Ad

வெள்ளி, 27 நவம்பர், 2020

சத்தம் வரும்... பயம் வரும்... ஆனால், பேய் மட்டும் வரவே வராது! - 'அந்தகாரம்' ப்ளஸ் மைனஸ் ரிப்போர்ட்!

*விழித்திறன் சவால் கொண்ட ஒரு லைப்ரேரியன், மன அழுத்தத்தில் இருக்கும் ஒரு கிரிக்கெட் பயிற்சியாளன்; கோமாவிலிருந்து மீண்டெழும் மன நல மருத்துவர்... இந்த மூவரின் வாழ்க்கைச் சூழலில் நிகழும் சம்பவங்களை slow burn த்ரில்லராக சொல்லியிருக்கும் ஹாலிவுட் ஸ்டைல் தமிழ் சினிமாவே 'அந்தகாரம்'.

* விழித்திறன் சவால் கொண்டவராக வினோத் கிஷன். 'நான் மகான் அல்ல' படத்தில் கண்களைக் கொண்டே மிரட்டியவர், இதில் கண் பார்வையில்லாதவராக மிச்சிறப்பாக நடித்திருக்கிறார். ''அப்புறம் உங்களுக்கும் நோட்டு மாத்தறப்ப வெள்ளை பேப்பர நடுவுல வைக்கறவங்களுக்கும் வித்தியாசம் இல்லாம போயிரும்'' எனத் தன் பிரச்னைகளை அதன் இயல்பிலேயே வைத்திருக்க விரும்பும் கதாபாத்திரம் அவருக்கு.

அந்தகாரம்

* கிரிக்கெட் பயிற்சியாளராக நடித்திருக்கும் அர்ஜுன் தாஸுக்கு பிரதான காட்சிகள் ஓர் அறைக்குள் தான். உடைந்து அழுவது; மிரட்சியில் விளிப்பது என காட்சிகளுக்கேற்ப மாறும் முகபாவங்களுடன் அட்டகாசமாக ஸ்கோர் செய்திருக்கிறார். ஆரம்பத்தில் சொன்ன மூவரையும் இணைக்கும் புள்ளியாக பூஜா. படத்தில் வரும் பெரும்பாலான கதாபாத்திரங்களுடன் பேசும் ஒரே நபர். சரியாகவே நடித்திருக்கிறார். அர்ஜுன் தாஸின் காதலியாக மிஷா கோஷல். ̀பேயே தேவலாம்ல' என்பதாக இருக்கிறது இருவருக்குமான காதல் .

* பேய்ப் படங்கள், பாராநார்மல், சூப்பர் நேச்சுரல் படங்கள் அருகி வரும் சூழலில் இருக்கிறோம். எல்லாவற்றிலும் மசாலா சேர்ப்பதாக தமிழ்ப் பேய்ப் படங்கள் காமெடியும், அடல்ட்டும் சொல்ல ஆரம்பித்த பின்னர், ஒரு முழு நீள சூப்பர் நேச்சுரல் படம் என்பது தமிழில் கடைசியாக எப்போது வந்தது என்றே மறந்துவிட்டது. 'அந்தகாரம்' வெற்றியடைந்து இருப்பது இங்குதான். முழுக்க முழுக்க ஒரு கதையை உரையாடலாக, மெதுவான காட்சிகளாக சொல்கிறது 'அந்தகாரம்'. முதல் சில நிமிடங்கள் பிளாக் அண்ட் ஒயிட், பின்பு கதையின் போக்கில் நகரும் காட்சிகள் என முதல் படத்திலேயே அட சொல்ல வைக்கிறார் விக்னாராஜன். Devil is in the detail என்னும் குறிப்புடன் ஆரம்பிக்கும் படத்தில் படம் முழுக்கவே அத்தனை குறிப்புகள். நான் லீனியராக செல்லும் கதையில், சஸ்பென்ஸை 100 நிமிடங்களுக்கு மேல் உடைக்காமல் இருப்பது என சற்று அதன் மையப்புள்ளியில் இருந்து விலகினாலும், என்னடா படம்' இது என மாறிவிடும் தன்மை கொண்ட ஒரு படம். ஆனால், அந்தக் கேள்விக்கு இடமளிக்காமல் எடுத்திருக்கிறார். எல்லோரும் பாராட்டிவிட்டால் என்ன செய்வது என்பது போல், அவ்வளவு நன்றாக எழுதப்பட்ட திரைக்கதைக்கு ஏன் இப்படி ஒரு வழக்கமான க்ளைமேக்ஸ் ப்ரோ?

andhaghaaram

* படத்தின் டைம்லைன் முன், பின் என மாறி மாறி சுழல்வது படத்தை நாம் சரியாகப் புரிந்துகொள்கிறோமா என்கிற கேள்வியை எழுப்புகிறது. இதனால் ரீவைண்ட் செய்து, ரீவைண்ட் செய்து பல காட்சிகளை மீண்டும் பார்க்கவேண்டியிருக்கிறது. ஓடிடி-யில் படம் ரிலீஸானாதல் இது ஓகே. நல்லவேளை படம் தியேட்டரில் ரிலீஸாகவில்லை. அப்புறம் படத்தின் நீளமும் கிட்டத்தட்ட 3 மணி நேரம்.

* இத்தகையை த்ரில்லர் படங்களின் ஆகப்பெரும் பலம், அதன் டெக்னிக்கல் டீம்தான். சின்ன சின்ன இடுக்குகள் வழியாக பார்வையாளனுக்கு கதையின் வெளிச்சத்தைப் பாய்ச்சியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் எட்வின் சகாய். சிக்கலான திரைக்கதை எளிதாக புரியாவண்ணமும், அதே சமயம் முடிச்சுகள் அவிழும் தருணம் வரை கதையைக் குழப்பாமலும் சொல்ல வைத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் சத்யராஜ் நடராஜன். ''நான் பாக்காத இருட்டா'' , ''டால்ஸ்டாய் புத்தகம்'' போன்ற சின்னச்சின்ன வரிகளில்கூடத் தன் ஸ்மார்ட்னஸ்ஸை வசனத்தில் காட்டியிருக்கிறார் விக்னாராஜன். த்ரில்லர் படம் என்பதற்காகவே இரைச்சலை ஏற்படத்த வேண்டும் என்றில்லாமல், மெல்லிய இசையின் மூலம் நம்மை பதற வைக்கிறார் பிரதீப் குமார். பாடகர் பிரதீப்பின் இசையமைப்பில் அடுத்த சைலன்ட் ஹிட் ̀சுழலும் இருளில்' .

andhaghaaram

* மனோஜ் நைட் ஷியாமளானின் சிக்ஸ்த் சென்ஸ் படத்தின் பிரதி என்கிற சமூக வலைதளங்களில் படிக்க முடிகிறது. வினோத் கிஷன் போர்ஷனை மட்டும் வைத்துக்கொண்டு காஞ்சனாவின் பிரதி என்றுகூட சொல்லலாம். ஆனால், இதெல்லாம் உண்மையில்லை என்பது படத்தைப் பார்த்தால் புரியும்.

* தமிழில் இப்படியானதொரு த்ரில்லர் அதுவும் பல ஆண்டுகள் கழித்து வந்ததற்காகவே இந்த 'அந்தகாரம்' படத்தை Must Watch பட்டியலில் இணைக்கலாம். 'அந்தகாரம்' அதிசயிக்கவைக்கும்!



source https://cinema.vikatan.com/movie-review/andhaghaaram-movie-review

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக