Ad

வெள்ளி, 27 நவம்பர், 2020

`எல்லாரும் நண்பர்கள்தான்... எதிரிகளல்ல!’ - உதயநிதி ஸ்டாலினுடனான சந்திப்பு குறித்து எஸ்.வி.சேகர்

தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினை, எஸ்.வி.சேகர் இன்று சந்தித்திருக்கிறார். இதையடுத்து, தி.மு.க-வில் இணையப்போகிறார் எஸ்.வி.சேகர், உதயநிதி நடிக்கும் படத்தில் நடிக்கப்போகிறார் என பல்வேறு தகவல்கள் வட்டமடித்தன. என்ன நடந்தது என அவரிடமே பேசினோம்.

எஸ்.வி.சேகர்

``நாம பரபரப்பான ஆள்தானங்க. அதுதான் எதையாவது சமூக வலைதளங்களில் எழுதிட்டு இருப்பாங்க...’’ என்றவரிடம், `திடீரென உதயநிதி ஸ்டாலினைச் சந்தித்தது ஏன்?’ என்று கேட்டோம்.

``சமீபத்தில் 2020-22-ஆம் ஆண்டுக்கான தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் நடந்தது. அதில், தலைவராக தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி பெற்றார். இந்த குழுவுக்கு ஒரு ஆலோசகர்போல் நான் செயல்பட்டேன். அந்த அணி வெற்றி பெற்றவுடன், முதலமைச்சர், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை முரளி உள்ளிட்ட கமிட்டி உறுப்பினர்கள் சந்திக்கச் சென்றார்கள். அவர்களுடன் நானும் சென்றேன்."

``உதயநிதி என்ன சொன்னார்?"

``நாங்கள் சென்றபிறகுதான் தெரிந்தது. இன்று அவரது பிறந்தநாள் என்று... வாழ்த்துகளைச் சொன்னோம். என்னிடம், `என்ன சார் வெயிட் போட்டுட்டீங்கபோல...'னு கேட்டார். `ரொம்ப நாள் கழித்துப் பார்ப்பதால், அப்படி தெரியுது’னு சொன்னேன். அவருடன் ஒரு படமும் நடிக்கிறேன். ஹீரோவுக்கு வாழ்த்தும் சொல்லிவிட்டு வந்தேன். எனக்கு எல்லோரும் நண்பர்கள்தானே தவிர எதிரிகள் இல்லை. அவ்வளவுதான்."

எஸ்.வி.சேகர் - உதயநிதி ஸ்டாலின்

``ஆனால், இந்த குழு முதலமைச்சரைச் சந்திக்கும்போது, நீங்கள் செல்லவில்லையே?"

``ஆமாம். அவர்கள் முதல்வரைச் சந்திக்கச் செல்ல இருந்தது, இறுதி நேரத்தில்தான் எனக்குத் தெரியும். அவர்கள் சொன்னபின் கிளம்பிச் சென்று இருந்தாலும், அதற்குள் அந்த மீட்டிங்கே முடிந்திருக்கும். அதனால், முதலமைச்சரைப் பார்க்கச் செல்லவில்லை."

Also Read: `வாழ்நாள் முழுவதும் அவமதிக்க மாட்டேன்!' - மன்னிப்புக் கேட்ட எஸ்.வி.சேகர்

``கட்சி மாறப்போகிறீர்கள் என்ற தகவல் அடிக்கடி வருகிறதே?"

"நான் எந்தக் கட்சியும் மாறினதே இல்லை. கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவன். ஒரு கதவு சாத்தும்போது, பல கதவுகள் திறக்கின்றன. என் சுயநலத்துக்காக, நான் எங்கேயும் மாறினது இல்லை. எந்த கட்சிக்குப் போனாலும் நாம சம்பாதிக்கப்போவதில்லை. அதனால், எந்த கட்சிக்குப் போய் என்ன பயன்? மக்கள் நலனே எனக்கு முக்கியம்."

இந்தநிலையில், தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெற்றிபெற்ற குழுவுடன் சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலினையும் எஸ்.வி.சேகர் சந்தித்துப் பேசியிருக்கிறார்.


source https://www.vikatan.com/news/politics/s-ve-shekher-speaks-about-udhayanidhi-stalin-meeting

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக