Ad

ஞாயிறு, 29 நவம்பர், 2020

மிதந்த சுமைகள்... சிறையில் அற்புதத்தைக் கண்ட பாபர்... ஸ்ரீகுருநானக்கின் ஜயந்தி தினம் இன்று!

16 -ம் நூற்றாண்டின் தொடக்கம். பஞ்சாப் மாநிலம் அமெனாபாத் என்ற சிற்றூர். அந்த ஊருக்கு ஒரு சத்குரு தன் இரு சீடர்களோடு வந்தார். அந்த ஊரின் ஒரு ஏழைத் தச்சர் வீட்டில் இரவு தங்கினார்கள். அதிகாலை அவர்கள் கண் விழித்தபோது அவர்கள் வீட்டை ஒரு பெரும்படை சுற்றிவளைத்திருந்தது. அது மன்னர் பாபரின் படைகள். டெல்லி நோக்கிச் சென்றுகொண்டிருந்த அந்தப் படை மூவரையும் கைதுசெய்தது. அந்தக் காலத்தில் சுமைகளை எல்லாம் கைதிகளின் தலையில் ஏற்றிச் சுமக்கச் செய்வது வழக்கம். அதேபோன்று இந்த மூவரின் தலையிலும் சுமையை ஏற்றி நடக்கச் செய்ய உத்தரவிட்டான் தளபதி. சீடர்களில் ஒருவன் அந்த சுமைகளைக் கண்டு நடுங்கினான். அந்த சுமைகளைத்தான் தாங்குவது சிரமம் என்று அஞ்சினான். சத்குருவை நோக்கினான். ஆனால் சத்குருவோ புன்னகை மாறாமல் இருந்தார். அதைக் கண்டதும் அவனுள் தைரியம் வந்தது. "குருவின் துணையிருந்தால் எந்தச் சுமையையும் சுமக்க இயலும்’' என்று நம்பினான்.

குருநானக்

படைவீரர்கள் சுமையை அவர்கள் தலையில் ஏற்றினார்கள். என்ன ஆச்சர்யம்... சுமைகள் ஒரு கணம் கூட அவர்கள் தலையில் இல்லை. தலையிலிருந்து ஒரு சிறு இடைவெளி விட்டு அந்தரத்தில் நின்றன. சத்குரு முன்னால் நடக்கச் சீடர்களும் பின் தொடர்ந்தனர். அப்போது அவரவர்களின் சுமைகள் அவர்கள் மேல் மிதந்துவந்தன. இதைக் கண்ட வீரர்கள் அச்சத்தோடு அவர்களைப் பின் தொடர்ந்தனர். மாமன்னர் பாபருக்குச் செய்தி அனுப்பினர். அந்த அதிசயத்தைக் காண அவர் ஓடி வந்தார். ஆனால் அதற்குள் அவர்கள் வந்து சேர வேண்டிய இடத்துக்கு வந்துவிட்டதால் சுமை தானே கீழே இறங்கியிருந்தது.

பாபர் அதிசயத்தைக் காணமுடியவில்லையே என்று ஏமாந்தார். ஒருவேளை, தன்னைத் தன்படைவீரர்களே ஏமாற்றுகிறார்களோ என்று சந்தேகம் கொண்டார். சத்குருவை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். சிறையில் தானியங்களைக் குத்தும் வேலை சத்குருவுக்குத் தரப்பட்டது. சத்குருவோ இறைவனை தியானிக்க அமர்ந்துவிட்டார். அந்த நேரம் அவருக்கு ஒதுக்கப்பட்ட தானியங்கள் தானாக உரலில் இடப்பட்டுக் குத்தப்பட்டன. தற்செயலாக அங்குவந்த பாபர் அந்த அதிசயத்தைக் கண்டு தன் தவற்றை உணர்ந்தார். சத்குருவையும் அவர் சீடர்களையும் விடுவித்தார். சத்குரு பாபருக்கு அறிவுரைகள் வழங்கினார். அந்த சத்குருதான் ஸ்ரீகுருநானக் தேவ்ஜீ.

அமிர்தசரஸ்

குருநானக் வாழ்வும் போதனைகளும்...

சீக்கிய மதத்தின் முதல் குருவும், ஸ்தாபகருமான மகாகுரு குருநானக்கின் பிறந்தநாள் விழா கார்த்திகைமாதம் பௌர்ணமி அன்று கொண்டாடப்படுகிறது.

குருநானக், இன்றைய பாகிஸ்தானில் உள்ள லாகூர் அருகே டல்வாண்டி என்ற கிராமத்தில் பிறந்தவர்.

குருநானக், 1499-ம் ஆண்டு அவரது முப்பதாவது வயதில் ஞானம் அடைந்தார் . இவர் தனது வாழ்வில் நான்கு நெடும் பயணங்களை மேற்கொண்டு மக்களைச் சந்தித்தார். அதன் மூலம் இறைவன் ஒருவனே என்ற ஞானமும் பெற்றார்.

இவரைப் பின்பற்றிய மக்கள் இவரது புதிய மார்க்கத்தை 'சீக்கியம்' என்றார்கள். அந்த மார்க்கத்தைப் பின்பற்றியவர்கள் 'சீக்கியர்கள்' என்று அழைக்கப்பட்டார்கள்.

எல்லாவிதப் பற்றுகளையும் விட்ட ஞான வடிவான பெரியவர்களின் வழிக்காட்டுதலின்படியே ஒவ்வொருவரும் நடக்க வேண்டும், முன்னோர்களை மதிக்க வேண்டும் என்பதே இவரின் பிரதான போதனை.

இவரது போதனைகள் அடங்கிய புனித நூல் 'குருகிரந்த சாஹிப்'.

குரு நானக் முக்கியமாக மூன்று போதனைகளை முன் வைக்கிறார்.

ஒன்று - வந் சக்கோ -பிறருக்கு உதவுவது , பிறருடன் சேர்ந்து வாழ்வது

இரண்டு - கிரட் கரோ - பிறரை ஏமாற்றாமல் நேர்மையாக வாழ்வது

மூன்று - நாம் ஜப்னா. - உண்மையான அன்புடன் கடவுளைப் பிரார்த்திப்பது

‘பெண்ணிலிருந்தே ஆண் பிறந்தான். பெண்ணிலிருந்தே அரசனும் பிறந்தான். பின் ஏன் பெண்ணை தீட்டாகக் கருதுகிறீர்கள்? பெண்கள் இல்லாமல் இந்த உலகில் எதுவும் இல்லை’ என்று பெண்களின் விடுதலைக்கான குரலாகவும் குருநானக் திகழ்ந்தார்.

மூடநம்பிக்கைகளுக்கு எதிராகப் பேசிய குருநானக், இறைவன் ஒவ்வொருவருக்குள்ளும் வாழ்கிறான் என்று உபதேசித்தார்.

இன்று குருநானக்கின் ஜயந்தி தினம் நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளை உலகெங்கும் உள்ள சீக்கியர்கள் புனித நாளாகக் கொண்டாடுகின்றனர். பாரதப் பிரதமர் நரேந்திரமோடி குருநானக் ஜயந்தியை ஒட்டி நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.



source https://www.vikatan.com/spiritual/functions/guru-nanak-jayanthi-special-article

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக