Ad

சனி, 28 நவம்பர், 2020

''நல்ல கனவுகள் நனவாகும்...'' - நீட்டில் வென்று டாக்டராகும் கொத்தனாரின் மகன் கனிஷ்குமார்!

நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசின் 7.5% இட ஒதுக்கீட்டின் மூலம் இந்த வருடம் 313 அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவக்கனவு நனவாகியிருக்கிறது. ஏழை, நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு, எட்டாக்கனியாக இருந்த மருத்துவப் படிப்பு எட்டும் கனியாக மாறியிருக்கிறது. இதனால் பல்வேறு ஏழை எளிய குடும்பத்தினர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

நீட் தேர்வில் தகுதி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள்

மதுரை திருமங்கலம் அடுத்த எம்.புளியங்குளம் கிராமத்தை சேர்ந்த கொத்தனார் வேலை செய்யும் சுந்தரம் என்பவரின் மகன் கனிஷ்குமார் மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்று தேனி மருத்துவ கல்லூரியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். மிகவும் வறுமையான சூழலில் படித்து மருத்துவ படிப்பில் தேர்வுபெற்றுள்ள கனிஷ்குமாரிடம் பேசினேன். "நான் 6-ம் வகுப்பு முதல் எங்கள் கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளியில் தான் படித்தேன். என் அப்பா கொத்தனார் வேலை செய்தாலும் அவருக்கு அறிவியல் கண்டுபிடிப்புகள் மீது ஆர்வம் அதிகம்.

அவருடன் சேர்ந்து சின்ன, சின்ன கண்டுபிடிப்புகள் செய்வேன். பத்தாம் வகுப்பில் 463 மதிப்பெண்கள் பெற்று பயோ-மேக்ஸ் குரூப்பில் சேர்ந்து படித்தேன். ப்ளஸ் - டூ முடித்தபின் 2019 நீட் தேர்வு எழுதினேன். ஆனால் தகுதி பெற முடியவில்லை. விடா முயற்சியால் மீண்டும் தேர்வு எழுதினேன். இந்தாண்டு அரசு ஒதுக்கிய 7.5 சதவீதத்தால் தற்போது தேனி அரசு மருத்துவ கல்லூரியை தேர்வு செய்ய முடிந்தது. இந்த வாய்ப்பை கெட்டியாகப் பிடித்து வாழ்க்கையில் முன்னேறுவேன். என்னைப்போன்று கீழ் நிலையில் உள்ள மாணவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் அது தான் என் லட்சியம். படிக்கும் போது விளையாட்டு துறையிலும் சாதிக்க வேண்டும் என்பது ஆசை'' என்றார் கனிஷ்குமார்.

நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவி அமிர்தம்

சிவகங்கை மாவட்டம் அரியக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த அமிர்தம் என்ற மாணவியின் தந்தை தட்டி பின்னும் தொழில் செய்பவர். தன் குடும்ப வறுமை காரணமாக விடா முயற்சியால் நீட் தேர்வில் தகுதி பெற்று புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளார். ஏழை மாணவி அமிர்தத்திற்கு தலைமை ஆசிரியர் பாராட்டு விழா ஏற்பாடு செய்து கெளரவப் படுத்தியுள்ளர். இப்படி பல்வேறு ஏழை, எளிய மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைத்தது சமூக ஆர்வலர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.



source https://www.vikatan.com/social-affairs/education/the-story-of-kanish-kumar-who-achieved-in-neet-exam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக