Ad

ஞாயிறு, 29 நவம்பர், 2020

பிளானே இல்லாமல் ஒரு பெளலிங் அட்டாக்... தொடரை இழந்த கோலி அண்ட் கோ! #AUSvIND

முதல் ஒருநாள் போட்டியின் மறுஒளிபரப்பு போலவே அமைந்த இரண்டாவது போட்டியிலும், இந்தியாவுக்கு அவமானகரமானத் தோல்வியைப் பரிசளித்திருக்கிறது ஆஸ்திரேலியா. அத்தோடு மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-0 என்றும் வென்றுள்ளது.

முதல் போட்டி நடைபெற்ற அதே சிட்னி மைதானத்தில் வைத்தே இந்த போட்டியும் நடைபெற்றது. முதல் போட்டியைப்போன்றே இந்த போட்டியிலும் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆஸி அணியில் காயம் காரணமாக ஸ்டாய்னிஸ் வெளியேற அவருக்கு பதிலாக மோய்சஸ் ஹென்ரிக்ஸ் சேர்க்கப்பட்டிருந்தார்.

இந்திய அணியில் மயாங்க் அகர்வால் மற்றும் சைனிக்கு பதில் வேறு வீரர்கள் எடுக்கப்படலாம் என கணிக்கப்பட்ட நிலையில் கோலி ப்ளேயிங் லெவனை மாற்றாமல் அதே ப்ளேயிங் லெவனோடு களமிறங்கி ஆச்சர்யம் அளித்தார் கோலி.

ஆஸ்திரேலியா சார்பில் வழக்கம் போல வார்னரும், ஃபின்ச்சும் ஓப்பனிங் இறங்கினர். இந்தியா சார்பில் ஷமியும் பும்ராவும் முதல் ஸ்பெல்லைத் தொடங்கினர். வார்னருக்கு ஷமி ரவுண்ட் தி விக்கெட்டில் வந்து ஆங்கிள் க்ரியேட் செய்து இன்கம்மிங் டெலிவரிகளாக வீசிக்கொண்டார். அடித்து ஆட இடம் கிடைக்காமல் உள்ளே வந்த பந்துகளை சமாளிப்பதில் வார்னருக்கு தடுமாற்றம் இருக்கவே செய்தது. இந்த ஓவரில் ஒரே ஒரு பவுண்டரி மட்டும் கிடைக்க மற்ற 5 பந்துகளும் டாட் பாலாக அமைந்தது. அடுத்து இரண்டாவது ஓவரை பும்ரா வீச ஃபின்ச் அந்த ஓவரை மெய்டனாக்கினார். ஷமி-பும்ரா இருவரின் பந்துவீச்சுமே பேட்ஸ்மேன்களை கொஞ்சம் தடுமாறவே செய்தது. இதேமாதிரியே தொடர்ந்து வீசிக்கொண்டிருந்தால் வார்னர்-ஃபின்ச் கூட்டணியை சீக்கிரமே பிரித்துவிடலாம் என நினைக்கையிலேயே கோலி இரண்டே ஓவர்களில் பும்ராவின் முதல் ஸ்பெல்லை முடித்து வைத்து, சைனியை அழைத்து வந்தார். இந்த முடிவு மிகவும் பின்னடைவாக அமைந்துவிட்டது. சைனி இந்த ஸ்பெல்லில் வீசிய 3 ஓவர்களில் 28 ரன்களை அடித்தது வார்னர் - ஃபின்ச் கூட்டணி. ரன் அடிப்பதற்கு சிரமப்பட்டு அதிக பந்துகளைப் பேடிலும் தொடையிலும் வாங்கிக்கொண்டிருந்த வார்னர்-ஃபின்ச் கூட்டணி சைனியின் ஸ்பெல்லால் சுலபமாக செட்டில் ஆகிவிட்டனர்.

#AUSvIND

ஒரு பக்கம் மூச்சைப் பிடித்து டைட்டாக வீசிய ஷமியின் முயற்சியும் விரயமானது.ஷமி நான்கு ஓவர், பும்ரா, சைனி தலா மூன்று ஓவர்கள் வீசியிருந்த நிலையில் இந்த முறையும் பவர்ப்ளேவுக்குள் இந்திய அணிக்கு ஒரு விக்கெட்கூட கிடைக்கவில்லை. 10 ஓவர்களில் 59-0 என நன்றாக செட்டில் ஆகவிட்டது ஓப்பனிங் ஜோடி. 11-வது ஓவரில் சஹால் பந்தை கையிலெடுக்க கடந்த போட்டி போன்றே சஹாலை குறி வைத்து அட்டாக் செய்ய தொடங்கியது இந்த கூட்டணி. சஹால் வீசிய முதல் ஓவரிலேயே வார்னர் ஒரு பவுண்டரியும், ஒரு சிக்சரும் அடிக்க 12 ரன்கள் கிடைத்தது. ஜடேஜா, சஹால், பும்ரா, சைனி அடுத்த 10 ஓவர்களிலும் நிறைய மாற்றம் செய்தும் விக்கெட் மட்டும் கிடைக்கவேயில்லை. வார்னர்-ஃபின்ச் இருவருமே அரைசதத்தை கடந்திருந்தனர்.

இடையில் ஒரு ரன் அவுட் கண்டத்திலிருந்து சில இன்ச்களில் வார்னர் தப்பிக்க, கட்டாயம் விக்கெட் எடுத்தே ஆக வேண்டும் என்ற சூழ்நிலையில் ஷமியை மீண்டும் அழைத்தார் கோலி. கடந்தப் போட்டியிலும் இதே மாதிரியான ஒரு சூழ்நிலையில் அழைக்கப்பட்டு வார்னரின் விக்கெட்டை தூக்கியிருந்தார் ஷமி. இந்த முறை ஒரு ஃபுல் லென்த் டெலிவரியில் ஃபின்ச்சின் விக்கெட்டை எடுத்து இந்திய அணிக்கு மீண்டும் எனர்ஜியூட்டினார் ஷமி. ஃபின்ச் 60 ரன்களில் வெளியேற அடுத்ததாக ஸ்மித் உள்ளே வந்தார். இந்த கூட்டணி செட் ஆவதற்குள்ளேயே வார்னரும் அவுட் ஆனார். முதலில் ஒரு ரன் அவுட்டில் தப்பிய வார்னர் இந்த முறை லாங்-ஆனில் நின்ற ஷ்ரேயாஸின் அற்புதமான த்ரோவில் டைரக்ட் ஹிட் ஆகி வெளியேறினார். இரண்டு செட்டிலான பேட்ஸ்மேன்கள் வெளியேறி விட்டார்கள் இனி இந்திய அணி கொஞ்சம் எழுந்து நின்று விடலாம் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு ஏற்பட்டது. ஆனால், அந்த நம்பிக்கையை குலைக்கும் வகையில் லாபுசேனும், ஸ்மித்தும் கூட்டணி போட்டி இந்திய அணிக்கு மேலும் தலைவலியை உண்டாக்கினர். கடந்த போட்டியில் சதமடித்த ஸ்மித் விட்ட இடத்திலிருந்தே மீண்டும் ஆடுவது போல அவ்வளவு நேர்த்தியாக ஆடிக்கொண்டிருந்தார். அவருக்கு சப்போர்ட் செய்யும் வகையில் ரிஸ்க் எடுக்காமல் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து ஆங்கர் இன்னிங்ஸ் ஆடினார் லாபுசேன். ஓவருக்கு 9-10 ரன்களை சுலபமாக எடுத்துக்கொண்டிருந்த இக்கூட்டணி 30-40 ஓவர்களில் 88 ரன்களை சேர்த்தது. சஹால் வீசிய 41 வது ஓவரில் ஒரு சிக்சரை அடித்து அதே ஓவரில் சதத்தையும் நிறைவு செய்தார் ஸ்மித். கடந்த போட்டியைப் போன்றே 62 பந்துகளில் சதத்தை பதிவு செய்து மிரட்டினார் ஸ்மித். மெயின் பௌலர்கள் யாராலுமே விக்கெட் எடுக்க முடியவில்லை என்பதால் காயம் காரணமாக பந்து வீசாமல் இருக்கும் ஹர்திக்கை வேறு வழியின்றி அழைத்தார் கோலி. 42-வது ஓவரில் ஹர்திக் வீசிய ஒரு வைடு டெலிவரியில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ஸ்மித் அவுட் ஆனவுடன் நம்பர் 5-ல் மேக்ஸ்வெல் வந்தார். க்ரீஸுக்குள் வந்தவுடனே ஜடேஜாவின் ஓவரில் இரண்டு பவுண்டரிக்களை அடித்து தனது அதிரடியை தொடங்கிவிட்டார் மேக்ஸ்வெல். இன்னொரு பக்கம் ஆங்கர் இன்னிங்ஸ் ஆடிக்கொண்டிருந்த லாபுசேனும் அரைசதத்தை கடந்தார். டி20 போட்டியின் கடைசி 5 ஓவரில் ஆடுவதை போல மேக்ஸ்வெல் ஆடிக்கொண்டிருந்தார். ஷமியின் பந்தையெல்லாம் ரிவர்ஸ் ஸ்வீப்பில் வெளுத்துக்கட்டினார். சைனி வீசிய இறுதி ஓவரில் இரண்டு சிக்சர்களை அடித்து அணியின் ஸ்கோரை 389 ஆக உயர்த்திவிட்டார். 29 பந்துகளில் 63 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார் மேக்ஸ்வெல். கடைசி 10 ஓவர்களில் மட்டும் 114 ரன்களை எடுத்திருந்தது ஆஸி அணி.

#AUSvIND

கடந்த போட்டியைப் போன்றே இந்த போட்டியிலும் 390 என்ற இமாலய இலக்கை நோக்கி சேஸிங்கைத் தொடங்கியது இந்திய அணி. தவானும், மயாங்க் அகர்வாலும் ஓப்பனிங் இறங்கினார். பெரிய டார்கெட் என்பதை மனதில் வைத்து அதிரடியாகவே இன்னிங்ஸைத் தொடங்கியது இந்த கூட்டணி. ஸ்டார்க் வீசிய முதல் ஓவரில் மயாங்க் அகர்வால் இரண்டு பவுண்டரிகளை அடிக்க, ஸ்டார்க் வீசிய 5 வது ஓவரில் தொடர்ந்து 3 பவுண்டரிகளை அடித்தார் தவான். அடுத்தடுத்து ஹேசல்வுட் மற்றும் கம்மின்ஸ் ஓவர்களிலும் தொடர்ந்து பவுண்டரிகள் வர இந்த கூட்டணி செட்டில் ஆகிவிடும் எனத்தோன்றியது. ஆனால், அதற்குள் ஹேசல்வுட் வீசிய அடுத்த ஓவரில் மிட் ஆனில் கேட்ச் கொடுத்து தவான் வெளியேறிவிட்டார். நம்பர் 3 ல் வழக்கம்போல கோலி வர அடுத்த ஓவரிலேயே கம்மின்ஸின் பந்துவீச்சில் எட்ஜ்ஜாகி கீப்பர் அலெக்ஸ் கேரியிடம் கேட்ச் ஆகி அவுட் ஆனார் மயாங்க் அகர்வால். கடந்த போட்டியைப் போலவே இந்திய அணி மொத்தமாக சொதப்பிவிடும் என்று நினைக்கையில் கோலியும், ஷ்ரேயாஸும் பொறுப்போடு பார்ட்னர்ஷிப் போட்டனர். கடந்த போட்டியில் கம்மின்ஸ் வீசிய ஒரு பந்தை ஃபைன் லெக்கில் தூக்கியடித்து ஆடம் ஸாம்பாவிடம் கேட்ச் ட்ராப் ஆகியிருந்தார் கோலி. ஆனால், இன்றைய போட்டியில் அதேப்போல் கம்மின்ஸ் வீசிய ஷார்ட் பிட்ச் பாலை ஃபைன் லெக்கில் சிறப்பான டைமிங்கில் சிக்சர் அடித்தார். இதிலிருந்து கோலி நல்ல டச்சில் இருக்கிறார் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. ஷ்ரேயாஸ் ஐயரும் ஒன்றிரண்டு பவுண்டரிகளை அடித்துக்கொண்டு கோலிக்கு சப்போர்ட்டாக சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தார். ஸாம்பா ஓவரில் பவுண்டரி அடித்து கோலி அரைசதம் அடிக்க இந்த பார்ட்னர்ஷிப் செட்டில் ஆகத் தொடங்கியது. இந்த நேரத்தில் ஹென்ரிக்ஸ் வீசிய ஓவரில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறிய ஷ்ரேயாஸ் ஏமாற்றமடையச் செய்தார். அடுத்ததாக கே.எல்.ராகுல் உள்ளே வந்து ஷ்ரேயாஸ் விட்டுச்சென்ற இடத்தை நிரப்ப ஆரம்பித்தார். கோலி ஒரு எண்ட்டில் நின்று வெறித்தனம் காட்டிக்கொண்டிருந்தார். ஸ்டார்க் 140 கி.மீ-ல் வீசிய டெலிவரியை ஸ்கொயர் லெக்கில் ஃப்ளிக் ஆடி மிரட்டலான சிக்சராக்கி நான் உள்ளே இருக்கும் வரை சேஸிங் உயிர்ப்போடுதான் இருக்கும் என்பதை நிரூபித்தார்.

மெதுவாக சதத்தை நெருங்கிக்கொண்டிருந்த கோலி 89 ரன்னில் ஹேசல்வுட் வீசிய ஷார்ட் பாலில் மிட் விக்கெட்டில் நின்ற ஹென்ரிக்ஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இந்திய ரசிகர்களின் நம்பிக்கையும் உடைந்துபோனது. கோலி வெளியேறியப்பிறகு கடந்த போட்டியின் ஹீரோவான ஹர்திக் பாண்டியா க்ரீஸுக்குள் வந்தார். ரன்ரேட் 10-க்கு மேல் செல்ல தொடங்கி ஆட்டம் ஆஸி பக்கமாக சாய தொடங்கியிருந்தாலும் இந்த கூட்டணி நம்பிக்கையிழக்காமல் ஆட ஆரம்பித்தது. 37,38,39 மூன்று ஓவர்களிலும் தொடர்ச்சியாக சிக்சர் பறந்து கொண்டே இருந்தது. ராகுலும் சிக்சருடன் அரைசதத்தை கடந்தார். கடைசி 10 ஓவர்களுக்கு 130 ரன்கள் தேவை என்ற நிலையில் ஸாம்பா வீசிய 44-வது ஓவரில் ஒரு சிக்சரை அடித்துவிட்டு மீண்டும் ஒரு பெரிய ஷாட்டுக்கு முயன்று ஹென்ரிக்ஸிடம் கேட்ச் ஆகி வெளியேறினார் கே.எல்.ராகுல். 76 ரன்களில் கே.எல்.ராகுல் வெளியேற கடைசி 5 ஓவர்களில் 87 ரன்கள் தேவை என்ற நிலையில் ஹர்திக்கும் ஜடேஜாவும் ஜோடி சேர்ந்தனர்

#AUSvIND

ஸ்டார்க் வீசிய 46-வது ஓவரில் நோபாலில் கேட்ச் ஆகி ஹர்திக் தப்பிக்க அந்த ஓவரில் ஜடேஜா இரண்டு சிக்சர்களை விளாச 18 ரன்கள் கிடைத்தது. அசாத்தியமான டார்கெட்டாக இருந்தாலும் இந்த ஓவர் இந்திய ரசிகர்களுக்கு கொஞ்சம் நம்பிக்கையை கொடுத்தது. ஆனால், அடுத்து கம்மின்ஸ் வீசிய 47-வது ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் ஜடேஜாவும், ஹர்திக்கும் பெரிய ஷாட்டுக்கு முயற்சித்து அடுத்தடுத்து அவுட் ஆகினர். இந்தியா மீதிருந்த நம்பிக்கையும் மொத்தமாக உடைந்தது. இறுதியில் ஆஸி அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸி சார்பில் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும், ஹேசல்வுட், ஸாம்பா தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

இந்தப் போட்டியை வென்றதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என ஆஸ்திரேலிய அணி கைப்பற்றிவிட்டது. லாக்டவுனுக்குப் பிறகு இந்திய அணி ஆடிய முதல் தொடரே தோல்வியில் முடிந்திருக்கிறது.

இந்திய அணியின் பேட்டிங் பர்ஃபாமென்ஸைப் பொறுத்த வரைக்கும் பெரிதாக எந்த குறையையும் சொல்ல முடியாது. இரண்டு போட்டிகளிலுமே இந்திய அணி 300-ஐ தாண்டியிருக்கிறது. பௌலிங்தான் இந்தியா இந்த தொடரை இழப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. ஆஸியின் முக்கிய வீரர்களுக்கு எதிராக எந்தவித தனிப்பட்ட ப்ளானும் இல்லாமல் கடமைக்கு பந்துவீசிவிட்டு செல்வது போல் இருக்கிறது. ஷமி கொஞ்சம் பரவாயில்லாமல் வீசினார். மற்றபடி வேறு எந்த பௌலர்களும் சுமார் என சொல்லும் அளவுக்கு கூட செயல்படவில்லை. கோலியின் திட்டமற்ற பௌலிங் ரொட்டேஷனும் இந்தியாவுக்குப் பின்னடைவாக அமைந்தது. பௌலிங்கை சரியான திட்டமிடலோடு ஸ்திரப்படுத்தினால்தான் இந்திய அணி இனியாவது ஆஸி பேட்ஸ்மேன்களுக்கு சவால் அளித்து வெற்றிகளைப் பெற முடியும்.



source https://sports.vikatan.com/cricket/india-lost-the-series-against-australia

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக