Ad

திங்கள், 30 நவம்பர், 2020

ஆடம் கில்கிறிஸ்ட்... ஜென்ட்டில்மேன் கிரிக்கெட்டரின் அதிரடி பக்கங்கள்! - அண்டர் ஆர்ம்ஸ் - 21

ஆக்ரோஷ ஆஸ்திரேலிய கிரிக்கெட்டர்களுக்கு மத்தியில் அமைதியாய் தான் உண்டு தன் கேம் உண்டு என விளையாடிய ஜென்ட்டில்மேன் கிரிக்கெட்டர் ஆடம் கில்கிறிஸ்ட். குணத்தில் மட்டும்தான் இவர் அமைதியேத்தவிர பேட்ஸ்மேனாகக் களத்தில் இறங்கிவிட்டால் செயல்புயல். யாரை மிகச்சிறந்த பெளலர் என்கிறார்களோ, யாரை எல்லா பேட்ஸ்மேன்களும் கண்டு மிரள்கிறார்களோ, அந்த பெளலரை டார்கெட் செய்து, அடித்து வெளுத்து எதிரணியின் கெத்தை மொத்தமாகக் காலி செய்வதுதான் கில்கிறிஸ்ட்டின் தனிச்சிறப்பு. கில்கிறிஸ்ட்டின் இடம் என்பது சர்வதேச கிரிக்கெட்டில் இன்றுவரை யாராலும் நிரப்பமுடியாத இடமாக வெறுமையுடனேயே இருக்கிறது.

ரிக்கி பான்ட்டிங், ஷேன் வார்னே, டேமியன் மார்ட்டின், வாக் பிரதர்ஸ், ஜேஸன் கில்லெஸ்பி என 90-களின் ஆஸ்திரேலிய அணியில் யாரைப்பார்த்தாலும் வெறுப்பும், கோபமும் வரும். ஆஸ்திரேலிய வீரர்கள் மிகுந்த கர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால், இந்த ஆஸ்திரேலிய அணிக்குள் இருந்துகொண்டு அன்பை விதைத்தவர் ஆடம் கில்கிறிஸ்ட். எந்த நாட்டு கிரிக்கெட் ரசிகனையும், தன்னுடைய ரசிகனாக்கிவிடும் வல்லமைப்படைத்த கிரிக்கெட்டர். விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் - என்கிற பெயருக்கு உண்மையான அர்த்தம் கொடுத்தவர். விக்கெட் கீப்பர் என்றால் எப்படி ஆடவேண்டும் என்பதற்கான உதாரணம் கில்கிறிஸ்ட். 90-களின் கிரிக்கெட் வரலாற்றை கில்கிறிஸ்ட் இல்லாமல் எழுதிவிடமுடியாது!

ஆஸ்திரேலிய அணி என்பது அப்போது தொடர் ஆச்சர்யங்களைக் கொடுக்ககூடிய அணியாக இருக்கும். ஆஸ்திரேலியாவில் ஒரு சிறந்த வீரர் ஓய்வுபெற்றால், அவருக்கு மாற்றாக அவரைவிட மிகவும் சிறந்த இன்னொரு வீரர்தான் வருவார். அப்படி 90-களின் ஆரம்பத்தில் ஆஸ்திரேலியாவின் முகமாக இருந்த இயான் ஹீலிக்கு பதிலாக 96-ல் ஆஸ்திரேலிய அணிக்குள் நுழைந்தவர்தான் ஆடம் கில்கிறிஸ்ட்.

ஆடம் கில்கிறிஸ்ட்

மிகப்பெரிய சாதனைகள் படைத்தவர்கள் எல்லோருமே ஆரம்பத்தில் சறுக்கியவர்களாகத்தான் இருப்பார்கள் என்பதற்கு ஆடம் கில்கிறிஸ்ட்டும் விதிவிலக்கல்ல. 1996-ல் இந்தியாவில் நடைபெற்ற டைட்டன் கோப்பைத்தொடர்தான் ஆடம் கில்கிறிஸ்ட்டின் கரியரைத் தொடங்கிவைத்தது. இயான் ஹீலி காயம் அடைந்ததால் ஆடம் கில்கிறிஸ்ட் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் ப்ளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டார். முதல் போட்டியில் எட்டாவது பேட்ஸ்மேனாகக் களமிறங்கிய கில்கிறிஸ்ட் 22 பந்துகளில் 18 ரன்கள் அடித்துவிட்டு டொனால்ட் பந்துவீச்சில் போல்டானார். அடுத்தப்போட்டியில் முதல் பந்திலேயே ரன் அவுட். இதனால் இரண்டு போட்டிகளோடு கில்கிறிஸ்ட் நீக்கப்பட்டு மீண்டும் இயான் ஹீலி அணிக்குள் சேர்க்கப்பட்டார்.

கில்கிறிஸ்ட் மீண்டும் ஆஸ்திரேலிய அணிக்குள் வர ஒரு வருடம் ஆனது. ஹீலிக்கு இரண்டுப்போட்டிகளில் விளையாடத் தடைவிழுந்ததால் மீண்டும் அணிக்குள் வந்தார் கில்கிறிஸ்ட். ஆனால், இந்தமுறை மீண்டும் இயான் ஹீலி அணிக்குள் வந்தபோதும், கில்கிறிஸ்ட்டின் இடம் காலியாகவில்லை. மார்க் வாக் காயமடைந்திருந்ததால் பேட்ஸ்மேனாக அணிக்குள் தொடர்ந்தார் கில்கிறிஸ்ட். இங்கிருந்துதான் கில்கிறிஸ்ட்டின் கிரிக்கெட் வாழ்க்கை அடுத்தக்கட்டத்துக்கு நகர்ந்தது.

மார்க் டெய்லரை ஒருநாள் போட்டிகளில் இருந்து ஆஸ்திரேலிய தேர்வாளர்கள் தூக்க, மார்க் வாகிற்கு சரியான ஓப்பனிங் பார்ட்னர்கள் இல்லாமல் தவித்தது ஆஸ்திரேலியா. அப்போது லோயர் ஆர்டரில் ஆடிகொண்டிருந்த கில்கிறிஸ்ட்டை ஓப்பனிங் இறக்க முடிவெடுத்தார் அப்போதைய கேப்டன் ஸ்டீவ் வாக். ஆஸ்திரேலியாவின் பொற்காலம் ஆரம்பமானது. ஓப்பனராகக் களமிறங்கிய இரண்டாவது போட்டியிலேயே சதம் அடித்து அசத்தியவர் அடுத்தடுத்து அற்புதங்களை நிகழ்த்த ஆரம்பித்தார்.

1997 - 1998-ல் நடைபெற்ற கார்ல்ட்டன் அண்ட் யுனைடெட் சீரிஸில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாட தென்னாப்பிரிக்கா, நியூஸிலாந்து அணிகள் ஆஸ்திரேலியா வந்திருந்தன. இதில் லீக் போட்டிகளில் தென்னாப்பிரிக்காவுடன் மோதிய நான்கு போட்டிகளிலுமே ஆஸ்திரேலியா தோல்வியடைந்தது. ஆனால், நியூஸிலாந்துக்கு எதிராகப் பெற்ற வெற்றிகளால் தட்டுத்தடுமாறி பெஸ்ட் ஆஃப் 3 ஃபைனலுக்குள் நுழைந்தது ஆஸ்திரேலியா. முதல் இறுதிப்போட்டியில் முதல்முறையாக மார்க் வாகுடன் ஓப்பனிங் வீரராகக் களமிறக்கப்பட்டார் கில்கிறிஸ்ட். முதல் போட்டியில் மார்க் வாகுக்கும், கில்கிறிஸ்ட்டுக்கும் காம்போ செட் ஆகாமல் மார்க் வாக் 3 ரன்களில் ரன் அவுட் ஆக, கில்கிறிஸ்ட்டும் 20 ரன்களில் அவுட் ஆனார். ஆஸ்திரேலியா முதல் ஃபைனலில் தோற்றுப்போனது. ஆஸ்திரேலியாவின் கதை முடிந்தது. சொந்த மண்ணிலேயே தொடர் தோல்விகளைச் சந்திக்கிறார்கள், இனி தென்னாப்பிரிக்காதான் கிரிக்கெட்டின் சூப்பர் பவர் என எல்லோரும் நினைத்தநேரத்தில்தான் இரண்டாவது இறுதிப்போட்டியில் இருந்து சூழல் மாறியது.

ஆடம் கில்கிறிஸ்ட், ஜஸ்ட்டின் லேங்கர்

சிட்னியில் நடந்த இரண்டாவது இறுதிப்போட்டியில் மீண்டும் மார்க் வாகோடு ஓப்பனிங் இறங்கினார் கில்கிறிஸ்ட். தென்னாப்பிரிக்காவின் 228 ரன் டார்கெட்டை 42-வது ஓவரில் முடித்தது ஆஸ்திரேலியா. 104 பந்துகளில் 100 ரன்கள் அடித்தார் கில்கிறிஸ்ட். ஷான் பொல்லாக், லான்ஸ் க்ளூஸ்னர், ஆலன் டொனால்ட், பேட் சிம்காக்ஸ், மேக்மில்லன், கல்லினன் என மிகச்சிறந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அடிக்கப்பட்ட சதம் இது.

முதலில் ஒருநாள் ஸ்பெஷலிஸ்ட் என டெஸ்ட் போட்டிகளில் கில்கிறிஸ்ட்டை சேர்க்காமல் வைத்திருந்தார்கள் ஆஸ்திரேலிய தேர்வாளர்கள். இயான் ஹீலியின் மோசமான ஆட்டம் கில்கிறிஸ்ட்டுக்கு டெஸ்ட்டிலும் இடம்கிடைக்க வழிவகுத்தது. 1999-ல் ஹோபார்ட்டில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிதான் கில்கிறிஸ்ட்டை ஒரு டெஸ்ட் பேட்ஸ்மேனாகவும் நிலைநிறுத்தியது. பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவுக்கு 369 ரன் டார்கெட்டைக் கொடுத்தது. ஆனால், மார்க் வாக், ஸ்டீவ் வாக், மைக்கேல் ஸ்லேட்டர், ரிக்கி பான்ட்டிங் என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை எல்லாம் அவுட்டாகி 126 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தோல்வியின் விளிம்பில் நின்றுகொண்டிருந்தது ஆஸ்திரேலியா. அப்போது ஜஸ்ட்டின் லேங்கரோடு கூட்டணிப்போட்டு ஆஸ்திரேலியாவை மீட்டெடுத்தார் கில்கிறிஸ்ட். வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான பெர்த் பிட்ச்சில், வாசிம் அக்ரம், வக்கார் யூனுஸ், ஷோயப் அக்தர் என உலகின் மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக கில்கிறிஸ்ட் ஆடிய இன்னிங்ஸை அப்போது நேரிலும், டிவியிலும் கண்டவர்கள் பாக்யசாலிகள். லாங்கரோடு 238 ரன் பார்ட்னர்ஷிப். 163 பந்துகளில் 149 ரன்கள் அடித்து இறுதிவரை நாட் அவுட் பேட்ஸ்மேனாகக் களத்தில் நின்று ஆஸ்திரேலியாவை வெற்றிபெறவைத்தார் கில்கிறிஸ்ட். ஆஷஸ் டெஸ்ட்டில் பெர்த் மைதானத்தில் 57 பந்துகளில் கில்கிறிஸ்ட் அடித்த சதம் மிக முக்கியமானது.

வேர்ல்ட் கப் ஸ்பெஷலிஸ்ட்!

1999 இங்கிலாந்து, 2003 தென்னாப்பிரிக்கா, 2007- கரீபியன் என தொடர்ந்து மூன்று உலகக்கோப்பைகளையும் ஆஸ்திரேலிய வெல்ல மிக முக்கியக் காரணம் ஆடம் கில்கிறிஸ்ட். இந்த மூன்று உலகக்கோப்பைகளின் இறுதிப்போட்டியிலும் ஆடம் கில்கிறிஸ்ட்டின் பங்கிருக்கிறது. 1999 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் வெறும் 132 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக, 20 ஓவர்களில் மேட்சை முடித்தது ஆஸ்திரேலியா. ஆடம் கில்கிறிஸ்ட் 36 பந்துகளில் 54 ரன்கள் அடித்து டாப் ஸ்கோராரக இருந்ததார்.

ஆடம் கில்கிறிஸ்ட் - ஆஸ்திரேலிய அணி

2003 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ரிக்கி பான்ட்டிங் இந்திய பெளலர்களை ஓடஓட விரட்ட, முதலில் ரூட்மேப் போட்டுக்கொடுத்தவர் ஆடம் கில்கிறிஸ்ட். 48 பந்துகளில் 57 ரன்கள் அடித்துவிட்டு பான்ட்டிங்கை ''மாப்ள... நீ கவலைப்படாமா ஆடு... பந்தெல்லாம் நேரா பேட்டுக்குத்தான் வருது'' என சொல்லிவிட்டுப்போனார்.

கரீபியனில் 2007-ல் நடந்த உலகக்கோப்பையின்போது தன் அந்திமக் காலத்தில் இருந்தார் கில்கிறிஸ்ட். சரியான ஃபார்மில் இல்லாமல் திணறிக்கொண்டிருந்தவர், சரியாக இறுதிப்போட்டியில் ஃபார்முக்கு வந்துவிட்டார். 2003 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவுக்கு ரிக்கி பான்ட்டிங் கொடுத்த ட்ரீட்மென்ட்டை, இலங்கைக்கு ஆடம் கில்கிறிஸ்ட் கொடுத்தார். 104 பந்துகளில் 149 ரன்கள். 13 பவுண்டரி, 8 சிக்ஸர்கள். பவுண்டரி, சிக்ஸர்களில் மட்டும் 100 ரன்கள் அடித்திருந்தார் ஆடம் கில்கிறிஸ்ட். தில்ஹாரா ஃபெர்னான்டோ எனும் இலங்கை பெளலரின் அன்றைய கதறல்களைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. மலிங்காவுக்கும் அடி விழுந்தது.

இந்த உலகக்கோப்பை முடிந்ததும் மீண்டும் ஃபார்முக்கு வருவதும் போவதுமாக இருந்தார் கில்கிறிஸ்ட். 2008-ல் இந்தியா ஆஸ்திரேலியாவில் வென்ற இரண்டாவது இறுதிப்போட்டிதான் கில்கிறிஸ்ட்டின் கடைசிப்போட்டி. தனது இறுதிப்போட்டியில் 2 ரன்களோடு வெளியேறினார் கில்கிறிஸ்ட்.

ஆடம் கில்கிறிஸ்ட், மேத்யூ ஹேடன்

இந்தியாவுக்கு எதிராக விளையாடிய டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரோடு ஓய்வுமுடிவை அறிவித்தார் கில்கிறிஸ்ட். ஆனால், ஆஸ்திரேலிய பிரதமர் முதல் பயிற்சியாளர்கள் வரை கில்கிறிஸ்ட்டின் ஓய்வுமுடிவை பரிசீலனை செய்யும்படி கேட்டார்கள். ஆனால், ''லட்சுமணின் கேட்ச்சை டிராப் செய்ததுமே, என் மனம், இனி நீ இந்த விளையாட்டை விளையாடும் முழுத்தகுதியை இழந்துவிட்டாய் என சொல்லிவிட்டது. இனிமேல் நான் தொடர்ந்து விளையாடுவது நியாயமாக இருக்காது'' என்றுசொல்லி ஓய்வுமுடிவை உறுதிசெய்தார் கில்கிறிஸ்ட்.

ஐபிஎல் கேப்டன்!

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றவர் 2008-ல் தொடங்கிய இந்தியன் பிரிமீயர் லீகில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடினார். முதல் சீசனில் வீக்கெட் கீப்பராக மட்டும் இருந்தவர், இரண்டாவது சீசனில் கேப்டன் ஆனார்.

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 2009 இந்தியன் பிரிமியர் லீகில், டெக்கன் சார்ஜர்ஸுக்கு தலைமையேற்று அந்த அணிக்கு சாம்பியன்ஷிப் கோப்பயைப் பெற்றுத்தந்தார் கில்கிறிஸ்ட். சர்வதேசப் போட்டிகளைப்போல ஐபிஎல்-ல் அவரது இறுதிப்போட்டி ராசி பலிக்கவில்லை. டக் அவுட் ஆனார். ஆனால், இந்தத்தொடரில் 495 ரன்கள் அடித்து, ஸ்டம்ப்பிங், கேட்ச் என 18 விக்கெட்கள் இழக்கக் காரணமாக இருந்து கோப்பையை வென்றுத்தந்தார் கில்கிறிஸ்ட்.

தோனி, சங்ககாரா, பிரன்டன் மெக்கல்லம், க்வின்ட்டன் டி காக், ஏபிடி என உலகின் அத்தனை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களுக்கும் முன்னோடி ஆடம் கில்கிறிஸ்ட்தான். தாவிப்பறந்து கேட்ச் பிடிப்பதில் ஆகட்டும், மில்லி செகண்ட் வித்தியாசத்தில் ஸ்டம்ப்பிங் செய்வதில் ஆகட்டும், ஓப்பனிங் இறங்கி எதிரணி பெளலர்களின் நம்பிக்கையை சிதைப்பதில் ஆகட்டும், கில்கிறிஸ்ட் எல்லாவற்றிலும் தனி ஒருவன்தான்!



source https://sports.vikatan.com/cricket/life-of-adam-gilchrist-under-arms-21

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக