Ad

வெள்ளி, 27 நவம்பர், 2020

`தண்ணீரோடு கண்ணீரும் கலந்து... நனைந்தது இதயமும்தான்!’ - முடிச்சூரிலிருந்து லைவ் ரிப்போர்ட்

2015-ம் ஆண்டில் யாரும் எதிர்பாராத நேரத்தில், திடீரென செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்பட்டதில், ஒட்டுமொத்தமான சென்னையும் மிதந்தது. பல மனித உயிர்களை இழந்தும், பல்லாயிரக்கணக்கான கோடிகளில் பெரும் பொருளாதார இழப்புகளையும் நம் மக்கள் சந்தித்தார்கள். இந்த வெள்ளத்தில் பல பகுதிகளையும் கடந்து மிகக் கடுமையாகப் பாதித்த பகுதிகள், தாம்பரத்தைச் சுற்றியுள்ள 'முடிச்சூர், வரதராஜபுரம், அனகாபுதூர்' உள்ளிட்ட பகுதிகளாகும்.

செம்பரம்பாக்கம்

இப்போது நிவர் புயலையொட்டிய அடைமழையால், செம்பரம்பாக்கம் ஏரி மீண்டும் திறந்துவிடப்பட்டது. முந்தைய அனுபவத்திலிருந்து பாடம் கற்று, தமிழ்நாடு அரசு முறையாக அறிவித்து கொஞ்சம் கொஞ்சமாக ஏரி நீரைத் திறந்துவிட்டாலும், இந்த முறையும் வெள்ளக்காடாக மாறியுள்ளது தாம்பரத்தைச் சுற்றியுள்ள அதே முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகள்.

இதைக் கேள்விப்பட்டவுடனே புகைப்பட கலைஞரோடு அங்கே பயணமானேன்.

சென்னை தாம்பரத்திலிருந்து ஆறாவது கி.மீ-ல் உள்ள முடிச்சூரை நோக்கி பயணித்த வழியில் எதிர்ப்பட்ட ஒரு அம்மாவிடம், 'முடிச்சூரில்ல எந்த அளவுக்கு தண்ணி வந்துருக்குமா ?' என்றேன். 'கொஞ்சம் பர்லாங் போப்பா... பெரிய மேம்பாலம் வரும். அங்க போ...நீயே தெரிஞ்சுப்ப ' என்றார் பீடிகையோடு. சில நிமிடங்களில் அந்த மேம்பாலத்தை அடைந்தோம். கடலில் கப்பல்கள் மிதந்துகொண்டிருக்குமில்லையா... அப்படித்தான் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தன. மறுபுறம், தேசிய பேரிடர் மீட்புக் குழு, மாநில பேரிடர் மீட்புக் குழு, தமிழ்நாடு காவல்துறை, நீச்சல் வீரர்கள், தனியார் மீட்புக் குழுவினர் என பெரிய அளவில் அந்தப் பகுதியில் திரண்டிருந்தனர்.

முடிச்சூர்

`உள்ளே அமுதம் நகர் தாண்டி, கடைசித் தெருவில வயசான அம்மா ஒருத்தவங்க ரொம்ப முடியாம இருக்காங்க-ன்னு தகவல் வந்திருக்கு . சீக்கிரம் கிளம்புங்க' என ஓர் அதிகாரி உத்தரவிட்டனர். `பெரிய படகுகள், உள்ளே மீட்புக்காகப் போயிருக்கு ' என்று வீரர்களிடமிருந்து பதில் வர, ``சிங்கிள் போட்லயாவது போங்க. ஃபாஸ்ட்' என்றார் அருகிலிருந்த வட இந்திய அதிகாரி.

அடுத்தகணம் அங்கிருந்து ஒற்றைப் படகு ஒன்று துடுப்புகளை வீசிக்கொண்டே உள்ளே செல்ல, மற்றொருபுறம் பெரிய படகில் , ஒரு முதிய பெண்மணி, முதியவர், மகன்,மருமகள், பேரக்குழந்தையோடு ஒரு குடும்பத்தினரை அழைத்து வந்தார்கள் மீட்புக்குழு வீரர்கள்.

`உள்ள ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் இருக்கு. நிறைய தண்ணி இருக்கு. பல குடும்பங்களும் ஃபர்ஸ்ட் ஃப்ளோர் , செகன்ட் ஃப்ளோர்ல இருக்காங்க. போகப்போகத் தண்ணி அதிகமாகிடுமோ என்று பயந்துதான், நாங்க ஆவடியில் இருக்கிற சொந்தகாரங்க வீட்டுக்கு போறோம்' என்று பீதி விலகாமல் பேசினர் அந்தக் குடும்பத்தினர். `ஆமாங்க, தண்ணி கொஞ்சம் போர்ஸாதான் இருக்கு' என்றார்கள் வீரர்கள்.

`உள்ள எவ்ளோ குடும்பங்கள் இருக்கு... உள்ளே இருப்பவர்கள் மனநிலை என்ன... தண்ணீர் முழுமையாக வடிய எவ்ளோ நாள் ஆகும்... அத்தனை நாள்களுக்கும் உள்ளே இருப்பவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்வது எப்படி?' என்று ஆர்.டி.ஓ உள்ளிட்ட பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரிகள் ஆலோசனை செய்துகொண்டிருந்தனர். சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்ட காவல்துறை டீமும் லட்சுமி நகர், அமுதம் நகர், அஷ்டலட்சுமி நகர், முடிச்சூர், வரதராஜபுரம் என வெள்ளக்காடாக மாறியிருந்த இடங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்துகொண்டிருந்தனர். அதே நேரத்தில், தொடக்கத்தில் வேகமாய் கிளம்பிய அந்த ஒற்றைப் படகு, `தற்காலிக கரைக்கு’ திரும்பியது.

`ஐயோ... அம்மா கடவுளே எல்லோரையும் காப்பாத்து...' என முனகியபடியே இருந்த முதிய பெண்மணியை படகில் இருந்து இறக்கி, முகாமுக்கு அழைத்துச் சென்றனர் காவல்துறை வீரர்கள்.

இந்தக் காட்சிகள் அனைத்தும், தண்ணீரில் மிதக்கும் ஊரின் தீவிரத்தன்மையை உணர்த்த, உள்ளேயிருக்கும் பல வீதிகளையும் நோக்கி, நம் புகைப்பட கலைஞரோடு தண்ணீருக்குள் இறங்கினோம்.

முடிச்சூர்

முதலில் கணுக்கால் அளவு தண்ணீர் இருக்க, போகப்போக முழங்கால் அளவு, இடுப்பளவு வரை நீர்மட்டம் உயர்ந்தது. தண்ணீர் வேகமாக வந்ததால் கூடுதல் விசை கொடுத்து நடந்தோம். எதிரே நடந்து வந்த சில இளவட்டங்கள்,``அண்ணே , உள்ளே போகப்போக மார்பளவுக்கு மேல தண்ணி இருக்கு. கீழ காலை முன்பக்கமாக உதைத்து உதைத்துப் போங்க...எங்கே குழி, சேறு இருக்குன்னு தெரியல. போதாத குறைக்கு நிறைய பாம்புகள் வேற மெதக்குது" என பீதியேற்றினர். அவர்கள் சொன்னதுபோலவே காலை உதைத்து உதைத்து நடந்தோம்... எச்சரித்தது போலவே நிறைய தண்ணீர் பாம்புகள் இங்கும், அங்குமாகப் போய்க்கொண்டிருந்தன.

'இதனாலதாங்க தம்பி, நாங்கெல்லாம் கீழ இருந்து முதல், இரண்டாவது மாடிக்கு வந்து ஒண்ணா தங்கியிருக்கோம் ' என்ற ஒரு அம்மா, 'பூச்சி, பொட்டுங்க எல்லாம் வீட்டுக்குள்ள வந்துடுதுங்க. குழந்தைகள், உடம்புக்கு முடியாத வயசானவங்க நிறைய பேரு இருக்கிறதால பயமாவே இருக்கு' என்றார் அச்சம் விலகாமல். எதிர் வீட்டில் இருந்த குடும்பத்தினரோ, '2005 ம் ஆண்டு, அப்புறம் 2015-ம் ஆண்டுல பெரிய அளவில் வெள்ளம் வந்தது. அதுக்கப்புறம் இப்போ அந்தளவுக்கெல்லாம் மழை பெய்யல, ஆனா அதேயளவு தண்ணி ஊருக்குள்ள வந்துடுச்சு' என்றவர்களிடம், 'ஏரி மற்றும் ஆற்று நீர்வழித்தடங்களில் உங்களைப் போன்றவர்கள் வீடுகளை கட்டி குடி வந்ததால்தான், மழை வந்தால், அந்த நீர் வங்கக்கடலில் கலக்க முடியாமல் ஊருக்குள் தேங்கிவிடுகிறது என பொதுவாக ஒரு விமர்சனம் உள்ளதே?' என்றதுதான், "ஏன் தம்பி, அப்போ அனுமதி கொடுத்த அரசாங்கம், என்ன விவரமில்லாதவர்களா? நாங்கள் யாரும் ஆக்கிரமிப்பு செய்யவில்லை. அரசாங்கம் முறையாக அனுமதி கொடுத்த இடத்திலதான் வீடு கட்டியிருக்கோம். இந்த வீட்டுக்கு 10 வருஷமா இ.எம்.ஐ கட்டிக்கிட்டு இருக்கோம். போங்க தம்பி போங்க" என்றார்கள் வடிவேலு பாணியில் விரக்தியோடு.

முடிச்சூர்

நாம் பேசுவதைக் கேட்ட மூன்றாவது குடியிருப்பில் இருந்த ஒரு ஐ.டி ஊழியரோ, ``2015 ல் பயங்கர தண்ணி வந்த பிறகும் பாருங்க, இந்த ஏரியாவில் எத்தனை எத்தனை கம்பெனிகள் புதுசா முளைச்சிருக்கு... எல்லாத்துக்கும் அனுமதி கொடுத்தது அரசாங்கம்தானே" என அரசியல் பேசினார். அருகிலிருந்த அவர் மனைவி, ``இதுக்கு முன்னாடி ஒருமுறை சி.எம் எடப்பாடி, டெபுடி சி.எம் ஓ.பி.எஸ் ரெண்டு பேருமே இந்த ஏரியாக்களை பார்வையிட்டாங்க. அதோடு சரி. எந்த மாற்றங்களும் ஏற்படல' என தன் பங்குக்கு அவரும் அரசியல் முழங்கினார். இதை எல்லாம் உள்வாங்கியபடியே அமுதம் நகரில் மேலும் உள்ளே நகர்ந்தோம்.

'இங்கே பக்கத்தில கட்டியிருக்கிற மேம்பாலத்தாலதான், கொஞ்சம் மழை வந்தாலும் தண்ணி வீடுகளுக்குள்ள வந்துடுது' என்றார் இரண்டாவது மாடியிலிருந்து ஒரு பெரியவர்.

இதை கேட்டுக்கொண்டிருந்த நேரத்தில் உள்ளேயிருந்து சிலரை மீட்டுக்கொண்டு சென்ற போட்டிலிருந்து விலகிய தண்ணீர் நம்மை மேலும் சில்லிட வைத்தது. அதோடு அடுத்த தெருவை நோக்கி மெல்ல ஊர்ந்தோம்.

அங்கே அருகாமை ஊரிலிருந்த சின்னப்பையன் என்பவர், ஒவ்வொரு வீடாக தண்ணீர் பாட்டில்கள் வழங்கிக் கொண்டிருந்தார். 'இங்க கரண்ட் கட்டாகி இருக்கு. அதனால மோட்டார் போட்டு தண்ணி மேல ஏற்ற முடியாது. அது எப்ப மறுபடியும் வரும்னு சொல்லமுடியாது. இங்க இருக்கிற பலரும் வீட்டை விட்டு வெளியே வரவும் விரும்பல. அதனால் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் பக்கத்து ஊருல இருக்கவங்க மூலமாக நிறைய பாட்டில் தண்ணீர் வாங்கி இங்க கொடுத்துக்கிட்டு இருக்கோம்' என்றார் மானுடநேயத்தோடு.

சின்னப்பையன்

அருகாமை ஊரைச் சேர்ந்தவர்கள் ஆங்காங்கே மெழுகுவர்த்தி மற்றும் உணவுப் பொட்டலங்களையும் வீடு வீடாகக் கொடுத்து வந்தனர். இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த நேரத்தில், என் கண்ணில் ஒருவீட்டின் முன்பு, ஒட்டப்பட்டிருந்த அரசாங்கத்தின் விளம்பரம் தென்பட்டது. 'மழை நீர் சேகரிப்போம்' என்று எழுதப்பட்டிருந்ததை வாய்திறந்து படிக்க, 'பார்த்தீங்களா சார், நம்ம அரசாங்கம், எங்க ஏரியாவில், எப்படி மழை நீர் சேமிக்கிறாங்க' என வேடிக்கையாகப் பேசினார் அந்த வீட்டு உரிமையாளர். சிரித்தபடியே பக்கத்து தெருவுக்குள் சென்றோம். அங்கே ஓர் இடத்தில் 'give way' என்று ஆங்கிலத்தில் ஒரு விளம்பரத் தட்டி தென்பட, 'வெள்ளத்தை வடிகட்டத்தான் இங்கிருப்பவர்களுக்கு ஒரு வழி கிடைக்கவில்லை ' என யோசித்தபடியே அங்கிருந்த குடியிருப்புவாசிகளிடம், 'ஏன், போட் மூலமாக வெளியேறி அரசு முகாம்களுக்கு செல்லாமல் பெரும்பாலானோர் இங்கேயே இருக்கிறீர்கள்?' என்றேன். 'எங்களுக்கு, எங்களுடைய வீடுதான் சேப்ஃடி. எப்படியும் ஒரு வாரத்தில் தண்ணீர் வடிஞ்சுடும். அதுவரை இப்படியே முதல்மாடி, ரெண்டாவது மாடியில தங்கிப்போம். செம்பரம்பாக்கம் தண்ணி திறந்துவிட்டதால்தான் இவ்ளோ தண்ணீர் வந்தது. இப்போ, அதையும் ஸ்டாப் பண்ணிட்டதால, இனி இதுக்கு மேல தண்ணி மேல ஏறாது' என்றனர் நம்பிக்கையோடு.

Also Read: நிலத்திற்கு வந்ததும் மாறிய தன்மை... நிவர் புயலின் தாக்கம் குறைவாக இருந்தது ஏன்?

இதேபோன்ற கருத்தையே மேலும் நாம் பயணித்த சில தெருக்களில் இருந்த குடியுருப்புவாசிகளும் தெரிவித்தார்கள். அதேநேரத்தில் அங்கே, அவசர அவசரமாக நீச்சல் ஜாக்கெட் அணிய வைத்து ஒரு மாணவனை அழைத்துக் கொண்டு போனார்கள் காவல்துறை பேரிடர் மீட்பு வீரர்கள். 'என்னுடைய ஸ்கூல், காலேஜ் சர்டிபிகேட் எல்லாம் உள்ளே இருக்கிற என் சின்ன ஓட்டு வீட்டில சிக்கிடுச்சி. அத எடுத்துக்கிட்டுதான் முகாமுக்குத் திரும்பணும்.." என்ற மாணவன், தொடர்ந்து, "சாதரணமான வீடுதான் எங்களுது. அதனால தண்ணியில் என் சர்டிபிகேட்கள் ஏதாவது ஆகிடுமோனு பயமாயிருக்கு" என்று கலங்க, "ஒன்னுமாகாது தம்பி. நாங்க மீட்டுத்தரோம்" என பயத்தைப் போக்கினர் மீட்பு வீரர்கள். இவ்வாறாக தற்போதைய நிலைமையை ஓரளவுக்கேனும் சமாளிக்கும் நடுத்தர வர்க்க மக்கள், மறுபுறம் ஒட்டுமொத்த வாழ்வியலும் சாய்க்கப்பட்ட ஏழை, விளிம்பு நிலை மக்கள் என இருவேறு வர்க்கத்து மக்களின் நிலையையும் பிரித்து காட்சிப்படுத்திக் கொண்டிருந்தது அங்கே தேங்கியிருந்த வெள்ளம்.

முடிச்சூர்

இப்படி நாம் பார்த்தது, கேட்டது எல்லாம் உள்வாங்கியபடியே தண்ணீரில் மெல்ல ஊர்ந்து, ஊர்ந்து கரைப் பகுதிக்கு திரும்பினோம். நாம் பார்த்தவரை பல வீடுகளில் நோய்வாய்ப்பட்ட முதியவர்கள் இருக்கிறார்கள். வெள்ளம் பல நாள்கள் வடியாமல் இருந்தால், அவர்களுக்கான மருத்துவ சிகிச்சைகள் பெற வெளியேறித்தான் ஆகவேண்டும். அடுத்து நிறைய வீடுகளில் நாய்கள், பூனைகள் உள்ளிட்ட செல்லப் பிராணிகளும் மழை வெள்ளத்தால் அவதிப்பட்டிருப்பதையும் காண முடிந்தது. ஆடு, மாடு என பல கால்நடைகளும் போக வழியில்லாமல் தத்தளித்துக் கொண்டிருந்த காட்சிகளையும் பார்க்க முடிந்தது. மழை நீரோடு பல தெருக்களிலும் சாக்கடை நீரும் கலந்திருப்பதால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயமும் அங்கே இருப்பதை உணர முடிந்தது. தூய்மைப் பணியாளர்கள் அங்கே அவ்வப்போது திரண்டு தங்கள் கடமைகளை செய்துகொண்டிருந்ததையும் நாம் பார்க்க முடிந்தது. இவையெல்லாவற்றையும் அங்கே ஆய்வுக்கு வந்திருந்த தாம்பரம் தி.மு.க எம்.எல்.ஏ ராஜா-விடம் முன்வைத்தோம்.

``என்னுடைய ஆய்விலும் எல்லாவற்றையும் உணர்ந்தேங்க. முதற்கட்டமாக இங்கே வீடுகளுக்குள் உள்ளவர்களுக்காக உணவு ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கியுள்ளோம். மழை நீரை வெளியேற்ற, அதிகாரிகளுடனும் பேசி வருகிறேன். மற்றபடி இங்கே வெள்ள நீர் தேங்காமல் இருக்க வழிவகை செய்ய பலமுறை முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். சட்டமன்றத்திலேயும் பேசியுள்ளேன். நாங்கள் ஆளும்கட்சி கிடையாது. இருந்தாலும் முடிந்தளவுக்கு தொகுதி மக்களுக்கு வேண்டியதை செய்தே வருகிறோம்" என்றார்.

Also Read: நிவர்: குடியிருப்புகளைச் சூழந்த வெள்ளம்; மூழ்கிய முடிச்சூர்! - சென்னை புகைப்படத் தொகுப்பு #SpotVisit

'மழையில்லாமல் இருந்தால் மூன்று நாள்களிலிருந்து ஒரு வாரத்துக்குள் முழுமையாக இயல்புநிலைக்குக் கொண்டு வந்துவிடலாம். ஆனால், மழை தொடர்ந்தால் தேங்கியுள்ள தண்ணீர் வடிய நாள் எடுக்கும். இதில் முக்கியமான ஒன்று என்னவென்றால், இங்குள்ள முன்பகுதிகளில் நடுத்தர வர்க்கத்து மக்கள் வசிக்கிறாங்க. ஓரளவுக்கு சமாளிச்சிடுவாங்க. ஆனால் கடைசித் தெருக்களில் நிறைய அன்றாடங்காய்ச்சிகளும் வசிக்கிறாங்க. அவங்க நிலைமைதான் கஷ்டத்தை ஏற்படுத்துது' என்கிறார்கள் பேரிடர் மேலாண்மைத்துறையில் இருக்கும் சில அதிகாரிகள்.

அங்கே தேங்கியிருந்த தண்ணீரோடு, திகிலில் உள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்களில் கண்ணீரும் கலந்து நம் கால்களை நனைத்தபடியே இருந்தது. கால்கள் மட்டுமல்ல எல்லோரின் இதயங்களையும்தான்!


source https://www.vikatan.com/news/disaster/live-report-from-mudichur-after-nivar-cyclone

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக