Ad

ஞாயிறு, 29 நவம்பர், 2020

மதுரை: `ஓட்டுக்காகக் கண்மாய் நீரைத் தடுக்கும் தி.மு.க எம்.எல்.ஏ?’-கொதிக்கும் மக்கள்!

மதுரை வடக்கு தாலுகாவில் அமைந்துள்ளது சிறுதூர் கிராமம். இங்கு சிறுதூர் பெரிய கண்மாய் மற்றும் சின்னக் கண்மாய் அமைந்துள்ளது. கடந்த 25 வருடமாக சிறுதூர் பெரிய கண்மாயில் தண்ணீர் நிறைந்ததும், சின்னக் கண்மாய்க்கு மடையின் வழியாக தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்தாண்டு நல்ல மழைப் பொழிவு இருந்ததால், பெரிய கண்மாய் விரைவாக நிறைந்துவிட்டது. இதனால் பெரிய கண்மாயின் மடையைத் திறந்து சின்ன கண்மாய்க்கு நீர் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால், தற்போது கண்மாய் முழுமையாக நிரம்பி உடையும் தருவாயில் இருக்கும் போதும் அரசியல் ஆதாயத்துக்காக தி.மு.க-வின் மதுரை கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ மூர்த்தி தலைமையில் ஒரு சொட்டு தண்ணீர் செல்ல முடியாத அளவிற்கு மணல் மூடையை வைத்து அடைத்துவிட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

சிறுதூர் கண்மாய் மடை

இது குறித்து சிறுதூரைச் சேர்ந்த ஏ.சி.கோபால கிருஷ்ணனன் கூறுகையில், ``சிறுதூர் சின்னக் கண்மாய் பாசனப் பகுதியில் 5,000 குடியிருப்புகள் உள்ளன. இந்த கண்மாய் நிறைந்தால்தான் இப்பகுதி மக்களுக்கு நிலத்தடி நீர் பெருகி தண்ணீர் தேவை பூர்த்தி செய்ய முடியும். ஆனால், பெரிய கண்மாய் நிரைந்தும் சின்னக் கண்மாய்க்கு தண்ணீர் திறக்காமல் 500-க்கும் மேற்பட்ட மணல் மூடையை அடைத்து அரசியல் அதிகாரத்தை காட்டுகின்றனர். தி.மு.க நிர்வாகிகளுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என மூர்த்தி எம்.எல்.ஏ இவ்வாறு செய்கிறார். ஓட்டு அரசியலுக்காக தண்ணீரைத் திறக்காமல் மூடை வைத்து அடைக்கிறார் தி.மு.க எம்.எல்.ஏ மூர்த்தி. அதிகாரிகளிடம் கேட்டால், `மூர்த்தி எங்களையும் மிரட்டுகிறார் நாங்கள் என்ன செய்வது?’ என்று புலம்புகின்றனர். எனவே, சின்ன கண்மாய்க்கு வரும் நீர்வழிப்பாதையை தூர்வாரி சின்ன கண்மாய்க்கு தண்ணீரை திறந்துவிட வேண்டும்" என்றார்.

இது குறித்து எம்.எல்.ஏ மூர்த்தியிடம் கேட்டோம். ``மதுரை மாநகராட்சிக்குட்பட்ட கண்மாய்களில் குடிநீர் ஆதாரத்துக்காக ஏலம் விடக்கூடாது என்று ஸ்டே வாங்கியுள்ளோம். ஆனால் சிறுதூர் சின்ன கண்மாயில், மீன் வளர்ப்புக்காக சிலர் அனுமதியில்லாமல் பெரிய கண்மாயில் தண்ணீரைத் திறந்து வந்துள்ளனர். சின்னக் கண்மாய்க்கு மேலூர் டிவிசன் நீர்தான் செல்லவேண்டும். பெரிய கண்மாயில் இருந்து சின்னக் கண்மாய்க்கு நீர் செல்ல வேண்டும் என்பது லீகல் கிடையாது. ஆனாலும், ஒரு மனிதாப அடிப்படையில் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டுள்ளது. தற்போது அங்கு தண்ணீர் செல்லவில்லை என்று என்னைக் குற்றம்சாட்டுகின்றனர். அது உண்மையில்லை. நான் எல்லால் கண்மாய்களும் நிறைய வேண்டும் என்றுதான் நினைப்பேன்.

எம்.எல்.ஏ மூர்த்தி

சிறுதூர் சின்னக் கண்மாயும் என்னுடைய தொகுதியில்தான் உள்ளது. அதனால், நான் அந்த கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு செல்லக் கூடாது என்றெல்லாம் சொல்ல மாட்டேன். அதிகபட்சம் 2 நாள்களுக்குள் சின்னக் கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும். என்மீது பொய்யான குற்றச்சாட்டுகள் பரப்பப்படுகிறது” என்றார்.

பொதுப் பணித்துறை துணைப் பொறியாளர் போஸிடம் கேட்டபோது, ``சிறுதூர் சின்னக் கண்மாய்க்கு பெரியார் மெயின் கேனல் 5-வது கிளைக் கால்வாய் மூலம்தான் தண்ணீர் வந்தடையும். எனினும், பெரிய கண்மாயில் அதிக நீர் இருப்பதால் தண்ணீர் சின்னக் கண்மாய்க்கு கொடுக்க முயற்சி எடுக்கிறோம்" என்றார்.



source https://www.vikatan.com/news/politics/dmk-mla-ak-moorthy-drags-into-controversy-over-madurai-village-water-sharing

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக