Ad

வியாழன், 26 நவம்பர், 2020

குருவாயூர் கோயிலைத் தொடர்ந்து சபரிமலையில் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஆலோசனை

கொரோனா நோய்த்தொற்று காரணமாக கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்திபெற்ற வழிபாட்டுத்தலங்களில் பக்தர்கள் குறைந்த அளவே அனுமதிக்கப்படுகிறார்கள். அதிலும் பிரசித்திபெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் ஒரு மணி நேரத்திற்கு 150 பேர் வீதம், ஒருநாள் 600 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஒரு நாள் 60 திருமணங்கள் மட்டுமே நடத்த அனுமதிக்கப்பட்டுவருகிறது.

பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக கடந்த 16-ம் தேதி மாலை திறந்தது. கடந்த 17-ம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். தினமும் ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 2000 பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் மகரவிளக்கு தினத்தில் 5000 பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பக்தர்கள் ஆன்லைனில் புக்செய்யும் படி திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்திருந்தது. நவம்பர் 1-ம் தேதியே அனைத்து புக்கிங்களும் முடிந்துவிட்டன. அதிலும் சபரிமலை செல்லும் பக்தர்கள் 24 மணி நேரத்திற்குள் எடுத்த கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு சென்றால்தான் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

சபரிமலை

இந்த நிலையில் சபரிமலையில் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதுசம்பந்தமாக கேரள அரசும் ஆலோசனை நடத்தி வருகிறது. இன்று திருவனந்தபுரத்தில் கேரள தலைமை செயலர் தலைமையில் நடந்த அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் சபரிமலையில் கூடுதல் பக்தர்களை அனுமதிப்பது குறித்து ஆலோசனை நடந்துள்ளது. அதில் சபரிமலையில் கூடுதல் பக்தர்களை அனுமதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து முதல்வர் பினராயி விஜயனின் பரிந்துரையின்படி முடிவு எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

சபரிமலையில் தினமும் 5000 பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளதாக தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் ஏற்கனவே கூறியிருந்தார். இந்த நிலையில்தான் அதிகாரிகள் கூட்டத்தில் பக்தர்கள் எண்ணிக்கையை அனுமதிப்பது குறித்து ஆலோசனை நடந்திருக்கிறது. மண்டல காலத்தில் தினமும் மூன்று கோடி ரூபாய்க்கு அதிகம் வருமானம் வந்த நிலையில் இப்போது சுமார் பத்து லட்சம் ரூபாய்க்கு கீழேதான் வருமானம்தான் வருகிறது. இந்த நிலையில் சபரிமலையில் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என தேவசம்போர்டும் எதிர்பார்க்கிறது.

குருவாயூர் கோயில்

சபரிமலை கோயிலில் கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது குறித்து முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சரை கலந்து ஆலோசித்து விரைவில் முடிவு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் பிரசித்திபெற்ற குருவாயூர் கோயிலில் வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் தினமும் 4000 பக்தர்களை அனுமதிக்கவும், தினமும் 100 திருமணங்கள் நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விரைவில் சபரிமலையில் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.



source https://www.vikatan.com/spiritual/temples/more-devotees-to-be-allowed-into-sabarimala-temple

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக