Ad

ஞாயிறு, 5 டிசம்பர், 2021

ஓய்வுக்காலத்தை நெருங்குகிறீர்களா? உங்களுக்காத்தான் இந்த யோசனைகள்! - 54

ஐம்பது, ஐம்பத்தைந்து வயது ஆகிவிட்டாலே, வேலைக்குச் செல்பவர்கள், மனதளவிலும், பொருளளவிலும் பணி ஓய்வுக்குத் தயாராவது நல்லது. இன்றைக்கு இருபத்தைந்து வயது இளைய தலைமுறைகூட ரிடையர்மென்ட் பற்றி யோசிப்பது ஒரு ஆரோக்கியமான விஷயம்.

நாமும் பணி ஓய்வு பற்றியும், மாதாந்தர வருமானம் நின்றுபோகும் நிலையில் அதைச் சமாளிப்பதற்கு உண்டான வழி வகைகளைப் பற்றியும் பார்த்து வருகிறோம்.

ரிடையர் ஆகும்போது கையில் கிடைக்கும் மொத்தப் பணத்தை முதலீடு செய்யும் வழிகளைப் போன அத்தியாயத்தில் பார்த்தோம். அவை தவிர தேவைப்படும் மாதாந்தர வருமானத்துக்கு, கீழ்க்கண்ட வழிகளில் நமக்குப் பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுக்கலாம்.

Investment (Representational Image)

வாடகை வருமானம்

சொந்த வீடு இல்லாமலேயே வாடகை வருமானம் பெற விரும்புகிறீர்களா? உங்களுக்கு ஒரு நல்ல வழிமுறையாக வந்திருப்பதுதான் ஆர்.இ.ஐ.டி. (Real Estate Investment Trust). சொத்துகளை வாங்குதல், பராமரித்தல், வாடகை வசூலித்தல் போன்ற எந்தத் தலைவலியும் இன்றி வாடகை வருமானம் பெற இது ஒரு நல்ல வழி. (பார்க்க: அத்தியாயம் 17)

Also Read: சாமானியர்களும் ரியல் எஸ்டேட் சொத்துகளில் முதலீடு செய்ய எளிதான வழி; REIT பற்றி தெரியுமா? - 17

நீண்ட கால பாண்டுகள்

அரசு மற்றும் பெரிய கம்பெனிகள் நீண்ட கால பாண்டுகளை வெளியிடுகின்றன. ஐந்து வருடங்களுக்கு மேற்பட்ட முதிர்வுக் காலம் கொண்ட இவற்றில் வட்டி விகிதம் அதிகம் கிட்டுகிறது. அடுத்து வரும் வருடங்களில் வட்டி விகிதம் குறைந்தாலும், இந்த பாண்டுகள் தரும் வருமானம் முதிர்வு காலம் வரை குறையாது.

நல்ல டிவிடெண்டும் வளர்ச்சியும் வழங்கும் நிறுவனப் பங்குகள்

கோல் இந்தியா, ஐடிசி, பிரிட்டானியா, ஏசியன் பெயின்ட்ஸ், இன்ஃபோசிஸ் போன்ற தரமான பங்குகள் சிறந்த வருமானம் தருபவையாகவும் உள்ளன. இவற்றில் செய்யும் முதலீடுகளுக்கு டிவிடெண்ட் மற்றும் முதலீட்டு ஆதாயம் என இரண்டு வகை வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு.

சந்தையில் நல்ல டிவிடெண்ட் வருமானம் தரக்கூடிய தரமான பங்குகளைத் தேர்ந்தெடுத்து நம் ஷேர் போர்ட் ஃபோலியோவில் சேர்த்து வைத்தால் நிலையான வருமானம் உத்தரவாதமாகக் கிடைக்கும். ஐந்து முதல் ஏழு வருடங்கள் வரை இந்த ஷேர் போர்ட்ஃபோலியோவை வளர்த்த பின் வருடா வருடம் மொத்த முதலீட்டில் நான்கு சதவிகிதம் அளவு எடுத்து செலவினங்களுக்கு உபயோகப்படுத்தலாம். இந்த முறையில் செயல்பட்டால் நம் சேமிப்பு நீண்ட காலத்துக்குக் கை கொடுக்கும்.

இந்த வழிமுறைகளை ஒய்வுக் காலத்துக்கு 5 - 7 வருடங்களுக்கு முன்பே ஆரம்பித்தால்தான் ஓய்வுக் காலத்தில் போதிய வருமானத்தை உண்டாக்க முடியும்.

Senior Citizen (Representational Image)

Also Read: வரிச்சுமையைக் குறைக்க அரசே தரும் வழிகள் இவைதான்! - பணம் பண்ணலாம் வாங்க - 52

இவை தவிரவும் நாம் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்:

முதலில் வருவது ஹெல்த் இன்ஷூரன்ஸ். மருத்துவச் செலவுகள் நாளுக்கு நாள் கூடி வரும் வயதில் கம்பெனி தரும் இன்ஷூரன்ஸ் குடை அகற்றப்பட்டுவிடும். அறுபது வயதுக்குப் பின் எடுக்கப்படும் ஹெல்த் பாலிசிக்கு பிரீமியம் அதிகம் என்பதால் ரிடையர் ஆவதற்கு சற்று முன்பே பாலிசி எடுப்பது செலவைக் குறைக்கும்.

அடுத்தது - கடன்களை முடிப்பது. வாகனக் கடன், தனி நபர்க் கடன், பிஎஃப் கடன், நகைக் கடன் என்று எந்தக் கடன் சுமை இருந்தாலும் இ.எம்.ஐ தொகையை சிறிது அதிகப்படுத்தி, ரிடையர் ஆகும் முன்பே கடனைத் தீர்த்துவிடுங்கள். வீட்டுக் கடனை மட்டும் அவசரமாக அடைக்கத் தேவையில்லை. ஏனென்றால், பொதுவாக வீட்டுக் கடனுக்கு வட்டி கம்மி; வரிச் சலுகையும் உண்டு.

அடுத்ததாக நம் சேமிப்புகளை லிஸ்ட் போட்டு, அவற்றை ஒருங்கிணைக்க வேண்டும். இரண்டுக்கு மேற்பட்ட வங்கிகளில் கணக்கு, பல வித கிரெடிட் கார்டுகள், ஆன்லைன் டிரேடிங் அக்கவுன்டுகள் மற்றும் பலவிதமான மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு ஆகியவை குழப்பத்துக்கே வழி வகுக்கும். ஒவ்வொன்றுக்கும் ஒன்று அல்லது இரண்டு நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து பொறுமையாக, தக்க தருணத்தில் மற்றவைகளை அங்கு மாற்ற வேண்டும்.

Senior Citizens (Representational Image)

Also Read: `இவற்றையெல்லாம் செய்தால் ஓய்வுக்காலத்தை பயமின்றி கழிக்கலாம்!' - பணம் பண்ணலாம் வாங்க - 53

ஓய்வுக் காலத்தை நெருங்கிவிட்டவர்கள் அல்லது ஏற்கெனவே ஓய்வு பெற்றவர்கள் சிறிய பிசினஸ் நடத்துவது அல்லது ஆலோசனை வழங்குவது போன்ற செயல்களில் ஈடுபடலாம். செலவைக் குறைக்க விரும்பும் சிலர் பணி ஓய்வுக்குப் பின் மெட்ரோ நகரங்களை விட்டு, சிறு நகரங்களுக்குக் குடிபெயர்கின்றனர். இன்னும் சிலர் சொந்தமாகக் கார் வைத்திருப்பதைத் தவிர்த்து ஓலா, ஊபர் என்று பயணிக்கின்றனர்.

வாழ்வாங்கு வாழ்ந்து, மற்றவர்களுக்கும் உதவும் ஒரு ஆலமரமாக நிலைபெற்ற ஒவ்வொருவரும் நிம்மதியான ஓய்வுக் காலம் பெற தகுதி உள்ளவர்தாம். அதற்கு மேற்கண்ட விஷயங்கள் உதவும். ஆல் தி பெஸ்ட்!

- அடுத்து புதன் கிழமை காலை 9 மணிக்கு சந்திப்போம்.



source https://www.vikatan.com/business/finance/simple-investment-tips-for-good-post-retirement-life

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக