Ad

சனி, 28 நவம்பர், 2020

'' 'அந்தகாரம்' படத்துல இதை மட்டும் பண்ணிடவேக்கூடாதுன்னு முடிவு பண்ணோம்!'' - வினோத் கிஷன்

நெட்ஃபிளிக்ஸில் வெளியாகி சிறந்த விமர்சனங்கள் பெற்றுவரும் படம் ‘அந்தகாரம்’. நடிப்பு, திரைக்கதை, இசை, மேக்கிங் என சுவாரஸ்யமான விஷயங்கள் படத்தில் பல இருக்கின்றன. ‘கைதி’ படம் மூலம் பிரபலமான அர்ஜூன் தாஸும், ‘நந்தா’, ‘நான் மகான் அல்ல’, ‘விடியும் முன்’ போன்ற படங்களில் நடித்த வினோத் கிஷனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்க்ள். நடிகர் வினோத் கிஷனை சந்தித்து, ‘அந்தகாரம்’ படம் பற்றி பேசினோம்.

‘அந்தகாரம்’ படத்திற்குள் எப்படி வந்தீங்க?

அந்தகாரம்

“இயக்குநர் விக்னராஜ் இந்தப் படத்தோட செல்வம் கேரக்டரில் நான் நடித்தால் நல்லா இருக்கும்னு என்கிட்ட கதை சொல்ல வந்தார். கதை எனக்கு ரொம்ப பிடிச்சிருந்ததுனால, நடிக்கிறதுக்கு ஓகே சொன்னேன். இந்தக் கதையை இயக்குநர் என்கிட்ட சொன்ன போதே, இந்தக் கேரக்டருக்கான எல்லா ஹோம் வொர்க்கையும் அவரே பண்ணி வெச்சிருந்தார். பல பார்வையற்றவர்களை அவரே நேரில் சந்திச்சு, அவர்களோட மேனரிசத்தை வீடியோவாக எடுத்து வெச்சிருந்தார். அதுவே எனக்கு ரொம்ப உதவியா இருந்துச்சு. நானும் இந்தக் கேரக்டருக்காக சில பார்வையற்றவர்களோடு இரண்டு நாள்கள் இருந்தேன். அப்படி நான் நோட் பண்ணின சில விஷயங்களையும் டைரக்டர் கொடுத்த இன்புட்ஸையும் வெச்சு இந்தக் கேரக்டரில் நடிச்சேன். அவங்கக்கூட ட்ராவல் பண்ணுன அந்த ரெண்டு நாள்களில் அவங்களைப் பற்றி நான் புரிஞ்சுக்கிட்டது என்னன்னா, அவங்களுக்கு யாரோட உதவியும் தேவையேயில்லை. அவங்க பார்வை இல்லாததை ஒரு குறையாவே நினைக்கலை. ஏன்னா, அவங்களோட லைஃப்ல அவங்க ஜாலியா இருக்காங்க. தினமும் காலேஜுக்கு, வேலைக்குப் போறாங்க. போர் அடிச்சா படத்துக்குப் போறாங்க. லேப்டாப், மொபைல் யூஸ் பண்றாங்க; அவங்க விளையாடுற மாதிரி கிரிக்கெட் பேட், பால் இருக்கு. இப்படி அவங்களோட உலகம் ரொம்ப அழகா இருக்குனும் சொல்லலாம். அதுமட்டுமில்லாமல், ’இந்தக் கேரக்டரில் நடிக்கிறதுக்கு உதவியா இருக்கும்னு வேற எந்தப் படத்தையும் பார்க்காதீங்க’னு இயக்குநர் சொன்னார். ஏன்னா, பல ஹீரோக்கள் பார்வை இல்லாத கேரக்டரில் நடிச்சிருக்காங்க. அதை ரெஃபரன்ஸுக்காகப் பார்த்துட்டு இந்தப் படத்தில் நடித்தால், அவங்களோட சாயல் வந்திடும்னு சொன்னார். அதனாலேயே மற்ற ஹீரோக்கள் நடிச்ச படங்களை பார்க்கவேயில்லை. அதேமாதிரி, கண்ணை வித்தியாசப்படுத்தி காட்டணும்னும் நாங்க நினைக்கலை. கண் இயல்பா இருக்கட்டும்னு முன்னாடியே ப்ளான் பண்ணி இருந்தோம்.’’

தியேட்டரில் ரிலீஸாகாமல் நேரடியாக ஓடிடியில் ரிலீஸானதில் எதுவும் வருத்தம் இருந்துச்சா..?

வினோத் கிஷன்

”ஆரம்பத்தில் இருந்தே தியேட்டர் அனுபவத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துதான் படத்தை எடுத்தோம். அதுனால, ஓடிடி ரிலீஸ்னு சொன்னப்போ முதலில் கொஞ்சம் வருத்தமாத்தான் இருந்துச்சு. ஆனால், ஓடிடி ரிலீஸ்லயும் நிறைய நன்மைகள் இருக்கு. உலகம் முழுக்க ரீச் கிடைக்கும். அதுவும் இப்போ இருக்கிற சூழ்நிலையில் தியேட்டருக்கு நம்பி வர கூட்டம் குறைவாக இருக்கு. அதுமட்டுமில்லாமல், இந்தப் படம் ரிலீஸான சமயத்தில் தமிழ்நாட்டில் புயல் வந்ததுனால, எல்லாரும் வீட்டுக்குள் இருக்க வேண்டிய சூழல். அதுனால, நிறைய பேர் படம் பார்த்திருக்காங்க. படத்துக்கு இவ்வளவு பெரிய ரெஸ்பான்ஸ் வரும்னு நாங்க நினைக்கலை. ஏன்னா, இந்தப் படத்தோட ஜானர் எல்லாருக்கும் அவ்வளவு ஈசியா பிடிச்சிடாது. அதுனாலேயே கலவையான விமர்சனங்கள்தான் வரும்னு நினைச்சிட்டு இருந்தோம். ஆனால், அதிகமான பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்ததைப் பார்த்தப்போ ரொம்பபே சந்தோஷமா இருக்கு.”

அர்ஜூன் தாஸின் நடிப்பைப் பார்த்துட்டு அவர்கிட்ட என்ன சொன்னீங்க..?

அர்ஜூன் தாஸ்

”இந்தப் படத்தில் நடிக்கிறதுக்கு முன்னாடியே அர்ஜூன் தாஸ் எனக்கு நல்ல பழக்கம். நானும் அவரும் ஒரு ஆக்டிங் கோர்ஸில் ஒன்னா கலந்துக்கிட்டோம். இந்தப் படத்தில் அவருக்கும் எனக்கும் காம்பினேஷன் காட்சிகள் இல்லைங்கிறதுனால, ஷூட்டிங் ஸ்பாட்டில் நாங்க பார்த்துக்கிட்டது கிடையாது. ஆனால், படம் பார்க்கும் போது அவரோட வொர்க்கைப் பார்த்து ஆச்சர்யப்பட்டேன். ரொம்ப உழைச்சிருக்கார். இந்தப் படத்தில் அவர் நடிச்சது மட்டுமில்லாமல், படத்தில் வர டாக்டர் கேரக்டருக்கு டப்பிங்கும் கொடுத்திருக்கார். அந்த வாய்ஸுக்காக ரொம்பவே மெனக்கெட்டார்னு இயக்குநர் சொன்னார்.”

சின்ன வயசுல இருந்து சினிமாவில் இருக்கீங்க; ஆனால், ரொம்ப குறைவான படங்களில் மட்டும் நடிச்சிருக்கீங்களே..?

வினோத் கிஷன்

”சினிமாவைப் பற்றி ஒன்னுமே தெரியாத வயசிலேயே சினிமாவில் நடிக்கிற வாய்ப்பு வந்திடுச்சு. நான் நாலாவது படிச்சிட்டு இருந்த சமயத்தில்தான், என் அப்பாவோட ஃப்ரெண்ட், ‘ ‘நந்தா’ படத்துக்கு ஆடிஷன் நடக்குது; நீயும் வா’னு என்னை அழைச்சிட்டுப் போனார். அங்கப் போனதும் பாலா சார், ‘இந்தப் பக்கம் பாரு; அந்தப் பக்கம் பாரு. கண்ணை நல்லா திறந்துப்பாரு’னு சொன்னார். அதுக்கப்பறம் கண்ணுல லென்ஸ் போட்டு பார்த்தாங்க. பார்த்துட்டு ஓகே சொல்லிட்டாங்க. இதே மாதிரிதான், ’நான் மகான் அல்ல’ பட வாய்ப்பும் வந்துச்சு. நான் காலேஜ் படிச்சிட்டு இருந்த சமயத்தில் சுசீந்திரன் சார், ‘இந்தப் படத்தில் நீ நடி’னு சொன்னார். நானும் ஓகே சொல்லிட்டேன். இன்னைக்கு வரைக்கும் ’நான் மகான் அல்ல’ படத்தை வைத்துதான், மற்றப் படங்களோட வாய்ப்புகள் வந்துட்டு இருக்குனு சொல்லலாம். ’நான் மகான் அல்ல’ படத்துக்கு அப்பறம்தான், நடிப்பை கரியராக எடுத்துக்க ஆரம்பிச்சேன். சில சமயம் நாம நினைச்ச மாதிரி நடக்காமல் போகும் போது ஒரு சோர்வு வரும். அது இருந்தால்தான் நல்லா இருக்கும்னு நினைக்கிறேன். இதுவரைக்கும் என் கரியர் இப்படித்தான் இருக்கணும்னு நான் எதுவுமே ப்ளான் பண்ணவே இல்லை. நல்ல, நல்ல படங்கள் பண்ணனும்னு மட்டும்தான் நினைச்சிருக்கேன். நான் பெரும்பாலும் கமர்ஷியல் படங்களில் நடிக்க விரும்ப மாட்டேன். இதுவரைக்கும் நான் நடிச்ச ’நான் மகான் அல்ல’, ’விடியும் முன்’, ’அந்தகாரம்’ படங்களோட ஜானர்தான் எனக்குப் பிடிக்கும். அதனால, அப்படிப்பட்ட கதைகளுக்கு மட்டும்தான் ஓகே சொல்லியிருக்கேன். அதுமட்டுமில்லாமல், நான் நடிச்ச சில படங்கள் ரிலீஸாகாமல் போயிருக்கு; சில படங்கள் ரிலீஸுக்கு ரெடியா இருக்கு. இந்த மாதிரியான விஷயங்களால்தான், நான் அதிக இடைவெளி எடுத்துக்கிற மாதிரி தெரியுது. இனிமேல் அப்படி பெரிய இடைவெளி இல்லாமல், தொடர்ந்து படங்கள் ரிலீஸாகுற மாதிரிதான் ப்ளான் பண்ணியிருக்கேன்.’’



source https://cinema.vikatan.com/tamil-cinema/actor-vinith-kishan-speaks-about-andhaghaaram-movie-experience

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக