பிக்பாஸ் முதல் சீஸனில் ‘அஞ்சு செகண்ட் முன்னாடி’ என்று ஜூலி அனத்திய காட்சி… காயத்ரி ரகுராம் சொன்ன சர்ச்சையான வார்த்தையை தன் தலைமுடியைத் தொட்டு கமல் உணர்த்திய காட்சி... இவற்றையெல்லாம் சற்று நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள். இவை தொடர்பான எபிஸோடுகளில் எல்லாம் கமலின் குறுக்கு விசாரணைகளில் அனல் பறந்தது. இரண்டாம், மூன்றாம் சீஸன்களில் கூட அப்படி சில காட்சிகளை உதாரணம் சொல்ல முடியும்.
ஆனால் நான்காவது சீஸனில் இப்படி குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விசாரணைக் காட்சி ஏதும் இதுவரை நிகழவில்லை. வெண்டைக்காய் சாம்பாராகத்தான் நடந்து கொண்டிருக்கிறது.
அதே சமயத்தில் கமல் எதையும் தடாலடியாக செய்து விடக்கூடியவரல்ல. மிகுந்த நிதானமும் மனமுதிர்ச்சியும் கொண்டவர். போட்டியாளர்கள் செய்த பிழைகளை வலிக்காமல் அதே சமயத்தில் அழுத்தமாக சுட்டிக் காட்டும் வழக்கம் கொண்டவர். இதற்காக அவர் விரிக்கும் வலையும் அதற்கான உத்தியும் அத்தனை சுவாரஸ்யமாக இருக்கும்.
என்றாலும் இதுவரை இந்த சீஸனில் அப்படியொரு மகத்தான காட்சிகள் வரவில்லை என்பதை சொல்லத்தான் வேண்டியிருக்கிறது.
சரி, 35-வது நாளில் என்ன நடந்தது என்ன?!
வாத்தியார் தலைமறைந்ததும் பையன்கள் மறுபடியும் குடுமிப்பிடிச் சண்டையை ஆரம்பிப்பது போல பாலாஜியும் ஆரியும் கமல் சென்ற பிறகு மறுபடியும் சூடான வாக்குவாதத்தில் இறங்கினார்கள். இதுவரை பாலாஜியை யாரும் இத்தனை கடுமையாக எதிர்க்கத் துணியவில்லை. ‘பொறுத்தது போதும்.. பொங்கியெழு’ பாணியில் ஆரி இப்போது அதைச் செய்வது மகிழ்ச்சி.
ஒரு கட்டத்தில் ஆரிக்கு சார்பாக சனம் எதையோ சொல்லப் போக, எரிச்சல் அடைந்த பாலாஜி, டைனிங் டேபிள் சேரை தள்ளிவிட்டுப் போக அது உடைந்தது. (அந்த வீட்ல சேரும் செட்டப்பா?!) “ஏற்கெனவே அவிய்ங்களுக்கும் நமக்கும் வாய்க்கா தகராறு இருக்கு... ஏம்ப்பா கையைப்பிடிச்சு இழுத்தே?” என்று சனம் அமைதியாக இருந்திருக்கலாம். அதே சமயத்தில் பாலாஜியும் இத்தனை மிகையாக எதிர்வினை காட்டியிருக்கத் தேவையில்லை.
‘நான் பொய் சொல்லலை’ என்று ‘வார்னிங்’ மேட்டரில் மறுபடி மறுபடி பாலாஜி மல்லுக்கட்டிய போது ‘ஆஹா… இப்போதாவது குறும்படம் இருக்கும் போல’ என்று ஒரு நப்பாசை எழுந்தது. ம்ஹூம்... ஏதும் நிகழவில்லை.
‘நான் பொய் சொல்லலை’ என்கிற வசனத்தை கத்தி சனமும் சொல்லி பொங்கியது நினைவு இருக்கலாம். (அதென்னமோ... பாலாஜிக்கும் சனத்திற்கும் வசனத்தில் கூட ஒற்றுமை அமைந்து அப்படியொரு ராசி மேட்ச் ஆகிறது).
கமல் என்ட்ரி. எவ்வித முன்னுரையும் இல்லாமல் நேரடியாக அகம் டிவிக்குள் அவர் நுழைந்த போது ‘ஆஹா... நேத்திக்குதான் பிறந்த நாள்ல முடிஞ்சது... இன்னிக்கு வெச்சி வெளுக்கப் போறாரு’ என்று நினைக்கத் தோன்றியது. போதாதற்கு வக்கீல் டிரஸ் வேறு. நாம் நினைத்ததையே ரம்யாவும் புன்னகையுடன் கேட்டுவிட்டார்.
“வைல்ட் கார்ட் என்ட்ரி எப்பவுமே லேட்டா நடக்கும். இந்த முறை சீக்கிரமா நடந்துச்சு... அப்படி வர்றவங்க ஜோதில ஐக்கியமாவதற்கு தாமதம் ஆகும். ஆனா நீங்க சீக்கிரம் வந்ததாலோ என்னமோ உடனே ஜெல் ஆயிட்டிங்க" என்பது போல் அர்ச்சனாவையும் சுச்சியையும் பாராட்டினார்.
இதில் அர்ச்சனாவின் கிரெடிட் ஓகே. ஆனா ‘செம ஹாட் மச்சி’ என்று ஆர்ப்பாட்டமாக நுழைந்த சுச்சி, பிறகு அப்படியே ஆறிப் போய் ஓய்வு பெற்ற நீதிபதியாக மாறிவிட்டார்.
“ஆஹா... உள்ளே வரும் போது மெசேஜ் சொல்ல மறந்துட்டேனே" என்று கமல் நினைத்துக் கொண்டாரோ என்னவோ... வருகிற தீபாவளியை மாசில்லாத பண்டிகையாக கொண்டாட வேண்டியதின் அவசியம் பற்றி பேசினார். உண்மைதான். பட்டாசினால் காற்றில் ஏற்படும் மாசு என்பது கொரோனோ சூழ்நிலையில் மேலதிக ஆபத்துக்களை ஏற்படுத்தும். ‘மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை பயன்படுத்தலாம்’ என்கிற தீர்வையும் இதற்குச் சொன்னார் கமல்.
'‘வழக்காடு மன்றத்தில் நீதி கிடைத்ததா?'’ என்று கமல் முதல் பஞ்சாயத்தை தூசு தட்டி ஆரம்பித்தவுடன், "பாலாஜி லெஃப்ட் பக்கம் கை காண்பிச்சு ரைட் இண்டிகேட்டரை போட்டு நேரா போனாரு சார்... சனத்திற்கு எதிராகவும் பேசினாரு... ஆதரவாகவும் பேசினாரு" என்று மூச்சு விடாமல் ஆரி ப்ரோ விளக்கம் கொடுக்க ஆரம்பிக்க, "இருங்க பாஸூ... மத்தவங்க கருத்துக்களையும் கேட்போம்” என்றார் கமல். "அவுஹ... கருத்துச் சுதந்திரத்திற்காகத்தான் போராடினாக... எனக்காக இல்லை..." என்றார் சனம்.
“பெரும்பான்மையான கருத்து என்பது நீதியா... நேர்மைக்கு ஒருவழிதானே உண்டு?” என்று சுச்சியை நோக்கி அம்பை கமல் வீச மக்கள் கைதட்டினார்கள். “நான் வெளியில் இருந்துதான் இவர்களைப் பார்த்திருக்கிறேன். உள்ளே இருப்பவர்களின் எண்ணங்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கத்தான் அதைப் பயன்படுத்தினேன்” என்று சுச்சி விளக்க "தீர்ப்பிற்கு அதை எவிடென்ஸா எடுத்துக்கலை... இல்லையா?" என்று கமலே எடுத்துக் கொடுக்க, ‘'ஆமாங்க யுவர் ஆனர்’' என்று சொல்லி எஸ்கேப் ஆனார் சுச்சி.
ஆதரவாளர்கள் பெரும்பான்மையாக இருந்தால் அந்தப் பக்கம் நீதி என்பதைப் போல் மோசமான வழிமுறை ஏதுமில்லை. "திருடன் பரபாஸை விடுதலை செய்யுங்கள்... யேசுவை சிலுவையில் அறையுங்கள்" என்று இதேப்போல் பெரும்பான்மைக் கூட்டம்தான் ஒரு காலத்தில் கத்தியது.
“கேப்ரியல்லா... உங்களுக்கு பேச வருமான்னு செக் பண்ணேன். நான் வரும்போதெல்லாம் பேசவே மாட்டேங்கறீங்க” என்று கேபியின் பக்கம் மைக்கை நீட்டினார் கமல். இதற்கு முன்பாக ஷிவானி, ரமேஷ் பக்கம்தான் அவர் மைக்கை நீட்டியிருக்க வேண்டும். விசாரணை சபையில் இவர்கள் ஒருமுறை கூட வாய் திறந்தது போல் நினைவில்லை.
மீண்டும் சுச்சியின் பக்கம் வண்டியைத் திருப்பிய கமல் “நீதிமன்றத்தில் சம்யுக்தா, பாலாஜி ஆகியவர்களுக்கு சலுகை காட்டப்பட்டது போல் தெரிந்ததே?" என்றதும் “ஆமாங்க... அவங்க கேப்டன்” என்றார் சுச்சி அபத்தமாக. “என்னைக் கூட 'வெளியே போ’ன்னு சொல்லிட்டாங்க” என்று சிணுங்கினார் சனம். பாலாஜி கொட்டாவி விட்டாராம், ரகசியம் பேசினாராம்... அப்ப கூட ஜட்ஜ் அம்மா எதுவும் சொல்லலையாம்.
“மத்தவங்க சொன்னவுடனே கேட்டாங்க... சனம்தான் தொடர்ந்து கலாட்டா பண்ணிட்டே இருந்தாங்க” என்று விளக்கம் அளித்தார் சுச்சி. “ 'எதுவா இருந்தாலும் இங்க வந்து பேசுங்க தம்பி...' என்று ஆரி பாலாஜியை கண்டித்து சொன்னதை நீதிபதியல்லவா செய்திருக்க வேண்டும்?" என்பதும் கமலின் வலிக்காத குற்றச்சாட்டு.
மறுபடியும் அகம் டிவி வழியாக வந்த கமல், “ஆரி, என்ன இருந்தாலும்... நீங்க செஞ்சது தப்புதான். சம்யுக்தாவை நோக்கி நீங்க அப்படி பேசியிருக்கக்கூடாது’' என்று திடீரென சொல்ல, “நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்... வார்த்தைகளைவிட உணர்வுதான் முக்கியம் என்பதை இந்த உலகிற்குத் தெரிவிக்கவே அப்படி நடந்து கொண்டேன்” என்று சொல்லிவிட்டு சம்யுக்தாவிடம் மன்னிப்பு கோரினார். இந்த விவகாரத்தில் ஏற்கெனவே குற்றவுணர்வு கொண்டிருந்த ஆரி, கமலின் தீர்ப்பு நாளிற்காகத்தான் காத்துக் கொண்டிருந்தார்.
சனத்திற்கு ஆதரவாக குரல் தந்த நிஷாவைப் பாராட்டினார் கமல். சம்யுக்தாவிற்கு ஆதரவாக நீதிபதி பாரபட்சமாக நடந்து கொண்ட விதத்தை இதற்கிடையில் சுட்டிக் காட்டினார் சுரேஷ். “நான் அங்க ஒரு ஹவுஸ்மேட்டதான் பேசினேன். கேப்டனா இல்லை” என்று சம்யுக்தா சொல்ல ‘'நான் சம்யுக்தா சொன்னதை கேப்டன் சொன்னதா எடுத்துக்கிட்டேன்'’ என்று சுச்சி சொல்ல ஒரே கஷ்டமப்பா...
இறுதியில்தான் சுச்சியின் ‘நீதி’ ரகசியம் வெளியே வந்தது. அவர்தான் என்னதான் கறாராக நீதிபதியாக நடந்து கொள்ள முயன்றாலும் ‘மீதி நாட்களை இவங்களோடுதான் குப்பை கொட்டியாகணும்’ என்பதால் அன்போடு அடக்கி வாசித்தாராம்.
“நான் செஞ்ச பேப்பர் வொர்க்லாம் பார்த்திருப்பீங்க” என்று சுச்சி சொல்ல. 'ஆமாம்... சுப்ரீம் கோர்ட்ல அதை ரெஃப்ரன்ஸூக்காக வாங்கிட்டு போயிருக்காங்க’ என்பதுபோல் பாராட்டினார் கமல்.
“உங்களை விடவும் பெரிய நீதிபதி வெளியே பார்த்துக்கிட்டிருக்காங்க... மக்கள்! நான் தப்பு செஞ்சா கூட கண்டுபிடிச்சுடுவாங்க... பொல்லாதவங்க" என்று மக்களுக்கு ஐஸ் வைத்தார் கமல். (ஆனால் பப்ளிக் தரும் வாக்குகள் படிதான் முடிவுகள் அமையுதான்ற சந்தேகம் ஒவ்வொரு சீஸன்லயும் வந்துட்டுதான் இருக்கு... யுவர் ஆனர்).
ரியோவும் ரம்யாவும் தங்களின் வழக்கறிஞர் பணியை செவ்வனே செய்ததாக கமல் பாராட்ட, “பஸ்ல போகும் போது டிக்கெட் வாங்காம மாட்டிக்கிட்டீங்கன்னா. எனக்கொரு போன் பண்ணுங்க சார் வந்து காப்பாத்தறேன்” என்று பழம் தின்று கொட்டை போட்ட வக்கீல் மாதிரி கெத்தாக முன்வந்தார் ரம்யா. “எங்க வீட்லயே வக்கீலுங்க அதிகம். நாங்க பார்த்துக்கறோம்" என்றார் கமல்.
“ரியோ.. .இப்பத்தான் வாயைத் திறந்து பேச ஆரம்பிச்சிருக்கீங்க. நல்லா இருந்தது” என்று கமல் பாராட்ட "நானா...” என்று குழம்பிப் போய் தலையைச் சொறிந்தார் ரியோ.
அடுத்ததாக நீதிமன்றத்தில் அனந்த சயனத்தில் சாய்ந்திருந்த ‘பார்வையாளரை’ நோக்கி வந்தார் கமல். அது ரமேஷ். ‘'ஒரே கூட்டமா இருந்ததுங்கய்யா. என்னை தள்ளி விட்டுட்டாங்க’' என்று ஏதோ நெரிசலாக இருந்த சினிமா டிக்கெட் கவுன்ட்டரில் இடிபட்டவரைப் போல வெள்ளந்தி விளக்கம் அளித்தார் ரமேஷ். “இதுவும் உங்க ஸ்ட்ராட்டஜியா?" என்று கேட்கப்பட்டதற்கு "அப்படின்னா என்னங்கய்யா?" என்றார். (இவரெல்லாம் எப்படி எவிக்ஷன் பட்டியலில் தப்பிக்கிறார்?!)
அடுத்ததாக ரியோ பக்கம் வந்தார் கமல். “நிஷா தொடர்பாக சுச்சி கொடுத்த டிப்ஸை வெச்சு ஒரு கேஸ் போட்டேங்கய்யா... ஆனா நான் போட்ட ஸ்கெட்சு நிஷாவுக்கு இல்ல. அது நீதிபதி அம்மாவிற்குதான். நிஷாவின் சிறப்புகளை உலகிற்கும் நீதிபதிக்கும் உணர்த்தவே அப்படியொரு ஸ்கெட்ச் போட்டு வெளையாண்டேன்” என்று ரியோ விளக்கம் அளிக்க, இதற்கு சுச்சி தந்த ஒரு எக்ஸ்பிரஷனை விளக்க வார்த்தைகள் இல்லை.
“இந்த சீஸன் போட்டியாளர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். மேடையில் இதை உங்களுக்குச் சொன்னேன். வந்த நாளிலேயே வெளிப்படையாக என் அபிப்ராயங்களை வீட்டுக்குள் சொன்னேன்’ என்ற சுச்சி, "அனிதா கிட்ட கேட்டுப் பாருங்க.. அவங்களைப் பத்தி கூட சரியா சொன்னேன்” என்றார். (எதெ? 'அனிதா அழுவறதுக்கு மக்கள் எரிச்சல் அடையலை’ன்றது சரியான கருத்தா?!).
நீதிபதியே உளறிக் கொட்டி மாட்டிக் கொண்ட விந்தையும் பிறகு நடந்தது. ‘இந்த வீட்டில் சில மாற்றங்களை ஏற்படுத்த விரும்புகிறேன்’ என்பதுதான் சுச்சி நிகழ்ச்சிக்குள் நுழையும் போது சொன்ன வாசகம். இதை கமல் சொன்னதாக அவர் குழப்பியடித்தவுடன் ‘மக்களே... நீங்கதான் சாட்சி’ என்று கேமராவின் முன்பு ஜாலியாக சரணாகதி அடைந்தார் கமல்.
“இப்படி நீங்க சொன்னது ஸ்பாய்லர் ஆயிடாதா?” என்று கமல் கேட்டதற்கு ‘'அது விளையாட்டை இன்னமும் வலுவாக்கும் என்று நினைத்தேன்'’ என்று சுச்சி சொன்ன பதிலை அரைமனதாக ஏற்றுக் கொண்டார் கமல்.
எவிக்ஷனுக்காக நாமினேட் ஆகியிருக்கும் எழுவரை ஒன்றாக அமர வைத்த கமல், ஆர்.ஜே-வாக சிறப்பாக செயலாற்றிய அர்ச்சனாவைப் பாராட்ட அப்போதே தெரிந்து விட்டது, அர்ச்சனா காப்பாற்றப்பட்டார் என்று. “சனி & ஞாயிறு பஞ்சாயத்து தொடர்பா ஒரே குடுமிப்பிடி சண்டை நடக்கும்... எனக்கு இங்க தூக்கமே வராது” என்று அர்ச்சனா தன் சோகக்கதையை சொல்ல “அப்ப நான் வர்ற நாள்லதான் குழப்பம் நடக்குதுன்னு சொல்ல வர்றீங்களா?” என்று இடக்காக கமல் கேட்க அர்ச்சனா விழுந்து விழுந்து சிரித்தார். “நீங்க அடிச்சுக்கறது வெளில தெரியுதா–ன்னு கேட்காதீங்க... அது எனக்குத் தெரியாது.”
**
வாரம் ஒரு புத்தக அறிமுகம்:
அது ரா.கி.ரங்கராஜன் எழுதிய ‘அடிமையின் காதல்’ என்கிற நூல். ‘மோகினி’ என்கிற புனைபெயரில் ரங்கராஜன் எழுதியதுதான் ‘அடிமையின் காதல்’. கமல் இளமையில் மிக விரும்பிப் படித்த நாவலாம் இது.
‘மகாநதி’ திரைப்படத்திற்காக ரங்கராஜன் பணியாற்ற அரைமனதாக வந்தபோது அவரிடம் பேசிக் கொண்டிருந்த கமல், தான் இளமையில் மிகவும் ரசித்து வாசித்த ‘மோகினி’ எழுதிய நாவலைப் பற்றி விவரிக்க ‘நான்தான் அந்த மோகினி’ என்று சொல்லி ஆச்சர்யப்படுத்தினாராம் ரா.கி.ர. “நல்லவனுக்கு கிடைக்க வேண்டிய அத்தனை மரியாதையும் கெட்டவனுக்கு கெடைச்சுடுது" என்கிற 'மகாநதி' வசனத்தை எழுதியவரும் இவர்தானாம்.
மறுபடியும் அகம் டிவி வழியாக கமல் வந்த போது, அடுத்து எவிக்ஷன் பிராசஸிற்கு நகர்வார் என்று பார்த்தால் பாலாஜி பேச விரும்பினார். "என் மேல நெறய குற்றச்சாட்டுக்கள் சொல்றாங்க. நான் கோபம் வந்தா பத்து நிமிஷத்துல மறந்துடுவேன். எதையும் சுமக்கறது கிடையாது. இந்த சனம் பொண்ணுகிட்ட சங்காத்தமே வேணாம்னு ஒதுங்கி இருந்தேன். ஆனா அது வாலன்ட்ட்டியரா சாட்சி சொல்ல வந்து இரிடேட் பண்ணுது” என்று புகார் பட்டியலை வாசித்து தானாக வந்து மாட்டிக் கொண்டார் பாலாஜி.
இதற்கு சனம் பதிலளிக்க எழுந்து "சொல்ல வேண்டாம்னுதான் பார்த்தேன். நான் சாட்சி சொல்ல வந்த போது கோபத்துல பாலாஜி சேரை உடைச்சிட்டாரு” என்றார். (ஆமாப்பா.. கார்பென்ட்டர் பில் எழுநூறு ரூபா ஆயிடுச்சு... சோகத்துடன் பிக்பாஸ் மைண்ட் வாய்ஸ்).
“மைக்கை கழட்டிப் போடறது, சேரை உடைக்கறது இதெல்லாம் சிறுபிள்ளைத்தனம். நீங்க வீரத்தைக் காண்பிக்கணும்னா சோம் கிட்ட மார்ஷியல் ஆர்ட்ஸ் பண்ணுங்க” என்று பச்சைப் பிள்ளையாக அமர்ந்திருந்த சோமை கமல் கோத்துவிட, “ஏன் சாமி. வெளியே அனுப்பணும்னா கூட நான் போயிடறேன். அவனை ஏன் என் மேல ஏவி விடறீங்க?” என்று சோம் மனதிற்குள் பீதியுடன் அழுதிருக்கலாம்.
“ஏம்மா... நீ பேசவே மாட்டேன்ற?” என்று கேபியை நோக்கி முன்னர் கமல் கேட்டு விட்டதாலோ என்னமோ... "அங்கிள் நான் ஒண்ணு சொல்லணும்” என்று கையைத் தூக்கினார் கேபி. என்னவென்று விசாரித்தால், "தாத்தா மேல போட்ட கேஸ். லுலுவாய்க்காம்... வேற ஆளே கெடக்கலையாம்” (அடப்பாவிகளா.. மனுஷன் சோத்துல தண்ணி ஊத்தில்லாம் சாப்பிட வேண்டியதா போயிடுச்சு!). “ஒரு அம்மா மைண்ட்ல இருந்தாங்க... அவங்க நீதிபதியா போயிட்டதால தப்பிச்சாங்க” என்று சந்தடி சாக்கில் சுச்சியை சபையில் போட்டுக் கொடுத்தார் கேபி.
"ஆரி... நீங்கள் காப்பாற்றப்பட்டீர்கள்" என்று சிதறு தேங்காய் உடைப்பது போல கமல் சொல்லி விட, உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார் ஆரி. (இதே கண்கலங்கலை முன்னர் ‘நடிப்பு’ டாஸ்க்கில் ஆரி செய்ததும் இப்போது தொடர்பில்லாமல் நினைவிற்கு வருகிறது).
“பாலாஜிகிட்ட இருக்கற கோபம்தாங்க பிடிக்காது. மத்தபடி ஐ லவ் யூங்க” என்று கலங்கிய ஆரி, "அவனை எனக்கு ரொம்ப பிடிக்கும்ங்க. ஆனா அவனுக்கே இது தெரியாது" என்று ஒரு பன்ச் வசனம் சொல்ல (நோட் பண்ணுங்கப்பா. நோட் பண்ணுங்கப்பா)... “அவனைத் திருத்தறதுதான் என் வாழ்க்கையின் லட்சியம். இந்த வீட்ல யாரும் அதைச் செய்ய மாட்றாங்க” என்று சமூக சீர்திருத்த காவலனாக மாறி நின்றார் ஆரி. (அப்ப இன்னமும் சண்டைக்காட்சிகள் நிறைய இருக்கு).
“எங்களுக்குள்ள ஒரு அக்ரிமென்ட் இருக்கு. இந்த விளையாட்டை நேர்மையா விளையாடணும்னு" என்று பாலாஜி சொல்ல, "அப்ப ரெண்டு பேரும் இருந்து விளையாடுங்க” என்று இருவரும் காப்பாற்றப்பட்ட செய்தியைச் சொன்னார் கமல். சாமிடம் மன்னிப்பு கேட்கும் விஷயத்தையும் உணர்ச்சிகரமாகச் சொன்னார் ஆரி.
“அனிதா. நீங்க காப்பாற்றப்பட்டீங்கன்னா அழுவீங்களா, சிரிப்பீங்களா?'' என்று கமல் கேட்க தனது டிரேட் மார்க் சிரிப்பை தந்தார் அனிதா. ஆக அவரும் காப்பாற்றப்பட்டார்.
மீதமிருப்பவர்கள் சோம், சனம் மற்றும் சுரேஷ். சற்று பில்டப் தந்த கமல், அதிக அவகாசம் எடுக்காமல் ‘சுரேஷ்’ பெயரை அறிவித்தார். ‘நான்தான் வெளில போவேன்’ என்று சுரேஷ் சொல்லிக் கொண்டிருந்தது உண்மையாயிற்று.
ஆனால் – என்னதான் வெளியில் செல்வதற்கு விருப்பம் இருப்பது போல் காட்டிக் கொண்டாலும், சுரேஷ் தன் பெயரை எதிர்பார்க்கவில்லையோ என்று தோன்றியது. ஏனெனில் அவசரம் அவசரமாக அவர் வெளியே ஓடியதும், துணிகளை எடுத்துக் கொண்டதும் தன் ஏமாற்றத்தை மறைக்க விரும்பும் நாடகமாக நிகழ்த்தினாரோ என்பது என் யூகம்.
வெளியேற்றப்படும் நாளில்கூட ‘இதுவும் ஸ்டராட்டர்ஜிதான்’ என்று சுரேஷ் சொல்வாரோ என்று முன்பு கிண்டலாக எழுதியிருந்தேன். அது இப்போது உண்மையாயிற்று. "இதுக்கெல்லாம் ஒரு காரணம் இருக்கு... இப்ப சொல்ல முடியாது” என்று சனத்திடம் அப்போதும் ‘ஸ்ட்ராட்டர்ஜி’ பேசிக் கொண்டிருந்தார் சுரேஷ்.
“என் சாப்பாட்டை சாப்பிடாமலேயே போறாரு” என்று அர்ச்சனா கலங்கிக் கொண்டிருந்தார். (அதுல இருந்து எஸ்கேப் ஆகத்தான் சுரேஷ் இவ்ளோ அவசரமா ஓடறாரோ... என்னமோ!) உண்டியலை சுரேஷ் உடைத்த விதம் சிறப்பு. முன்பு சென்றவர்கள் சிதறு தேங்காய் போல உடைத்து விட்டு செல்ல, இவர் அதை மெதுவாக உடைத்து ரியோவிடம் அளித்தார்.
பின்பு அதிலிருந்த நாணயங்களை பின்னால் தூக்கிப் போட, ‘தாத்தா... எல்லாம் வேலையும் அரைகுறையா பண்ணு’ என்று சொன்ன பாலாஜி உரிமையுடன் கட்டிப் பிடித்துக் கொண்டார். “யோவ் கேட்டைத் திறங்கய்யா" என்று வாசலில் நின்று சுரேஷ் அதிகாரம் செய்ய ‘ஏதாவது கன்டென்ட் கொடுங்க’ என்று அப்போதும் நக்கல் செய்தார் பாலாஜி.
பாவம் கேபி. தாத்தாவின் பிரிவிற்கு நிறைய அழுது கொண்டிருந்தார். சுரேஷ் அவரை சமாதானப்படுத்தி விட்டுச் சென்றிருக்கலாம். இந்த ரணகளத்திலும் கிளுகிளுப்பாக ‘ப்பா... நீ வெளில போகலை.. அதுவரைக்கும் நிம்மதி’ என்று சொல்லியபடி சோமுடன் இணைந்து நடந்தார் அனிதா. சுரேஷ் வெளியில் போனதற்கு அதிக மகிழ்ச்சியை அடைந்தவர் இவராக இருக்கலாம்.
வெளியில் வந்த சுரேஷிடம் ‘உங்கள் மேல் எதிர்பார்ப்பு நிறைய இருந்தது’ என்றார் கமல். ‘பூச்சி... புழு... மேலே இருந்தேன்’ என்று கமலுக்கே புரியாதபடி விளக்கம் சொன்னார் சுரேஷ். பிறகு அகம் டிவி வழியாக வந்த சுரேஷ், போட்டியாளர்கள் ஒவ்வொருவடைய நிறை, குறைகள் பற்றி சொன்னார். இதில் நிறைய விமர்சனங்கள் சரியாக இருந்தன. சிலரின் மீது அவருக்கு இன்னமும் கோபம் விலகவில்லை என்பது தெரிந்தது.
இதன் பிறகு சுரேஷ் பற்றிய வீடியோ காட்டப்பட்ட போது அவர் வீட்டிற்குள் எத்தனை முக்கியமான போட்டியாளராக இருந்தார் என்பதற்கான சாட்சியமாக அது இருந்தது.
Also Read: `விக்ரம்' கமல்... பாலா, சம்யுக்தாவுக்குக் கிடுக்கிப்பிடி; சுரேஷின் நிலை என்ன? பிக்பாஸ் – நாள் 34
நேற்றைய கட்டுரையில் குறிப்பிட்டபடி மிக பலவீனமான போட்டியாளர்கள் உள்ளே எவ்வித பாதிப்பும் இல்லாமல் பாதுகாப்பாக இருக்கும் போது, வலிமையான போட்டியாளர்களில் ஒருவரான சுரேஷ் வெளியே அனுப்பப்படுவது மர்மமாக இருக்கிறது. மக்களின் வாக்குகளின் மூலம் மட்டும்தான் இது நிகழ்கிறதா என்று சந்தேகமாகவும் இருக்கிறது.
ஒருவேளை வரும் நாட்களில் உடல்ரீதியான டாஸ்க்குகள் நிறைய இருந்து அதை வயதில் மூத்தவரான சுரேஷால் சமாளிக்க முடியாது என்பதால் அனுப்பப்படுகிறாரா என்று தெரியவில்லை. ''எல்லா முடிவுலயும் ஒரு துவக்கம் இருக்கு’' என்கிற கமலின் பன்ச்சுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
ஆக... வீட்டு உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒன்று குறைந்து பதினைந்து பேராக மாறியிருக்கிறது. இனி போட்டி எப்படி இருக்கும், புதிய போட்டியாளர் எவராவது உள்ளே வருவாரா என்பதையெல்லாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
ஷிவானியுடன் சீரியல் ஹீரோவாக நடித்த அஸீம் உள்ளே வரவிருப்பதாக ஒரு தகவல் உலவுகிறது. எனில் பாலாஜிக்கும் அவருக்குமான உறவு எப்படி அமையப்போகிறது, ஷிவானி எந்தப் பக்கம் சாய்வார் என்கிற சுவாரஸ்யங்கள் எல்லாம் நிகழக்கூடும்.
source https://cinema.vikatan.com/bigg-boss-tamil/suresh-evictedaari-and-balaji-compromise-bigg-boss-tamil-season-4-day-35-highlights
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக