Ad

வெள்ளி, 31 டிசம்பர், 2021

ரூ.500 கோடி மதிப்பிலான மரகத லிங்க சிலை... தஞ்சையில் மீட்ட சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார்!

தஞ்சாவூரில் அரசு உதவிபெறும் பள்ளியின் உரிமையாளர் ஒருவரிடமிருந்து உரிய ஆவணங்கள் இல்லாததால் வங்கி லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூ.500 கோடி மதிப்பிலான மரகத லிங்க சிலையினை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் பறிமுதல் செய்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சிலை வைத்திருந்த சாமியப்பா வசிக்கும் அப்பார்ட்மெண்ட்

தஞ்சாவூர் அருளானந்த நகரில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் வசிப்பவர் சாமியப்பா. இவர் மகன் அருணபாஸ்கர் அதே பிளாட்டில் வசித்து வருகிறார். தஞ்சாவூர் மேலவீதி அருகே உள்ள பிரபல அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றினை நடத்திவருகிறார் சாமியப்பா. இவர் பல்வேறு தொழில்கள் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2016-ம் ஆண்டு நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள கோயிலிலிருந்த பழமையான மரகத லிங்க சிலை ஒன்று காணாமல் போனது. அந்த சிலை குறித்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், தஞ்சாவூரைச் சேர்ந்த சாமியப்பாவிடம் பழமையான சிலைகள் இருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து அது தொடர்பான விசாரணையை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் ரகசியமாக தொடங்கினார்கள்.

சாமியப்பா பிளாட்

இதையடுத்து நேற்று முன் தினம், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் உள்ளிட்ட போலீஸார் தஞ்சாவூரில் உள்ள சாமியப்பா பிளாட்டிற்கு வந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது சாமியப்பா மற்றும் அவர் மகன் அருணபாஸ்கரிடம் விசாரித்ததாக தெரிகிறது. பின்னர் பச்சை நிற மரகத லிங்கம் குறித்து போலீஸார் விசாரித்திருக்கின்றனர். மரகத லிங்கம் வீட்டில் இல்லை என்றும், வங்கி லாக்கரில் இருப்பதாகவும் அருணபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர், நேற்றைய தினம் வங்கி லாக்கரிலிருந்த மரகத லிங்க சிலையினை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் மீட்டனர். இது குறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம், ``2016-ல் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான கோயிலில் இருந்த பழமையான மரகத லிங்க சிலை திருடு போனதாக ஆதீனத்தின் கண்காணிப்பாளர் சவுரி ராஜன் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

தஞ்சாவூரைச் சேர்ந்த சாமியப்பாவிடம் இருந்து பச்சை நிற மரகத லிங்க சிலை மீட்டிருக்கிறோம். சிலையினை மீட்பதற்காக சென்ற போலீஸாரிடம் குறிப்பிட்ட மரகத லிங்கம் சிலை பாரம்பர்யமாக நாங்கள் வைத்திருக்கிறோம். இது எங்களுடைய சிலை என தெரிவித்தனர். அப்படியானால் சிலைக்கான ஆவணத்தை காட்டுங்கள் என கேட்டோம்.

மீட்கப்பட்ட மரகத லிங்கம்

ஆனால், அதற்கான ஆவணம் எதுவும் இல்லை. அப்போது சிலை உங்களுடையதுதான் என்பதற்கான ஆவணம் இருந்தால் வரும் 5-ம் தேதிக்குள் எடுத்து சமர்ப்பியுங்கள் என்றுகூறினோம்.

அதைத் தொடர்ந்து, வங்கி லாக்கரிலிருந்த சிலை மீட்கப்பட்டு சென்னை எடுத்து செல்லப்பட்டது. ஜெர்மாலஜிட் மூலம் இது மரகத சிலைதான் என்பதை உறுதி செய்திருக்கிறோம். அதன் மதிப்பு ரூ.500 கோடி இருக்கும் எனவும் தெரிகிறது. மீட்கப்பட்ட சிலை திருக்குவளை கோயிலில் காணாமல் போனதா? என்றும் மரகத லிங்க சிலை காணாமல் போனதற்கு அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கிறதா? என்றும் விசாரணை செய்து வருகிறோம். அதன் முடிவிலேயே முழு விவரம் தெரியவரும்" என்றனர்.



source https://www.vikatan.com/news/crime/emerald-lingam-statue-worth-rs-500-crores-recovered-in-tanjore

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக