Ad

வெள்ளி, 27 நவம்பர், 2020

`சிறு கடன்கள் வாங்கிய ஏழைகள் துன்புறுத்தப்படுகின்றனர்!’- உயர் நீதிமன்றம் கண்டனம்

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஜெயராஜ் என்பவர் தாக்கல் செய்த மனுவில்,``விவசாய நிலங்களை அடமானம் வைத்து நீண்டகாலக் கடனாக 50 லட்சம் மற்றும் வீட்டுக் கடனாக 15 லட்ச ரூபாயை திருச்சி சின்னக்கடை வீதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பெற்றோம். வீட்டுக் கடனுக்காக ரூ.18 லட்சமும் நீண்ட கால கடன் தொகையில் 25 லட்ச ரூபாயும் செலுத்தப்பட்டுள்ளது. தொழிலில் ஏற்பட்ட சரிவால் தொடர்ந்து பணம் செலுத்த முடியவில்லை.

நீதிபதிகள் உத்தரவு

இதனால், எனது விவசாய நிலத்தை ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகளை சம்மந்தப்பட்ட வங்கி மேற்கொண்டது. எனவே விவசாய நிலத்தை காப்பாற்ற நீதிமன்றத்தை நாடிய போது ரூ.75 லட்சம் பணம் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து 75 லட்சத்துக்கான வரைவு காசோலையை சென்னையில் உள்ள சம்மந்தப்பட்ட வங்கி மேலாளரிடம் கொடுப்பதற்காக கடந்த அக்டோபர் 7ஆம் தேதி வங்கிக்கு சென்றபோது வங்கி மேலாளர் அதனை வாங்க மறுத்து, எங்கள் மீது வீசி எறிந்தார். எனவே நீதிமன்ற உத்தரவைக் கடைபிடிக்கக் கோரியும் தனியாரிடம் பணம் வசூலிப்பதற்காக விவசாய நிலத்தை ஒப்படைப்பதை நிறுத்த உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் தெரிவித்திருந்தார்.

Also Read: தவறான ‘சிபில்’ ஸ்கோர்... என்ன சிக்கல்..? - நெல்லைக்காரரின் கடன் ‘ஷாக்’ அனுபவம்!

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வங்கிகள் பணம் வசூலிக்க 3 விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அவர்கள் அளிக்கும் பதிலை வைத்து முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். அதன் பின்பே நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர். மேலும்,
பணம் கட்ட முடியாதவர்களுக்கு வட்டிக்கு வட்டி போடுவது நியாயமற்றது. எந்த விதிகளின் அடிப்படையில் வங்கிகள் கடன் தொகை வசூலிப்பதைத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கின்றன? தனியார் நிறுவனங்கள் குண்டர்களை வைத்துக் கடன் தொகையை வசூலிக்கின்றனர்.

கடன்

இவ்வாறு செய்வதற்கு வங்கிகள் கடன் வழங்காமல் இருக்கலாம். ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன் பெற்றவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்கின்றனர். சிறு கடன்கள் வாங்கிய ஏழைகளைப் பணம் வசூல் செய்கிறோம் என்று கூறி துன்புறுத்தப்படுகின்றனர்.

இந்த வழக்கை பொறுத்தவரை நீதிமன்ற உத்தரவை மதிக்க முடியாது எனக் கூறி வரைவுக் காசோலையை தூக்கி எறிந்த வங்கியின் மேலாளர் தொடர்பான சிசிடிவி காட்சிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், அந்த வங்கி மேலாளர் காணொலிக் காட்சி மூலமாக நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை டிசம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.



source https://www.vikatan.com/social-affairs/judiciary/madurai-hc-bench-condemns-private-bank-official-over-credit-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக