Ad

ஞாயிறு, 8 நவம்பர், 2020

`கழகங்களை பஞ்சராக்கும் தினகரன், சீமான், கமல் கட்சிகள்!’ - தேர்தல் நம்பர் கேம் #TNElection2021

``வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக்கும் கட்சிகளாக இருக்கப்போவது அ .ம.மு.க, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சிகளாகும். அந்தளவுக்கு, இம்மூன்று கட்சிகளும், கணிசமான வாக்கு வங்கியோடு வளர்ந்திருக்கின்றன. இந்த மூன்று கட்சிகளின் வாக்கு வங்கியை எளிதாகப் புறந்தள்ளிவிட முடியாது" - சமீபத்தில் முதல்வருக்கு உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட் இதுதான்.

இதே கருத்தையொட்டிய ரிப்போர்ட்டைத்தான் மு.க.ஸ்டாலினுக்கும் கொடுத்துள்ளார்கள் அவர்களுக்காக பிரத்யேகமாகப் பணியாற்றுகிற அணியினர். இதையொட்டியே இவர்கள் பிரிக்கும் வாக்குகள், தங்கள் முதல்வர் கனவுக்கு முட்டுக்கட்டை ஆகிவிடக் கூடாது என்று, இப்போதே அதை முறியடிக்க பல கணக்குகளை போட்டு வருகின்றனர் எடப்பாடியும், மு.க ஸ்டாலினும்...

டி. டி. வி. தினகரன்

இம்மூன்று கட்சிகளின் ஒட்டுமொத்த ஜாதகத்தையும் கையில் வைத்துக்கொண்டு, தங்கள் வியூகங்களை வகுக்கக் தொடங்கியுள்ளன அ .தி.மு.க, தி.மு.க தலைமைகள்.

சரி, ஆளும்கட்சி, ஆண்டகட்சி என இரண்டு கழகங்களும் எச்சரிக்கையோடு அணுகும் அளவுக்கு வளர்ந்துள்ளார்களா அ .ம.மு.க, நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி மய்யம்? அவர்களின் கடந்த கால வாக்குவங்கி ஏற்படுத்திய தாக்கம் என்ன? எதிர்காலத்தில் அதை முறியடிக்க எடப்பாடி மற்றும் மு.க ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச் என்ன? விரிவாக அலசுவோம்.

2019 நாடாளுமன்ற தேர்தல் வாக்கு சதவிகிதம்

அந்த மூன்று கட்சிகளையும் அலசுவதற்கு முன் ஒரு முன்னோட்டமாகக் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க மற்றும் அ .தி.மு.க கூட்டணி பெற்று வாக்கு சதவிகிதத்தைப் பார்த்தோமென்றால் புரிந்துகொள்ள வசதியாக இருக்கும்.

கடந்த மக்களவைத் தேர்தலில் தி.மு.க 33.18% வாக்குகளும், காங்கிரஸ் 12.92% வாக்குகளும், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் 4.87% வாக்குகளும், வி.சி.க 1.2% வாக்குகளும் என தி.மு.க கூட்டணி சுமார் 52% வாக்குகளைப் பெற்றது.

அதேபோல, அ.தி.மு.க 18.72% வாக்குகள், பா.ம.க 5.49% வாக்குகளும், பா.ஜ.க 3.66% வாக்குகளும், தே.மு.தி.க 2.22% வாக்குகளும் என அ .தி.மு.க கூட்டணி மொத்தமாக 30.09% வாக்குகளைப் பெற்றார்கள்.

அ.தி.மு.க தலைமை அலுவலகம்

சரி, இப்போது இந்த கூட்டணியில் இணையாமல், தனித்து தேர்தலை சந்தித்த கட்சிகளின் கணக்கைப் பாப்போம்.

தனித்துக் களம்கண்ட நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் அ.ம.மு.க 22,25,377 வாக்குகள் பெற்றது. அதாவது 5.13% வாக்குகள். நாம் தமிழர் கட்சி 16,45,222 வாக்குகளையும் (3.93%) ம.நீ.ம 3.77% , அதாவது 15,75,640 வாக்குகளும் பெற்றிருக்கிறார்கள். நோட்டா மட்டுமே 1.29% வாக்குகளைப் பெற்றது. இந்த வாக்குகளை ஒட்டுமொத்தமாக கூட்டினால் சுமார் 13% வாக்குகள் வருகிறது. நோட்டாவையும் சேர்த்தால் சுமார் 14% அதிகமான வாக்குகள். அதாவது கிட்டத்தட்ட வெற்றி வித்தியாசத்துக்கு மிக நெருக்கமாக வாக்குகளை அறுவடை செய்திருக்கிறார்கள்.

இதை வைத்துதான் அ .தி.மு.க - தி.மு.க இரண்டு கட்சிகளுமே கணக்குகளைப் போடத் தொடங்கியுள்ளனர். ஏனெனில் வெற்றி, தோல்வியை தீர்மானிப்பதில், இந்த வாக்குகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளது.

கடந்த 2016 தேர்தலில் சுமார் 1.31% வித்தியாசத்தில்தான் ஆட்சி அதிகாரத்தை இழந்தது தி.மு.க. `நாங்கள் பெற்ற 1.07% வாக்குகளும்தான், தி.மு.க-வின் அரியணை கனவைத் தகர்த்தது' என்று இப்போதும்கூட உற்சாகமாகச் சொல்லிவருகின்றனர் நாம் தமிழர் கட்சியினர். இதே காட்சிதான், கடந்த மக்களவைத் தேர்தலில் கொஞ்சம் இடம்மாறி அ .தி.மு.க-வில் அரங்கேறியது. இம்முறை நாம் தமிழரோடு அ.ம.மு.க-வும், ம.நீ.ம-வும் இணைந்துக்கொண்டனர்.

வெற்றியைப் பறித்த மூன்று கட்சிகளும், உதாரணங்களும்

இந்த மூன்று கட்சிகள் பெற்ற வாக்குகள் எந்தளவுக்கு தாக்கம் செலுத்தியுள்ளது என்பதற்கு உதாரணமாக முதல்வரின் சொந்த மாவட்டமான சேலம் தொகுதியை எடுத்துக் கொள்வோம். கடந்த மக்களவைத் தேர்தலில் தி.மு.க-வின் எஸ்.ஆர்.பார்த்திபன் 6,06,302 வாக்குகள் பெற்றார். அ.தி.மு.க-வின் சரவணனோ 4,59,376 வாக்குகள் பெற்றுள்ளார். இருவருக்குமிடையிலான வாக்கு வித்தியாசம் 1,46,926 வாக்குகளாகும் .

இங்கு, மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் பிரபு மணிகண்டன் பெற்ற 58,662 வாக்குகள், நாம் தமிழர் கட்சியின் ஏ.ராசா பெற்ற 33,890 வாக்குகள், அ .ம.மு.க-வின் எஸ்.கே செல்வம் பெற்ற 52,332 வாக்குகளையும் சேர்த்தால் மொத்தம் 1,44,884 வாக்குகள் . இங்கு நோட்டா பெற்ற 17,130 வாக்குகளும் சேர்த்தால் 1,62,014 வாக்குகள். வெற்றிபெற்ற தி.மு.க-வின் எஸ்.ஆர்.பார்த்திபன் பெற்ற அதிகப்படியான வாக்குகளை விட 15,088 அதிகம். அதாவது, அ .தி.மு.க - தி.மு.க இரு கட்சிகளுக்கு மாற்றாகப் பதிவாகும் வாக்குகளே, அந்த இரு கட்சிகளில் ஏதோ ஒரு கட்சியின் வெற்றிக்கும், மறைமுகமாகப் பங்களித்துள்ளது .

கமல் - சீமான்

சரி, இந்தப் பக்கம் தி.மு.க கூட்டணி தோல்வியடைந்த தேனி எம்.பி தொகுதி கணக்கைப் பாப்போம். இங்கு 4,28,120 வாக்குகள் பெற்ற காங்கிரஸின் ஈ .வி.கே.எஸ்.இளங்கோவனை விட 76,693 வாக்குகள் கூடுதலாக, அதாவது 5,04,813 வாக்குகள் பெற்று அ.தி.மு.க-வின் ரவீந்திரநாத் எம்.பி-யாகத் தேர்வானார். இங்கு அ .ம.மு.க வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் மட்டுமே 1,44,050 வாக்குகளைப் பெற்றார். இந்த கணக்கையும் வைத்துதான் பிற்பாடு தங்க தமிழ்ச்செல்வனை தங்கள் கட்சிக்கு தி.மு.க கொண்டு வந்துவிட்டார்களோ என்னவோ. இப்படி பல இடங்களில் அ .ம.மு.க, நா.த.க, ம.நீ,ம ஆகிய கட்சிகள், தி.மு.க - அ .தி.மு.க என இருபெரும் கட்சிகளுக்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளனர். கடந்த மக்களவைத் தேர்தலில் 12 இடங்களில் ம.நீ.ம-வும், 6 இடங்களில் நா.த.க-வும் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளன. இதில் அ .ம.மு.க-வின் பங்கு முதன்மையாக இருந்தது.

அ .தி.மு.க-வை சாய்த்த அ .ம.மு.க?

2019 மக்களவைத் தேர்தலில் அ.ம.மு.க மொத்தமாக 22,25, 377 வாக்குகள் அதாவது 5.13% வாக்குகளைப் பெற்றது. இதில் ராமநாதபுரம் - வி.டி.என் ஆனந்த், சிவகங்கை - வி.பாண்டி, தஞ்சாவூர் - முருகேசன், தேனி - தங்க தமிழ்ச்செல்வன், திருச்சி - சாருபாலா தொண்டைமான், விருதுநகர்- பரமசிவ ஐய்யப்பன் ஆகிய ஆறு பேரும் ஒரு லட்சம் வாக்குகளுக்குமேல் பெற்றுள்ளார்கள். சிதம்பரம், ராமநாதபுரத்தில் அ .தி.மு.க, அ .ம.மு.க வாக்குகளைச் சேர்த்தால் தி.மு.க கூட்டணிபெற்ற வாக்குகளை விட அதிகம்.

புள்ளிவிவரங்களைப் பாருங்கள்.

சிதம்பரம் தொகுதியில் தி.மு.க கூட்டணியில் போட்டியிட்ட தொல்.திருமாவளவன் பெற்ற வாக்குகள் - 5,00,229. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க-வின் சந்திரசேகர் பெற்ற வாக்குகள் - 4,97,010. இரு கட்சிக்கும் 3,219 வாக்குகளே வித்தியாசம். இங்கே அ .ம.மு.க-வின் ஏ.இளவரசன் மட்டுமே 62,308 வாக்குகளைப் பெற்றிருந்தார்.

திருமாவளவன்

ராமநாதபுரத்திலோ, பா.ஜ.க-வின் நயினார் நாகேந்திரன் - 3,42,821 வாக்குகள் பெற்றநிலையில், எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் கே.நவாஸ்கனி 1,27,122 வாக்குகள் கூடுதலாக, அதாவது 4,69,943 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இங்கே அ .ம.மு.க வி.டி.என் ஆனந்த் மட்டுமே 1,41,806 வாக்குகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தத் தேர்தலில் அ .ம.மு.க சொந்தச் சின்னம் இல்லாமல் போட்டியிட்டே, இந்தளவுக்கு வாக்குகளை பெற்றிருந்தது. சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால் இந்த இரண்டு எம்.பி தொகுதிகளின் தோல்வி என்பது 12 எம்.எல்.ஏ தொகுதிகளைத் தோற்றதற்கு சமம். இப்படி அ .ம.மு.க பெற்ற வாக்குகள்தான், அ .தி.மு.க தலைமைக்கு அதிகம் கவலையளிக்கக்கூடியதாக உள்ளது என்கிறார்கள் அ .தி.மு.க-வின் மூத்த நிர்வாகிகளே.

Also Read: `ஜெயலலிதா பாணியில் ஸ்டாலினுக்கும் தேர்தல் தடை!’- எடப்பாடி எடுத்த அஸ்திரம்

உளவுத்துறை கொடுத்த ஷாக் ரிப்போர்ட்

``’தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு ,சாத்தான்குளம் போன்ற சம்பவங்கள், சசிகலாவின் சிறைவாசம் போன்றவையெல்லாம் தெற்கில் உள்ள இருபெரும் சமுதாயத்தினருக்கு, ஆளும்கட்சி மீது கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. இதில், நாடார் வாக்குகளை கனிமொழி மூலம் கவரும் வேலைகளை தி.மு.க ஏற்கெனவே தொடங்கிவிட்டது. சமுதாயரீதியாக தென்தமிழகத்தில் அ .ம.மு.க-வும் வலுவாக உள்ளது. நகர்ப்புறங்களில் கமலுக்குக் கணிசமான வாக்கு வங்கியும், கிராமப்புறங்களிலும் , இளம் வாக்காளர்களின் வாக்குவங்கியும் சீமானுக்கு உள்ளது. இவையெல்லாமே வரும் தேர்தலில் அ .தி.மு.க-வுக்குக் கடும்போட்டியாக இருக்கும்’ என்று முதல்வருக்கு உளவுத்துறையும் நோட் போட்டிருக்கிறது. இதையெல்லாம் வைத்துதான் தம்முடைய வியூகங்களையும் வகுக்க தொடங்கியுள்ளார் முதல்வர்" என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

`இதேபோன்ற ஒரு ரிப்போர்ட்டைத்தான் மு.க ஸ்டாலினுக்கும், தேர்தலுக்காக பணியாற்றும் அவர்களின் பிரத்யேக அணியும் கொடுத்துள்ளார்கள்' என்கிறார்கள் அறிவாலயத்து மூத்த உடன்பிறப்புகள். இதையெல்லாம் எப்படி சரிக்கட்டப்போகிறார்கள் எடப்பாடியும், மு.க ஸ்டாலினும்?

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமியின் மெகா கணக்கு

Also Read: ``எதை எப்போ பிரிக்கணும்னு எங்களுக்குத் தெரியும்..!” - சீறிய ஸ்டாலின்; அடங்கிய நிர்வாகி!

``கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின்போது, காவல்துறையில் உயர்ந்த பொறுப்பிலிருந்தவரை வைத்து கணித மேதைபோலக் கணக்குகள் போட்டார் ஜெயலலிதா. அந்த அதிகாரி மூலம், `தனித்து ஆட்சி அமைக்கும்படி உங்கள் செல்வாக்கு கூடியுள்ளது. நீங்கள் தனிக்கூட்டணி அமைத்தால் ஆட்சியைப் பிடிக்கலாம்' என்று விஜயகாந்திடம் பேச வைத்தார் ஜெயலலிதா. அதேபோல, `உங்கள் பலத்தைத் திராவிடக் கட்சிகளுக்கு உணர்த்தும் நேரமிது' என்று தைலாபுரத்திலும் பேச வைத்தார்.

அப்போது ஜெயலலிதா நினைத்தது அனைத்தும் அரங்கேறியது. மக்கள் நலக்கூட்டணி உருவாகி கணிசமான வாக்குகளைப் பிரித்தது. பா.ம.க-வும் தன் பங்குக்கு 5.5% வாக்குகளைப் பிரித்து, தி.மு.க-வின் அரியணைக் கனவுக்கு வேட்டுவைத்தது.

அதாவது, எதிர்க்கட்சிகள் வலிமையான கூட்டணி அமைக்காதபடி பார்த்துக்கொண்டும், ஆளும்கட்சிக்கு எதிரான வாக்குகளை சிதறடிக்கும்வகையில் மற்ற கட்சிகளை மூன்றாவது அணி அமைக்க வைப்பதும், தனித்து களம் காண வைப்பதுமான ஜெயலலிதா யுக்தியைத்தான் தற்போது எடப்பாடியும் முன்னெடுக்கிறார்'’ என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான ரத்தத்தின் ரத்தங்கள்.

1) அதாவது ரஜினி, பா.ம.க, அ .ம.மு.க என எந்தவகையில் மூன்றாவது அணி அமைந்தாலும், அது ஆளும்கட்சியின் எதிர்ப்பு வாக்குகளைப் பிரிக்கும்... (ரஜினி கட்சி தொடங்கவில்லையென்றாலும், `உடல்நிலை காரணங்கள் இருக்கிறது' என்று ரஜினி சொன்னாலும், கட்சி தொடங்கமாட்டேன் என்றும் இதுவரை தெரிவிக்கவில்லை. )

அதேநேரம் அ .தி.மு.க-வுக்கென்றே மரபார்ந்து இருக்கிற வாக்கு வங்கி, நூலிழையிலேனும் அ .தி.மு.க-வை வெற்றி பெற வைக்கும். இதற்கேற்ப மக்கள் நீதி மய்யமும், `கமலை முதல்வர் வேட்பாளராக' அறிவித்துள்ளது. எனவே, அவர் தனித்து அல்லது அவர் தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையவே வாய்ப்பு. எனவே, இதை சாதகமாகவே பார்க்கிறது எடப்பாடி தரப்பு

2) அ .ம.மு.க-வால், தென் மாவட்டங்களில் ஏற்படும் சரிவை, தென் மாவட்ட சுற்றுப்பயணமும், தேர்தல் நெருங்கும்போது நாடார் சமூக பிரமுகர்களுக்குக் கொடுக்கும் தொகுதி பங்கீடும் சரிக்கட்டும் எனக் கருதுகிறார் எடப்பாடி

3) தி.மு.க-வை எதிர்ப்பதையே நாம் தமிழர் கட்சி பிரதானமாகக் கொண்டிருக்கிறது. அதனால் அ .தி.மு.க-வுக்கு பெரிய பாதிப்பு ஏற்படாது. மேலும், சீமானால் சரியும் கிராமப்புற வாக்குகளை, தன்னுடைய `விவசாயி' இமேஜ் சரிக்கட்டும் என்ற நம்பிக்கையில் உள்ளார் எடப்பாடி.

4) நகர மேம்பாடு, சாலை வசதிகள், மேம்பாலங்கள் போன்ற நகர்ப்புறம் சார்ந்த திட்டங்கள், கமலின் வாக்குகளை தன் பக்கம் திருப்பும் என உறுதியாக நம்புகிறார் முதல்வர்.

இப்படியாகத்தான் பல்வேறு கணக்குகளோடு தமது பயணத்தை முன்னெடுக்கிறார் எடப்பாடியார்' என்கிறார்கள் அ .தி.மு.க-வின் மேல்மட்டத் தலைவர்கள்.

ஸ்டாலின்

மு.க ஸ்டாலினின் மாஸ்டர் கணக்கு

1) சமீபத்தில் பச்சை துண்டு போட்டு விவசாயியாக பவனிவந்து வேளாண் சட்டங்கள் எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்தாரில்லையா... இதேபோன்று விவசாயப் பிரச்னைகளைக் கையிலெடுப்பது கிராமப்புற வாக்குகளை தி.மு.க பக்கம் திருப்பும் என அறிவாலயத் தலைமை நம்புகிறது.

2) இந்த ஆட்சியால் சிதிலமடைந்த நகரங்கள், குறிப்பாக ஒரு மழைக்கே தாங்காத சாலைகள், ஊழல்மயம் இவையெல்லாவற்றையும் வலிமையான ஆளும் கட்சியால் மட்டுமே சரி செய்ய முடியும். அந்த வலிமையான கட்சி தி.மு.கதான் எனும் தீவிர பரப்புரை.

3) `ஆளும்கட்சி மீது இயல்பாக இருக்கும் மக்களின் அதிருப்தியை அறுவடை செய்வது மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தமாக மக்கள் சந்திக்கும் அத்தனை பிரச்னைகளையும், `ஆட்சி அதிகார அனுபவமுள்ள கட்சியால் மட்டுமே தீர்க்க முடியும்' என்ற பரப்புரையை முன்னெடுப்பது. அதன்மூலம் வாக்குகள் சிதறாமல் தி.மு.க பக்கம் கொண்டு வரும் பணிகளை தொடங்கிவிட்டோம்’ என்கிறார்கள் அறிவாலயத்து உடன்பிறப்புகள்.

ஆக மொத்தத்தில் 20-20 கிரிக்கெட்டில் எப்படி ஒவ்வொரு டாட் பந்துகளும், ரன்களும் முக்கியமோ, அதுபோல 2021 தேர்தலில் ஒவ்வொரு கட்சியின் சின்ன சின்ன அசைவுகளும் கூட வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்க கூடிய வலிமையான ஒன்றாக இருக்கும் என்றால் மிகையில்லை.

சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால் டி.டி.வி. தினகரன், சீமான், கமல் ஆகியோரின் கட்சிகளுக்குக் கிடைக்கும் வாக்குகளே, 2021-ல் யார் முதல்வர் என்பதைத் தீர்மானிப்பதாக இருக்கும் என்பதையே ரிப்போர்ட் உணர்த்துகிறது.

இந்த கணக்குகள் எல்லாவற்றையும் மக்கள் கவனித்தே வருகிறார்கள். பல நேரங்களில் பிரதானக் கட்சிகளின் புரிதல்களை உடைக்கும் புதிராகவும் இருந்துள்ளது மக்கள் கணக்கு.

வெயிட் அண்ட் வாட்ச்...!



source https://www.vikatan.com/government-and-politics/politics/ttv-dinakaran-seeman-kamal-parties-role-in-2021-assembly-election-analysis

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக