Ad

வியாழன், 26 நவம்பர், 2020

கரூர்: `உங்க வீட்டுல குட்கா சோதனை பண்ணனும்!' -மளிகைகடைக்காரர் வீட்டில் கைவரிசைக் காட்டிய திருடர்கள்

"நாங்க கரூர் நகராட்சி அலுவலகத்தில் இருந்து வர்றோம். நாங்க சிறப்பு அதிகாரிகள். உங்க வீட்டில் குட்கா உள்ளிட்டப் போதைப் பொருள்களை பதுக்கி வைத்து, சட்டவிரோதமாக அதை விற்பனை செய்துவருவதாக எங்களுக்கு ரகசிய தகவல் வந்திருக்கு. அதனால், உங்க வீட்டை நாங்க சோதனைப் போடணும்" என்று கூறிய இரண்டு பேர், மளிகைகடைக்காரரின் வீட்டில் இருந்த 5 பவுன் நகையை திருடிச் சென்று, அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றனர்.

கரூர் பேருந்து நிலையம்

Also Read: 24 பார்சல் வேகன்கள், 550 டன் கொசுவலைகள்... ஒடிசாவுக்கு பறக்கும் கரூர் கொசுவலைகள்!

கரூர் நகரில் உள்ள பாப்பாயி தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர், தனது வீட்டையொட்டி இருக்கும் பகுதியில் மளிகை கடை வைத்து நடத்திவருகிறார். இந்த நிலையில், இவரது கடைக்கு பைக்கில் வந்த 40 வயது மதிக்கத்தக்க இரண்டு மர்ம நபர்கள், பிரகாஷிடம், 'நாங்க கரூர் நகராட்சி அலுவலகத்தில் இருந்து வந்திருக்கிறோம். நாங்க சிறப்பு அதிகாரிகள். உங்க வீட்டில் குட்கா உள்ளிட்டப் போதை பொருள்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து, அதை மளிகை கடையில் விற்பனை செய்துவருவதாக எங்களுக்கு ரகசிய தகவல் வந்திருக்கு' என்று சொல்லியிருக்கிறார்கள்.

கரூர் ரயில்வே நிலையம்

அதைக்கேட்டு பதறிய பிரகாஷ், 'உங்களுக்கு யாரோ தவறான தகவல் கொடுத்துள்ளனர். நான் அப்படி எந்த போதைப்பொருளையும் மறைத்து வைத்து விற்பனை செய்யவில்லை' என்று சொல்லியிருக்கிறார். ஆனால், விடாத அந்த மர்ம நபர்கள், 'எங்களுக்கு உறுதியான தகவல் தான் வந்திருக்கு. உங்க வீட்டை சோதனைப் போடணும்' என்று சொல்லியிருக்கிறார்கள்.

அதைக்கேட்ட பிரகாஷ், 'தாராளமாக சோதனைப் போட்டுக்கொள்ளுங்கள்' என்று அனுமதியளித்துள்ளார். முதலில், கடையில் சோதனைப் போட்டவர்கள், பிறகு வீட்டில் இருந்தவர்களை வெளியில் அனுப்பிவிட்டு, இரண்டு நபர்களும் பிரகாஷ் வீட்டிக்குள் சோதனை நடத்துவதுபோல் பாவ்லா காட்டியுள்ளனர். கொஞ்ச நேரத்தில் வெளியில் வந்தவர்கள், 'போதைப் பொருள்களை, நாங்க வருவதை முன்கூட்டியே தெரிந்துகொண்டு வேறு எங்கேயோ பதுக்கிவிட்டீர்களா?. நாங்க மறுபடியும் சோதனைப் போட வருவோம்' என்று சொல்லிவிட்டு சென்றுள்ளனர்.

கரூர் நகர காவல் நிலையம்

அதன்பிறகு, வீட்டுக்குள் சென்று பார்த்த பிரகாஷ், தனது வீட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் நகை மாயமாகி இருந்ததை கண்டு, அதிர்ந்துபோனார். இதுகுறித்து, கரூர் நகர காவல் நிலையத்தில் பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். அதிகாரிகள் போல் நடித்து, மளிகைகடைக்காரரின் வீட்டில் இருந்த 5 பவுன் நகையை இருவர் திருடிச்சென்ற சம்பவம், அப்பகுதி மக்களை அதிரவைத்திருக்கிறது.



source https://www.vikatan.com/news/crime/shop-onwer-lose-to-jewel-to-robbers-in-karur

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக