Ad

திங்கள், 30 நவம்பர், 2020

`தமிழகத்தில் களமிறங்கும் ராகுல்!’- கூட்டணி வியூகத்தில் மாற்றமா?

`காங்கிரஸ் கட்சி இல்லாத பாரதம் அமைப்போம்' என்கிற பா.ஜ.க-வின் கோஷத்துக்கு வலுசேர்த்து வருகிறது சமீபத்திய காங்கிரஸ் கட்சியின் தொடர் தோல்வி முகங்கள். வலுவான தலைமையே எதிர்காலத்தில் காங்கிரஸ் கட்சியைக் கரைசேர்க்க முடியும் என்று அந்த கட்சியின் தலைமைக்குள்ளே குரல்கள் எழுந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கட்சியைக் கரைசேர்க்க மீண்டும் களத்தில் இறங்கியிருக்கிறார்.

சோனியா காந்தி, ராகுல் காந்தி

2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. அதன்பிறகு அந்தக் கட்சி ஆட்சியிலிருந்த மத்திய பிரதேசத்திலும் ஆட்சியைப் பறிகொடுத்தது. இந்த ஆண்டு அக்டோபர் மாதம் பீகார் மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்த படுதோல்வியால் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆட்சி அமைக்கமுடியாத நிலையும் ஏற்பட்டது. நூற்றாண்டுகளைக் கடந்த காங்கிரஸ் இயக்கம் இதுபோன்ற தொடர் சரிவுகளைக் கண்டதில்லை. குறிப்பாகப் பிராந்திய ரீதியாகவே அந்தக் கட்சி தொடர்ந்து சரிவுகளைச் சந்தித்து வருகிறது. அந்தக் கட்சி வலுவாக இருந்த மாநிலங்களிலும் மண்ணைக் கவ்வி வருவது அந்தக் கட்சியின் நிர்வாகிகளுக்கே சலிப்பைக் கொடுத்துவிட்டது. இந்தநிலையில், காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தர தலைமைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ராகுல், பதவியை ராஜினாமா செய்தபிறகு தற்காலிகத் தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றார். ஏற்கெனவே உடல்நிலை சரியில்லாமல் உள்ள சோனியா காந்தியால் பெரிய அளவில் செயல்பட முடியாத நிலை இருந்தது. இந்தநிலையில், காங்கிரஸ் தலைமையில் மாற்றம் வேண்டும் என்கிற குரல்களும் சேர்ந்து ஒலிக்க ஆரம்பித்தது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களே தலைமை குறித்த விமர்சனங்களை முன்வைக்க ஆரம்பித்தனர். குறிப்பாக, `பீகார் தேர்தல் நடந்துகொண்டிருந்த காலத்தில் ராகுல் காந்தி ஓய்வெடுக்கச் சென்றுவிட்டார்’ என்கிற விமர்சனத்தை அந்த கட்சியினரே வைத்தனர். இது ராகுல் காந்திக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. `காங்கிரஸ் கரைந்து வருகிறது’ என்கிற விமர்சனத்தையும், தனது தலைமை மீதான அதிருப்தியையும் சரி செய்யவேண்டிய நிலைக்கு ராகுல் தள்ளப்பட்டுள்ளார்.

ஸ்டாலின், ராகுல்

இந்தநிலையில் அடுத்த ஆண்டு தமிழகம் உள்பட ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் நடக்க உள்ளது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியைக் கரைசேர்க்க வேண்டிய பெரும் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்றுள்ளார். இதனால் மீண்டும் சுறுசுறுப்புடன் களம் இறங்கியுள்ளார். அடுத்த ஆண்டு மேற்குவங்கத்தில் எப்படியும் கால் ஊன்றிட வேண்டும் என்று நினைக்கிறது பா.ஜ.க. ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் இடையேதான் மேற்கு வங்கத்தில் போட்டியிருந்தது. ஆனால், மம்தா பானர்ஜி வருகையும், கம்யூனிஸ்ட் கட்சி கலகலத்துப் போனதாலும், பா.ஜ.க அந்த மாநிலத்தில் அசுரத்தனமாக வளர்ந்துவருகிறது. வரும் தேர்தலில் மம்தா மற்றும் பா.ஜ.க-வை வீழ்த்த கம்யூனிஸ்ட் கட்சியுடன் கைகோர்க்க வியூகம் அமைத்துவருகிறார் ராகுல் காந்தி. சமீபத்தில் அந்த மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய ராகுல், கூட்டணி குறித்தும் பேசியிருக்கிறார். டிசம்பர் மாதம் முதல் மேற்குவங்கத்தில் சுற்றுப் பயணம் செய்யவும் திட்டமிட்டுள்ளார்.

இது ஒருபுறம் என்றால், தமிழகத்தில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சி அங்கம் வகித்துள்ளது. ஆனால், கடந்த முறை போன்று காங்கிரஸ் கட்சிக்குப் பெரிய அளவில் முக்கியத்துவம் இருக்காது என்பதை தி.மு.க தரப்பு சூசகமாகக் காங்கிரஸ் கட்சிக்கு உணர்த்திவிட்டது. காங்கிரஸ் கட்சியின் தமிழகப் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது, ``வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தி.மு.க-வுடன் எந்த பேரத்திலும் ஈடுபடாது. கூட்டணிக்கு எந்த நெருக்கடியையும் கொடுக்கமாட்டோம்” என்று தெரிவித்தார். அதாவது, தி.மு.க கொடுப்பதை வாங்கிக் கொள்ளும் மனநிலையே காங்கிரஸ் கட்சியிடம் உள்ளது போன்றிருந்தது குண்டு ராவ் பேச்சு. இது காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மத்தியிலே அதிருப்தியை உண்டாக்கியது. இது குறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் டெல்லியில் புலம்பியிருக்கிறார்கள்.

ஸ்டாலின் - கே.எஸ்.அழகிரி சந்திப்பு

இந்தநிலையில், தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சி நீடித்தால் கொடுப்பதை வாங்கிக்கொள்ளும் நிலை மட்டுமே இருக்கும் என்று காங்கிரஸ் டெல்லி தலைமையும் நினைக்கிறது. இதனால் தி.மு.கவுக்கு செக் வைக்க வேறு அணியை உருவாக்கலாமா? என்று ராகுல் திட்டமிடுகிறார். தி.மு.க-விலிருந்து காங்கிரஸ் கட்சி கழன்றால் அது தி.மு.க-வுக்கு விழும் சிறுபான்மை வாக்குகளில் சேதத்தை ஏற்படுத்தும். ஏற்கெனவே கமல் மூன்றாவது அணிக்குத் தயார் என்கிற ரீதியில் இருக்கிறார். மற்றொருபுறம், விடுதலைச் சிறுத்தைகள் வேண்டாம் என்று தி.மு.க-வில் உள்ள மூத்த தலைவர்களே தலைமையிடம் சொல்லியுள்ளார்கள்.

Also Read: ரஜினி, விசிக, கம்யூ... மக்கள் நலக் கூட்டணி 2.0-க்கு தயாராகிறதா மக்கள் நீதி மய்யம்? #2021TNElection

இப்படி தி.மு.க கூட்டணிக்குள் உள்ள அதிருப்திகளை வைத்தே ஒரு அரசியல் சதுரங்க ஆட்டத்தை ஆட நினைக்கிறார் ராகுல். இதற்கு முன்னோட்டமாக 30-ம் தேதி அன்று மாநில முக்கிய நிர்வாகிகளை டெல்லி அழைத்து இரண்டு மணிநேரம் ஆலோசனை செய்துள்ளார் ராகுல். இந்தச் சந்திப்பில் தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்தும், தி.மு.க கூட்டணியில் உள்ள சிக்கல்கள் குறித்தும் பேசியிருக்கிறார். அப்போது காங்கிரஸ் கட்சியின் உண்மையான நிலை தமிழகத்தில் என்னவாக உள்ளது? எவ்வளவு தொகுதிகளில் செல்வாக்கு உள்ளது போன்ற விவரங்களும் பேசப்பட்டுள்ளன. ஏற்கெனவே காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களை மாற்றவேண்டும் என்று அந்த கட்சியின் மாநிலத் தலைவர் அழகிரி முயன்று வருகிறார். அதை இப்போதைக்கு ஒத்திப்போட்டுவிட்டு, தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த ராகுல் அறிவுறுத்தியுள்ளார்.

ராகுல்- கே.எஸ்.அழகிரி

அதே போல் தமிழகக் காங்கிரஸார் பிரியங்கா, ராகுல் இருவருமே தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டால், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு எழுச்சி ஏற்படும் என்று சொல்லியுள்ளார்கள். அதை அனைத்தையும் கேட்டுக்கொண்டு ராகுல், ``கூட்டணி விவகாரங்கள் குறித்து நேரம் வரும்போது முடிவெடுத்துக் கொள்ளலாம்'' என்று கூறியதாகத் தெரிகிறது. இந்த விவரங்களை சோனியாவிடம், தான் தெரிவித்தபிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்பதாகவும் சொல்லியுள்ளார்.

அதாவது தி.மு.க, தங்களுக்கு உரிய முக்கியத்துவத்தை வழங்காதபட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கையாகக் கமல் உள்ளிட்டவர்களுடன் கைகோர்க்கவும் காங்கிரஸ் தயாராகும் என்று தெரிகிறது. அதேபோல் கேரளாவிலும் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது சந்தேகம் என்று தெரிகிறது. எனவே, அந்த மாநில நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்தத் திட்டமிட்டுள்ளார் ராகுல். இப்படி புதிய அரசியல் வியூகங்களை முன்வைத்து தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்க நினைக்கிறார் ராகுல். இந்த முறையாவது அவரது அரசியல் வியூகம் பலித்து காங்கிரஸ் கட்சி கரைசேரும் என்கிற எதிர்பார்ப்பு கதர் சட்டைக்காரர்களிடம் உள்ளது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/rahuls-new-plan-will-there-be-a-change-in-the-alliance-strategy-in-tn

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக