Ad

ஞாயிறு, 5 டிசம்பர், 2021

`அங்கேயே அப்பா உயிரு போயிடுச்சு..!’ -காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்தாரா பெட்டிக்கடை உரிமையாளர்?!

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே உள்ள சு.பில்ராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் உலகநாதன். 60 வயதை கடந்த இந்த நபர், அதே ஊரில் எல்லைப் பகுதியை ஒட்டியபடி அமைந்துள்ள மதுபானக்கடை (TASMAC) அருகே சுண்டல் விற்பனை செய்யும் பெட்டிக்கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். டாஸ்மார்க் அருகிலேயே பெட்டிக்கடை வைத்திருந்ததற்காக எச்சரிக்கை விடுக்க சென்ற காவல்துறை அதிகாரிகள், உலகநாதனை தாக்கியதாகவும் அதனால் அதே இடத்தில் மயங்கி விழுந்து அவர் உயிரிழந்ததாகவும் புகார் எழுந்தது. இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரது உறவினர்கள் நியாயம் வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டது மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது.

உயிரிழந்த உலகநாதன்

Also Read: சாத்தான்குளம்: 17, 13 இடங்களில் கடுமையான காயங்கள்! அதிரவைத்த உடற்கூராய்வு அறிக்கை

இச்சம்பவம் தொடர்பாக, உயிரிழந்த உலகநாதனின் மகன் தனபால் என்பவரிடம் பேசினோம். "நாங்க சு.பில்ராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவங்க. வடகரை தாழனூர் எல்லை பகுதியில் ஒரு ஒயின்ஷாப் அமைந்துள்ளது. அங்கு தான் எங்களின் நிலமும் உள்ளது. அந்த இடத்துல கீற்றுக் கொட்டகை மாதிரி அமைச்சு எங்க அப்பா, அம்மா சுண்டல் கடை போட்டிருந்தாங்க. இன்னிக்கு (நேற்று, 05.12.2021) மதியம் 3 மணி வாக்குல அரகண்டநல்லூர் போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து 4 போலீஸ்காரங்க அங்க வந்திருக்காங்க. "இங்க கடையெல்லாம் வைக்கக்கூடாது" என்று சொல்லி எங்க அம்மாவை அடிக்கிறதுக்கு பெண் போலீஸ் ஒருத்தவங்க கை ஓங்கி இருக்காங்க. அதை எங்க அம்மா தடுத்திருக்காங்க. "ஏங்க வயசானவளை அடிக்கிறீங்க" அப்படின்னு எங்க அப்பா கேட்டதுக்கு... பக்கத்துல இருந்த போலீஸ் ஒருத்தரு, கையில வச்சிருந்த லட்டியை வச்சு அப்பாவின் நெஞ்சிலையே குத்தியிருக்காரு. அங்கேயே முடிஞ்சிடுச்சி சார்... என் அப்பா உயிர் போயிடுச்சு!

வந்த போலீஸ்காரங்க பெயர் ஏதும் எனக்கு தெரியல. திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அரக்கப்பரக்க அழைச்சிக்கிட்டு வந்தோம். டாக்டர், அப்பாவை பார்த்துட்டு 'இறந்துட்டாங்க' அப்படின்னு சொல்லிட்டாரு. போலீஸ் உயர் அதிகாரிகள் சிலர் வந்து விசாரிச்சுகிட்டு போயிருக்காங்க. ஒரு நியாயமும் எங்களுக்கு கிடைக்கல, நாங்க இல்லாதப்பட்டவங்க என்பதால் யாரும் எதுவும் பண்ண மாட்டேங்கிறாங்க. அங்க வந்திருந்த போலீஸ்காரங்க கிட்ட இது சம்பந்தமாக புகார் கொடுத்தோம், ஆனா அவங்க அதை வாங்கல. அதனால, அரகண்டநல்லூர் போலீஸ் ஸ்டேஷனுக்கே நேராக போய் புகார் கொடுக்கலாம்னு இருக்கோம்" என்றார் வருத்தமாக. இந்நிலையில், திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் இருந்த உலகநாதனின் உடல், பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் - ஸ்ரீநாதா

Also Read: வருடக் கடைசி வழக்குகள்... நாடோடிப் பழங்குடியினர் மீது திணித்ததா போலீஸ்?

இதுதொடர்பாக விளக்கம் கேட்க விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதாவை தொடர்பு கொண்டு பேசினோம். "சுண்டல் போன்ற பொருட்களை விற்பனை செய்வதற்காக டாஸ்மார்க் அருகிலேயே அவர்கள் பெட்டிக்கடை மாதிரி வைத்து நடத்தி வந்துள்ளனர். உலகநாதன் என்ற நபர் மீது ஏற்கனவே வழக்குகள் இருக்கிறது. 'அங்கு கூட்டமாக இருப்பார்கள்' என்ற பொதுமக்களின் புகார்களும் இருக்கிறது. இதனால், காவல்துறை அதிகாரிகள் அங்கு சென்று 'இந்த மாதிரி கடை வைக்கக்கூடாது' என எச்சரித்துள்ளனர். அப்போது வயதான அந்த நபர், மயங்கி விழுந்துள்ளார். அவருக்கு ஏற்கனவே மாரடைப்பு போன்ற பிரச்னைகளும் இருந்துள்ளது. ஆனால், போலீஸ் அடித்தனர் என்கிறார்கள். அப்படி ஏதும் நடக்கவில்லை. அவர்கள் அளித்த புகாரையும் வாங்கியிருக்கிறோம், அதனை பதிவு செய்து கொண்டுள்ளனர்" என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/the-owner-of-the-small-shop-who-was-attacked-and-death-by-the-police-in-villupuram

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக