Ad

திங்கள், 30 நவம்பர், 2020

திருவாரூர்: இரண்டு விரல்களைக் காட்டிய சிறுவன் - மடக்கிய உதயநிதி ஸ்டாலின்!

தி.மு.க இளைஞரணிச் செயலாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின், `விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற பெயரில் காவிரி டெல்டா மாவட்டங்களில் தேர்தல் பிரசார சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வடுவூரில் உள்ள உள் விளையாட்டரங்கில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கட்சி நிவாகிகள், ஊர் மக்கள், விளையாட்டு வீரர்கள் என ஏராளமானவர்கள் கூடியிருந்த நிலையில், உதயநிதி ஸ்டாலினை நோக்கி சிறுவர்கள் உற்சாகமாக கை அசைத்தார்கள். அப்போது ஒரு சிறுவனின் கையை, உதயநிதி ஸ்டாலின் சிரித்துக் கொண்டே மடக்கிப் பிடித்தார். இந்த வீடியோவை அ.தி.மு.க-வினர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள்.

உதயநிதி ஸ்டாலின்

தஞ்சை, திருவாருர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள உதயநிதி ஸ்டாலின், விவசாயிகள், வணிகர்கள், மாணவர்கள் என பல தரப்பினரையும் சந்தித்து வருகிறார். வயல்களில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயத் தொழிலாளர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். நேற்று மன்னார்குடி அருகே உள்ள வடுவூருக்கு சென்றார். இது விளையாட்டு வீரர்கள் அதிகம் நிறைந்த கிராமமாகும். இங்குள்ள உள் விளையாட்டரங்கில் ஏராளமான விளையாட்டு வீரர்கள், கட்சி நிர்வாகிகள், ஊர் மக்கள் என பலரும் கூடியிருந்தனர். மரக்கன்று நடவு செய்து விட்டு, விளையாட்டு அரங்கின் உள்ளே சென்றார் உதயநிதி ஸ்டாலின். இவர் பார்வையிடுவதற்காக, சிலம்பாட்டம், கபடி, ஸ்கேட்டிங் உள்ளிட்ட விளையாட்டுகள் நடத்தப்பட்டன.

Also Read: நிவர் புயல்: `தஞ்சாவூரில்தான் மீண்டும் பயணம் தொடங்கும்!’ - உதயநிதி ஸ்டாலின்

மரம் வளர்ப்பில் ஈடுபட்டு வரும் கிரின் நீடா, மகிழங்காடு மக்கள் மன்றம், மன்னார்குடி பசுமை கரங்கள், அறம் அமைப்பு, அத்தானியர் இளைஞர் மன்றம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பனை உள்ளிட்ட விதைகளையும் வழங்கி உற்சாகப்படுத்தினார். இந்நிகழ்வின் போது மன்னார்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா, திருவாரூர் மாவட்ட தி.மு.க செயலாளர் பூண்டி கலைவாணன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தார்கள்.

இந்நிகழ்வில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ``பிரசாரத்துக்கு செல்லும் இடமெல்லாம், பொதுமக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்ப்பது தெரிகிறது. அமைச்சர் துரைக்கண்ணு விவகாரத்தை பேசத் தொடங்கியதுமே 800 கோடி என மக்கள் குரல் எழுப்புகிறார்கள். அந்த அளவுக்கு இந்த ஆட்சியைப் புரிந்து வைத்துள்ளார்கள். மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகள் சங்க நிர்வாகிகள் என்னிடம் மனு அளித்துள்ளார்கள். இவற்றை தலைவர் ஸ்டாலினிடம் ஒப்படைப்பேன். இச்சட்டங்களை ரத்து செய்யக்கோரி கட்சித் தலைமை அறிவிக்கும். வரும் தேர்தல், ஆட்சி மாற்றத்துக்கான தேர்தலாக அமையும்’’ என தெரிவித்தார்.

அங்கு கூடியிருந்த விளையாட்டு வீரர்கள், சிறுவர்கள் என பல தரப்பினரும் உதயநிதி ஸ்டாலினை நோக்கி உற்சாகமாக கை அசைத்தார்கள். இவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டிருந்தபோது, ஒரு சிறுவன் மிகுந்த உற்சாகத்தோடு இரண்டு விரல்களை மட்டும் காட்டி கை அசைத்தான். அது இரட்டை இலை சின்னத்தைக் குறிக்கும் என்பதால், சிரித்துக் கொண்டே, அவனது கையை மடக்கி சமாளித்தார் உதயநிதி ஸ்டாலின். இந்த வீடியோவை அ.தி.மு.க-வினர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள்.



source https://www.vikatan.com/news/politics/udhayanidhi-stalin-speaks-about-various-issues-in-vaduvur

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக