Ad

வெள்ளி, 27 நவம்பர், 2020

நிலத்திற்கு வந்ததும் மாறிய தன்மை... நிவர் புயலின் தாக்கம் குறைவாக இருந்தது ஏன்?

நிவர் புயல் எப்போது தாக்கும், எது மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்ற முன்னறிவிப்புகள் இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் தனியார் வானிலை ஆய்வாளர்களால் சொல்லப்பட்டன. அதனால் அரசு, மக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையோடு இருக்க ஆயத்தப்படுத்தப்பட்டனர். ஊடகங்களும் இந்தச் செய்தியை அழுத்தமாகப் பதிவுசெய்து மக்களை எச்சரிக்கை செய்தன. காரணம் 2018-ல் தாக்கிய கஜா புயலின்போது, பெரும் சேதமும் அதைத் தொடர்ந்த பீதியும் இருந்தது. அதனால் நிவர் புயலுக்குப் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், பல இடங்களில் புயல் கரையைக் கடந்த பின்னும்கூட இன்னும் புயல் வந்ததா, வரவில்லையா என்ற விவரங்களே தெரியாமல் இருக்கின்றனர் பலர்.

நிவர் புயல்

முதலில் 25-ம் தேதி மாலை புயல் கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்தது. பிறகு 26-ம் தேதி அதிகாலை புயல் கரையை கடக்கும் என்றும் மாமல்லபுரத்துக்கும் காரைக்காலுக்கும் இடையே புயல் கரையைக் கடக்கும் என்று அப்போது சொல்லப்பட்டது. இறுதியில் புதுச்சேரியில் புயல் கரையைக் கடந்தது. சாதாரண மக்களால், இந்த வானிலை ஆய்வு அறிக்கைகளை புரிந்து கொள்வதும், அது மாறுவதும் வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக, சென்னையில் லேசான புயல் தாக்கம் இருக்கும் என்று சொல்லப்பட்டது.

ஆனால், பெரும்பான்மையானோர் ஏதோ சென்னையையே புயல் தாக்குகிறது என்று நம்பிக் கொண்டிருந்தனர். சொல்லப்போனால் சென்னையில் கனமழை இருக்கும் என்று தெரிவித்தது சென்னை வானிலை ஆய்வு மையம். ஆனால், புயலே சென்னையைத் தாக்கப்போகிறது என்று பயந்து நடுங்கிக்கொண்டிருந்தனர். கடைசியில் புயல் லேசாக உணரப்பட்டது. புயலுக்கு பின்னே அமைதி என்பது போல நிவர் புயல் கரையைக் கடந்திருக்கும் இந்தச் சூழலில் புயலும், அதன் உருவாக்கம் குறித்து தென்மண்டல வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரனிடம் பேசியபோது,

புதுச்சேரி

``புயல் கரையைக் கடப்பதற்கு முன்பு சொல்லிய அறிக்கைக்கும், புயல் கரையைக் கடந்ததற்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. மணிக்கு 120 கி.மீ வேகத்தில் புயல் கரையை நோக்கி வந்தது என்று ரேடாரில் பதிவாகி இருந்தது. ஆனால், பிறகு ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வொரு வேகத்தைக் காட்டியிருக்கிறது. அதாவது மணிக்கு 16 கி.மீ, 25 கி.மீ என்று அதன் வேகம் மாறியிருக்கிறது. இதனால் புயல் கரையைக் கடந்தபோது பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை. நிவர் புயலின் வேகம் குறைந்ததற்கு காரணம் கரைக்கு வந்தவுடன், அதாவது நிலத்துக்கு வந்தவுடன் அதன் வேகம் குறைந்தது. புயலைப் பொறுத்தவரை நீர், நிலம், காற்று மண்டலம் இதற்கிடையே சக்தி பரிமாற்றம் நடக்கிறது.

அந்தப் பரிமாற்றத்தின் அடிப்படையிலேயே அதுவொரு புயலாக உருவெடுக்கிறது. ஒரு புயல் பெரியதாகவும் சிறியதாகவும் மாறுவதற்கு அதன் தோற்றம், வலு, நகரும் பாதை, வளிமண்டலம், காற்றின் வேகம் எனப் பல காரணிகள் இருக்கின்றன. அதேபோன்று நீரில் (கடலில்) ஒரு மாதிரியாகவும் நிலத்தில் (கரையில்) ஒரு மாதிரியாகவும் புயல் செயல்படும். 2018-ல் வீசிய கஜா புயலின் வேகம் நிலத்தில் அதிகமாக இருந்தது. நிவர் புயல் கடலில் நல்ல வேகத்துடன் வந்தது. கரைக்கு வருவதற்குள் வலுவிழந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தாமல் கரையைக் கடந்தது. நாம் கயிற்றை இரண்டு பக்கமும் இழுக்கும்போது எந்தப்பக்கம் வலுவோடு இழுக்கப்படுகிறதோ அந்தப்பக்கம் செல்வது போன்றதுதான் இது.

சென்னை, அடையாறு

சென்னையில் கரையை ஒட்டிய பகுதியில் புயல் உணரப்பட்டிருக்கும். ஆனால், சென்னையின் உள்பகுதியில் புயல் உணரப்பட்டிருக்காது. வெறும் காற்றின் வேகம்தான் உணரப்பட்டிருக்கும். ஏனென்றால் நிவர் புயல், வர்தா புயல் போன்று நேரடியாக சென்னையைத் தாக்கும் புயல் இல்லை. ஒரு பஸ் நேரடியாக நம்மை மோதுவதற்கும், அது நம் அருகில் கடந்து செல்வதற்கும் இடையேயுள்ள வேறுபாடுதான் இது. நிவர் புயல் புதுச்சேரியின் வடமேற்கு பகுதியில் நேற்றிரவு 11.30 மணி முதல் 2.30 மணிக்குள் கரையைக் கடந்தது. தென் வங்கக் கடல் மையப்பகுதியில் இந்தப் புயல் உருவானது. வெவ்வேறு வேகத்தில் வந்த புயல் நிலத்துக்கு வந்தவுடன் அதன் வலு குறைந்தது என்பதே உண்மை.

ஒரு புயலுக்கு கண் பகுதி, மையப்பகுதி என்று உள்ளது. நிவர் புயலும் மையப்பகுதிக்கு வந்துதான் கரையைக் கடந்தது. இந்த கண்பகுதி, மையப்பகுதி என்பது புயலுக்கு ஏற்ப வேறுபடும். அந்த வகையில் அதிதீவிரமாக வந்த புயல் தீவிர புயலாக மாறி கரையைக் கடந்தது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தொடர் அறிக்கைகளைப் பின்பற்றுபவர்களுக்கு புயல் எந்த வேகத்தில், எந்தத் திசையில் வருகிறது என்பதை அவ்வப்போது தெரிவித்துவிடுகிறோம். அதனால் எந்தக் குழப்பமும் இல்லை. அவ்வப்போது தெரிவிக்கப்படும் அறிக்கைகளுக்குகேற்ப செயல்பட்டாலே போதும். வீண் பதற்றமும் குழப்பமும் தேவையில்லை” என்றார்.

பாலச்சந்திரன்

நல்ல வேளை நிவர் புயலால் பெரியளவில் பாதிப்புகள் இல்லை. சில தனியார் வானிலை கணிப்பாளர்கள் சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் புயல் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும், சென்னையைத் தாக்கும், ஆந்திராவைத் தாக்கும் என இஷ்டத்துக்கும் வானிலை ஆய்வறிக்கைகளை அள்ளிவிட்டனர். நம்மிடையே இருக்கும் பயமும் பீதியும் எல்லா வானிலை அறிக்கைகளையும் நம்பச் சொல்கிறது. அதைத்தவிர்த்து ஆதாரபூர்வமாக வரும் அரசுத் தகவல்களைக் கொண்டு செயல்பட்டால் யாருக்கும் பிரச்னையில்லை.



source https://www.vikatan.com/news/disaster/how-cyclone-nivar-weakened-after-making-landfall-process

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக