுகிறது, இன்னொருபக்கம் அகற்றக்கூடாது என போராட்டம் நடத்துகிறார்கள், நாங்கள் வேறு என்னதான் செய்வது? அந்த மேம்பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகளாகப் பாதியிலேயே நிற்கிறது. அதனால் அந்தப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகியிருக்கிறது. முதல்வர் தொகுதி என்பதாலேயே அதிக கவனம் எடுத்து, பல மாதங்களுக்கு முன்பாகவே மக்களிடம் காலிசெய்யுமாறு நோட்டீஸ் கொடுத்துவிட்டோம்.

சேகர் பாபு

பட்டா வைத்திருந்த இரு குடும்பங்களுக்கு ஏற்கெனவே நிவாரணம் கொடுத்துவிட்டோம். முறையான ஆவணங்கள் வைத்திருக்கும் மக்கள் அனைவருக்கும் மாற்று ஏற்பாடுகள் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். அதனடிப்படையில் தற்போது, வீடு இழந்த 53 குடும்பத்தினரைக் கண்டறிந்து அவர்களுக்கு, `பயோ மெட்ரிக் கார்ட்' கொடுத்திருக்கிறோம். விரைவில் மாற்று ஏற்பாடுகள் செய்வோம். ஆக்கிரமிப்பு நிலத்தில் வீடுகள் கட்டி வசதியாக வாடகைக்கு விட்டுக்கொண்டிருந்தவர்கள்தான் தற்போது வேண்டுமென்றே பிரச்னை செய்துகொண்டிருக்கிறார்கள்!" என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

கொளத்தூர் அவ்வை நகர்

முதல்வரின் சொந்தத் தொகுதியிலேயே நிகழ்ந்த வீடுகள் இடிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

படங்கள் - விக்னேஷ்



source https://www.vikatan.com/government-and-politics/politics/avvai-nagar-encroachment-clearance-issues-and-govt-side-clarification

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக