Ad

திங்கள், 30 நவம்பர், 2020

கரூர்: "பசுபதீஸ்வரர் ஆலய குடமுழுக்கைத் தமிழில் நடத்த வேண்டும்!'' - வலுக்கும் கோரிக்கை

கரூர் நகரின் மையத்தில் அமைந்துள்ள கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தின் குடமுழுக்கு விழா வரும் 4 -ம் தேதி நடைபெற இருக்கிறது. 'அந்த குடமுழுக்கை தமிழ் முறைப்படி நடத்த வேண்டும்' என்று பலதரப்பிலும் கோரிக்கை எழுந்துள்ளது.

பால்குடம் எடுத்து வழிபாடு நடத்தும் சிவனடியார்கள்

Also Read: கரூர்: `அமராவதி ஆற்றுக்குள் கழிவுநீர் கால்வாய்?!' - கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்

கரூர் நகரின் மத்தியப் பகுதியில் அமைந்திருக்கும் மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் ஒன்று, ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தில் அலங்காரவள்ளி மற்றும் சவுந்தரநாயகி அம்மன் உடனமர் ஆனிலையப்பர் சிவஆலயம் மற்றும் 18 சித்தர்களில் முக்கிய சித்தரான கரூவூர் சித்தர் ஜீவசமாதி ஆகிய திருத்தலங்கள் ஒன்றே அமைந்திருக்கின்றன. அதோடு, இது ஆயிரம் ஆண்டுகள் பழைமையான திருக்கோயில் ஆகும். தேவாரப் பாடலில் குறிப்பு பெற்றுள்ள ஆலயமாகவும் உள்ளது.

கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம்

இந்த ஆலயத்தில், பழநி முருகபெருமானின் நவபாசன சிலையைச் செய்த போகரின் நேரடி சீடர் சித்தர் கரூவூரார் சிலையும் உள்ளது. இத்தகைய சிறப்புவாய்ந்த இந்தக் கோயிலில், வரும் டிசம்பர் 4 - ம் தேதி சமூக இடைவெளியைக் கடைபிடித்து, எளிமையான முறையில் மகா கும்பாபிஷேக விழாவானது நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே இன்று, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தைத் தமிழில் நடத்தக் கோரி, இந்து வேத மறுமலர்ச்சி இயக்கத்தின் தலைவர் சித்தர் மூங்கில் அடியார் தலைமையில் ஏராளமான சிவனடியார்கள் பால்குடம் தீர்த்தக்குடம் எடுத்து, கோயிலை வலம் வந்து வழிபாடு நடத்தினர். இந்நிகழ்வில், கரூர் தமிழ்சங்க இணைசெயலாளர் வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன், செங்கோல் அரசு, திருமூர்த்தி, நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் நன்மாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பால்குடம் எடுத்து வழிபாடு நடத்தும் சிவனடியார்கள்

"தமிழகத்தில் உள்ள இந்துத் திருக்கோயில்கள் அனைத்திலும் தமிழ் மொழியில் குடமுழுக்கு விழா நடத்த வேண்டும் மற்றும் அனைத்து கால பூஜைகளையும் இனிமையான தமிழ் மொழி மந்திரங்களைப் பாடி நடத்த, தமிழக அரசு அரசாணை வெளியிட்டு தமிழ் மொழியையும் சிவனடியார்களின் நலனையும் காக்க வேண்டும். குறிப்பாக, வரும் 4 -ம் தேதி நடைபெற இருக்கும் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் தமிழ் முறைப்படிக் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்தார் இந்து வேத மறுமலர்ச்சி இயக்கத்தின் தலைவர் சித்தர் மூங்கில் அடியார். இதே கோரிக்கையை வழியுறுத்தி, தமிழ் தேசியப் பேரியக்கத் தலைவர் மணியரசன், தமிழ் பேரரசு கட்சி தலைவர் திரைப்பட இயக்குநர் கௌதமன் ஆகியோர், கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகத்தைத் தமிழில் நடத்த வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.



source https://www.vikatan.com/spiritual/temples/karur-pasupatheeswarar-temple-ceremony-receives-a-request

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக